வியாழன், ஜூன் 23, 2011

நித்தம் நித்தம் நெல்லுச் சோறு - அத்தியாயம் 20

*(மூன்று மாத கால இடைவெளியின் பின்னர் மீண்டும் தொடர்கிறது.)

ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன் 

"பரவாயில்லை கத்தரிக்காயைப் பற்றிப் பல விபரங்களை மிகவும் நுணுக்கமாகவே தெரிந்து வைத்திருக்கிறீர்கள் எனப் பாராட்டிய திரு.பழனிச்சாமி அவர்கள் தொடர்ந்தார், "சரி இப்போது 'கத்தரிக்காயைப் பற்றி' எனக்குத் தெரிந்த சில அறிவியல் விடயங்களைக் கூறுகிறேன்" என்றார். "கூறுங்கள், கூறுங்கள்" என்றேன் ஆவலுடன். அவர் தொடர்ந்தார் "நாம் நினைப்பதுபோல் கத்தரிக்காய் ஒரு காய்கறி வகை அல்ல, அது ஒரு பழ வகையச் சேர்ந்தது" என்று ஒரே போடாய்ப் போட்டார். என் கண்கள் ஆச்சரியத்தால் விரிந்தன. "என்ன சொல்கிறீர்கள்? "கத்தரிக்காய் பழ வகையைச் சேர்ந்ததா? காய்கறிகளில் தக்காளிப் பழமும், மிளகாயும் மட்டுமே பழ வகையைச்(குடும்பத்தைச்) சேர்ந்தது என்று படித்திருக்கிறேன், இப்போது நீங்கள் கூறும் கருத்து எனக்கு மிகவும் ஆச்சரியத்தை அளிக்கிறது" என்றேன் நான். அவர் தொடர்ந்தார் "ஆம் நம்மில் பலர் கத்தரிக் காயை ஒரு 'காய்கறி' என்றே நினைத்துக் கொண்டிருக்கிறோம், ஆனால் விவசாய பீடத்திலும் (வேளாண்மைத் துறை), தாவரவியலிலும் கல்வி கற்றவர்களுக்குத் தெரியும் அது ஒரு பழ வகையைச்(Berry) சார்ந்த தாவர இனம் என்பது. விவசாயிகள் கத்தரிக்காயிலிருந்து நாற்று மேடைக்காகக் 'கத்தரி விதைகள்' எடுக்க விரும்பினால் கத்தரிக்காயை முதலில் நன்றாக முற்ற விடுவார்கள், அதன்பின் சில நாட்களில் கத்தரிக்காயானது நன்றாகப் பழுக்க ஆரம்பிக்கும் இறுதியில் அந்தப் பழம் ஒரு 'அழுகிய பழம்' போன்ற நிலையை எய்தும்போது அதைக் கைகளால் பிசைந்து 'கூழ்' ஆக்கி, அதைத் தண்ணீரில் கலந்து, துணியில், அல்லது 'வடிதட்டில்' வடித்து' (வடிகட்டி) விதைகளை வெயிலில் உலர்த்திக்   'கத்தரி விதைகள்' பெறுவார்கள். இதுதான் கத்தரிக்காய் 'கத்தரிப் பழமாக' மாறும் கதை என்றார். நானும் வியப்பு மேலிட "சிங்களக் கதையொன்றில் வரும் 'ஓணான் முதலையாக மாறிய கதை' போல் இருக்கிறது உங்கள் கதை என்றேன் சிரித்தபடி. அவர் தொடர்ந்தார் "அதுமட்டுமல்லாமல், கத்தரிக்காயைப் பச்சையாகக் கடித்துப் பார்த்தால் வாயில் மிகுந்த 'கசப்புச்' சுவை தெரிகிறதல்லவா? அதற்கும் காரணமுள்ளது. இந்தக் கத்தரிக்காயானது தாவரவியலில்(Botany)
புகையிலை விவசாயம், அல்லைப்பிட்டி 
புகையிலைச் செடியின் நெருங்கிய உறவினர். கத்தரிக்காயோ, அதன் இலையோ, தண்டோ பச்சையாகக் கடித்துப் பார்க்கும்போது மிகவும் 'கசப்பாக' இருப்பதற்குக் காரணம் அச் செடியிலுள்ள Nicotinoid alkaloids எனும் இரசாயனப் பொருளாகும். இந்த 'நிக்கோட்டின்' எனும் இரசாயனமே புகையிலையிலும் உள்ளது. ஒரேயொரு வேறுபாடு புகையிலையில் 'நிக்கோட்டின்' அதிகமாக உள்ளது, கத்தரிக்காயிலும் அதன் செடியிலும் குறைவாக உள்ளது என்பதாகும்.
"நீங்கள் கூறும் கருத்துக்கள் என்னை வியப்புறச் செய்கின்றன, சரி குழந்தைகள் பச்சைக் கத்தரிக்காயைக் கடித்தால் பற்கள் 'சூத்தையாகி'(சொத்தையாகி) விடும் என்று அம்மாக்கள் கூறுகிறார்களே அது எந்தளவில் உண்மை? என்று புதியதொரு கேள்வியை போட்டேன். அவர் தொடர்ந்தார், "ஓரிரு தடவைகள் பச்சைக் கத்தரிக்காயைக் கடித்ததனால் பற்கள் சொத்தையாகிவிடும் என்பது அறிவியல் ரீதியாகவோ, மருத்துவ ரீதியாகவோ நிரூபிக்கப் படாத ஒரு 'மூட நம்பிக்கையாகும்' இவ்வாறு நமது மக்கள் கூறுவது உண்மையானால் பர்மா தொடக்கம் கொரியா வரை உள்ள மக்கள் தமது உணவில் கத்தரிக் காயைப் பச்சையாகச் சேர்த்து உண்கிறார்கள், அவர்களது பற்களெல்லாம் சொத்தையாகியிருக்க வேண்டுமே? என்றார் என்னைப் பார்த்து, நானும் அவர் கூறியதை ஆமோதிக்கும் பொருட்டு "ஆமாம் நீங்கள் கூறுவதிலும் நியாயமுள்ளது" என்றேன்.
(தொடரும்)

உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.

குறிப்பு: முன்பு வெளியாகிய இத் தொடரின் 19 ஆவது அத்தியாயத்தைப் பார்வையிட இங்கே அழுத்தவும்:  
நித்தம் நித்தம் நெல்லுச்சோறு அத்தியாயம் 19

4 கருத்துகள்:

Anu, USA சொன்னது…

Finally comes the sequel, which I have waited a few months. I can only recommend to every reader who has not read this article continuation to read the old posts first.

kovaikkavi சொன்னது…

New messages for me. Good. Best wishes.
vetha.Dk.

kowsy சொன்னது…

எனக்குப் பிடித்த மரக்கறிகளில்( மன்னிக்கவும் பழம்) கத்தரிக்காய் முதலிடத்தைப் பிடிக்கும். அதுபற்றிய தகவல் தந்தமைக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

vinothiny pathmanathan dk சொன்னது…

கத்தரிப்பழமா என ஒரு தடவை நானும் அதிர்ச்சி ஆனேன் .என்ன கடைசியில் இது தானா அது என்றதும் சப்பென்று ஆகி விட்டது.
சிங்களக் கதை என்று நீங்கள் சொன்னதும் அந்த ஓணான் முதலையாகிய கதையை சொல்ல போகின்றீர்கள் என்று எண்ணி ஏமாந்தேன் ,இன்னொரு சந்தர்ப்பத்தில் அந்த கதையை முடிந்தால் இணைத்துக் கொள்ளுங்கள் .பயனுள்ள தகவல் .இணைத்தமைக்கு நன்றி

கருத்துரையிடுக