திங்கள், ஜூன் 23, 2014

இமேஜை பாதிக்கும் பொடுகுத் தொல்லைக்குத் தீர்வு!

ல்ட்ரா மாடர்னான சங்கீதாவுக்கு மெரூன், கருப்பு, கரும் பச்சை என அடர்ந்த நிறத்தில் டிரெஸ் போட ஆசை. ஆனால், சின்ன வயதில் இருந்தே, பொடுகுத் தொல்லை இருந்ததால் ஆசைப்பட்ட கலரில் ஆடை அணிவதைத் தவிர்த்துவிடுவார். வெள்ளை வெள்ளையாக பொடுகு உதிர்ந்து, தோள் பட்டையின் மீது படிந்து சங்கடத்தில் ஆழ்த்திவிடுவதுதான் காரணம். என்னதான் மாடர்னாக இருந்தாலும், பொடுகுப் பிரச்னை அவரை மற்றவர்களிடம் இருந்து விலக்கியே வைத்திருந்தது. இன்று பெண்கள் மட்டுமல்ல… ஆண்களுக்கும், தலைபோகிற பிரச்னையே பொடுகு தான்.
‘பொதுவாக மலசேசியா ஃபர்ஃபர் (Malassezia furfur) என்னும் பூஞ்சையால் பொடுகு ஏற்படுகிறது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை எல்லா வயதினருக்கும் இந்தப் பிரச்னை ஏற்படலாம். இளம் வயதினருக்கு, நியாசின் (வைட்டமின் பி3), துத்தநாகம் குறைபாட்டினால் பொடுகு மாதிரியான பிரச்னைகளுடன் தோல் உரிதலும், அடிக்கடி வயிற்றுப்போக்கும் ஏற்படலாம். நம் தலையில் உள்ள செபேசியஸ் (Sebaceous) எண்ணெய் சுரப்பியின் சுரப்பு அதிகமாகும்போது, பொடுகுப் பிரச்னைகள் உருவாகும். இளம் வயதினருக்கு இந்த சுரப்பிகள் அதிகமாக சுரப்பதால், பொடுகு, பரு பிரச்னைகளால் அவதிப்படுகின்றனர்.
பொடுகுப் பிரச்னை, குளிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. ஆனால், அதிகப்படியான வியர்வை காரணமாக இந்தியாவில் கோடைகாலத்திலும் அரிப்பு ஏற்பட்டு, பொடுகுத் தொல்லை வருவதற்கான வாய்ப்பு அதிகம். ஆரம்பகாலத்தில் வரும் பொடுகுகள் வெள்ளை நிறத்திலும், முற்றிய நிலைகளில் மஞ்சள் நிறத்திலும் சில நேரங்களில் சிவப்பு நிறத்திலும்கூட இருக்கும். 
சாதாரண பொடுகுப் பிரச்னை உள்ளவர்களுக்கு பூஞ்சை எதிர்ப்புத்தன்மை வாய்ந்த (ஆன்டிஃபங்கல்) ஷாம்பு பரிந்துரைப்போம். டாக்டரின் பரிந்துரையின்பேரில் மூன்றில் இருந்து ஆறு மாதங்கள் வரை தொடர்ந்து பயன்படுத்தினால் பொடுகைக் குறைக்கலாம். அதிக அளவு பொடுகுத் தொல்லை இருந்தால் இந்த ஷாம்புவுடன், மாத்திரைகளையும் சில வாரங்களுக்கு எடுத்துக்கொள்ளப் பரிந்துரைப்போம். ஆனால், தொடர்ந்து ஒரு வருடத்துக்கு ஷாம்பு பயன்படுத்த வேண்டியிருக்கும்.
எண்ணெய் சுரப்பியினால் ஏற்படும் பொடுகுப் பிரச்னைகளை சரிசெய்யவில்லை எனில், கண் இமைகளில் அரிப்பு ஏற்படுவதுடன் சின்னச்சின்ன பருக்கள் வர வாய்ப்புள்ளது. சாதாரணமான பொடுகுப் பிரச்னைகளால் தலை முடி உதிர வாய்ப்பு இல்லை. ஆனால், பொடுகுத் தொல்லை அதிகம் இருந்தால், முடி உதிர்வதுடன் அரிப்பும் ஏற்படலாம்.
மேலும், தொற்றுதல் மூலமாக பொடுகு ஏற்படவும் வாய்ப்பு உண்டு. அதாவது தலையில் பொடுகு இருப்பவர்கள் பயன்படுத்தும் துணிகளைப் பயன்படுத்தினால் பொடுகு வரும்.  இதற்காக, ஒட்டுவார் ஒட்டி என்று பயப்பட வேண்டாம். அருகில் தூங்குபவர்களிடமிருந்து நமக்குப் பரவக்கூடிய தொற்றுவியாதி இல்லை.”

பொடுகிலிருந்து விடுபடுவதற்கான வழிகள் என்னென்ன?

”ஒருவர் பயன்படுத்தும் சீப்பு, தலையணைகளை மற்றவர் பயன்படுத்தக் கூடாது. முடி அதிகம் வறட்சியுடன் (Dryness) இருந்தால், மருத்துவரின் ஆலோசனையின்பேரில் ஹேர் கன்டிஷனர் பயன்படுத்தலாம். அதுவே ஈரப்பசையுடன் இருக்கும்போது ஷாம்பு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதிக இறுக்கமான முடி அலங்காரங்கள், அதிகம் வெயிலில் அலைவது  போன்றவற்றைத் தவிர்ப்பது நலம். தூசி நிறைந்த இடங்களில் உள்ளவர்கள் டாக்டரின் பரிந்துரைக்கும் ஷாம்புவை வாரத்துக்கு நான்கு முறையும், மற்றவர்கள் வாரத்துக்கு இரண்டு முறையும் பயன்படுத்தி இந்தப் பிரச்னையில் இருந்து தப்பலாம்”.

பொடுகு போயே  போச்சு !
பொடுகுப் பிரச்னை உள்ளவர்கள் செய்ய வேண்டிய சில எளிய சிகிச்சைமுறைகளைப் பற்றி சித்த மருத்துவர் முகமது மாலிக் சொல்லும் டிப்ஸ்.

கைப்பிடி அளவு வேப்பங்கொழுந்தை நீரில் கழுவி, விழுதாக அரைத்து, குளிக்கும் முன்பு தலையில் தேய்த்து 15 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். பிறகு, ஒரு வாளி தண்ணீரில் இரண்டு எலுமிச்சை பழச்சாறைக் கலந்து, அந்த நீரில் குளித்தால் பொடுகுப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

 தலையில் அதிக எண்ணெய்ப் பசையுடன், பொடுகுத் தொல்லையும் இருந்தால் முடி உதிரலாம். இந்தப் பிரச்னைக்கு குளிக்கும் முன்பு தயிர் அல்லது மோரினை தலையில் தேய்த்து 15 முதல் 20 நிமிடங்கள் ஊறிய பிறகு குளித்தால், எண்ணெய்ப்பசை நீங்கும். முடியும் வலுவாகிப் பளபளப்பு கூடும்
.
 மஞ்சள்தூளை, தண்ணீரில் கலந்தோ அல்லது, ஷாம்பூவுடன் கலந்து சிறிது நேரம் ஊறவைத்துக் குளிக்கலாம்.

 அறுகம்புல் சாறுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து  மணல் போன்று வருமாறு நன்றாகக் காய்ச்ச வேண்டும். இந்த எண்ணெயை குளிரவைத்து, இரண்டு நாட்களுக்கு வெயிலில் இரண்டு மணி நேரம் வைத்து தலைக்குப் பயன்படுத்தலாம்.

நன்றி: ஆனந்த விகடன்

1 கருத்து:

கோமதி அரசு சொன்னது…

நல்ல தகவல்.
நன்றி.

கருத்துரையிடுக