சனி, டிசம்பர் 17, 2011

தாரமும் குருவும் பகுதி - 5.5


ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன்
(ஆசிரியர்களை அவதூறு செய்வது எனது நோக்கமல்ல)
பகுதி 5.5
பாலர் வகுப்பு(Nursery/kindergarten)

ஒவ்வொரு பெற்றோருக்கும், பேரன் பேர்த்திகளுக்கும் தங்களது ஆண் வாரிசுகள் 'மகா ராசன்கள்'(ராஜாக்கள்) தானே? 'அல்லைப்பிட்டி' என்ற அந்தச் சிறிய கிராமத்தில் மட்டும் என்னை விடவும் முப்பது பேருக்கு மேல் வீட்டுப் பெயர் 'ராசன்' என்று இருந்தது. அதை இப்போது நினைத்துப் பார்க்கையில் வியப்பில் மூழ்கிப் போகிறேன்.
சித்தி என்னை அன்பொழுக வரவேற்று உபசரித்தார். உங்களிடம் நான் ஏற்கனவே கூறியதுபோல் அவர் ஒவ்வொரு தடவையும் எனக்கு ஏதாவதொரு உணவோ, தின் பண்டமோ தந்து உபசரிப்பது வழக்கம். நாளை பாலர் பாடசாலைக்கு பொம்மை ஒன்று கொண்டு போக வேண்டும் என்பதை சித்தியிடம் எவ்வித பயமும் இல்லாமல் கூறினேன். இவ்விடத்தில் 'எவ்வித பயமும் இல்லாமல்' என்ற வரியை நான் உபயோகிப்பதற்குக் காரணம் "ஒரு பிள்ளை தனக்கு மிகவும் பிடித்தவர்களிடம், தன்னோடு மிகவும் அன்பாக நடந்து கொள்பவர்களிடம் ஒரு விதமான பாதுகாப்பு உணர்வை(Secure feeling) உணர்கிறது" என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். இவ்வாறான பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துகின்ற விடயத்தில் பெரும்பாலான குடும்பங்களில் தாயோ, அல்லது தந்தையோ தவறிழைத்து விடுகின்றனர். இது பல உளவியற் சிக்கல்களுக்கு வழிவகுத்து விடுகிறது. பின்னாளில் தங்களது பிள்ளைகள் தம்மிடம் மனம் விட்டுப் பேசுவதில்லை என்று பெற்றோர் குறைபட்டுக் கொள்கின்றனர். ஒரு சில பிள்ளைகள் தாயிடம் மட்டுமே தங்கள் மனதிலுள்ளதைப் பகிர்ந்து கொள்வார்கள். சில பிள்ளைகளோ தங்கள் தந்தையிடம் மட்டுமே மனதிலுள்ளதைப் பகிர்ந்து கொள்வார்கள். காரணம் என்ன என்பது உங்களுக்கு இப்போது புரிந்திருக்கும். இந்த நடத்தை காரணமாக "இது அம்மாவின் பிள்ளை" "அது அப்பாவின் பிள்ளை" என்றெல்லாம் பெற்றோர்களே 'முத்திரை' குத்துவதற்கும் காரணமாக அமைந்து விடுகிறது. உண்மை என்னவென்றால் மேற்கூறிய எடுத்துக் காட்டுகளில் குறிப்பிட்ட குடும்பத்தில் தாய் மட்டும் அல்லது தந்தை மட்டுமே பிள்ளைக்குப் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தி இருக்கிறார் என்று அர்த்தம். என் தாயார் பொருட்கள் வாங்குவதற்கு என்னைக் கடைக்கு அனுப்பினால் மிகுந்த மகிழ்ச்சியோடு செல்வேன். என் தந்தையார் அனுப்பினால் மிகவும் பயந்துகொண்டே செல்வேன். காரணம் இருக்கிறது. எனது தாயார் எப்போதுமே வாங்கவேண்டிய பொருட்களின் பெயரை ஒரு துண்டுச் சீட்டில்(பேப்பரில்) எழுதித் தந்தே அனுப்புவார். ஆகையால் ஒரு பொருளையும் மறப்பதற்கோ, மறந்தால் பேச்சு(திட்டு) அல்லது அடி வாங்குவதற்கோ வாய்ப்பே இல்லை. ஆனால் என் தந்தையார் வாங்கவேண்டியது ஒரு பொருளாக இருந்தால் என்ன, ஐந்து பொருளாக இருந்தால் என்ன துண்டுச் சீட்டில் குறித்துத் தரமாட்டார். வாங்கவேண்டிய பொருளின் பெயர்களை கடகடவென்று கூறுவார். கிட்டத்தட்ட கே.