வெள்ளி, ஜூன் 13, 2014

3000 வருடங்கள் பழமையான தமிழர்களின் பெருங்கற்காலத்து கல்லறைகள்

ஆக்கம்:இளஞ்செழியன், மதுரை.
மனிதன் தான் வாழும் காலத்தில் காணமுடியாத இரு இடங்கள் இப்புவியில் உள்ளது. ஒன்று தான் கருவாக முதலில் உருவாகி உயிர்வாழ்ந்த தாயின் கருவறை. மற்றொன்று தான் இறந்த பிறகு, தனக்காக உருவாக்கப்படும் கல்லறை. இந்த இரு இடங்களும் நம் வாழ்வின் மிக முக்கியமான இடங்கள். தாயின் கருவறை வரலாற்றை உருவாக்கும் ஒருவரைச் சுமக்கும் இடமாக இருந்தால், கல்லறை வாழ்ந்த ஒருவரின் வரலாற்று நினைவுகளைச் சுமந்து கொண்டிருக்கும் இடமாக இருக்கிறது. வரலாற்றில் மன்னர்கள், படைத்தளபதிகள், இனக்குழுத்தலைவர்கள், ஆன்மீகவாதிகள், போன்றோர்களுக்கு மட்டுமே கல்லறைகள் அமைக்கப்பட்டு வந்துள்ளது.

சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே..
 

சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உலகெங்கிலும் இறந்தவர்களுக்கு கல்லறைகள் எழுப்பும் வழக்கம் இருந்துவந்துள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் வாழ்ந்த இனக்குழுவினர் இறந்தவர்களுக்கான கல்லறையை அவர்களுடைய கட்டிடக்கலை முறையில் அமைத்துக் கொண்டனர். எகிப்தில் இறந்தவர்களின் உடலை பாதுக்காத்து வைப்பதற்காக பிரமீடுகள் கட்டப்பட்டன. இன்றும் எகிப்திய பிரமீடுகள் உலக அதிசயங்களில் ஒன்றாக உள்ளது. உலகின் பல இடங்களிலும் இறந்தவர்களின் நினைவாக பல நினைவுச் சின்னங்கள் பல்வேறு வடிவங்களில் எழுப்பப்பட்டுள்ளன. ஒவ்வொரு வடிவத்திற்கும் ஒவ்வொரு பெயர்கள். கல்பதுக்கைகள், கல்திட்டைகள், நடுகற்கள், நெடுங்கல், கல்குவை மற்றும் குடைகல் என பல்வேறு வடிவங்களையும், பெயர்களையும் இந்த கல்லறைகள் கொண்டுள்ளன.முற்காலத்தில் தங்களைக் காத்துவந்த இனக்குழுத் தலைவனின் நினைவாக அவரது உடல் அடக்கம் செய்த இடத்தில் ஒரு கல்லை அடையாள சின்னமாக நட்டுவைக்கும் வழக்கம் இருந்து வந்தது. இக்கற்களுக்கு நடுகற்கள், நெடுங்கல் என்று பெயர். இன்றும் தென் தமிழகத்தில் பல இடங்களில் இந்த நடுகற்களை குலதெய்வங்களாக வழிபடும் முறை தொடர்ந்து வருகிறது. பல இடங்களில் இதுபோன்ற நடுகற்களில் உருவங்களோ அல்லது எழுத்துக்களோ பொறிக்கப்பட்டிருக்கும். இன்றும் இதன் தொடர்ச்சியாக இறந்தவர்களுக்கு நடுகற்களுக்கு பதிலாக ’கான்கீரிட்’ கல்லறைகள் கட்டப்பட்டு வருகிறது. நம் முன்னோர்கள் வாழ்ந்துவந்த காலங்களில் அமைக்கப்பட்ட நடுகற்களைப் போன்று மூவாயிரம் வருடங்களுக்கு முன்னர் எழுப்பப்பட்ட நினைவுச் சின்னங்கள்தான் கற்திட்டைகள் மற்றும் கற்பதுக்கைகள்.இந்த கற்திட்டைகள் மற்றும் கற்பதுக்கைகள் பலகை போன்ற வடிவம் கொண்ட மிகப்பெரிய கருங்கற்களால் ஆனவைகள். கற்திட்டைகளுக்கும் கற்பதுக்கைகளுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு அதன் அமைப்பே. கற்திட்டைகள் என்பது இறந்தவர்களின் ஈமக்குழியை ஒட்டிய நான்கு பக்கங்களில் பெருங்கற்பாறைகளை கொண்டு செங்குத்தாக நிறுத்தப்பட்டு, அவற்றின் மேல்புறத்தில் ஒரு பெரிய பெருங்கற்பலகையால் மூடப்பட்டிருக்கும். கற்திட்டைகளின் காலம் கி.மு 1000 முதல் கி.மு 500 உட்பட்டதாக இருக்கக்கூடும் என்று தொல்லியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.கற்பதுக்கைகள் எனப்படுபவை கற்திட்டைகளை போலவே. இதில் கற்திட்டைகளில் நிலத்திற்கு மேல் காணப்படும் நான்கு பெருங்கற்களும் ஈமக்குழியை ஒட்டியவாறு நிலத்திற்குள் பதிக்கப்பட்டு, அதன் மேலே மூடிபோன்ற ஒரு பெருங்கற் பலகையால் மூடப்பட்டிருக்கும். பெருங்கற்களைக் கொண்டு ’அறை’ போன்ற அமைப்புகளை உள்ளடக்கியதால் இவைகள் நாளடைவில் ‘கல்லறைகள்’ என்று அழைக்கப் பட்டிருக்கலாம். இந்த கற்திட்டைகள் மற்றும் கற்பதுக்கைகள் பெருங்கற்காலத்தை சார்ந்தவைகள்.
இந்தியாவில் இக்கற்திட்டைகள் கர்நாடகத்தின் வட கர்நாடகாவில் கோனூர், காலடிகி, ஆகிய இடங்களில் உள்ளன. கேரளாவில் மறையூருக்கு அருகில் ’அழிஞ்சுவாடு’ என்னுமிடத்திலும், தமிழகத்தில் நீலகிரி, கொடைக்கானல், மற்றும் தருமபுரி மாவட்டத்தில்மல்லசந்திரம்’ போன்ற பகுதிகளிலும் காணப்படுகிறது. பொதுவாக இது போன்ற கற்திட்டைகள் அதிகமாக மலை பகுதிகளில்தான் அமைந்துள்ளன. தமிழகத்தில் கொடைக்கானல், நீலகிரி போன்ற மலைப்பகுதிகளில் கற்திட்டைகள் ஏராளமாக காணப்படுகின்றன.
 

இதையறிந்து கடந்த மே மாதம் மதுரையில் இயங்கிவரும் ’பசுமை நடை’ குழுவினருடன் இணைந்து கொடைக்கானலில் வெவ்வேறு பகுதிகளில் அமைந்துள்ள கற்திட்டைகளை கண்டுவந்தோம். மாதம் ஒருமுறை பசுமை நடைக்குழுவினர் மதுரையைச் சுற்றிலும் அமைந்துள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு தங்களுடன் பலரையும் இணைத்துக் கொண்டு சென்று வருகின்றனர். அழிந்து வரும் தொல்லியல் தளங்களின் முக்கியத்துவத்தையும், அவ்விடத்தை பற்றிய வரலாற்றுச் செய்திகளை இன்றைய இளம் தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் முயற்சியை மிகச் செம்மையாக செய்துவருகின்றனர்.

கொடைக்கானல் மலைப்பகுதிகளில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் கற்திட்டைகள், ஈமக்குழிகள், முதுமக்கள் தாழிகள் போன்றவைகளை உள்ளடக்கிய தொல்லியல் தளங்கள் அமைந்துள்ளன. கொடைக்கானல் செல்லும் வழியில் அமைந்துள்ளது  பண்ணைக்காடு என்னும் அழகிய மலைக்கிராமம். பண்ணைக்காட்டில் இருந்து தாண்டிக்குடி என்னும் சிற்றூருக்கு செல்லும் வழியில்சங்கரன்பொத்துஎன்னுமிடத்தில் 30க்கும் மேற்பட்ட பெருங்கற்காலத்து கற்திட்டைகள் காணப்படுகின்றன. மிகப்பெரிய கருங்கற்பலகைகளைக் கொண்டு இக்கற்திட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இக்கற்திட்டைகளில் காணப்படும் பெருங்கற்பலகைகள் அனைத்தும் மனிதசக்தியின் மூலமே நிறுவப்பட்டிருப்பது மிகவும் ஆச்சரியபடக்கூடிய ஒன்று. இதன் மூலம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே இப்பகுதிகளில் மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதை நாம் அறிந்துகொள்ள முடிகிறது.

