செவ்வாய், ஜூலை 22, 2014

நோபல் பரிசு பட்டியலில் என் பெயர் !!!

 'சகலகலா வல்லவன்' படமும் நோபல் பரிசு பட்டியலில் என் பெயரும். 

நான் நான்காவது படிக்கும் போது வந்த படம் இது. ஒரு சிறுவனின் மனதில் நீங்காமல் தங்கிவிட்ட திரைப்படத்தினைப் பற்றிய பதிவே இது.

ஒரு படத்தின் உண்மையான வெற்றி தெரிய நான்கு வாரங்கள் கூட ஆகிய காலம் அது. 40 பிரிண்ட் போடுவதெல்லாம் பெரிய விஷயமாக, பத்திரிக்கைகளில் துணுக்குச் செய்தியாக வரும். ஓல்ட் எம் ஆர் என்று அழைக்கப்பட்ட பழைய மதுரை, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஆறு அல்லது எட்டு பிரிண்ட்தான் வரும்.

படம் வெளியாகி 50 நாட்களுக்குள் எங்கள் ஊருக்கு வந்துவிட்டால், அது சுமாரான படம். 100 நாட்கள் கழித்து வந்தால் வெற்றிப்படம், 175 நாள் கழித்து வந்தால் தான் சில்வர் ஜூப்ளி.

ஆனால் எங்கள் ஊரில் அந்தந்த காலகட்டத்தில் இளவட்டமாக இருப்பவர்கள் மதுரைக்கோ திண்டுக்கலுக்கோ சென்று படம் பார்த்து விட்டு வந்து படத்தைப் பற்றி சொல்லிவிடுவார்கள். படம் எப்படா வருமென மற்றவர்கள் எல்லாம் எதிர்பார்த்துக் கொண்டிருப்போம். சில படங்களை எதிர்பார்த்து பசலையே வந்திருக்கிறது.

எதிர் வீட்டு ஞானசெல்வம், கமலின் விசிறி. அவர் திண்டுக்கலுக்கு போய் படம் பார்த்து விட்டு அதை விவரித்த விதத்தில், உடனேயே படம் பார்க்க வேண்டுமென்ற ஆவல் எங்கள் தெருவுக்கே ஏற்பட்டது.
திண்டுக்கல்லில் என்விஜிபி திரையரங்கில் படம் திரையிடப்பட்டு இருந்தது. ஏழு பேர் உட்காரும் பேக் பெஞ்சில் பத்துப்பேருக்கு மேல் நெருக்கியடித்து உட்கார்ந்து படம் பார்த்தார்களாம். மதியக்காட்சிக்கு கதவை மூடமுடியாதபடி மக்கள் நின்று கொண்டு படம் பார்த்தார்களாம். மாலைக் காட்சிக்கு வெளியில் நின்ற வரிசையை போலிஸாலேயே கட்டுப்படுத்த முடியவில்லையாம்.

அவர் சொன்னதில் சகதி சண்டை, கம்பு சண்டை, கார் சேஸிங், நியூ இயர் பாட்டு இவைதான் அந்தப் பிராயத்தில் என்னை கவர்வதாய் இருந்தது,
மதுரையில் என் சித்தப்பா இருந்தார். சென்ட்ரல் தியேட்டரில் படம் ஓடிக்கொண்டிருந்தது. அங்கே சைக்கிள் பார்க் செய்து டோக்கன் வாங்குபவர்களுக்கு டிக்கட்டில் முதல் மரியாதை. அவரிடம் அடம் பிடித்து, தியேட்டருக்கு கூட்டிப் போய்விட்டேன். தியேட்டர் வாசலையே நெருங்க முடியாத அளவுக்கு கூட்டம். திரும்பி வந்து விட்டோம்.

பின் ஒரு திருமணத்துக்கு திண்டுக்கலுக்கு குடும்பத்தோடு சென்று இருந்தோம். மண்டபத்தில் ராத்தங்கல். அங்கு இருந்த உறவினர்களை தாஜா செய்து அந்த படத்துக்கு போன குழுவோடு இணைந்து கொண்டேன். அப்போது படம் வந்து 50 நாளாயிருக்கும். ஆனாலும் டிக்கட் கிடைக்கவில்லை.

வாழ்க்கையில் முதன் முதலில் சந்தித்த ஏமாற்றம் இதுதான் என நினைக்கிறேன். எனக்குத்தெரிந்தவர்கள் எல்லாம் படத்தைப் பார்த்துவிட்டு ஆஹா ஓஹோ என்று சொல்ல என்னுள் ஆர்வம் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.

டீக்கடை ஸ்பீக்கர்கள், திருமண, சாமி கும்பிடு விழா ஒலிபெருக்கிகள் என எங்கும் சகலகலா வல்லவன் பாடல்கள் தான். பற்றாக்குறைக்கு சினிமாவைப் பற்றி தங்களுக்கு அதிகம் தெரியும் என பறைசாற்றிக்கொள்ளும் கல்லூரி மாணவர்கள் வேறு, நியூ இயர் சாங்குக்கு செட்டுக்கு ஒன்றரை லட்சம், கமல் அதில் ஆட ஒரு லட்சம் என்றெல்லாம், கிளப்பி விட்டுக் கொண்டேயிருப்பார்கள்.
ஒரு வழியாக பெட்டி, பெரியகுளம் அருளில் ஓடிவிட்டு, உசிலம்பட்டி மலையாண்டிக்கு வந்து விட்டது. அடுத்து வத்தலகுண்டு கோவிந்தசாமிக்குத்தான் என விவரமறிந்த வட்டாரங்கள் உறுதிப்படுத்திவிட்டன.

யோசித்துப் பார்த்தால்.... மேலும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக