ஞாயிறு, ஜூலை 13, 2014

அதிர்ஷ்டத்தை நம்பலாமா???

பணம் சம்பாதிப்பதற்கு அதிர்ஷ்டமே முதல் காரணி என்று நினைக்கிறோம். திறமை, துணிவு, செயல், புதுமை என எத்தனை விஷயங்கள் பணம் சம்பாதிக்கத் தேவையானவை என்று நம்முடைய மூளை சொன்னாலுமே ஒவ்வொருமுறை நாம் முயற்சிகளைச் செய்து தோல்வியைச் சந்திக்கும்போதும் சரி, எதிர்பார்த்த வெற்றியை பெறாதபோதும் சரி, அதிர்ஷ்டமும் பணம் சம்பாதிக்கத் தேவையான ஒன்றே என்ற கட்டாய முடிவுக்கு நாம் சென்றுவிடுகிறோம்.
தொடர்ந்து பல்வேறு சிறுதொழில் முயற்சிகளைச் செய்து ஓரளவு வெற்றியையும்/தோல்வியையும் மாறிமாறி சந்தித்து வரும் நண்பர் ஒருவர் அடிக்கடி ஜோக்காகச் சொல்லும் ஒரு விஷயம் இது. ”அதிர்ஷ்டம் என்று ஒன்று இருக்கிறதோ, இல்லையோ என்பது பற்றி எனக்குத் தெரியாது. ஏனென்றால், அதை நான் பார்த்ததோ, அதனால் பலன் ஏதும் பெற்றதோ இல்லை. ஆனால், ஒன்று மட்டும் உறுதியாக அடித்துச் சொல்வேன். துரதிர்ஷ்டம் என்று ஒன்று இருக்கவே இருக்கிறது. ஏனென்றால், பல சமயம் என்னுடைய தொழில் முயற்சிகளில் அதைச் சந்தித்தும் அதனால் வரும் பலன்களை அனுபவித்தும் இருக்கிறேன்” என்பார்.
அதேபோல், ”துரதிர்ஷ்டம் என்பது ஒரு வைரல் ஃபீவர் மாதிரி. நமக்கு வந்துவிட்டால் மருந்தை சாப்பிட்டுவிட்டு போர்வையைப் போர்த்திப் படுத்து ரெஸ்ட் எடுத்தேயாக வேண்டும். மருந்தின் காரணமாக வைரஸின் வீரியம் குறைந்தபின்னர் நாம் சகஜ வாழ்க்கை வாழ ஆரம்பிப்போம். துரதிர்ஷ்டத்தைச் சரிசெய்ய மருந்து கிடையாது. போர்த்திக்கொண்டு சமர்த்தாய் படுத்துக்கொண்டுவிட வேண்டும். துரதிர்ஷ்டம் அதுவே தானாக வீரியம் குறைந்து, ஒருநாள் நம்மைவிட்டுப் போகும். அதற்குப் பின்னரே நாம் சகஜ வாழ்க்கைக்குத் திரும்பலாம். அதை மீறி துரதிர்ஷ்டத்தைச் சரிசெய்கிறேன் என்று எதிர்த்தோமென்றால் படுத்த படுக்கையாகிவிட வேண்டியதுதான்” என்று தமாஷாகச் சொல்வார்.
வேடிக்கையாக அவர் சொன்ன போதிலும், கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால் அதில் உள்ள விஷயங்கள் புரியும்.
பணரீதியான வெற்றிக்குத் தேவையான எல்லாமும் இருந்தும் சிலசமயம் அதை நோக்கிய செயல்பாடு களில் நாம் எதிர்கொள்ளும் சிக்கல்கள் நம்மையும் இதுபோன்ற ஓர் இனம்புரியாத குழப்பத்தில் கொண்டு சேர்த்துவிடுகிறது. அதிர்ஷ்டசாலிகள் பலர் தாங்கள் எடுக்கும் முயற்சிகளில் தோல்வி என்ற ஒருபக்கம் இருப்பதையே மறந்துபோய்ச் செயலாற்றி வெற்றி பெற்றுவிடுகிறார்களோ என்று தோன்றும் அளவுக்கு எங்கும் வெற்றி எதிலும் வெற்றி என்று திளைக்கின்றனர். இது எப்படி என்று நம்மில் பலரும் அன்றாடம் சிந்திக்கவே செய்கிறோம்.
அதிர்ஷ்டம் குறித்த ஆராய்ச்சிகள் பலவற்றை ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்துகொண்டே வருகின்றனர். ஓர் ஆய்வில் கிட்டத்தட்ட 50% பேர் தாங்கள் அதிர்ஷ்டம் நிறைந்தவர்கள் என்றும், 36% பேர் எங்களுக்கு அதிர்ஷ்டமும் இல்லை – துரதிர்ஷ்டமும் இல்லை என்றும், 14% பேர் எங்களுக்குத் துரதிர்ஷ்டம் மட்டுமே இருக்கிறது என்றும் சொன்னதாகச் சொல்கிறது முடிவுகள்.
அதிர்ஷ்டசாலிக்கும், துரதிர்ஷ்டசாலிக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப் பின்வரும் வகைகளாகப் பட்டியலிடலாம். அதிர்ஷ்டசாலிகள் தொடர்ந்து பலன்தரும் வாய்ப்புகளையே சந்திக்கின்றனர். அவர்கள் வாழ்வில் பலசமயம் அவர்களுக்கு நன்மை தரக்கூடிய வல்லமையுள்ள நபர்களைச் சந்திக்கின்றனர். துரதிர்ஷ்டவாசிகளோ பலன்தரும் வாய்ப்புகளை எதிர்கொள்வதில்லை. மாறாக, அவர்களுக்குக் கெடுதல் தரக்கூடிய விளைவுகளை உருவாக்கும் வல்லமையுடைய நபர்களையே சந்திக்கின்றனர்.
அதிர்ஷ்டசாலிகள் ஏனென்று தெரியாமலேயே பல நல்ல முடிவுகளை எடுத்துவிடுகின்றனர். எந்தச் சூழ்நிலை யில் எந்தமாதிரியான முடிவு சரி என்றும், எந்த மாதிரியான நபர்களை நம்பலாம் என்றும் அவர்களுக்குச் சரியாகவும் இயல்பாகவும் தெரிகிறது. துரதிர்ஷ்டசாலிகள் எடுக்கும் வியாபார மற்றும் நபர்கள் குறித்த முடிவுகள் அவர்களைக் கஷ்டத்தில் கொண்டுபோய் விட்டுவிடுகிறது.
அதிர்ஷ்டசாலிகளின் கனவு மற்றும் விருப்பம் (தோன்றும்போது மிகவும் நூதனமாக இருந்தபோதிலும்!) என்பதை அடையத் தேவையான மதிநுட்பம் மற்றும் திறமைகளை எப்படியோ பெற்றுவிடுகின்றனர். துரதிர்ஷ்டசாலி களோ அடையக்கூடியதாக இருக்கக்கூடிய கனவுகள் மற்றும் விருப்பங்களுக்குத் தேவையான மதிநுட்பம் மற்றும் திறமைகளைப் பெறகூடத் தடுமாறுகிறார்கள்.
அதிர்ஷ்டசாலிகள் பலதடவை தங்களுடைய துரதிர்ஷ்டத்தைக்கூட அதிர்ஷ்டமாக மாற்றியமைத்துக் கொண்டுவிடுகிறார்கள். துரதிர்ஷ்டசாலிகளோ தாங்கள் எதிர்கொள்ளும் துரதிர்ஷ்டத்தைக் கண்டு துவண்டுபோய்த் தங்களுடைய செயல்பாடுகளை மேன்மேலும் சிதைத்துக்கொள்கிறார்கள்.
இந்த வித்தியாசங்கள் தெளிவாகத் தெரிந்தபோதும், துரதிர்ஷ்டசாலிகள் ஏன் தங்களை அதிர்ஷ்டசாலிகளாய் மாற்றிக்கொள்ள முயல்வதில்லை என்று நீங்கள் கேட்கலாம். மாற்றிக் கொள்வதற்கான வழிமுறைகளை ஆராய்ந்தறிந்து கண்டுபிடித்துச் செயலாக்குவதில் உள்ள சிக்கல்கள்தான் நடைமுறையில் மிகவும் கடினமான ஒன்றாக இருக்கிறது. இதைக் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.
make_money_at_home_1அதிர்ஷ்டசாலிகள் வாய்ப்புகளைக் கண்டுபிடிப்பதிலும், உருவாக்கிக் கொள்வதிலும், அதைச் செயலாக் குவதிலும் முனைப்பாகச் செயல்படு கின்றனர் எனலாம். இதைக் கொஞ்சம் கூர்ந்து நோக்குங்கள்.
வாய்ப்புகளைப் பெற, வாய்ப்புகள் தருபவர்கள் வேண்டும். வாய்ப்புகளைப் பெறுபவருக்கே அதிர்ஷ்டம் வேண்டும் என்கிறோம் எனில், வாய்ப்புகளைத் தரும்நிலையில் இருப்பவரும் அதிர்ஷ்டசாலியாகத்தானே இருப்பார்? அதனாலேயே அதிர்ஷ்டசாலிகள் எப்போதுமே அதிர்ஷ்டசாலிகள் அடங்கிய நெட்வொர்க்கில் பங்கெடுத்து இருப்பார்கள் என்று சொல்லலாம் அல்லவா?

