வெள்ளி, டிசம்பர் 17, 2010

மண்ணும் மரமும் மனிதனும் அத்தியாயம் - 8

ஆக்கம் இ.சொ.லிங்கதாசன் 
தமிழ்நாட்டில் சோழர்களால் ஆபத்து நேரும்போதெல்லாம் 'பாண்டிய மன்னர்கள்' பராக்கிரம பாகுவின் உதவியையே நாடினர். பாண்டியர்களுக்கு உதவும் முகமாக 'பராக்கிரம பாகுவின்' படைகள் தமிழ்நாட்டில், இராமநாதபுரத்தில் 30 வருடங்கள் நிலைகொண்டிருந்தன.
இத்தகைய பராக்கிரமம் நிறைந்த இம்மன்னனின் காலத்திலேயே இலங்கை இன்னொரு நாட்டைக் கைப்பற்றி ஆண்டது, அந்நாட்டில் இன்றளவும் சிங்களத்தின் கிளை மொழியே பேசப் படுகிறது அது எந்த நாடு? சிந்தியுங்கள். என்ற கேள்வியுடன் கடந்த வாரத் தொடரை நிறைவு செய்திருந்தேன்.
வாசகர்களில் ஒருசிலரேனும் விடை கண்டுபிடித்திருப்பீர்கள் என்றே நம்புகிறேன். இருப்பினும் விடையைக் கண்டுபிடிக்காத வாசகர்களுக்காக இதோ விடை: மகா பராக்கிரம பாகுவின் படைகளால் கைப்பற்றப் பட்டு, இலங்கையால் ஆளப்பட்ட நாடு 'மாலை தீவுகள்' ஆகும். அங்கு பேசப்படும் மொழியின் பெயர் திவேகி(Dhivehi) என்பதாகும். அம்மொழியானது சமஸ்கிருதத்திலிருந்து பிறந்தாலும் 'சிங்களத்தின் கிளைமொழி'(Cognate dialect) என்றே அழைக்கப் படுகிறது. உதாரணமாக எமது திராவிட மொழிகளாக தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகள் திகழ்ந்தாலும் 'மலையாளம்' மட்டுமே தமிழின் கிளைமொழி என்று அழைக்கப் படுகிறது. காரணம் யாதெனில் தமிழிலிருந்து மலையாளமொழி பிரிந்து சென்று(திரிபடைந்து) ஏறத்தாழ அறுநூறு வருடங்களே ஆகின்றன. மலையாளத்தில் பேசினால் தமிழர்கள் சுலபமாக புரிந்து கொள்வர். தமிழில் பேசினால் மலையாளிகள் சுலபமாகப் புரிந்து கொள்வர் என்பதற்கான விளக்கம் இதுதான். இதேபோல் சத்யன்(சத்தியநேசன்) கதாநாயகனாக நடித்த 'செம்மீன்' என்ற மலையாளத் திரைப்படம் யாழ்ப்பணத்தில் வெற்றி பெற்றதையும், தமிழில் பாக்கியராஜ் கதாநாயகனாக நடித்த 'அந்த ஏழு நாட்கள்' படத்தில் கதாநாயகன் முழுக்க முழுக்க மலையாளத்தைப் பேசியிருந்த போதிலும் அது தமிழில் வெற்றிப் படமாகியது போன்ற உதாரணங்களையும் கூறலாம். 'செம்மீன்' படத்தில் வரும் "கடலின் அக்கர போனோரே" பாடலை மறந்த வயோதிபர்களோ, அல்லது 'அந்த ஏழு நாட்கள்' படத்தில் வரும் 'கவிதை அரங்கேறும் நேரம்' பாடலை மறந்த நாற்பதைத் தாண்டியவர்களும் எம்மத்தியில் இருக்க முடியாது என்பது எனது நம்பிக்கை. ஆனால் மலையாளிகள் தமிழைப் பேசினாலும், அவர்களது எழுத்து வடிவம் சமஸ்கிருதத்தை ஒத்ததாக இருக்கும். ஏனெனில் அவர்கள் பேச்சுவடிவத்தைத் தமிழிலிருந்தும், எழுத்துவடிவத்தை ஆரியர்களிடமிருந்தும் பெற்றுக் கொண்டனர். இதே போல நிகழ்வுதான் 'மாலை தீவிலும்' நிகழ்ந்துள்ளது. மாலைதீவு மக்கள் பேச்சு மொழியை சிங்களத்திடமிருந்தும் தமது எழுத்துவடிவத்தை தம்மை பல நூற்றாண்டுகளாக ஆண்ட 'அராபியர்களிடமிருந்தும்' பெற்றுக் கொண்டனர். இது நமக்கெல்லாம் வியப்பைத் தருகிறதல்லவா?
கேரளத்து மக்கள் பேசுவது 'தமிழ்' (முழுக்க முழுக்க தமிழ் வாடை கலந்த மலையாள வார்த்தைகள்) எழுதுவது தமிழ் அல்ல. அதேபோல் மாலைதீவு மக்கள் பேசுவது 'சிங்களம்'(முழுக்க முழுக்க சிங்கள வாடை கலந்த திவேகி வார்த்தைகள்) ஆனால் எழுதுவது சிங்களம் அல்ல 'அரபு எழுத்து' இது வினோதம் அல்லவா?
சரி நம் பராக்கிரம பாகுவின் புகழைப் பற்றியும், அவனது நாட்டுப் பற்று பற்றியும் கூறப் புகுந்த நான் மாலைதீவு மொழி, மலையாள மொழி பற்றிய ஆராய்ச்சிக்குள் தெரிந்தோ, தெரியாமலோ இறங்கி விட்டேன். சரி போகட்டும். தன் மண்ணையும், மக்களையும் நேசித்த, நாட்டிற்குப் புகழ் தேடித் தந்த மன்னன் என்ற காரணத்தால் 'மகா பராக்கிரம பாகு' இந்தக் கட்டுரையில் ஒரு இடம் பிடித்துக் கொண்டார். இனி தமிழ் மக்கள் தாம் மண்ணையும், மரம், செடி கொடிகளையும், உயிரினங்களையும் ஆழ்ந்து நேசிப்பதைத் தமது மொழியில் எவ்வாறு அழகாக வெளிப்படுத்துகிறார்கள் என்பதையும் பார்ப்போம்.
(தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.

1 கருத்து:

uthayan germany சொன்னது…

very good i am happy to read

கருத்துரையிடுக