சனி, மார்ச் 03, 2012

தாரமும் குருவும் பகுதி - 6.5

ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன்
(ஆசிரியர்களை அவதூறு செய்வது எனது நோக்கமல்ல)
பகுதி 6.5
பாலர் வகுப்பு(Nursery/kindergarten)
எனது சித்தியைக் காலம் முழுவதும் கண்ணீர் சிந்த வைத்த சித்தப்பாவின் ஞாபகம் வந்தபோதே நான் வெரித்தாஸ் வானொலியில் ஒரு தடவை கேட்ட நகைச்சுவைத் துணுக்கை உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் எனும் எண்ணம் எனக்கு ஏற்பட்டது. அதன் காரணமாகவே இரு வாரங்களுக்கு முன்னால் மேற்படி 'ஜோக்கை' உங்களுக்காகத் தந்தேன் .அது தவிரவும், ஏனைய சமயங்களைக் கிண்டலடிக்கும் நோக்கம் எனக்குத் துளியளவும் கிடையாது.
##########################################
ஒருவாறு எனது அழுகையிலிருந்து மீண்டு, சித்தப்பாவுடன் பாலர் பாடசாலையை நோக்கி சென்று கொண்டிருந்த எனக்கு திடீரென்று ஒரு விடயம் ஞாபகத்திற்கு வந்தது. மீண்டும் அழத் தொடங்கினேன். என்னை சமாதானப்படுத்தி பாலர் பள்ளிக்கு அழைத்துச் சென்றுகொண்டிருந்த சித்தப்பாவுக்கு, நான் மீண்டும் அழத் தொடங்கியது எரிச்சலூட்டியிருக்க வேண்டும் தனது குரலை சிறிது உயர்த்திக் கொண்டு "இப்ப என்னத்துக்கடா அழுகிற? நான்தான் உன்ன பள்ளிக்குடத்தில கொண்டுபோய் விடுறன் எண்டு சொல்லுறன்,பிறகு எதுக்கு அழுகிற? என்றார் சிறிது உஷ்ணமாக. முதலில் என்னை 'அப்பு', 'ராசா' என்று அழைத்தவர் இப்போது கோபமாகப் பேசியதும் எனது அழுகை அதிகரித்தது. நான் எனது அழுகையை நிறுத்தாமலே "சித்தப்பா, சித்தப்பா, டீச்சர் பாட்டுப் பழகிறத்துக்கு பாவைப் பிள்ளை(*பொம்மையை யாழ்ப்பாணத் தமிழில் 70 களில் இவ்வாறுதான் அழைத்தோம்) கொண்டு வரச் சொன்னவா, நான் வீட்டில மறந்துபோய் விட்டுட்டு வந்திட்டன்" என்றேன் அழுது கொண்டே. "சரி பறுவாயில்ல, நான் உங்கட டீச்சரிட்ட சொல்லுறன், உன்ன அடிக்க வேண்டாம் எண்டு. சரியா? என்றார். எனக்குத் தெரியும், 'கருணையே உருவமாக' இந்த மண்ணில் அவதரித்த, ஒரு வார்த்தை இரைந்து பேசத் தெரியாத, எங்கள் கமலினி டீச்சர் என்னை அடிக்கவோ,ஏசவோ(திட்டவோ) போவதில்லை என்பது எனக்கு அந்த வயதிலும், நன்கு தெரிந்திருந்தது. இருப்பினும் 'பாப்பாப் பாடல்' பழகுவதற்கு எல்லாப் பிள்ளைகளும் பொம்மை கொண்டு வரும்போது, என்னிடமும் 'சித்தியிடம் இரவல் வாங்கிய' பொம்மை இருந்தும் அதை நான் கொண்டு செல்லாமல் 'வெறுங் கையுடன்' செல்வது எனக்குப் பலத்த அவமானம் என்று உணர்ந்து அழுதேன். மானம், அவமானம், கௌரவப் பிரச்சினை எல்லாம் பார்க்கத் தெரியாத வயது அது. இருப்பினும் ஏதோ ஒன்று என்னை அழ வைத்தது. எல்லாப் பிள்ளைகளும் என்னை ஏளனமாய்ப் பார்ப்பார்கள் எனும் மனப் பிரமை காரணமா? என்பது எனக்குத் தெரியாது. "சித்தப்பா! எல்லாப் புள்ளையளும், பாவப் பிள்ள கொண்டு வருவினம், என்னட்ட மட்டும் இல்ல" என்றேன் மறுபடியும் அழுதபடி. எனது பேச்சு அவருக்கு மிகவும் எரிச்சலை ஊட்டியிருக்க வேண்டும். "அதுக்கு இப்ப என்ன என்னடா செய்யச் சொல்லுற? திரும்ப வீட்ட போய் எடுத்துக் கொண்டு வருவமா? என்று சத்தமாய்க் கேட்டார். நான் "இல்ல, இல்ல" என்றேன் முந்திக் கொண்டு. ஐந்தரை வயது என்றாலும் எனக்குத் தெரியும் திரும்ப வீட்டுக்குச் சென்று பொம்மை எடுத்து வருவதற்குள் பாலர் பள்ளிக்கு மிகவும் தாமதமாகப் போய் விடும் என்பது தெரிந்திருந்தது. எனது மறுப்பைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்ட சித்தப்பா, என்னோடு ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார். "அப்பிடியெண்டா ஒழுங்கா, அழாமக் கொள்ளாம, நல்ல புள்ளையா நடந்து வர வேணும்" என்று கட்டளையிட்டார். நானும் அவரது சொற்படியே 'நல்ல பிள்ளையாக' சத்தம் செய்யாமல், அழாமல் அவர்பின் சென்றேன்.
நானும், சித்தப்பாவும் பள்ளியை அடைந்தபோது வகுப்பு ஆரம்பமாகி இருந்தது. காலையில் என்னை விட்டுவிட்டுப் போய் விட்ட டீச்சரைக் கண்டதும் எனக்கு மீண்டும் அழுகை அழுகையாக, வந்தது. அதை விடவும் பாலர் பள்ளியில் மாணவர்கள் அனைவரும் கையில் 'பொம்மையுடன்' நின்றதைப் பார்த்து, என்னிடம் பொம்மை இல்லையே என்ற ஏக்க உணர்வு எனது அழுகையை இரட்டிப்பாக்கியது. ஓடிச் சென்று சென்று டீச்சரைக் கட்டிக் கொண்டு அழுதேன். எனது அழுகையைப் பார்த்து ஏனைய பிள்ளைகள் கலவரமடைந்து விடக் கூடாது என்பதில் கமலினி டீச்சர் மிகவும் அவதானமாக இருந்தார். தம்பி! தாசன் இஞ்ச பார்., முதல்ல அழுகைய நிப்பாட்டு, இப்ப என்ன நடந்திற்றுது எண்டு இப்பிடி அழுகிறாய்? குழந்தப் பிள்ளையள் மாதிரி இது என்ன பழக்கம்? சீச்சீ ! என்று அவர் கூறவும் முதலில் திகைத்து நின்ற பிள்ளைகள் சிரிக்க ஆரம்பித்தார்கள். அவர்கள் சிரிக்க ஆரம்பித்ததைப் பார்த்ததும் நான் எனது அழுகையை நிறுத்திக் கொண்டேன். டீச்சரும் எனது தலையை தடவி என்னை ஆறுதல் படுத்தினார். அந்தத் தருணத்திற்காக காத்திருந்த சித்தப்பாவும் என்னிடமிருந்து விடை பெற்றார். அன்று மீண்டும் "சின்னப் பாப்பா, எங்கள் செல்லப் பாப்பா" என்ற பாடலைக் கற்க ஆரம்பித்தோம். இடையில் நான் "டீச்சர் நான் பாவப் பிள்ள கொண்டுவர மறந்து போயிற்றன்" என்றேன் மிகவும் தயக்கத்துடன். "பறுவாயில்ல நான் பிள்ளைக்கு ஒரு பாவப் பிள்ள தாறன். நாளைக்கு மறக்காம வீட்டிலயிருந்து வரேக்க பாவப் பிள்ள கொண்டு வர வேணும் சரியா? என்றார். நான் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை.டீச்சர் வைத்திருந்த பையில் இருந்து ஒரு பொம்மையை எடுத்து என்னிடம் நீட்டினார். அவர் வைத்திருந்த பையில் மேலதிகமாக இரண்டு பொம்மைகள் இருந்தன. யாராவது ஓரிரண்டு பிள்ளைகள் பொம்மை கொண்டுவர மறந்தாலும் அவர் கொண்டு வரும் பொம்மைகள் உதவட்டும் எனும் உயர்ந்த நோக்கத்தில் வீட்டிலிருந்து வரும்போதே பொம்மை கொண்டுவரும் டீச்சரை நீங்கள் எங்காவது இந்த இருபதாம் நூற்றாண்டில் கண்டதுண்டா? ஆனால் நான் குறிப்பிடும் இந்தச் சம்பவம் 1977 இல் அல்லைப்பிட்டியில் நடந்தது. இவ்வாறு 'முன்னெச்சரிக்கையுடன்' உதவும் மனப்பானமையுடன் செயல்படும் ஆசிரியர்களை இலங்கையில் மிகவும் அரிதாகவே கண்டேன். மேற்படி செயல் என் மனதில் 'கமலினி டீச்சருக்கென்று' மிகப்பெரிய இடத்தை ஒதுக்கி விட்டது. அவரைப் போன்ற உதவும் மனப்பான்மை உள்ள ஒரு ஆசிரியையை 32 ஆண்டுகள் கழித்து கடந்த 2009 ஆம் ஆண்டில் டென்மார்க் நாட்டில் கண்டேன். ஆனால் அவர் ஒரு டேனிஷ் பெண்மணி(வெள்ளைக் காரி) 32 ஆண்டுகளுக்கு முன்னரே ஒரு வெள்ளைக்காரி போல சிந்தித்த எங்கள் கமலினி டீச்சர் எங்கிருந்தாலும் வாழ்க!
(இன்னும் சொல்வேன்)

*எனது இத் தொடரில் வரும் உரையாடல்கள் 'இலங்கைத் தமிழில்'(பேச்சு வழக்குத் தமிழில்) உள்ளன என்பதைத் தமிழக வாசகர்களுக்கு அறியத் தருகிறேன்.
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.

1 கருத்து:

vetha (kovaikkavi) சொன்னது…

மிக இனிமை. நன்றி வாழ்த்துகள். தொடரட்டும் பணி.

கருத்துரையிடுக