சனி, டிசம்பர் 04, 2010

எந்தக் குழந்தையும் - அத்தியாயம் 7

ஆக்கம் இ.சொ.லிங்கதாசன்

கர்ப்ப காலம் 1 தொடக்கம் 10 மாதங்கள் வரை தாய் தந்தை கவனத்திற் கொள்ளவேண்டிய விடயங்கள்:

இதேபோல் அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தில் எழுபதுகளில் நிகழ்ந்த ஒரு உண்மைச் சம்பவத்தையும் உங்களுக்குக் கூற விரும்புகிறேன். அந்தத் தம்பதிகள் சமூகத்தில் மிகவும் சிறந்த வாழ்க்கைத் தரத்தில் உள்ளவர்கள், கணவன் வழக்கறிஞராகவும், மனைவி ஒரு சிறந்த ஆசிரியையாகவும் பதவி வகித்து வந்தனர். அவர்கள் வாழ்க்கையும் இன்ப மயமாகவே கழிந்தது. அவர்களுக்கு முதன்முதலாக பிள்ளைச் செல்வமாக ஒரு ஆண்மகன் பிறந்தான். பெற்றோர் அவனுக்கு ஜோன் என்று பெயரிட்டனர். அவன் பெற்றோர்களைப் போல் கல்வியில் அதிக நாட்டம் செலுத்தவில்லை, மிகவும் குறும்புக்காரச் சிறுவனாக வளர்ந்தான். இங்கு 'குறும்பு' என்ற வார்த்தையை எம் இலங்கைத் தமிழில் 'குழப்படி' என்று எடுத்துக் கொள்ளவும். பாடசாலைக்குச் சென்றாலும், அல்லது சிறுவர்களுடன் விளையாடச் சென்றாலும் எங்கும் பிரச்சனைதான். 'நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக' அவனது குற்றச் செயல்கள்தான் அதிகரித்து வந்தனவே தவிர, அவன் திருந்தவுமில்லை, தனது செயல்களுக்காக வருந்தவுமில்லை.
இவ்வாறு இருக்கையில் அவனுக்கு 22 வயதாகும்போது, அவர்கள் வசித்த நகரத்தில் உள்ள ஒரு பிரபலமான வங்கியொன்றில் மிகவும் நூதனமான முறையில், மிகவும் நுட்பமாகத் திட்டமிடப்பட்டு ஒரு கொலை மற்றும் கொள்ளை நிகழ்ந்தது. அதாவது ஏனைய கொள்ளைச் சம்பவங்களைப் போல காவலாளி கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்படவில்லை, ஆனால் ஆர்சனிக்(Arsenic) என்ற பெயருடைய ஒருவகை நச்சுத் திராவகத்தின் மூலம் கொல்லப் பட்டிருந்தார். அதேபோல் வங்கியின் பெட்டகங்களும் நூதனமான முறையில் இரசாயனத் தாக்கத்தின் மூலம் திறக்கப்பட்டிருந்தது. இக்கொலை, மற்றும் கொள்ளைச் சம்பவங்களைப் பற்றித் துப்பறிய வந்த காவல்துறை அதிகாரிகள், குற்றவாளிகள் பற்றிய எந்தத் தடயமும் கிடைக்காமல் திணறினர். இவ்வாறு பல மாதங்கள் உருண்டோடியபின்னர், இறுதியாக ஒரு காவல் அதிகாரி தற்செயலாக 23 வருடங்கள் பழமையான ஒரு துப்பறியும் நாவலை வாசித்துக் கொண்டிருந்தார். அந்நாவலில் வரும் ஒரு சம்பவம் அப்படியே சொல்லி வைத்தாற்போல், மேற்படி கொலை, கொள்ளைச் சம்பவத்தைப் பிரதிபலிப்பதாக அமைந்திருப்பதைக் கண்டு அதிர்ந்தார்.
அவரது அதிர்ச்சிக்குக் காரணம் மேற்படி கதையிலும் கொலை, மற்றும் கொள்ளைக்கு இரசாயனப் பொருட்கள் உண்மைச் சம்பவத்தில் வருவதுபோலவே உபயோகிக்கப் பட்டிருந்தது. ஒரு சில நாட்களில் குற்றத்திற்குக் காரணமான 'ஜோன்' கைது செய்யப் பட்டான். அவனிடம் காவல்துறையினர் கேட்ட கேள்வி 'ஜோன்' மேற்படி துப்பறியும் நாவலை வாசித்துத்தான் இவ்வாறு இரசாயனங்களின் மூலம் கொலை, கொள்ளையில் ஈடுபடும் அறிவைப் பெற்றானா? எனக் கேட்டனர். "எனக்கு நாவல்கள் படிக்கும் பழக்கமே கிடையாது" என்று ஜோன் பதிலளித்தான். இறுதியில் ஜோனின் பெற்றோர்கள் விசாரிக்கப் பட்டனர். இவர்களில் ஜோனின் தாய் கூறிய வாக்குமூலத்தைக் கேட்ட காவல்துறையினர் வியப்பு மாத்திரமின்றி அதிர்ச்சியும் அடைந்தனர்.
அவர்களின் அதிர்ச்சிக்குக் காரணம் இதுதான்: ஜோனின் தாயார் கர்ப்பமாக இருந்தபோது(ஜோன் கர்ப்பத்தில் இருந்தபோது) மேற்படி துப்பறியும் நாவலை, அவள் படித்திருக்கிறாள் அது கருவிலிருக்கும் சிசுவுக்கு தெரியவந்திருக்கிறது என்பதுதான் உலக அதிசயங்களில் ஒன்று. ஆனால் அந்த நாவலின் முடிவில் கதையின் நாயகன் திருந்தி நல்லவனாக வருகின்ற கட்டத்தைத் தாயானவள் படிக்கத் தவறி விட்டாள், அதற்கிடையில் ஜோன் பிறந்து விட்டான். தாய் படித்த துப்பறியும் நாவலின் சம்பவம் கருவிலிருந்த சிசுவின் அறிவில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
"ஒரு குழந்தையானது தனது அறிவில் மூன்றிலொரு பகுதியைத் தனது தாயின் கருவிலிருக்கும்போதே பெற்றுவிடுகிறது" என்ற அறிவியல் மேதைகளின் கருத்துக்கு ஆதாரமாக இந்த ஒரு சம்பவம், 'ஒரு பானைச் சோற்றில் ஒரு சோறு' என்று எண்ணுகிறேன். கர்ப்பவதிகளான தாய்மார்களே நீங்கள் பார்க்கும் திரைப்படங்கள், படிக்கும் நாவல்கள், கேட்கும் கதைகள், பார்க்கும் நபர்கள் பற்றி மிகவும் அவதானமாக இருங்கள்.
(தொடரும்)  
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக