ஞாயிறு, மார்ச் 25, 2012

எம்மிடமிருந்து விடைபெற்ற வானொலிக் குயில்

இலங்கை வானொலியில் கடந்த 35 வருடங்களுக்கும் மேலாக சிறந்த அறிவிப்பாளராகவும், வானொலி நாடக நடிகையாகவும், பல வருடங்களாக நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் பணியாற்றிய 'கலாபூசணம்' திருமதி.ராஜேஸ்வரி சண்முகம் அவர்கள் கடந்த 23.03.2012 வெள்ளிக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் தனது 74 ஆவது வயதில் காலமானார் என்பதை ஆழ்ந்த மன வருத்தத்துடன் அறியத் தருகிறோம்.
இலங்கை வானொலியில் புகழின் உச்சியில் கொடிகட்டிப் பறந்த அறிவிப்பாளர் இவர் என்றால் மிகையாகாது. சிறுவர் முதல் பெரியவர் விரும்பி ரசித்த இலங்கை வானொலியின் பல சிறப்பான நிகழ்ச்சிகளில் தனது மதுரக் குரலின் மூலம் ஒரு முத்திரை பதித்திருந்தார். திரைப்படப் பாடகி எஸ்.ஜானகி அவர்களை நேரிலோ, புகைப்படத்திலோ பார்த்து அறியாதவர்கள் ஜானகி அவர்களை ஒரு சிறுமி எனவும், இளம் யுவதி எனவும் கற்பனை செய்து வைத்திருந்ததைப் போல், திருமதி ராஜேஸ்வரி சண்முகம் அவர்களின் தேன் மதுரக் குரலை வான் அலை வழியே கேட்டவர்களும் அவரை ஒரு இளம் யுவதி என்றே நினைத்தனர். இவரது தெள்ளத் தெளிவான தமிழ் உச்சரிப்பினாலும், இனிமையான, மனதைக் கொள்ளை கொள்ளும் குரலினாலும், இலங்கையின் பல லட்சம் ரசிகர்களை மட்டுமன்றி, தமிழகத்தின் கோடிக்கணக்கான வானொலி ரசிகர்களின் உள்ளங்களையும் வான் அலை வழியே கொள்ளை கொண்டார். இலங்கை வானொலியில் இவர் தனது முத்திரையைப் பதித்த இசைச் சித்திரம், பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரி, வீட்டுக்கு வீடு, இசையும் கதையும், வானொலி மலர், ஒலி மஞ்சரி போன்ற நிகழ்ச்சிகளும் இவரைப் போன்ற ஒரு அறிவிப்பாளரை இனிக் காணப் போவதில்லை. தொலைக்காட்சிகள் அறிமுகம் ஆகாத காலத்தில் வானொலி நாடகங்கள் தமிழ் மக்களின் மனங்களைக் கொள்ளை கொண்ட காலத்தில் தனது 'யாழ்ப்பாணத் தமிழில்' பேசி அசத்திய வானொலிக் குயில் திருமதி.ராஜேஸ்வரி சண்முகம் அவர்களின் பூர்வீகம் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம் என்பதை அறிந்தால் யார்தான் வியந்து போக மாட்டார்கள்?
உலக அறிவிப்பாளர்களில் கோடான கோடி ரசிகர்களைக் கொண்டிருந்த ஒரு சில அறிவிப்பாளர்களில் ராஜேஷ் அக்காவின் பெயர் முதலிடத்தில் இருக்கிறது. "மீண்டும் சந்திக்கும் வரை அன்பு வணக்கம் கூறி விடைபெற்றுக் கொள்பவர் ராஜேஸ்வரி சண்முகம்" என்று ஒவ்வொரு நிகழ்ச்சியின் பின்னரும் எம்மிடமிருந்து விடைபெற்ற ராஜேஷ் அக்கா அவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இப்பூவுலகில் இருந்து நிரந்தரமாக விடை பெற்றார். அவரது ஈமக் கிரியைகள் இன்றைய தினம் ஞாயிற்றுக் கிழமை(25.03.2012) கொழும்பில் நடைபெற்றது. முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக எம்மோடு வான் அலை வழியே இணைந்திருந்த வானொலிக் குயிலின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. அன்னாரின் மறைவிற்கு அந்திமாலை இணையம் தனது இதய அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கிறது. அன்னாரின் ஆத்மா சாந்தி அடைவதாக. அவரது பிரிவால் துயருறும் அவர்தம் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
ஆசிரியபீடம் 
அந்திமாலை 
www.anthimaalai.dk

2 கருத்துகள்:

ஒதிகை மு.க.அழகிரிவேல் சொன்னது…

ஈடு செய்ய முடியாத இழப்பு ....

தேவன் மாயம் சொன்னது…

மிக வருத்தமான செய்தி!

கருத்துரையிடுக