சனி, ஜூன் 22, 2013

சிரிக்கும் புத்தர் சிலைகள்

உலகில் வாஸ்து பார்ப்பது இன்று அதிகமாகிக் கொண்டே வருகிறது. சீனாவில் இருக்கும் மக்கள் இதுபோன்ற விசயங்களில் அதிக நம்பிக்கை வைத்திருக்கின்றனர். இங்கு வீடு வாடகைக்கு பார்ப்பதென்றாலும் சரி வாங்குவதென்றாலும் சரி வாஸ்து பார்க்காமல் வாங்குபவர்கள் மிகச் சிலரே.

வீடுகள் நீர் நிலைகளை நோக்கி இருப்பது நல்லது எனக் கருதுவர். அதனால் கடலைப் பார்த்து இருக்கும் வீடுகளுக்கு அதிக வரவேற்புண்டு. அடுக்கு மாடிக் கட்டடங்களைக் கட்டும் போது கடலை நோக்கி இல்லாத வீடுகளுக்கும் நல்லது நடக்க வேண்டும் என்ற காரணத்தாலும், மதிப்பு உயர வேண்டும் என்ற காரணத்தாலும் செயற்கை நீர் அருவிகளையும், நீர் ஊற்றுக்களையும் உருவாக்கிக் கட்டுகிறார்கள்.

நீர் நிலைகளை நோக்கி இல்லாத வீடுகளில் வசிப்பவர்கள் என்ன செய்வார்கள்? வாஸ்துப் பொருட்களை வாங்கி வீட்டை அலங்கரிப்பார்கள். அத்தகைய வாஸ்துப் பொருட்களில் மிகவும் சிறப்பானதும் இன்று பல்வேறு நாட்டினரும் அதிக விருப்பத்துடன் வீடுகளில் அலங்கரிக்கப்பதும் புத்தர் சிலைகளே.

இந்தியாவில் புத்தர் பிறந்திருந்த போதும், அவரை தெய்வமென மதிப்பவர்கள் சீனர்களும் இதர ஆசிய நாட்டைச் சேர்ந்தவர்கள் தாம். ஊண் உண்ணாமை புத்த மதத்தின் முக்கியக் கொள்கையாக இருந்த போதும், அதை மிகச் சில சீனர்களே பின்பற்றுகின்றனர். ஆயினும் சீனாவில் வாஸ்து பொருட்டு புத்தர் சிலைகள் அதிக அளவில் விற்கப்படுகின்றன.

புத்தர் சிலைகள் பலவித உருவங்களில் விற்கப்படுகின்றன. இவை கல், உலோகம், சீன மண், சிவப்பு ஹொங் ஸீ பிசின் கொண்டு செய்யப்பட்டதாக இருக்கின்றன. ஒவ்வொரு விதமான சிலையும் ஒவ்வொரு விதமான அதிர்ஷ்டத்தைத் தர வல்லது என்று நம்பப்படுகிறது. அவரவர் ராசிக்கேற்ப ஒவ்வொரு நிறமும் ஒவ்வொரு விதமான நலனை தரக் கூடியது.

எந்தச் சிலையானலும் அவை வீட்டிற்குள்ளோ அலுவலகத்திற்குள்ளோ நுழைவாயில் கதவிற்கு எதிராக வைப்பது நல்லது. இது அவ்விடங்களிலிருக்கும் துரதிர்ஷடத்தை துரத்தி அதிர்ஷ்டத்தை வரவேற்க வைக்கும். வரவேற்பறையில், படிக்கும் அறையில், வணங்கும் மாடங்களில், அலுவலறையில், வைப்பது உசிதமானது. சமையலறையில், குளியலறையில் வைப்பது உகந்ததல்ல.

அளவு பெரிதாக பெரிதாக அது இருக்கும் இடத்திற்குக் கிடைக்கும் பலனும் அதிகம் என்றும் நம்பப்படுகிறது.

சிரிக்கும் புத்தர், தியான புத்தர், ஆசீர்வதிக்கும் புத்தர், போதிக்கும் புத்தர், ஹோதெய் புத்தர், நீண்ட ஆயுள் புத்தர், ஆன்மீகப் பயண புத்தர், பாதுகாவல் பயணப் புத்தர், பூமி புத்தர், அன்பு புத்தர், இல்ல மகிழ்வு புத்தர், பள்ளி கொண்ட புத்தர் எனப் பல வகை புத்தர் சிலைகள் இருக்கின்றன.

சிரிக்கும் புத்தரே யாவர்க்கும் பிரியமான புத்தர். அவருடைய சிரிப்பு சுற்றுப்புறத்தில் நேர் விளைவுகளை ஏற்படுத்தும். பார்ப்போர் மனத்திற்குள்ளும் நேர் விளைவினை உண்டு பண்ணும். மன அழுத்தங்களைக் குறைக்க வல்லது. அவர் இருக்கும் இடத்தில் துன்பங்களும் துயரங்களும் ஓடி ஒளிவதைக் காண புத்தருக்கு மேலும் மேலும் மகிழ்ச்சி ஏற்படும் என்ற நம்பிக்கையுமுண்டு.

பெரிய வயிறும், கையில் பல தரப்பட்ட பொருட்களும், முதுகில் பெரிய மூட்டையென இருக்கும் சிரிக்கும் புத்தர் சிலைகள் விற்கப்படுகின்றன. மூட்டை ஆன்மீகப் பயணத்தையும், கையில் இருக்கும் பொருட்கள் செல்வம், செழிப்பு, சுகாதாரம், ஆயுள் போன்றவற்றையும் குறிக்கின்றன.

வயிறு பெரிதாகப் பெரிதாக, புத்தர் நம் விருப்பங்களை நிறைவேற்றுவது அதிகரிக்கும் என்றும், அவரது வயிற்றைத் தினமும் தடவுவதால் நமக்கு அதிர்ஷ்டம் கூடும் என்றும் நம்பப்படுகிறது. அதனால் புத்தர் சிலைகளை வைத்திருப்பவர்கள் தினமொரு முறை சிரிக்கும் புத்தரின் பெரிய வயிற்றினை அன்போடு தடவிப் பாருங்கள். எல்லா நலமும் விரைவில் கிட்டும் என்பது ஒரு பக்கம் இருந்த போதும் மனதிற்கு மகிழ்ச்சியும் உள்ளத்திற்கு தைரியத்தையும் அது நிச்சயம் தரும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

பிரக்ஞை தப்பிய நிலையில் இடுங்கிப்போய் திரும்பி வந்து கொண்டிருந்தாள் காஞ்சனா.

நன்றி: சித்ரா சிவகுமார், ஹாங்காங்
muthukamalam.com

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

முட்டாள் தனங்களுக்கு வகை தொகை இல்லை என்பதையே சீனர்களும் உறுதி செய்கின்றனர், நம்மவரும் இருக்கும் மூட நம்பிக்கைகளோடு சேர்த்து புதியவைகளையும் இறக்குமதி செய்து கொள்கின்றோம். கொடுமை.

கருத்துரையிடுக