பணம் சம்பாதிக்க இப்படிப்பட்ட ஒரு நெட்வொர்க் தேவைப்படவே செய்கிறது. இந்த நெட்வொர்க்கை உருவாக்கிக்கொள்ளும்போது நான் சம்பாதிக்கவேண்டும் என்ற வேட்கையுடன் இருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டிருந்தால் சரியாய் வருமா? சரிப்படாது இல்லையா? அதனாலேயே, அதிர்ஷ்டசாலிகள் பெரும்பாலும் பண வாய்ப்புகள் குறித்து பெரிய அளவில் ஆர்வமும் கவலையும் கொண்டிருப்பதில்லை. நெட்வொர்க்கில் தொடர்ந்து இருந்துகொண்டே இருப்பார்கள். அவ்வளவேதான்! அடிபிடிக் கட்டாயத்தில் பணவாய்ப்பு தேடி அலையமாட்டார்கள். அதனாலேயே வாய்ப்புகள் அவர்களைத் தேடிவரும்.
நெட்வொர்க் பெரியதாகும்போது புதிய அனுபவங்கள், புதிய மனிதர்கள் எனப் பலரும் சேருவார்கள். எனவே, அதிர்ஷ்டசாலியாக வேண்டுமென்றால், புதிய அனுபவங்கள்/பழக்கங்களுக்குப் பயப்படக்கூடாது. புதியன விரும்புபவர்களாக இருக்கவேண்டும். அதேபோல் அதிர்ஷ்டசாலிகள் தங்களுடைய உள்மனம் சொல்வதைக் கூர்ந்து கேட்பவர்களாக இருப்பார்கள்.
எங்களுக்கெல்லாம் இந்த உள்ளுணர்வு (இன்ட்யூஷன்) எப்போதாவதுதான் வருகிறது என்று சொல்பவர்கள், உள்ளுணர்வை அதிகப்படுத்துவதற்கான பயிற்சிகள் பலவற்றையும் செய்து இந்தத் திறனை அதிகப்படுத்திக்கொள்ளலாம். அடுத்தபடியாக அதிர்ஷ்டசாலிகள் தங்களுடைய அதிர்ஷ்டம் தங்களுடைய எதிர்கால எண்ணங்கள் மற்றும் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தொடர்ந்து உதவி செய்யும் என்று முழுமையாக நம்புகிறார்கள். ஒருபோதும் நமக்கு அதிர்ஷ்டக்குறைவு ஏற்படாது என்பதே அவர்களுக்குப் பெரிய பாசிட்டிவான விஷயமாக இருக்கிறது. இதனாலேயே அவர்கள் இறங்கும் வெற்றிவாய்ப்பு குறைவாக இருக்கும் செயல்களில்கூடச் சுலபத்தில் வெற்றியைப் பெற்றுவிடுகின்றார்கள்.
அதேபோல், மற்றவர்களுடன் பழகும்போது வெற்றிகரமான டீல்களைக் கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கையுடனேயே வாழ்கிறார்கள். இதனாலேயே அவர்களுக்கு வெற்றி ஒரு தொடர் சங்கிலியாக இருக்கிறது.
இறுதியாக அதிர்ஷ்டசாலிகளின் கண்ணில் அவர்களுக்கு ஏற்படும் துரதிர்ஷ்ட நிகழ்வுகளில்கூட அதில் இருக்கும் நன்மைதான் தெரிகின்றது. இதனால் அவர்கள் தங்கள் முயற்சியில் சோர்வடைவதுமில்லை. தப்பித்தவறி கெட்டவிஷயங்கள் நடந்தால்கூட அது நன்மைக்கே என்று கொள்வதில்தான் அதிர்ஷ்டசாலிகளின் நீண்டகால வெற்றியின் ரகசியமே அடங்கியுள்ளது. இந்த எண்ணத்தினால்தான் துரதிர்ஷ்டத்தின்பிடியில் நான் சிக்கி வாழ்ந்துகொண்டிருக்கிறேன் என்று அவர்கள் புலம்புவதேயில்லை.
இதையும் தவிர்த்து துரதிர்ஷ்ட நிகழ்வுகளை எதிர்கொள்ளும் அதிர்ஷ்டசாலிகள் அவர்களுடைய வாழ்வில் அடுத்துவரும் நிகழ்வுகள் துரதிர்ஷ்டமாக இல்லாதவாறு பார்த்துக்கொள்வதில் திறமை வாய்ந்தவர்களாகவும் திகழ்கிறார்கள். அவர்களுடைய உள்ளுணர்வு அதற்கேற்றாற் போல் அவர்களை வழிநடத்திச்செல்ல வல்லதாய் இருக்கிறது.
மேலே சொன்னவைதான் அதிர்ஷ்டசாலிகளின் அதிவேகமான பயணத்துக்கான காரணமாக இருக்கும் என்று ஒப்புக்கொள்கிறீர்களா? பணம் சம்பாதிக்க நினைக்கும் அனைவரும் இதற்கேற்றாற்போல் மாறிக் கொள்ளவேண்டியிருக்கும்.
நன்றி:விகடன் 

1 கருத்து:

Yarlpavanan சொன்னது…

சிறந்த பகிர்வு

கருத்துரையிடுக