ஞாயிறு, ஜூன் 19, 2011

தாரமும் குருவும் - பகுதி 4.1

ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன் 
பகுதி 4.1

அல்லைப்பிட்டி 1977
இப்போது நான் 'அல்லைப்பிட்டியின் பிரஜை' ஆகிவிட்டேன். ஆனாலும் எனக்குத் தெரியாது அந்தக் கிராமத்திற்தான் என் எதிர்காலமே நகர்ந்து செல்லப் போகிறது என்ற விடயம். சரி அல்லைப்பிட்டி என்ற புதிய தேசத்தில் குடிபுகுந்தாகி விட்டது. ஆனால் 'அல்லைப்பிட்டியைப்' பற்றி, அது எங்கிருக்கிறது என்பது பற்றி உங்களிடம் எதுவுமே கூறவில்லை அல்லவா?
இனிவரும் அத்தியாயங்களில் இடையிடையே அல்லைப்பிட்டிக் கிராமத்தைப் பற்றியும் அங்கு நான் சந்தித்த அனுபவங்கள் பற்றியும் கூறுவேன். இவ்வாறு கிராமத்தைப் பற்றி விபரங்கள் கூறுவதில் எனக்கு ஒரு சிக்கல் உள்ளது. அது யாதெனில் 'தாரமும் குருவும்' எனும் தலைப்பில் எனது பள்ளி அனுபவங்களைக் கூறப் புகுந்த நான் இடையில் அந்தத் தலைப்பை விட்டுவிட்டுத் தட்டுத் தடுமாறி ஒரு கிராமத்தின் வரலாறு, புவியியல், மனிதர்கள் பற்றிக் கூறினால் உங்களுக்குச் சலிப்புத் தட்டும் என்பதுடன், நான் எடுத்துக் கொண்ட தலைப்பின் அர்த்தமே மாறிவிடும் அல்லவா? ஆதலால் இதற்கு ஒரு மாற்றுத் திட்டம் வைத்திருக்கிறேன். அதாவது இந்தத் தொடரின் ஒரு அத்தியாயத்தில் 
அல்லைப்பிட்டியைப் பற்றியும், மற்றுமொரு அத்தியாயத்தில் பாடசாலை அனுபவங்களின் தொகுப்பைப் பற்றியும் கூறுவேன். இவ்வாறு சமாந்தரமாக இரு வேறு விடயங்களை உங்களுக்கு 'சலிப்பு' ஏற்படாத வகையில் தருவது எனது பொறுப்பு.இதற்காகவே கடந்த நாற்பது அத்தியாயங்களிலும் உப தலையங்கமாக 'பாலர் வகுப்பு' என்று தலையங்கமிட்ட நான் தற்போது 'அல்லைப்பிட்டி 1977' என உப தலையங்கமிட்டுள்ளேன். இனிவரும் ஒவ்வொரு அத்தியாயத்திலும் உப தலையங்கத்தைப் பார்த்து எதைப்பற்றிப் பேசுகிறேன் என்று புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

இப்போது இந்த அனுபவங்களின் தொகுப்பு நடைபெறும் தளம் அலைப்பிட்டிக்கு மாற்றப்படுகிறது. நீங்கள் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருந்தால், யாழ்ப்பாணக் குடா நாட்டிற்கு அருகில் 'தீவுப்பகுதிகள்' எங்கே உள்ளன என்பதை அறிவீர்கள்.அதேபோல் யாழ்மாவட்டத்திலிருந்தும் இலங்கையின் ஏனைய மாவட்டங்களிலிருந்தும் இலங்கையில் மிகவும் பிரபலமான 


நயினைதீவு நாகபூஷணி அம்மன் ஆலயம் 
'நயினைதீவு நாகபூஷணி அம்மன்' ஆலயத்திற்கு ஒரு தடவையேனும் சென்ற அனுபவம் உள்ளவர்கள் முதலில் தரைப் பாதையூடாக யாழ் நகரிலிருந்து புங்குடுதீவிலுள்ள குறிகாட்டுவான்('குறிகட்டுவான்' எனவும் அழைப்பர்) 'படகுத் துறைக்கு' பயணம் செய்திருப்பீர்கள். இதில் யாழ் நகரிலிருந்து புறப்பட்டதும் யாழ்-ஊர்காவற்துறை வீதியில் ஏறத்தாழ நான்கு கிலோ மீட்டர்கள் தொலைவில் வருவது 'அல்லைப்பிட்டிக்' கிராமம் ஆகும். புவியியற் புத்தகங்கள், இணையத் தளங்கள் போன்றவற்றில் யாழ் நகருக்கும் அல்லைப்பிட்டிக் கிராமத்திற்கும் இடையிலான தூரம் ஐந்து கிலோ மீட்டர்கள் என்று எழுதியிருப்பார்கள். இதைத்தான் நானும் ஒரு பதினாறு வயதுவரை நம்பி வந்தேன். இது தவறாகும். ஏனெனில் யாழ்ப்பாணத்திலிருந்து ஊர்காவற்துறை நோக்கிச் செல்லும் பிரதான வீதியில் 'ஐந்தாவது கிலோ மீட்டர்' எனும் தூரத்தைக் காட்டும் 'கிலோமீட்டர் கல்' அல்லைப்பிட்டிச் சந்திக்கு அருகில் உள்ளது. ஆனால் அல்லைப்பிட்டிக் கிராமத்தின் எல்லையானது அதற்கு முன்பாகவே உள்ள நான்காவது கிலோ மீட்டர் கல் இருக்கும் 'இலந்தையடி' எனும் இடத்தில் ஆரம்பித்து விடுகிறது. ஆகவே இலங்கையின் புவியியல் மற்றும் நில அளவைத் துறையினர் இந்த விடயத்தைக் கண்டுகொள்ளாமல், ஒரு கிலோமீட்டர் தூரத்தை 'முழுங்கி' விட்டனர் போலும். அஜித் நடித்த 'சிட்டிசன்' திரைப்படத்தில், இந்திய வரைபடத்திலிருந்து 'அத்திப்பட்டிக்' கிராமம் காணாமற் போன விடயம் என் நினைவுக்கு வருகிறது.
(தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.       

2 கருத்துகள்:

vinothiny pathmanathan dk சொன்னது…

லிங்கதாசன் உங்களின் இந்த தொடரையும் நானும் தொடர்ந்து வாசித்து வருகிறேன் . அல்லைப்பிட்டிக்கு எங்கள் குடும்ப நண்பரின் வீட்டிற்கு சென்று வரும் வாய்ப்பு எங்களுக்கு அண்மையில் கிடைத்தது . அல்லைப்பிட்டி தற்போது மிகவும் வெறிச்சோடிக் காணப்படுகிறது. நயினாதீவிற்கு போய்விட்டு வரும்போது அல்லைபிட்டி ஊருக்குள் நுழைந்த நேரம் மாலை 4 அல்லது 5 மணி இருக்கலாம் .நாங்கள் செல்ல வேண்டிய முகவரியை விசாரிப்பதற்காக யாராவது வருகிறார்களா என்று 10 நிமிடங்களுக்கு மேலாக காத்திருந்தும் பலனில்லாமல் சில வீடுகளிளுக்கு சென்று விசாரிக்க முற்பட்ட போது அங்கே கூட மனிதர்கள் யாரும் இல்லை. இறுதியில் நாங்கள் செல்ல வேண்டிய முகவரிக்கே சென்று அவர்களின் வீட்டை உறுதி செய்து கொண்டோம் .இது தான் இன்றைய எம் ஊர்களின் நிலை .உங்கள் தொடர் மிகவும் நன்றாக இருக்கிறது .தொடர்ந்து எழுதுங்கள் .

இ.சொ.லிங்கதாசன், டென்மார்க். சொன்னது…

சகோதரியின் கருத்துக்கு மிக்க நன்றி. ஒரு காலத்தில் தீவுப் பகுதிக் கிராமங்களிலேயே மிகவும் செழிப்பாக விளங்கிய ஊர் அது. "யார் கண் பட்டதோ? 1990 ஆண்டிலிருந்து திரும்பத் திரும்ப அழிவுகளைச் சந்தித்து விட்டது. இப்போதுதான் அங்கு மானுடம் துளிர்க்க ஆரம்பித்துள்ளது. பட்ட துன்பங்கள் போதாதென்று அண்மையில் சில இணையத் தளப் 'புண்ணியவான்கள்' அல்லைப்பிட்டியை 'மும்பை சிவப்பு விளக்குப் பகுதியாகச்' சித்தரித்து மலினப்படுத்தி எங்கள் மனங்களில் ஆறாத வடுவை ஏற்படுத்தி விட்டார்கள். இந்தத் தொடர் என் ஆத்ம திருப்திக்காகவே எழுதத் தொடங்கினேன். எனக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் ஆதரவு தொடர்ந்து எழுதவேண்டும் என்ற வைராக்கியத்தை என்னுள் தூண்டுகிறது. உங்கள் ஆதரவுக்கு நன்றி.
அன்புடன்
இ.சொ.லிங்கதாசன்

கருத்துரையிடுக