திங்கள், ஜூலை 21, 2014

'தன் ஆளுமை' என்னும் மண் ஆளும் தந்திர இரகசியம்

ஆக்கம்:ம.திருவள்ளுவர், தேவகோட்டை, சிவகங்கை, தமிழ்நாடு.
பாகம் 3.(கடந்த 15.07.2014 அன்று உங்கள் அந்திமாலையில் வெளியாகிய பதிவின் தொடர்ச்சி)
மேற்கண்ட சதுரம் – 4 மற்றும் சதுரம் – 3 – இவை இரண்டையும் ஊன்றி நோக்கினால் ஒன்றை உணரலாம். இவை இரண்டிலும் அதிக நேரத்தைச் செலவிடுபவர்கள் எதற்கும் அதிகமாக அலட்டிக் கொள்ளாதவர்களாகவும், பெரும் பொறுப்பு எதையும் ஏற்றுச் செய்யாதவர்களாகவும் இருப்பார்கள். பொழுதுபோக்கும் முகமாக – பிறரின் காரியங்களில் தம்மை ஈடுபடுத்திக் கொள்பவர்களாகவும் காணப்படுவார்கள். இவர்கள். 
ஆனால் செயல்திறனும், செய்நேர்த்தியும் மிக்கவர்கள் இந்த இரண்டு சதுரங்களுக்குள் சிக்கிக் கொள்ளமாட்டார்கள். ஏனெனில், அவசரமாய் இருந்தாலும் அவசியமில்லை என்பதால் அவசியமற்ற விடயங்களில்  தம்மை ஈடுபடுத்திக் கொள்ள மாட்டார்கள். எனவே நாமும் செய்நேர்த்தி மிக்கவர்களாக வாழ வேண்டுமெனில் அவசியமற்றவற்றை ஒதுக்கிவிட்டு நேரத்தை முறையாகப் பயன்படுத்தப் பழக வேண்டும்.
இப்போது, முதல் சதுரத்தைப் பாருங்கள். அங்கே குவிந்து கிடக்கும் காரியங்கள் யாவும் அவசரமாகச் செய்து முடிக்கப்பட வேண்டிய நிலையிலும், அவசியம் செய்து முடிக்க வேண்டிய கட்டாயத்திலும் இருப்பதை நம்மால் உணர முடியும். பெரும்பாலான சமயங்களில் நமது செயல்பாடுகள் இப்படித்தான் உள்ளன.
எல்லாச் செயல்பாடுகளையுமே, இப்படி ஒரு நெருக்கடி காலச் செயல்களாக மாற்றிக்கொண்டு அவதிப்படுகிறோம். அவற்றை எப்போது செய்து முடித்திருக்க வேண்டுமோ அப்போது அவற்றைச் செய்து முடிக்க முனைவதில்லை. ஒத்திப் போடுதல்/பின்போடுதல் என்னும் மனோபாவம் நம்மை உதறிப் போட்டு விடுகிறது.

“வேலை இல்லை வேலை இல்லை” – என அங்கலாய்க்கும் இளவட்டங்கள் கூட தங்கள் வேலைக்கான மனுவை உரிய நேரத்தில் அஞ்சலில் சேர்க்காமல், இறுதி நாளில் அதை எடுத்துக்கொண்டு, அடுத்த நாளே சேர வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டுமெனப் பலரிடமும் கேட்டுத் திரிவதைக் காண முடியும். “ஏன்? இத்தனை நாளாய் என்ன செய்தாய் என்று கேட்டுப் பார்த்தால்; இன்னும் நாள் இருக்கிறதே என்று தள்ளிப் போட்டேன். கடைசியாய் பார்த்தால், தாசில்தார்(பிரதேசத்திற்குப் பொறுப்பான அரசு அதிகாரி) ஊரில் இல்லாமல் போய், சாதிச்சான்றிதழுக்காக ஒரு வாரம் காத்திருக்க வேண்டியதாயிற்று” – என்பார் அந்த இளைஞர்.
ஏன் இந்த நிலைமை? காலத்தின் அருமையை உணராமைதான் காரணம். சோம்பலும், எது முக்கியம் அல்லது எது அவசரம் எனப் புரியாமையுமே – இதற்குக் காரணம். ஒரு நொடி தாமதிப்பதால் ஏற்படும் இழப்பை – முதலாவதாய் வந்து தன் முத்திரையைப் பதிக்க முடியாமற்போகும் ஒரு விளையாட்டு வீரன் உணர்வான்! இழந்தபின் அழுது என்ன பயன்? ஆகவே காலத்தின் அருமையை அறிந்து உணர்தல் அவசியம். நேரத்தின் அவசியத்தை உணர வேண்டுமெனில் நமது அன்றாடப் பணிகளைப் பட்டியலிட வேண்டும். பிறகு அவசியமானவற்றையும் அவசரமானவற்றையும் அடையாளம் காண வேண்டும்.
மாறாக சதுரம் – 2 ஐக் கவனியுங்கள். அங்கே “அவசரமற்ற ஆனால் அவசியமான” – காரியங்கள் மட்டுமே மிஞ்சும். இந்தச் செயல்களை உடனடியாக முடிக்க வேண்டிய அவசரமில்லை. ஆனால் அவசியம் முடித்தாக வேண்டும் என்பவை இவை. இவற்றில்தான் நாம் நமது முழு கவனத்தையும் செலுத்த வேண்டும். அப்படிச் செலுத்தினால் நமக்கும் அவசரமோ, ஆத்திரமோ இல்லாமல் நிதானமாகத் திட்டமிட்டு தீர்க்கமாக வெற்றிகரமாக நமது காரியங்களைச் செய்து முடிக்க முடியும். அத்தகைய காரியங்களே நம்மை செய்நேர்த்தி மிக்கவர்களாக உலகுக்கு அடையாளம் காட்டும்.
வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கையை ஆராய்ந்தால் அவர்களெல்லாம் சதுரம் – 4 மற்றும் சதுரம் 3 இரண்டையும் புறக்கணித்து விட்டவர்களாகவும், சதுரம் – 1ஐ ஏறிட்டும் பார்க்க வேண்டிய அவசியமில்லாத வர்களாகவும் திகழ்வார்கள்.
காரணம் என்னவெனில் அவர்களின் கவனமும் ஈடுபாடும் அர்ப்பணிப்பும் சதுரம் -2 லேயே குவிந்திருக்கும்.
அவர்களுக்கு “எது அவசியம்” – என்பது புரிந்திருக்கும். அதுமட்டுமல்ல அவசரமானாலும் கூட அவசியமற்றதென்றால் அவர்கள் அதனைப்

  புறக்கணித்துவிடத் தயங்காத உறுதியான உள்ளம் படைத்தவர்களாகவும் திகழ்வார்கள். அதுமட்டுமல்லாமல் அவர்கள் எல்லாம் தங்களுக்கென சில இலக்குகளை முன்வைத்து இயங்கிக் கொண்டிருப்பதால் அவசியமில்லாமல் பிறரின் செயல்பாடுகளில் மூக்கை நுழைத்து தமது காலத்தை வீணடிக்கும் தவறான காரியத்தைச் செய்யமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
என்ன? – இனி நாமும் நமது அன்றாடச் செயல்களை......
(தொடரும்)
 இந்தத் தொடரின் பகுதி 4 ஐ அடுத்த வாரம் (29.07.2014) உங்கள் அந்திமாலையில் வாசியுங்கள்.
 

1 கருத்து:

Yarlpavanan சொன்னது…

சிறந்த ஆய்வுக் கண்ணோட்டம்
தொடருங்கள்

கருத்துரையிடுக