தாண்டிக்குடி ‘சங்கரன்பொத்து’ பகுதியில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஈமச்சின்னங்கள் இருப்பதை 1928ல் முதன்முதலாக கண்டறிந்தவர்ஆங்கிலேடு’ என்ற ஆங்கிலேயர் ஆவார். அதற்குப் பின்னர் தமிழ் பல்கலைக்கழத்தினரே இதில் முழுமையாக ஆய்வு செய்துள்ளனர். இப்பகுதியில் வாழும் மக்கள் இந்த ஈமச்சின்னங்களை வாலியர்வீடு, பேத்து, குகை என்று அழைக்கின்றனர். வரலாற்றுச் சிறப்புமிக்க இவ்விடங்களுக்கு செல்லும் வழிகள் இன்று காட்டுச் செடிகள் அடர்ந்து வளர்ந்து காணப்படுகின்றன. எந்தவித பாதுகாப்பும் இன்றி இக்கற்திட்டைகளும், அவைகளைச் சுற்றிலும் அமைக்கப்பட்டிருந்த சுற்றுசுவர்கள் அனைத்தும் சிதைந்து போயுள்ளன. உடைந்த போன சுற்றுச்சுவர்களின் கற்கள் சிறிதும் பெரிதுமாக மலை முழுவதும் விரவிக்கிடந்தன.

சங்கரன்பொத்துவில் உள்ள கற்திட்டைகள் தனித்தனியாக இல்லாமல் மூன்று கற்திட்டைகள் அல்லது ஐந்துக்கும் மேற்பட்ட கூட்டங்களாக அமைக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு கற்திட்டைக் கூட்டமும் ஒரு குடும்பத்தினருக்கு உரியாதாக இருக்கக்கூடும். இப்பகுதியில் இவ்வாறான ஐந்துக்கும் மேற்பட்ட கற்திட்டைக் கூட்டங்கள் காணப்படுகின்றன. இன்னும் எத்தனை கற்திட்டைகள் இந்த காடுகளுக்குள் மறைந்து இருக்கின்றதோ! நீண்ட ஆய்வுகள் மூலம் இவற்றையெல்லாம் நாம் அறிந்துகொள்ள முடியும்.

மேலும் தாண்டிக்குடியில் கற்திட்டைகள் அமைந்துள்ள பகுதி பிராதான போக்குவரத்து சாலையை ஒட்டி அமைந்திருப்பதால், இவ்விடங்கள் அவ்வழியே செல்வோரின் திறந்தவெளி மது அருந்தும் இடமாக இருந்து வருகிறது. கற்திட்டைகளை காணச் செல்லுமிடங்கள் எல்லாம் மதுகுப்பிகள் மற்றும் உடைந்த கண்ணாடி மதுக்குப்பிகள் நிறைந்திருந்தன. மக்களிடம் நம்முடைய மூதாதையர்களின் வரலாறு பற்றிய சிந்தனைகள் மற்றும் அதன் முக்கியத்துவங்கள் பற்றிய விழிப்புணர்வு இல்லாததே இதற்கெல்லாம் காரணம்.
தாண்டிக்குடிக்கு அருகில் ’மச்சூர்’ என்னும் சிற்றூர் அமைந்துள்ளது. ஊரை ஒட்டிய காட்டுப் பகுதிக்குள் சென்றால், அங்கும் சில கற்திட்டைகளை காணமுடிகிறது. இங்குள்ள கற்திட்டைகள் அனைத்தையும் காட்டுச்செடிகள் முழுவதுமாய் மறைத்திருந்தன. இங்கும் மூன்று, நான்கு கற்திட்டைகள் ஒரு கூட்டமாக காணப்பட்டன. இவைகளும் ஒரே இனக்குழு அல்லது ஒரே குடும்பத்தினரின் கூட்டமாகவும் இருக்கக்கூடும். இந்த கற்திட்டைகளுக்கு அருகிலேயே சில நடுகற்கள் போன்ற சில கற்களை கொண்ட வழிபாட்டு இடம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. வழிப்பாட்டு இடத்திற்கும், கற்திட்டைகளுக்கும் வடக்குப் புறத்தில் ஒரு நடுகல் சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. நடுகல் வேட்டி மற்றும் காவித் துணியால் சுற்றப்பட்டு, விளக்குகள், பத்தி, பழங்கள் வைத்து வழிபடப்பட்டிருந்தது. இதன் மூலம் இந்த இவ்விடங்கள் பழங்குடி மக்களின் வழிபாட்டுத் தளமாக இருந்து வருகிறது என்பதை அறிந்துகொள்ள முடிந்தது.
   
