
ஆக்கம்: செ.சஞ்சயன், நோர்வே.
"ஹலோ ஐ ஆம் பார்பரா" என்று ஆங்கிலத்தி்ல் அறிமுகமாகினார். தான் புதுக் கணணியொன்று வாங்கியுள்ளதாகவும் அது வேலை செய்ய மறுக்கிறது என்றும் சொல்லி வரக்கட்டளையிட்டார். போய் இறங்கினேன்.
திடமாய் கைகுலுக்கி வரவேற்றார். அவர் ஒரு தென்னாபிரிக்க பிரஜை.வயது 60க்கு மேலிருக்கும். ஆனால் வெள்ளைக்காரியுமல்ல, கறுப்பு நிறத்தவருமல்ல. தங்களை கலெட்(coloured) என்று அழைப்பார்கள் என்றும் தாங்கள் மாநிறத்தவர்கள் என்றும் சொன்னார்.
அவரின் கதை, பேச்சுகள், அவரின் கருத்துக்கள் என்பன அவரை ஒரு 'மேட்டுக்குடி பிரஜை' என்றே எனக்குணர்த்தின.
எனது வாழ்க்கையில் அவரைப்போல ஒரு ”கதைப்பெட்டியை” நான் சந்தித்ததில்லை இதற்கு முன்பு. அங்கு நின்றிருந்த 4 மணிநேரமும் திறந்திருக்கும் தண்ணீர்ப் பைப் போல் இருந்தது அவர் வாய். ஓயாமல் பேசிக் கொண்டேயிருந்தார். அவரின் ஆங்கிலம் ரசிக்கத்தக்கதாக இருந்தது. எனினும் தேவைக்கதிகமாகவே கதைத்தார்(கடித்தார்).
தனது நோர்வே வாழ்க்கையை அவர் விரும்பவில்லை என்று தெரிந்தது அவர் பேச்சில். மொழி பிரச்சனையாக இருக்கிறதாம். பெரியவர்களை கனம் பண்ணுகிறார்கள் இல்லையாம். பெண்களுக்கு அதிக சுதந்திரம் கொடுக்கப்பட்டிருப்பதால் குடும்பங்கள் கஸ்டப்படுகிறதாம். ஆனால் தனக்கு அந்த சுதந்திரம் பிடித்திருக்கிறது என்றும் சொன்னார்.
தனது முதல் கணவன் ஒரு இந்தியர் என்றும், தற்போதைய கணவர் நோர்வேஐியர் என்றும் சொன்னார். தனது மகனின் படம் கொணர்ந்து காட்டினார். அழகாய் மிடுக்காய் உடையணிந்திருந்தார் அவர் மகன். மிக அழகானவராகவும் இருந்தார். தனது மகனை நோர்வேக்கு அழைக்க மாட்டார் என்றும், அவன் வந்தால் இங்கிருக்கும் பெண்கள் அவனை கெடுத்துவிடுவார்களாம் என்றார்.
என்னுடன் கதைத்துக்கொண்டிருக்கும் போது தனது தாய்க்கு தொலைபேசினார். ஒரே நேரத்தில் என்னுடனும் தாயுடனும் கதைத்தார். திடீர் என்று தொலைபேசியில் நாய் குரைத்து சத்தம் கேட்டது. உடனே அந்த நாயுடன் கொஞ்சத் தொடங்கிவிட்டார். எனக்கு எல்லாமே புதினமாயிருக்க "பட்டணம் பார்த்த கிராமத்தான் மாதிரி" ஆஆஆ என்று பார்த்துக் கொண்டிருந்தேன் அவரை.
அத்திலாந்திக் சமுத்திரமும், இந்து சமுத்திரமும் சந்திக்கும் இடத்தி்ல் வாழ்ந்தவர் என்றும், வெள்ளை இனத்தவர் ஆட்சி செய்த போது தாங்கள் மிக மகிழ்ச்சியாய் வாழ்ந்திருந்தார்கள் என்றும் கறுப்பு இனத்தவர் ஆட்சிக்கு வந்ததும் தங்களின் மேலுள்ள வெறுப்பால் தங்கள் வாழ்வாதாரங்களை அழித்துவருவதாகவும் சொன்னார்.
கறுப்பினத்தவர்களுக்கு வீதியில் இறங்கி பொல்லு தடிகளுடன் அடாவடித்தனம் செய்யத்தெரியுமே தவிர நாட்டை அபிவிருத்தி செய்யத் தெரியாது என்றும், நாட்டின் சொத்துக்களை அவர்கள் சூறையாடுகிறார்கள் என்பதும் அவரின் கருத்தாயிருந்தது.கறுப்பர்களுக்கு கொள்ளையடிக்கவும், கொலைசெய்யவும் மட்டுமே தெியும் என்றும், தான் ஒரு கிறீஸ்தவ பெண் என்றும் தான் "வேதாகமத்தின் போதனைகளை" பின்பற்றுபவர் என்றும் வலியுறுத்திச் சொன்னார். எனக்கு மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும் கதை கொடுப்பதை தவிர்ப்பதற்காக அமைதியாயிருந்தேன்.
தேத்தண்ணி(தேநீர்) ஊற்றி மிகச்சிறப்பான முறையில் உபசரித்தார்.அவர் தந்த பிஸ்கட் மிக நன்றாக இருப்பதாக நான் சொல்லி வாயை மூடவில்லை... அது தான் வீட்டில் செய்த பிஸ்கட் என்றும் அதற்கு ”eat some more”(இன்னும் கொஞ்சம் சாப்பிடவும்) என்று அவர்கள் ஊரில் அழைப்பார்கள் என்றும்,பிஸ்கட் செய்யும் முறையையும் விளக்கமாக சொல்லி ஒரு பிடிபிடித்தார் என்னை.
அவரின் கதையின் அளவு எனது பொறுமையினை சோதித்துக்கொண்டிருக்க அவரோ நான் அவரின் கதையை ரசிக்கிறேன் என்று இன்னும் அதிகமாக கதைத்துக் கொண்டிருந்தார்.
அவரது கணவரோ டீவியே கதியாய் இருந்தார். கணவர் பயங்கர(Horror Film) படங்களை விரும்பிப் பார்க்கிறாராம் அது தனக்கு பிடிப்பில்லை என்ற போது "நீ தான் அவரைத் திருத்த வேண்டும்" என்று ஒரு போடு போட்டேன். இனி மேல் தெலைக்காட்சியை நிறுத்தப்போவதாகச் சொன்னார்.
கணணி திருத்திக் கொடுத்துவிட்டு வீட்டைவிட்டு வெளியேறியபோது எனது காதில் இரத்தம் வழிந்து கொண்டிருப்பது போல் பிரமையேற்பட்டது.
"இன்றைய நாளும் ஓரளவு நல்லதே".
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக