திங்கள், ஜூன் 02, 2014

காதல்: ஏன்? எதற்கு? எப்படி?

ஆக்கம்: சந்திர. பிரவீண்குமார், இந்தியா
உலக மக்கள் மனதில் காதல் என்ற உணர்ச்சிக்கு தனியானதொரு இடமுண்டு. கிட்டத்தட்ட சுவாசம் போன்றே ஒவ்வொரு மனிதனுக்குள்ளேயும் இருக்கும் உணர்ச்சி அது. அதனால்தான் நவீன காலத்தில் மக்களின் பொழுதுபோக்கு அம்சமாகக் கருதப்படும் திரைப்படங்களிலும், திரையிசை பாடல்களிலும் காதலுக்குப் பிரதான இடம் உள்ளது.

காதல் உணர்ச்சிக்கு இலக்கியங்கள் கூடத் தப்பவில்லை. “காதலாகி கசிந்து உள்ளுருகி” சிவனை போற்றுகிறது ஒரு பக்தி இலக்கியம். மகாகவியான பாரதியோ, “காதல், காதல், காதல், காதல் போயின் சாதல், சாதல், சாதல்” என்று அழுத்தமாகக் குறிப்பிடுகிறான். கம்பனும் ராமன் – சீதையின் காதலை அற்புதமாக வணங்குகிறான். திரையிசை பாடல்களைக் கேட்கவே தேவையில்லை. திரைப்படம் என்றாலே காதலுக்கு இடம் தந்தாக வேண்டிய கட்டாயம். “காதல் என்பது கற்பனையோ? காவியமோ?” என்று அலசியே இலக்கிய ரசனையைக் கழிக்கின்றன. காதல் கவிதைகளை எழுதாதவன் கவிஞனே இல்லை என்ற போக்கு நிலவுகிறது. காதலர்களுக்கான தினங்களும், நவீன கால காதல்களும் ‘காதலின்றி இவ்வுலகம் இல்லை’ என்று கூறுகின்றன.

ஆனால், காதல் என்றால் என்ன என்பதை அறிய வேண்டுமானால் சிறிது உபநிஷதங்களையும், கொஞ்சம் மனவியலையும் படித்து விடுவோம்.
யாக்ஞவல்கர் என்ற ரிஷி இருந்தார். மிகப்பெரிய அறிவுஜீவியாக பண்டைய காலத்தில் பேசப்பட்டவர். அவரது தர்க்கங்களும், கருத்துக்களும் இன்றளவும் ஆன்மீக உலகில் அலசப்படுபவை. ஜனகரின் உற்ற தோழராகத் திகழ்ந்தவர்.
உபநிஷதங்களின் சாரமாகக் கருதப்படும் பிரம்ம சூத்திரத்தில் அவரது கருத்துக்கள் உள்ளன. அதன் இரண்டாம் அத்தியாயத்தில் யாக்ஞவல்கரும், அவரது இரண்டாவது மனைவியான மைத்திரேயியும் வனப்ரஸ்த வாழ்க்கைக்குத் தயாராகிறார்கள். அப்போது மைத்திரேயி, உலகாதாய வாழ்க்கை, செல்வம் ஆகியவற்றைப் பற்றி சலிப்புடன் கூறி, தனக்கு மோக்ஷத்தை அருளுமாறு தனது கணவனிடம் கேட்கிறார். அதற்கு யாக்ஞவல்கர், கணவன் – மனைவி காதல், குடும்ப பாசம் ஆகியவற்றை பற்றி விளக்கியதுடன், அதே விதமான நேசத்தை இறைவனிடம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

இதையே இறைவன் மீது பாடும் கவிஞர்கள் வெளிப்படுத்துகிறார்கள். பாரதியின் கண்ணன் பாடல்கள், ஆன்மீக அன்பர்களையும், நவீன காதலர்களையும் பரவசப்படுத்தக்கூடியது. தவிர, காதல் திருமணங்களான வள்ளி – முருகன் திருமணம், கிருஷ்ணர் – ராதை திருமணம் ஆகியவை இன்றளவும் திருக்கோயில்களில் உற்சவங்களாகக் கொண்டாடப்படுபவை. இதனால் இன்றைய காதலர்கள் ஊக்கம் பெறவே செய்கிறார்கள் என்றாலும், நோக்கம் இறுதியில் இறைவனை அடைய வேண்டும் என்பதே.
இந்த இடத்தில், நவீன கால மனோதத்துவம் என்ன சொல்கிறது என்பதைப் பார்க்கலாம். உலக வாழ்வில் எல்லா அன்புமே ஏதேனும் காரணத்தை முன்னிட்டே தோன்றுகிறது. பெரும்பாலும் உணர்வு ரீதியான எதிர்பார்ப்புகளே அதற்கு வித்திடுகின்றன. அதற்காக இருதரப்பினரும் ஒருவரையொருவர் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. சில நேரங்களில் அன்பை வெளிக்காட்டி பரவசப்படுத்தவும் செய்கிறார்கள். நண்பர்கள், உறவினர்கள் முதல் காதலர்கள் வரை இது பொருந்தும்.

இதில் திருமண வயதில் இணைந்திருப்பவர்கள் காதலிக்கிறார்கள். பொதுவாக, உறவுநிலைகளில் அளவுக்கதிகமாக எதிர்பார்த்தால் அது முறிந்துவிடும். பழகுபவர் தன்மை பொறுத்து அது மாறுபடும். ஆனால் காதலர்கள் வாழ்க்கையில் ஒன்றாக இணையும் போது வெறும் உணர்ச்சிகளை மட்டும் வைத்து வாழ முடியாதே? பணம், சுற்றம், குடும்பம், ஆரோக்கியம் என்று பல்வேறு அம்சங்களும் அதில் அடங்கி விடுகின்றன. அதனால் திருமணத்துக்கு முன்பு வரை கலகலப்பாக இருந்த பேச்சு பிறகு காணாமல் போகிறது. வெறும் உணர்ச்சி அல்லது எதிர்பார்ப்பு அடிப்படையிலான காதல்கள் விரைவிலேயே முறிந்து விடுகின்றன. திருமணங்கள் விவாகரத்தை எதிர்பார்க்கின்றன.

உண்மையில் ஒரு முழுமையான மனிதன் உணர்வு ரீதியாகக் காதலிக்க மாட்டான். பல்வேறு அம்சங்களையும் யோசித்து செயல்படுவான். அப்படிப்பட்டவர்களின் காதல் மட்டுமே இறுதி வரை நீடிக்கின்றன. அவர்கள் உணர்ச்சிகளைத் தாண்டிய வாழ்க்கையை சிந்திக்கிறார்கள். இருவரது எண்ணங்களும், செயல்களும் கடைசி வரை ஒத்திருந்தால் மட்டுமே முழுமையான மனிதர்கள் காதலிக்கிறார்கள்.
காதலுக்கும், அன்புக்கும் நமது நாயன்மார்களும், ஆழ்வார்களும் எவ்வளவு முக்கியத்துவம் தந்தார்கள் என்பதை ஸ்ரீராமானுஜர் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் நமக்கு விளக்குகிறது.

அவர் தனது சீடர்களுடன் ஒரு இடத்திற்குச் செல்கிறார்கள். அப்போது ஒரு இளம் துறவி ராமானுஜரை அணுகி, தனக்கு தீட்சை அளிக்குமாறு கேட்கிறார்.
“உங்களுக்கு பூர்வாசிரமத்தில் திருமணமாகியுள்ளதா?” என்று கேட்டார் ராமானுஜர். துறவியோ பதட்டமாக, “நான் பிரம்மச்சாரி” என்கிறார் துறவி.
“சிறு வயதில் யாராவது ஒரு பெண் மீது உங்களையே அறியாமல் காதல் பூத்துள்ளதா? நன்றாக யோசித்து சொல்லுங்கள்” என்று வலியுறுத்திக் கேட்டார். அதற்கும் மறுத்தார் துறவி.

“உங்களுக்கு தீட்சை தர முடியாது. அன்பு, பாசம் இல்லாதவர்களிடம் கடவுள் வருவதில்லை” என்று கூறி விட்டு நடக்கத் தொடங்கினார் ராமானுஜர்.

1 கருத்து:

Yarlpavanan சொன்னது…

சிறந்த பகிர்வு

கருத்துரையிடுக