 தாண்டிக்குடி பகுதியில்  இருந்து எடுக்கபட்ட முதுமக்கள் தாழிகள், தட்டுகள், செப்புப் பொருட்கள், இரும்புப் பொருட்கள் மணிகள், களயங்கள் கிண்ணங்கள், பிரிமணைகள் மற்றும் பானைகள் போன்ற மட்கலன்கள் அருகிலுள்ள செண்பகனூர் அருங்காட்சியகத்தில் இன்றும் பாதுகாப்பாக காத்துவரப்படுகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் இங்கு வாழ்ந்து மறைந்த இப்பழங்குடி மக்களின் ஈமக்குழிகளையும், முதுமக்கள் தாழிகளையும், கற்திட்டைகளையும் பாதுகாத்து வைப்பதன் மூலம் மனித இனத்தின் ஆரம்ப வளர்ச்சியை நாம் அறிந்துகொள்ள வாய்ப்பேற்படுகிறது. இதே போன்ற கற்திட்டைகள், ஈமக்குழிகள் உலகின் பல்வேறு நாடுகளிலும் அமைந்துள்ளதால், இதன்மூலம் உலகெங்கிலும் வாழும் மக்களுக்கும் நமக்குமான உறவை பல்வேறு ஆய்வுகள் மூலம் நாம் மிகத் தெளிவாக அறிந்து கொள்ளமுடியும்.
 
உலகில் பல்வேறு நாடுகளிலும், தங்களது முன்னோர்கள் வாழ்ந்த இடங்களையும், கல்வெட்டுக்களையும், சிற்பங்களையும், ஓவியங்களையும், கற்திட்டைகளையும் மிகவும் பாதுக்காப்பாக வைத்து வருகின்றனர். ரஷ்யா, தென்கொரியா, இங்கிலாந்து, அயர்லாந்து, நெதர்லாந்து, பிரான்சு, ஸ்பெயின் போன்ற இடங்களில் உள்ள கல்திட்டைகளும், ஈமக்குழிகளும், நெடுங்கற்களும், ஓவியங்களும் மிகவும் பாதுகாப்பாக அங்குள்ள அரசுகளும், மக்களும் காத்துவருகின்றனர். நாமும் இது போன்ற பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நமது மூதாதையர்களின் நினைவுகளை தாங்கி நிற்கும் இவ்வரலாற்றுச் சின்னங்களை பாதுகாத்து வர வேண்டும். மேலும், நம்மைச் சுற்றி அமைந்துள்ள இது போன்ற ஆயிரம் வருடங்கள் பலமை வாய்ந்த அனைத்து வரலாற்றுச் சின்னங்களின் முக்கியத்துவங்களையும் அனைவரிடமும் கொண்டு செல்ல வேண்டும். கொண்டு செல்வோம்.  

1 கருத்து:

Yarlpavanan சொன்னது…

சிறந்த கருத்துப் பகிர்வு

எனது புதிய பதிவுகளைப் பார்வையிட
visit: http://ypvn.0hna.com/

கருத்துரையிடுக