வியாழன், மார்ச் 08, 2018

ஓராண்டு நினைவு அஞ்சலி

அமரர்.அபிராம்பிள்ளை சிவப்பிரகாசம், அல்லைப்பிட்டி, யாழ்ப்பாணம், இலங்கை.
தோற்றம்: 16.02.1923
மறைவு: 08.03.2017


எங்கள் பேர்த்தியாருக்கு நீங்கள் "இஞ்சேரப்பா' (அதனை நாங்கள் 'விண்ட்ஸரப்பா' என்று கிண்டலடிப்பதும் உண்டு) 
உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் 'ஐயா'
உங்கள் மருமக்களுக்கு நீங்கள் 'அம்மான்' / 'மாமா'
உங்கள் பேரப்பிள்ளைகள், பூட்டப் பிள்ளைகள் அனைவருக்கும் பொதுவாக நீங்கள் 'அப்பையா' ('அம்மையா' என்று அழைக்கும்படி இடையிடையே  வற்புறுத்தியபடி நீங்களும் இருந்தீர்கள்; இந்த விடயத்தில் சமரசம் செய்யாமல் நாங்களும் வளர்ந்தோம் அது தவறாக இருந்தும்) 
உங்கள் பெறாமக்களுக்கு நீங்கள் 'குஞ்சி ஐயா' / ஆசை ஐயா'  
அல்லைப்பிட்டியில் உங்களை அறிந்தவர்கள், தெரிந்தவர்களுக்கு நீங்கள் 'பிரகாசம் அப்பா' , நண்பர்களுக்கு 'பிரகாசம்' ஒரு சில வயது வித்தியாசம் உள்ளவர்களுக்கு மட்டும் 'பிரகாசம் அண்ணன்'
இப்படியாக ஒரே மனிதனின் பல வித நாமகரணமும், உறவு சொல்லி அழைக்கும் 'உறவு முறையும்' கடந்த ஆண்டில் இதே நாளில் கால தூதனால் முடிவுரை எழுதி வைக்கப் பட எங்கள் அனைவரிடம் இருந்தும், இந்தப் பூமிப் பந்தில் இருந்தும் உங்கள் 94 ஆவது வயதில் விடை பெற்றீர்கள் அப்பையா!
அல்லைப்பிட்டியில் "100 வயதுக்கு மேல் வாழ்ந்த மனிதர்" என்ற பெருமையை எங்கள் அப்பையா பெற வேண்டும் என்ற ஒரு சிறிய ஆசையைத் தவிர வெறெந்தப் பேராசையும் எங்களுக்கு இருக்கவில்லை. 
உங்கள் மரணத்தால் நாங்கள் அதிர்ச்சி அடையவில்லை. ஆனால் 32 வருடங்களுக்கு முன்னால் உங்கள் கண் பார்வை பறி போனதால் வாழ்வு உங்களுக்கு சுமையாகிப் போனதை நினைத்தே எங்களுக்கு வலியும், வேதனையும். 94 வயது வரை ஒரு மனிதன் அமைதியாக, மனத்தால் கூட அடுத்தவருக்கு துரோகமோ, துன்பமோ செய்யாமல், தானுண்டு தன் வேலை உண்டு என்று வாழ்ந்தாலும் கீழைத்தேய நாடுகளில்(ஆசிய நாடுகளில்) சாதனைதான். ஆகையால் நீங்கள் உங்கள் வாழ்வில் பெரிதாக எதுவும் சாதிக்கவில்லை என்று நாங்கள் கவலைப் பட்டதே இல்லை. மாறாக எங்கள் நாட்டிற்குள், ஊருக்குள் மேடை நாடகங்களும், திரைப்படங்களும் நுழைவதற்கு முன்னால் பிரபலமாக இருந்த 'நாட்டுக் கூத்து' என்ற கலையில் எங்கள் அப்பையா சிறந்து விளங்கினார் என்பதும் அல்லைப்பிட்டியில்  பங்கேற்ற 'கூத்துகளில்' எல்லாம் 'சேனாபதி' (படைத் தளபதி) என்ற வேடத்திலேயே தோன்றினீர்கள் என்பது நாங்கள் பெருமைப்படும் விடயங்களில் ஒன்று. (போதிய 'ஞாபக சக்தி' + மொழியறிவு இல்லாதார்களிடம் அந்தப் பாத்திரத்தை 'அண்ணாவியார்' / நாட்டுக் கூத்து இயக்குனர் கொடுக்க மாட் டார் என்பதை நாங்கள் அறிவோம்) 
நீங்கள் பேரப் பிள்ளைகளாகிய எங்களுக்குப் பாடிக் காட்டிய நாட்டுக் கூத்துப் பாடல் வரிகளில்:
"சிங்காரன் தாரணி மார்பன் 
செகத்து(ஜெகத்து) மாநகர் துதிக்கும் மன்னவன் 
மங்கா முடி புனைந்து வாழ்பவன், மதிக்கும் ஆற்றலர் திகைக்க ஆழ்பவன்"..................என்று தொடங்கும் பாடலும் 
"மன்னன் எந்தனை ஏன் அழைத்தனரோ? மிக வேகமாகவே மன்னன் எந்தனை ஏன் அழைத்தனரோ? என்று தொடங்கும் பாடலும் உங்கள் பேரப்பிள்ளைகள் அனைவருக்குமே மனப்பாடம் அப்பையா. உங்கள் பாடல்களை பதிவு செய்து வைத்தோம். 1990 ஆம் ஆண்டில் போரால் அழிந்து போனது. அதன் பின்னர் உங்கள் பாடல்களை காணொளி வடிவில் பதிவு செய்யும் முயற்சிகள் செய்து கொண்டு இருக்கையில் எங்களை விட்டு, இவ்வுலக வாழ்வைத் துறந்தீர்கள். அந்த ஒரு ஏக்கத்தைத் தவிர வேறெந்த ஏக்கத்தையும் நீங்கள் எங்களுக்கு விட்டு வைக்கவில்லை. எங்கள் மாமாவிடம் இளம் வயதில் இருந்த 'நடிப்புத் திறமையும்', என் தாயாரிடம், என்னிடம், என் தம்பியிடம் இருந்த, இருக்கின்ற 'பாடும் திறமையும்', மனனம் (மனப்பாடம்) செய்கின்ற திறமையும் உங்களிடம் இருந்து எங்களுக்கு கிடைத்த சொத்து என்று நம்புகிறவர்கள் நாங்கள். விண்ணுலகில், நிச்சயமாக சொர்க்கத்தில் இறைவன் திருவடி நிழலில் எங்கள் பேர்த்தியார்(அம்மம்மா) மற்றும் ஏனைய சொர்க்கத்திற்கு வந்த உறவினர்கள் சகிதம் பேரின்பப் பெருவாழ்வு வாழ்வீர்கள் என்று இந்த உங்களது நினைவு நாளில் உளப்பூர்வமாக நம்புகிறோம் அப்பையா. நீங்கள் உங்கள் வாழ்நாளில் எங்களுக்குத் தந்த அத்தனைக்கும் நன்றியோடு இருக்கிறோம். உங்களுடைய இந்த நினைவு நாளில் மலர் தூவி அஞ்சலி செய்கின்றோம் அப்பையா! 
  
"இதயங்களில் ஏந்துவோர் இருக்கும் வரை மரணம் ஒரு மனிதனின் வாழ்வில் முடிவு அல்ல"
ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி. 
மிக்க அன்புடனும் 
நினைவேந்தும் மனதுடனும் 
பிள்ளைகள், மருமக்கள், 
பேரப்பிள்ளைகள், பூட்டப் பிள்ளைகள் மற்றும் உறவினர்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக