திங்கள், ஜூலை 25, 2011

தாய்லாந்துப் பயணம் - 11

ஆக்கம்: வேதா இலங்காதிலகம், டென்மார்க்
தாய்லாந்து மொழியில் 'வற்' என்றால் மடாலயம்  monastry  என்பது கருத்து. கோயிலும் கோயிலுடன் சேர்ந்த இந்த அமைப்பு, முழு தாய்லாந்திலும் 21,000  wats  இருக்கிறதாம். பாங்கொக்கில் மட்டும் கிட்டத்தட்ட 200 வற்கள் இருக்கிறதாம். முழு தாய்லாந்திலும் 27,000 புத்த கோயில்கள் உள்ளதாம்.
'வற் போ' கோயிலின் உள்ளே போகக் கட்டணம் எல்லாம் மொழி பெயர்ப்பாளரின் பொறுப்பு.
கிறிஸ்துவிற்கு முன் 269லிருந்து 237களில் இந்திய அரசன் 'அசோகச் சக்கரவர்த்தி' காலத்தில் பாடலிபுரத்திலிருந்து 'சோனா தேராவும்', 'உத்தர தேராவும்' சென்று 'சுவர்ண பூமி' வட்டாரத்தில் (மலேசியா, பர்மா, சுமத்திரா, தாய்லாந்தில்) புத்த மதம் பரப்பியுள்ளனர். இந்த வற் போ கோயிலின் பெயர் அப்போது 'யெலுவன விகார' என்று இருந்ததாம்.
இந்தக் கோயிலில் இருந்து சிறிது தூரம் நடந்து ஒரு ஆற்றின் கரைக்கு வந்தோம். சாயோ பிறையா chao phraya எனும் இந்த ஆற்றங்கரையில் கடவைப் படகில் போக அனைவருக்கும் பயண அனுமதிச் சீட்டுகளை மொழிபெயர்ப்பாளர் எடுத்தார்.
ஆறு பொங்கிப் பிரவாகித்து ஓடியது, மழை பெய்து வெள்ளமும் சேர்ந்து ஒரே கலங்கலாக இருந்தது. ஆற்றின் இக் கரையிலிருந்து அக்கரை போக வேண்டும். நீண்ட படகு. சுற்றி வர அடைக்காத, மேலே கூரை போட்ட பிளாஸ்டிக் இருக்கைகள் கொண்ட யந்திரப் படகு. மிக வேகமாக ஓடியது. இக்கரையிலிருந்து பார்க்க அக்கரை, சாயோ பிறையாவின் மேற்குக் கரைக் கோயிலின் கோபுரம் மிக அழகாகத் தெரிந்தது.
ஊரில் தென்னையளவு ஆழமான கிணறுகள் பார்த்து, எனக்குத் தண்ணீர் என்றாலே பயம். 
ஆனால் படகில் ஏறியதும், பயணம் செய்ததும் மிகக் குஷியாக இருந்தது. சிறிதளவு பயமும் இருக்கவில்லை.
இந்த சாயோ பிறையா ஆறு 370 கி.மீட்டர் நீளமானது. இதன் ஆதி காலப் பெயர் 'மீனம்'. இந்த நதி பிங், வங், நான் (யேன்) இயோம் எனும் கிளை நதிகளாக மேலே மலைப் பகுதிகளிலிருந்து ஊற்றாகி தாய்லாந்து நடுப்பகுதிக்கு வந்து 'தா சின்' – 'சாயோ பிறையா' என்று இரு கிளையாகி தாய்லாந்து வளைகுடாவில் சமாந்தரமாக விழுகிறது. 
வழமை போல்  மக்கள் குடிகள் இந்த ஆற்றின் கரையில் தான் தமது ஆதி வாழ்வைத் தொடங்கினர். மீன் பிடியும், பொருட்கள் ஏற்றுமதி இறக்குமதியும், பிரதானமாக அரிசி விளைச்சலின்   கிண்ணமுமாக இந்த ஆறு இருக்கிறது.  river of king 'ஆற்றின் அரசன்' என்றும் இந்த ஆற்றைக் கூறுகின்றனர். இது 25 மீட்டர் ஆழமுடையது என்று எமக்கு மொழி பெயர்ப்பாளர் கூறினார்.
ஐந்து நிமிடம் கூட போயிருக்காது அக்கரை சேர்ந்தோம். 'பாங்கொக் யாய்' மாவட்டத்தில் அமைந்த 'வற் அருண்'  Wat Arun என்ற கோயிலை அடைந்தோம்.  Temble of dawn 'விடியலின் கோயில்' என்றும் இதைக் கூறுவதுண்டு. அதிகாலை ஒளி கோயிலின் மேற் பகுதியிற் பட்டு அற்புதமாக பிரதிபலித்து வானவில்லின் வர்ணஜாலமாகத் தெறிப்பதால் இப் பெயர் வந்ததாம். கோயிலின் முழுப் பெயர் 'வற் அருண்ரட்சாவரராம் ரட்சாவோர மகாவிகாரா'. வெளியே தெரியும் நடுவில் இருக்கும் கோபுரமே இதன் முக்கிய பகுதியாகும்.
 செங்குத்தான படிகள் இரண்டு மாடித் தட்டுகளாக உள்ளது. "Over the second terrace are four statues of the hindu god indra riding on Erawn".  2வது மாடித் தட்டில் சைவக் கடவுளான இந்திரனின் 4 உருவம் ஐராவதம் யானையில் போவதாக உள்ளது. மொழிபெயர்ப்பாளர் 'எறவன்' என்று கூற, நான் முதலில் 'இறைவன்' என்றே விளங்கினேன். பின்னர் தான் எனக்குத் தெளிவானது அது 'ஐராவதம் யானை' என்று. மொழிபெயர்ப்பாளரின் ஆங்கில உச்சரிப்பும் புரிந்து கொள்வது சிரமமாகவும் இருந்தது.
இரண்டு சீனப் போர் வீரர்களின் உருவமும் வற் அருண் கோயிலுக்குக் காவலாக வாயிலில் செதுக்கப்பட்டுள்ளது.    
–பயணம் தொடரும்-   

8 கருத்துகள்:

Sakthy, DK சொன்னது…

Super

Ramesh, DK சொன்னது…

மிகவும் அருமை.

suthan சொன்னது…

very nice jorney thanks

maran சொன்னது…

congratulation

Yoga, Denmark. சொன்னது…

Very Nice.Keep it up.

தாராபுரம் சுந்தர் , கோவை. சொன்னது…

கோயிலின் முழுப் பெயர் 'வற் அருண்ரட்சாவரராம் ரட்சாவோர மகாவிகாரா'. ஸ்.ஸ். யப்பா! பெயரை வாசிக்கவே கண்ணக் கட்டுதே,எப்படித்தான் ஞாபகம் வைச்சு எழுதுறீங்களோ? பாராட்டுக்கள் சகோதரி. அருமையாக எழுதுகிறீர்கள்.

Arul, DK சொன்னது…

அருமை அருமை...

பெயரில்லா சொன்னது…

கருத்திட்ட அனைத்து அன்புள்ளங்களுக்கும், அந்திமாலைக்கும் மனமார்ந்த நன்றிகள். உங்களுக்குத் தெரியுமோ!...உங்கள் கருத்துரைகள் எமக்கு ஊக்கம் தரும் மாத்திரைகள். மிக்க நன்றி இறை ஆசி எல்லோருக்கும் கிடைக்கட்டும்.

கருத்துரையிடுக