செவ்வாய், ஜூலை 15, 2014

'தன் ஆளுமை' என்னும் மண் ஆளும் தந்திர இரகசியம்

ஆக்கம்:ம.திருவள்ளுவர், தேவகோட்டை, சிவகங்கை, தமிழ்நாடு.
பாகம் 2.(கடந்த 08.07.2014 அன்று உங்கள் அந்திமாலையில் வெளியாகிய பதிவின் தொடர்ச்சி)
மனம்:
கடந்த வாரத்தில் குறிப்பிடப் பட்ட மனதின் நான்கு பகுதிகளில் எந்தப் பகுதி அதிகமாக இருந்தால் வாழ்க்கை சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் அமையும்? நான்காய் பிரிந்து கிடக்கும் மனதை திறந்து கொண்டு ஒரு பெரிய மனதாய் மாற்றியமைக்க வேண்டும். அதற்கு மற்ற மூன்று பகுதிகளையும் சிறிது சிறிதாய் குறைக்க வேண்டும். சரி… அதை எப்படிச் செய்வது என்ற கேள்வியுடன் முடித்திருந்தோம். தொடர்வோம்....

சரி… அதை எப்படிச் செய்வது எனக் காண்போம். முதலில் மறைத்த பகுதியைக் குறைக்க பிறரோடு நமது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்க வேண்டும். மிகவும் நெருங்கியவர்களிடமாவது நமது மனதைத் திறந்து “பேச” முற்படவேண்டும். உண்மை பேச வேண்டும். பேசப்பேசத் தான் மறைத்த மனது குறையத் தொடங்கும். மனதின் பாரம் குறைந்து விடும். மனம் லேசாகும்.

அடுத்த பகுதியாகிய குருட்டுப் பகுதியைக் குறைக்க வேண்டுமெனில் நம்மிடம் அக்கறை கொண்ட பிறரைப் பேச அனுமதிக்க வேண்டும். அதுமட்டுமல்ல அவற்றைக் காது கொடுத்தும் கேட்கவும் வேண்டும். பிறர் சொல்லை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆனால் கேட்டுக் கொள்ளவும், கவனிக்கவும் தயக்கம் காட்டக்கூடாது. அப்போதுதான் நம்முடைய குறைபாடுகள் நமக்குத் தெரியவரும். நமது குறைபாடு நமக்குத் தெரிந்து விட்டால் – அவற்றை மாற்றிக்கொள்ள நாம் முயற்சி மேற்கொள்ளலாம். அப்போது நம் வாழ்வில் மேம்பாடு நிகழும்.

அடுத்ததாக இருண்ட பகுதியைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். அதற்கு நாம் செய்ய வேண்டுவதெல்லாம் “தேடல்” தான். நம்மிடமுள்ள திறமைகள் என்ன? நமது ஆர்வம் அல்லது விருப்பமென்ன? நமது இலக்கு என்ன? நமக்கான வாய்ப்புகள் என்னென்ன? நமக்கான தடைகளை எப்படித் தகர்த்து முன்னேறுவது – எனத் தொடரும் “தேடல்” மூலம் இந்த இருண்ட பகுதியில் கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சம் கொணர முடியும்.

மேற்கண்ட முயற்சிகளால் – நம் மனதை நன்றாகத் திறந்துகொள்ள முடியும். மனம் திறந்து கொண்டால் மற்றவர்கள் நம்மை புரிந்து ஏற்றுக் கொள்வார்கள், நம்மீதான நம்பகத்தன்மை அதிகரிக்கும். அதனால் நமது தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். மனம் திறக்க திறக்க நமது வெற்றிக்கான மார்க்கமெல்லாம் புலப்படத் தொடங்கும்.

அதனால் மனதில் நிம்மதியும் ஆனந்தமும் நிரந்தரமாய் தங்கிவிடும்.

விளைவு: நம் சிந்தனையும், முடிவுகளும், செயல்பாடுகளும் சிறப்பாய் அமையும்.

காலத்தின் அருமையை உணர்ததும் உன்னதம்:
மூன்றாவது சதுரம் மிகவும் முக்கியமான காலத்தை உணர்த்துவது. காலம் மிகவும் அற்புதமானது. காலம் என்பது கடந்துவிட்டால் மீண்டும் கிடைக்காதது. காலம் என்பது அனைவருக்கும் பொதுவானது. காலம் என்பது ஒவ்வொருவர் கையிலும் கிட்டியிருக்கும் பொக்கிஷமாகும். மனிதவளம் என்பது – இந்தப் பிரபஞ்சத்தின் மூலதனம் என்றால் காலமானது – இந்த மனிதவளத்தின் மூலதனம் என்பது மறுக்க முடியாததாகும். இந்த மூலதனத்தை முறையாகப் பயன்படுத்தும் மார்க்கம் தெரியாததால் நம்மில் பலரும்

வாழ்வின் மிக முக்கியமான அம்சங்களை இழந்து நிற்கிறோம். பலவற்றை இழந்த பிறகே – பலருக்கும் இந்தக் காலத்தின் அற்புதம் புரிய வருகிறது. இந்நிலை ஏற்படாமல் தடுத்து இளைய தலைமுறைக்கு வழிகாட்டும் பொருட்டு நாம் இந்த சதுரத்தைப் புரிந்துகொண்டு செயலாற்ற வேண்டியிருக்கிறது.

உற்று நோக்கினால் மேற்கண்ட நான்கு சதுரங்களில் காலம் சதுரங்கம் ஆடுவதைக் காணலாம். மேற்கண்ட பெரிய சதுரத்தின் மீது கவனத்தைக் குவியுங்கள்.

சதுரம் – 4 ல் குறிப்பிட்டுள்ள காரியங்கள் யாவும் எந்தவித அவசரமோ, அவசியமோ அற்றவையாகும். இவை குறித்து நாம் அலட்டிக் கொள்ளத் தேவையே இல்லை. ஆனால் நமது அன்றாடச் செயல்பாடுகளில் பலவும் இத்தகைய வகையைச் சேர்ந்ததே ஆகும். எடுத்துக்காட்டாக கூறவேண்டுமெனில் எந்தவித தேவையுமற்ற தொலைபேசி உரையாடல்கள், வெற்று அரட்டைகள், வெறும் கேளிக்கைகள், எந்த நோக்கமுமற்ற பொழுதுபோக்குகள் இவையாவும் – அவசரமோ, அவசியமோ அற்ற செயல்களுக்கு எடுத்துக்காட்டுகளாகும், இவற்றை நாம் அடையாளம் காண வேண்டும். அடையாளம் கண்டு அவற்றைத் தவிர்க்க முயற்சிகள் எடுக்க வேண்டும். முனைப்புடன் செயல்பட வேண்டும்.

சதுரம் – 3 : இதில் அவசியமற்ற ஆனால் அவசரமான செயல்களை உள்ளடக்கிய சதுரமாக இது விளங்குகிறது. நம்மைத் தொந்தரவு செய்யும் வேண்டாத சில தொலைபேசி அழைப்புகள், எதிர்பாராத சில விருந்தாளிகளின் வருகை, சில கூட்டங்கள், சில மனுக்கள் தயாரித்தல், சில கடிதங்கள் எழுதுதல் போன்றவை அவசியமாய் இருக்க மாட்டா. ஆனால் அவசரமாய் செய்தாக வேண்டியவையாய் இருக்கும். இவை பெரும்பாலும், பிறருக்காகச் செய்யப்படும் செயல்களாக இருக்குமே அன்றி, நமது குறிக்கோளை அடைவதற்கான காரியங்களாக இருக்கமாட்டா என்பதை உணர்தல் அவசியமாகும்.
 மேற்கண்ட சதுரம் – 4 மற்றும் சதுரம் – 3 – இவை இரண்டையும் ஊன்றி நோக்கினால் ஒன்றை உணரலாம். இவை இரண்டிலும் அதிக நேரத்தைச் செலவிடுபவர்கள் எதற்கும் அதிகமாக அலட்டிக் கொள்ளாதவர்களாகவும், பெரும் பொறுப்பு எதையும் ஏற்றுச் செய்யாதவர்களாகவும் இருப்பார்கள். பொழுதுபோக்கும் முகமாக – பிறரின் காரியங்களில் தம்மை ஈடுபடுத்திக் கொள்பவர்களாகவும் காணப்படுவார்கள். இவர்கள்.
செயல்திறனும், செய்நேர்த்தியும் மிக்கவர்கள் இந்த இரண்டு சதுரங்களுக்குள் சிக்கிக் கொள்ளமாட்டார்கள். ஏனெனில், அவசரமாய் இருந்தாலும் அவசியமில்லை என்பதால் அவசியமற்றதில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள மாட்டார்கள். எனவே நாமும் செய்நேர்த்தி மிக்கவர்களாக வாழ வேண்டுமெனில் அவசியமற்றவற்றை ஒதுக்கிவிட்டு நேரத்தை முறையாகப் பயன்படுத்தப் பழக வேண்டும்.
(தொடரும்)
இந்தத் தொடரின் பகுதி 3 ஐ அடுத்த வாரம் (22.07.2014) உங்கள் அந்திமாலையில் வாசியுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக