ஞாயிறு, ஜூன் 08, 2014

நோய் எதிர்ப்பு சக்தியை தரும் சுக்கு

இஞ்சி உலர்ந்த பின் அதுவே சுக்கு ஆகும். சுப்பரமணியரை விஞ்சிய தெய்வமும் இல்லை. சுக்குக்கு இணையான மருத்துவமும் இல்லை என்பார்கள். இன்று சுக்கின் மருத்துவ குணமும், பயனும் பற்றி பார்ப்போம்.

சுக்குக்கு தோலில் விஷம் கடுக்காய்க்கு கொட்டையில் விஷம் என்பதை இங்கே நினைவுக்கு கொண்டு வர வேண்டும். பொதுவாக சுக்கின் மீது சுண்ணாம்பை பூசி வெயிலில் வைத்து உலர்த்தி பின் தோலை சுரண்டி நீக்கிவிட்டு உபயோகப்படுத்த வேண்டும்.

உடலில் பித்தம் அதிகரிக்கும் போது குமட்டல், வாந்தி, தலைச் சுற்றல் என்பன போன்ற துன்பங்கள் தோன்றும். அந்நிலையில் சுக்குத் தூளை வெருகடி அளவு (சுட்டுவிரல், நடுவிரல், பெருவிரலைச் சேர்த்து அள்ளுகின்ற அளவு) எடுத்து போதிய தேன் சேர்த்தும் குழைத்து சாப்பிட குணமாகும்.

சுக்கை குழைத்து களிம்பாக்கி நெற்றிக்கு பற்றிட தலைவலி தணியும். தொண்டையில் கரகரப்பு, வலி ஏற்படும் போது சுக்கை களிம்பாக்கி தொண்டை மீது பற்றிட குணமாகும். நெற்றிப் புருவங்களின் மேல் பூசி வைக்க கிட்டப்பார்வை கோளாறு குணமாகும்.

சுக்கை பொடித்து வெருகடி அளவு எடுத்து ஒரு டம்ளர் நீரிலிட்டு கொதிக்க வைத்து பால், சர்க்கரை (அ) வெல்லம் சேர்த்து சுக்கு காபியாக குடிப்பது வழக்கம். இது அஜீரணத்தைப் போக்கும். இதனால் அதிசாரம் என்கிற நீர்த்த வயிற்றுப் போக்கு குணமாகும். வயிற்றுவலி காய்ச்சல் இவையும் போகும்.

சுக்கு தீநீர் தசை வலியை போக்கக் கூடியது. (ஃபைப்ரோ மயேல்ஜியா சிம்ப்டம்) தலை வலி, குமட்டல், வாந்தி இவற்றையும் போக்கும். இது ஒரு வலி நிவாரணி (அனால்ஜஸிக்) வீக்கம் கரைச்சி (ஆன்டி இன்ப்ளமேட்டரி) ஆகும்.

சுக்குத் தூள் வெருகடி அளவு எடுத்து அதனுடன் போதிய அளவு பசு நெய்யும் வெல்லமும் சேர்த்து குழைத்து அந்தி சந்தி இருவேளை சாப்பிட்டு வர சளி, இருமல் ஆகியன குணமாகும். சுக்கு தூளோடு எலுமிச்சை சாறு இருபங்கும் சோற்றுப்பு போதிய அளவும் சேர்த்து உள்ளுக்கு சாப்பிட வயிற்று உப்பிசம் மந்தம் ஆகியன போகும்.

சுக்கு தூளோடு சர்க்கரை சேர்த்து சாப்பிடுவதால் வயிற்றுவலி சாதாரணமானதாக இருப்பினும் அல்லது வயிற்றை கடுக்க செய்வதாக இருப்பினும் உடனே குணமாகும்.

10 கிராம் சுக்குத்தூள் எடுத்துக்கொண்டு அத்துடன் 5 மி.லி. விளக்கெண்ணெய் சேர்த்து கொதிக்க வைத்து தினந் தோறும் இரவு ஒரு மண்டலம் அதாவது நாற்பத்தெட்டு நாட்கள் உண்டுவர மூட்டு வலிகள் (ருமாட்டாய்ட் ஆர்த்திரிட்டிஸ்) மூட்டு வீக்கம் (கவுட்) ஆகியன குணமாகும்.

வெருகடி அளவு சுக்குப் பொடியோடு போதிய அளவு தேனும் எலுமிச்சை சாறும் சேர்த்து அன்றாடம் உண்டுவர உடல் பலம் பெறும், உற்சாகம் மிகும். இப்படி சாப்பிடுவதால் உடல் வியர்வை பெருகி காய்ச்சல் தணிவதோடு உடல் அழகை கொடுக்கும்.

தோல் நோய்களை குணப்படுத்தும் சுக்கை தணித்தோ, தேனுடனோ சாப்பிட்டு வருவதால் உடலுக்கு உஷ்ணத்தை தருவது மட்டுமின்றி நோய் எதிர்ப்பு சக்தியை தரும். தலைமுடி கருக்கும். சுக்கு பொடியுடன் பூண்டுச் சாறு சேர்த்து சாப்பிட்டு வரக் கொடுமையான வயிற்று வலியும் குணமாகும்.

சுக்குத் துண்டை பல்வலியாய் இருப்பின் வாயில் அடக்கி வைத்திருக்க பல்வலி குறையும். சுக்குப் பொடியுடன் வெல்லம் சேர்த்து சாப்பிட பித்தம் சமப்படும். சுக்குப் பொடியோடு துளசி இலைகளைச் சேர்த்து கொதிக்க வைத்து தேன் சேர்த்து சாப்பிட ஆஸ்த்துமா எனும் மூச்சு முட்டல் நோய் குணமாகும்.

சுக்கு பொடியோடு ஒருசில பூண்டுப் பற்களை சேர்த்து கொதிக்க வைத்து ஆவி பிடிக்க ஆஸ்த்துமா நோயின் வேதனை தணியும். இருமல் கண்டபோது சுக்குப்பொடி வெருகடி அளவு எடுத்துக்கொண்டு அத்துடன் துளசிச் சாறு 1 ஸ்பூன் வெற்றிலைச் சாறு, ஒரு ஸ்பூன் சேர்த்துக் குழைத்து சாப்பிட வறட்டு இருமல், குத்திருமல், சளித்தொல்லையால் வந்த இருமல் அத்துணையும் போகும்.

சுக்குத் தூளோடு சமபங்கு புதினாச் சாறும், சிறிது உப்பும் சேர்த்து சாப்பிட கக்குவான் இருமல் குணமாகும். மஞ்சள் காமாலை கண்டபோது வெருகடி அளவு சுக்குத்தூளோடு புதிதாகப் பிழிந்த எலுமிச்சைச் சாறு ஒரு ஸ்பூனும் புதினா சாறு ஒரு ஸ்பூனும் கலந்து சாப்பிட ஈரல் பலப்படுவதோடு மஞ்சள் காமாலையும் குணமாகும்.

சுக்கைத் தேனுடனோ அல்லது தீநீரிட்டு இனிப்பு சேர்த்தோ சாப்பிட ரத்தத்தில் உள்ள நச்சு (டாக்சின்) வெளியாகி ரத்தம் சுத்தமாகும். சுக்கு தீநீரை இரவு படுக்கைக்கு போகுமுன் அன்றாடம் குடித்து வர வாதரோகத்தை கண்டிக்கும், நடுக்கு வாதம், முக வாதம், பாரிச வாதம், பக்க வாதம் என்கிற பெயரால் சொல்லப்படுகின்ற அத்துணையும் போகும்.

சுக்கு தீநீருடன் சிறிது சோடா உப்பு (தோசை சோடா (அ) ஆப்ப சோடா) கலந்து சாப்பிட வயிற்றில் ஏற்படும் புளிப்பு (அசிடிட்டி) போகும். மேலும் குடலை இறுக்கிப் பிடித்தல் (காலிக்), விலா எலும்புகளில் வலித்தல், நெஞ்செரிச்சல், செரிமான மின்மையால் ஏற்படும் புளியேப்பம், வயிற்று உப்பிசம், காது வலி, தலை வலி, மூக்கில் நீர் கொட்டுதல் ஆகியன குணமாகும்.
நன்றி: மாலைமலர்

3 கருத்துகள்:

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்

சுக்கு பற்றி தெளிவான விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Unknown சொன்னது…

சுக்கின் பயன்கள் பற்றி விரிவாகக் கூறியமைக்கு நன்றி

Yarlpavanan சொன்னது…


சிறந்த பயன்தரும் பகிர்வு

visit http://ypvn.0hna.com/

கருத்துரையிடுக