சனி, மார்ச் 24, 2012

தாரமும் குருவும் பகுதி - 6.8

ஆக்கம்:இ.சொ.லிங்கதாசன்
பகுதி 6.8
அல்லைப்பிட்டி 1977
"அந்த அல்லி அரசாணி எந்தக் காலப் பகுதியில் அல்லைப்பிட்டியை ஆண்டார்? "அவர் அல்லைப்பிட்டியை மட்டும் தனது ஆட்சிப் பகுதியாகக் கொண்டிருந்தாரா? "இலங்கையை 15 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் ஐரோப்பியர்கள் ஆண்டார்கள். ஆகவே இந்த அல்லி ராணியின் காலம் எத்தனையாம் நூற்றாண்டு? என்றெல்லாம் கேட்போமாக இருந்தால் பதில் எதுவுமே கிடைக்காது. காரணம் இந்த 'அல்லி ராணி சமாச்சாரமே' நமது முப்பாட்டன், கொப்பாட்டன் காலத்திலிருந்து சந்ததி சந்ததியாகக் கூறப்பட்டு வரும் ஒரு 'புனைவுக் கதை' என்பதுதான் கசப்பான உண்மையாகும். 
இதனை நான் எந்தவிதமான சந்தேகமும் இன்றி நூறு வீதம் அடித்துக் கூறுவேன். காரணம் இலங்கையை ஆண்ட மன்னர்கள், குறுநில மன்னர்கள் வரிசையில் பெண்கள் யாருமே இலங்கை நாட்டை முழுமையாகவோ, சிறு பகுதியாகவோ ஆட்சி செய்யவில்லை என்றே இலங்கையின் வரலாறு கூறுகிறது. பல நாடுகளிலும் அரச வம்சத்தில் வரும் பெண்கள் தமது தந்தையின் மறைவுக்குப் பின்னர் குடும்பத்தில் ஆண் வாரிசு இல்லாது போகும் பட்சத்தில் ஆட்சி அதிகாரத்தைக் கையில் எடுப்பர். ஐரோப்பா தொடங்கி ஆபிரிக்கா வரை இந்த வழமை நிலவியிருக்கிறது. ஆனால் தமிழ் மன்னர்களின் வரலாறுகளை எடுத்துப் பார்த்தீர்கள் என்றால், மன்னரின் இறப்புக்குப் பின்னர் ஏற்படும் வெற்றிடத்தை மன்னனின் மகளைத்(இளவரசியை) திருமணம் செய்யும் இளவரசனோ அன்றி மன்னவனின் ஆண் சகோதரர்களோ அன்றேல் நெருங்கிய உறவில் உள்ள ஆண்களோ அல்லது மன்னருக்கு மிகவும் நெருக்கமான மந்திரிகளோ ஈடு செய்து ஆட்சியைக் கைப்பற்றுவர். பெண்ணைத் 'தெய்வம்' எனப் போற்றி வணங்கிய எமது தமிழ் மன்னர்கள் அதே பெண்ணை ஆட்சி அதிகாரத்தில் வைத்துப் பார்க்க விரும்பவில்லை. எமது தமிழ் ஆண்களின் 'பெண்ணடிமைத்தனம்' எங்கிருந்து ஆரம்பிக்கிறது? என்பதை நீங்கள் கண்டு கொள்ளலாம். "பட்டத்து யானை மாலை போட்டதால் ஏழைப் பெண் ஒருத்தி அரசியானாள்" என்பதெல்லாம் திரைப்படத்திற்கு வேண்டுமானால் ரசிக்கத்தக்க விடயமாக அமையலாம்.
இந்த நிலையில் இலங்கையில் அதுவும் யாழ்ப்பாண மாவட்டத்தில் 'அல்லி அரசாணி' என்னும் பெயரில் ஒரு பெண் ஆட்சி செய்ததற்கான ஆதாரங்களே இல்லாதபோது அதே 'அல்லி' அல்லைப்பிட்டியை ஆண்டார் என்று கூறுவதை வரலாற்று ஆசிரியர்கள் மிகவும் ஏளனமாகவே பார்ப்பார்கள். ஆதலால் எனது இந்தத் தொடரைப் படித்துவரும் அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவோ, பூர்வீகமாகவோ கொண்ட எனதருமை உறவுகள் "அல்லி அரசாணி ஆண்டதனால் 'அல்லைப்பிட்டி' என்று பெயர் வந்தது" என்ற செவி வழி வந்த கட்டுக்கதையை அடுத்தவர்களிடம் கூறுவதை நிறுத்தி விடுங்கள். 'அல்லைப்பிட்டி' என்று பெயர் ஏற்படுவதற்கு வேறன்ன காரணங்கள் இருக்கலாம்? என்பதை நீங்களும் நானும் இணைந்தே கண்டு பிடிப்போம்.
அதற்கும் மேலாக இன்னுமொரு வரலாற்றுத் தகவலையும் உங்களிடம் கூறி விடுகிறேன். இலங்கையில் எந்தவொரு அரசியுமே சிறு நிலப்பரப்பையோ அன்றேல் பெரு நிலப் பரப்பையோ ஆட்சி செய்ததாக வரலாறு இல்லை. இலங்கையை ஆண்ட மன்னர்களின் மனைவிமாரின் பெயர்களை வரலாற்று நூல்களிலும், இணையங்களிலும் கடந்த மூன்று மாத காலத்திற்கு மேலாகத் தேடினேன்+தேடி வருகிறேன். எந்த ஒரு இடத்திலும் 'அல்லி அரசாணி' அல்லது 'அல்லி அரசி' என்ற பெயர் என் கண்ணில் படவேயில்லை. அது மட்டுமன்றி அரச வம்சங்களில் அந்தப்புரங்களில் மட்டுமே பெண்களை வைத்திருந்த தமிழ்ச் சமுதாயம் வரலாற்றில் பல சந்தர்ப்பங்களில் அரசனின் 'கோப்பெருந்தேவி' பெயரையே எழுதாது இருட்டடிப்புச் செய்துள்ளது. இவ்வளவுதான் தமிழ்ச் சமுதாயம் பெண்ணுக்குச் செய்யும் மரியாதை.
நான் கடந்த மூன்று மாத காலத்தில் வரலாற்று நூல்களில் தேடியபோது எனது கண்ணில் பட்ட இலங்கைத் தமிழ் அரச வம்சத்துப் பெண்களின் பெயர்கள் பின்வருமாறு:

  1. மகாராணி பொன்னம்மை தேவி. இவர் எல்லாள மன்னனின் தாயார் ஆவார்.
  2. குருவிச்சி நாச்சியார் (கண்டி இராச்சியம்)
  3. நல்ல நாச்சியார் (கண்டி இராச்சியம்)
  4. சிறிய நாச்சியார் (கண்டி இராச்சியம்)
  5. ஊமைச்சி நாச்சியார்("ஊர் மெச்சி நாச்சியார்" என்ற பெயர் தமிழில் திரிபடைந்து "ஊமைச்சி நாச்சியார்" என மாறியிருக்கும் என்பது எனது அபிப்பிராயம்.)
  6. தாரணி அல்லது "தாரண நாச்சி" (இவர் எல்லாள மன்னனின் தங்கை.)
  7. நளாயினி. இவர் பண்டார வன்னியனின் தங்கை.(வன்னி இராச்சியம்)
  8. அம்மங்கா தேவி. இவர் ஒரு சோழ இளவரசி, சோழ மன்னன் இராஜேந்திர சோழனின் மகள், இராஜ இராஜ நரேந்திரனின் மனவி (சோழ இராச்சியம், தஞ்சாவூர்)
  9. திருபுவன மகாதேவியார், முக்கோக்கிலான் பஞ்சவன் மாதேவியார், வீரமாதேவி இவர்கள் மூவரும் இராஜேந்திர சோழனின் அரசிமார்கள்(மனைவிகள்).(சோழ இராச்சியம், தஞ்சாவூர்)
இவ்விடத்தில் கடைசி வரிசையில் சோழ அரசிகளின் பெயர்களை நான் சேர்த்தமைக்குக் காரணம் நமது இலங்கை நாடு பல நூற்றாண்டுகள் சோழர்களின் ஆட்சிக்குள் உட்பட்டிருந்தது. இலங்கையை ஒரு குடைக்கீழ், நீதி நெறி வழுவாது 44 ஆண்டுகளாகத் தமிழ் மக்களையும், சிங்கள மக்களையும் இன பேதம் பாராது ஆட்சி செய்த 'எல்லாளன்' என்ற மன்னன் சோழ நாட்டிலிருந்து வந்தவன் என்கிறது இலங்கையின் வரலாற்றைக் கூறும் நூலாகிய 'மகா வம்சம்'.
நான் மேலே குறிப்பிட்ட அரச வம்சத்துப் பெண்களின் பெயர்களில் ஓரிடத்தில் கூட "அல்லி அரசாணி" என்ற பெயர் தென்படவில்லை. இதிலிருந்து என்ன தெரிகிறது? "அல்லி அரசாணியால் ஆளப்பட்டதால், எமது கிராமத்திற்கு அல்லைப்பிட்டி என்று பெயர் உருவானது" என்பது வெறும் கற்பனைக் கதையே.
(இன்னும் சொல்வேன்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.

1 கருத்து:

vetha (kovaikkavi) சொன்னது…

தங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள். கேட்காத பெயர்களும் இருந்தது. தொடரட்டும் பணி. (எனது கணவரின் தம்பியின் 50து பிறந்ததினத்தால் ஓரிரு நாட்கள் பிரித்தானிய பயணம்.)

கருத்துரையிடுக