எஸ்.ராஜா அவர்கள் 'திரை விருந்தில்' திரை அரங்குகளின்(தியேட்டர்களின்) பெயர்களைக் கடகடவென்று கூறுவது போல் இருக்கும். தன்னம்பிக்கை குறைந்து இருக்கும் சமயங்களில் மௌனமாக இருப்பார், மற்ற நேரங்களில் எல்லாம் அவர் தமிழ் பேசினாலும், அவர் மீது கொண்ட பயம் காரணமாக எனக்கு 'அரபு' மொழி பேசுவது போல் இருக்கும். இந்த லட்சணத்தில் பொருட்களைக் கடகடவென்று கூறினால் எப்படி விளங்கி, ஞாபகத்தில் வைப்பதாம்? அவர் கூறியது தெளிவாகக் கேட்கவில்லை என்றால் திரும்பவும் கேட்கக் கூடாது. கேட்டால் 'சுருக்' என்று கோபம் வந்துவிடும். ஏனடா உனக்குக் காது என்ன செவிடா? என்று கேட்பார். அல்லது ஒரு அடி கிடைக்கும். இந்தக் காரணத்தாலேயே நான் அவர் கூறுவதைத் தெளிவு படுத்துவதற்காக இரண்டாம் முறை கேட்பதைத் தவிர்த்தேன்.மெல்ல, மெல்ல அவரோடு எனக்குப் பேச்சு வார்த்தை குறைந்தது மட்டுமன்றி அவருக்கும் எனக்கும் இடையிலான இடைவெளி மிகவும் அதிகரித்து விட்டது. எனது தாயார் எனக்கு ஏற்படுத்திய பாதுகாப்பு உணர்வை எனது தந்தையார் ஏற்படுத்தத் தவறி விட்டார் என்றே சொல்வேன்.
இத்தகைய காரணங்களாலேயே திரைப்பட இயக்குனர்களும் தங்களது தமிழ் சினிமாவில் தாயை ஒரு 'தியாகியாகவும்' தந்தையை ஒரு கொடியவனாக, ஹிட்லராக காட்டியிருப்பார்கள். தாயை விடவும் ஒருபடி மேலே சென்று பிள்ளைகள் மீது பாசத்தைக் காட்டிய, அவர்களைப் பேணி வளர்த்த, பிள்ளைகளுக்கு ஒரு நல்ல முன் மாதிரியாக(Role model) திகழ்ந்த தந்தையர்களையும் நான் அறிவேன். ஆதலால் தமிழ்த் திரைப்பட இயக்குனர்களுடன் எனக்கு உடன்பாடில்லை.
இவ்வாறு எனது தந்தையாரிடம் கிடைக்காத பாதுகாப்பு உணர்வு நான் எனது பேர்த்தியாரின் வீட்டில் வளர்ந்தபோது எனது பேர்த்தியாரிடமோ, மாமாவிடமோ கிடைக்கவில்லை. ஆனால் நான் மேலே குறிப்பிட்ட சித்தியிடம் கிடைத்தது. காரணம் அவர் என்னைத் தனது பிள்ளைகளில் ஒன்றாகவே பார்த்துக் கொண்டார். என்னை ஒருபோதும் 'டேய்' என்றுகூட அழைத்ததில்லை. அவரிடம் பொம்மை ஒன்று கேட்டு வாங்குவதற்கு எனக்குத் தயக்கம் இருக்குமா என்ன? நான் கேட்டவுடன் தனது பிள்ளைகளின் பொம்மைகளில் மிகவும் அழகான ஒரு பொம்மையை எடுத்து அதை கடதாசியால்(பேப்பரால்) சுற்றி மறைத்து வேறொரு பையில் போட்டு என்னிடம் கொடுத்தார். அவர் அதைப் பையில் மறைத்துக் கொடுத்ததற்குக் காரணம் எனது தங்கைகள்(சித்தியின் பிள்ளைகள்) மிகவும் சிறு வயதினர் என்பதால் அவர்கள் தங்களது பொம்மை என்னிடம் கொடுக்கப் படுவதைக் கண்டு அழக் கூடும் என்பதால். அவ்வாறு சித்தியிடம் பொம்மை வாங்கிக் கொண்டு அம்மம்மா(பேர்த்தியார்) வீட்டை நோக்கி ஓடிய எனக்கு அடுத்த நாள் அந்தப் பொம்மை எனக்குப் பயன்படப் போவதில்லை என்ற விடயம் தெரியாது.
(இன்னும் சொல்வேன்)  

1 கருத்து:

vinothiny pathmanathan dk சொன்னது…

சில குறிப்பிட்ட பெயர்கள் அதிகளவில் இருப்பது மறுக்க முடியாதது. உதாரணமாக மலர்,ராணி,கமலா,வதனி,ராசன்,ஸ்ரீ.
தொடர் நன்றாக போகிறது. பாராட்டுக்கள்

கருத்துரையிடுக