வெள்ளி, டிசம்பர் 24, 2010

பாடிப் பறந்த குயில்

ஆக்கம்.இ.சொ.சதீஸ்வரன் 
தமிழ்த் திரையுலகின் பிரபல பின்னணிப் பாடகி ஸ்வர்ணலதா அவர்கள் சுகயீனம் காரணமாக அண்மையில் சென்னையில் காலமானார். இறக்கும்போது அவருக்கு வயது முப்பத்தியேழு.
பாடகி ஸ்வர்ணலதா தன் வசீகரக் குரலால் 1990 இல் தமிழில் வெளிவந்த 'சத்ரியன்', 1995 இல் வெளியான 'ராணி ரத்னரபா' என்ற தெலுங்குப் படம், மற்றும் 1995 இல் ஹிந்தியில் வெளியாகியதும், A.R. ரஹ்மானுக்கு வட இந்தியாவில் புகழ் பெற்றுத் தந்ததுமாகிய 'ரங்கீலா' போன்ற திரைப்படங்களின் பாடல்கள் மூலம் ஏராளமான இசை ரசிகர்களின் உள்ளங்களில் தனக்கென்று ஓர் தனியிடத்தைப் பெற்றுக்கொண்டவர்.

'கேப்டன் பிரபாகரன்' படத்தில் இவர் பாடிய "ஆட்டமா தேரோட்டமா", 'சின்னத்தம்பி' படத்தில் "போவோமா ஊர்கோலம்", 'சத்ரியன்' படத்தில் இடம்பெற்ற "மாலையில் யாரோ மனதோடு பேச", 'தளபதி' படத்தில் "அடி ராக்கம்மா கையத் தட்டு", மற்றும் 'வள்ளி' படத்தில் இடம்பெற்ற "என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல்" போன்ற பாடல்கள் இவரைப் புகழின் உச்சத்திற்கே கொண்டு சென்றதுடன் 'சிறந்த பின்னணிப் பாடகி' என்ற ஜனரஞ்சக அந்தஸ்த்தையும் இசை ரசிகர்களின் இதயத்தில் பெற்றுக் கொண்டார்.

பாடகி ஸ்வர்ணலதா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, உட்படப் பன்னிரண்டு இந்திய மொழிகளில் இதுவரையில் ஏழாயிரத்திற்கு மேற்பட்ட பாடல்களைப் பாடியிருக்கிறார். திரையுலகின் பிரபல இசை ஜாம்பவான்களான இசைஞானி இளையராஜா, ஆஸ்கார் நாயகன் A.R. ரஹ்மான், தேனிசைத் தென்றல் தேவா, மற்றும் S.A. ராஜ்குமார் உள்ளிட்ட பெரும்பாலான இசையமைப்பாளர்களின் இசையில் பாடியிருக்கிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் B.B.C. செய்தி நிறுவனம் சர்வதேச அளவில் நடாத்திய(பன்னாட்டு, பலமொழிப் பாடல்கள் உள்ளடங்கலாக) இசைத் தேர்வில் 'தளபதி' படத்தில் ஸ்வர்ணலதா, S.P. பாலசுப்ரமணியத்துடன் இணைந்து பாடிய "அடி ராக்கம்மா கையத்தட்டு" என்ற பாடல் மூன்றாவது இடத்தைப் பெற்றமையானது, தமிழ் இசையுலகிற்குப் பெருமையான விடயம். அது மாத்திரமின்றி இந்தியாவிலுள்ள ஆயிரக்கணக்கான தொடரூந்து நிலையங்களில்(ரயில் நிலையங்களில்) பத்திற்கு மேற்பட்ட மொழிகளில் ஒலித்துகொண்டிருக்கும் "பயணிகள் கவனிக்கவும்" என்று தொடங்கும் அறிவிப்புகள் யாவும் ஸ்வர்ணலதாவின் குரலேயாகும்.

ஸ்வர்ணலதா ஒரு மிகச்சிறந்த பின்னணிப் பாடகி என்பதை நிரூபிக்குமளவிற்கு அவர் மொத்தம் 13 மாநில மற்றும் தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். இவைகளில் 'கருத்தம்மா' படத்தில் இடம்பெற்ற "போறாளே பொன்னுத்தாயி"  என்ற பாடலுக்கான மத்திய, மாநில அரசு விருதுகளும், 'சின்னத்தம்பி' படத்தில் இடம்பெற்ற "போவோமா ஊர்கோலம்" பாடலுக்காகத் தமிழ்நாடு அரசு வழங்கிய 'கலைமாமணி' விருதும் அடங்கும்.
இவரது சொந்த ஊர் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள 'சித்தூர்' ஆகும். அண்மைக்காலம்வரையில், சென்னையில் உள்ள சாலிக்கிராமத்தில் தனது சொந்த வீட்டில் வசித்து வந்தார். நுரையீரல் பாதிப்பு காரணமாக சென்னை அடையாறில் உள்ள பிரபல தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருந்த ஸ்வர்ணலதா சிகிச்சை பலனின்றிப் போகக் கடந்த 12.09.2010 அன்று காலை 11 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
ஸ்வர்ணலதாவின் மறைவானது, தமிழ் இசையுலகைப் பொறுத்த வரையில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது மட்டுமல்லாமல், இசையுலகுக்கு ஓர் ஈடுசெய்யமுடியாத இழப்பு என்றே கூறவேண்டும்.

2 கருத்துகள்:

RAJAN NORWAY. சொன்னது…

THANKA FOR REMBER.

senthil சொன்னது…

am a great fan of singer swarnalatha... her death news has bought shocking waves in my brain...literally loss of words to express my grief...may her soul rest in peace... and let her get birth very soon as a south indian singer again...

கருத்துரையிடுக