சனி, டிசம்பர் 11, 2010

எந்தக் குழந்தையும் - அத்தியாயம் 8

ஆக்கம் இ.சொ. லிங்கதாசன் 


கர்ப்ப காலம் 1 தொடக்கம் 10 மாதங்கள் வரை தாய், தந்தை கவனத்தில் கொள்ள வேண்டியவை:


"ஒரு குழந்தையானது தனது அறிவில் மூன்றிலொரு பகுதியைத் தனது தாயின் கருவிலிருக்கும்போதே பெற்றுவிடுகிறது" என்ற அறிவியல் மேதைகளின் கருத்துக்கு ஆதாரமாக இந்த ஒரு சம்பவம், 'ஒரு பானைச் சோற்றில் ஒரு சோறு' என்று எண்ணுகிறேன். கர்ப்பவதிகளான தாய்மார்களே நீங்கள் பார்க்கும் திரைப்படங்கள், படிக்கும் நாவல்கள், கேட்கும் கதைகள், பார்க்கும் நபர்கள் பற்றி மிகவும் அவதானமாக இருங்கள்.

இதேபோல் சில வருடங்களுக்கு முன்னால் இங்கிலாந்தில் மன்செஸ்டர் பகுதியில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தையும் உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அந்தப் பாட்டிக்கு வயது 62, சில நாட்களாக இரவில் உறங்கவே முடிவதில்லை, கொஞ்சம் கண்ணயர்ந்து தூங்கத் தொடங்கும் நேரத்தில் அடிவயிற்றில் பாறாங்கல் போல ஏதோ ஒன்று அழுத்தும்.
முகமெல்லாம் வியர்த்துக் கொட்டும், திடீர், திடீரென்று எழுந்து உட்கார்ந்து விடுவார். சில நேரங்களில் ஏதேதோ பிதற்றுவார். சிறிது கால இடைவெளியின் பின்னர் அவருக்கு வலிப்பு நோயும் (Epilepsy) ஏற்பட ஆரம்பித்ததால் பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்த குடும்பத்தவர்கள் அவரை ஒரு மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர்.
ஆரம்பத்தில் சாதாரண உளவியல் கேள்விகளைக் கேட்ட மருத்துவரால் பாட்டியின் பிரச்சனை என்னவென்று அறிய முடியவில்லை. ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் பாட்டியின் ஆழ் மனதிலிருக்கும் பிரச்சினையை ஆய்வு செய்ய விரும்பிய மன நல மருத்துவர், பாட்டியை ஹிப்னாடிசம்(Hipnotism) எனப்படும் 'அறிதுயில்' உறக்கத்திற்கு உட்படுத்தினார். இவ்வாறு அறிதுயிலில் இருந்த பாட்டி, தன்னை மறந்த நிலையில் நினைவுகள் பின்னோக்கிச் செல்ல, மருத்துவர் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்ல ஆரம்பித்தார். படிப்படியாக பாட்டியின் கடந்த காலத்தைப் பற்றிய கேள்விகள் தொடர்ந்தன, ஆச்சரியப்படும் விதத்தில் பதில் சொல்லிகொண்டிருந்த பாட்டி தனது ஒரு வயது நினைவுக் காலம் வரை சென்று விட்ட போதிலும், மருத்துவரால் பிரச்சினைக்கான எந்தக் காரணத்தையும் கண்டு பிடிக்க முடியவில்லை.
திடீரென்று அனைவரும் அதிசயிக்கத் தக்க விதத்தில் பாட்டி தனது அம்மாவின் 'வயிற்றுக்குள்' இருந்த காலத்திற்குச் சென்றுவிட்டார். இப்போது மருத்துவருக்கு பிரச்சினையின் 'வேர்' என்னவென்று தெரிய ஆரம்பித்தது. இதோ பாட்டி சொன்ன வார்த்தைகள்:-
  "நான் இப்போது எங்கம்மாவின் வயித்துக்குள் இருக்கிறேன், மிகவும் கதகதப்பாக, சுகமாக இருக்கு. வழு வழுவென்ற ஏதோ ஒரு மெத்தைமேல் படுத்திருக்கிறதுபோல் உணர்கிறேன், என்னால் கண்களைத் திறக்க முடியவில்லை, மிகவும் அமைதியாக இருக்கிறது. திடீரென்று பளாரென்று ஓர் அதிர்வு, அப்பாவும், அம்மாவும் பயங்கரமாகச் சத்தம்போட்டுச் சண்டை பிடிக்கிறார்கள். அச்சத்தம் என் காதில் இடிபோல கேட்கிறது. ஆ, ஆ, அப்பா அம்மாவை அடிக்கிறார், அம்மா கீழே விழுந்துவிட்டாள், உடம்பெல்லாம் குலுங்குதே" பேசிக் கொண்டேயிருந்த பாட்டி, குமுறிக் குமுறி அழத் தொடங்கிவிட்டார்.

வாசகப் பெருமக்களே! கர்ப்பப் பையிலிருக்கும் சிசுவிற்கு, வெளியே நடக்கும் சின்னச் சின்ன அதிர்வுகளையும் உள்ளிழுத்துக் கொள்ளும்(கிரகிக்கும்) தன்மை உண்டு. கருப்பையில் கருவைச் சுற்றி ஒம்னியன் என்னும் சவ்வு உள்ளது, மேற்படி ஒம்னியோடிக் திரவத்தில்தான் சிசுவானது நீந்திக்கொண்டிருக்கிறது. தாயின் அசைவுகளும், பேச்சுக்களும் இந்தத் திரவத்தின் ஊடாகத்தான் குழந்தையைச் சென்றடைகிறது. இந்நிலையில் ஏற்படும் அதிர்ச்சி அல்லது பாதிப்பு மேற்கூறப்பட்ட உண்மைச்  சம்பவத்திற் கூறியதுபோல் பல வருடங்களுக்குப் பிறகும் பாதிப்பை, பின்விளைவுகளை ஏற்படுத்தும்.
(தொடரும்) 
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக