வெள்ளி, ஜூலை 01, 2011

தாரமும் குருவும் பகுதி - 4.3

ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன்
பகுதி 4.3 
அல்லைப்பிட்டி 1977
சரி அல்லைப்பிட்டி எங்கேயிருக்கிறது என்று உங்களுக்கு ஓரளவுக்குத் தெரிந்துவிட்டது, இனி அந்த ஊரைத் தரைப்பாதையால் எவ்வாறு சென்றடைவது, கடல் மார்க்கமாக எவ்வாறு சென்றடைவது என்பது பற்றியெல்லாம் விபரிக்கத் தேவையில்லை என்று எண்ணுகிறேன். தீவுப்பகுதிகளுக்கு, அல்லது நயினைதீவு, நெடுந்தீவு போன்ற தீவுகளுக்கு ஒரு தடவையேனும் சென்றவர்களுக்கு அல்லைப்பிட்டி எங்கே உள்ளது என்ற தெளிவு இருக்கும். நான் யாழ்நகரில் கல்வி கற்று வந்த காலப் பகுதியில் என்னிடம் நண்பர்கள், ஆசிரியர்கள், அறிந்தவர்கள் போன்ற வட்டத்தில் உள்ளவர்கள் முதலில் கேட்கும் கேள்வி நீர் எந்த இடம்? என்பதாகும். நான் அவர்களுக்கு கூறும் பதில் பின்வரும் வாசகங்கள் கொண்ட ஒரு 'வாய்ப்பாடாக' இருக்கும்.

நீங்கள் யாழ்ப்பாணத்திலிருந்து ஊர்காவற்றுறை செல்லும் பேருந்தில்(777) ஏறினால் பண்ணைப் பாலத்தைத் தாண்டி ஒன்றரைக் கிலோமீட்டர் சென்றதும் வருவது 'மண்டைதீவுச் சந்தியாகும்' அதற்கடுத்தாற்போல் இன்னுமொரு இரண்டரைக் கிலோமீட்டர் தூரம் சென்றதும் வருவது எங்கள் அல்லைப்பிட்டிக் கிராமமாகும்.அதற்கடுத்தாற்போல் முறையே மண்கும்பான், வேலணை, சரவணை, நாரந்தனை,கரம்பன், போன்ற கிராமங்கள் வரும் இறுதியாக 'ஊர்காவற்றுறையை' சென்றடைவீர்கள்.

மேற்கூறிய வாசகங்களை ஒரு வாய்ப்பாடாக(வாய்பாடு என்பதே சரியான தமிழாகும்) நான் யாழ்நகரில் கல்விகற்ற காலப்பகுதிகளில் நூற்றுக்கணக்கானவர்களிடம் சொல்ல வேண்டிய தேவை அல்லது நிர்ப்பந்தம் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. இதை நம்புவது உங்களுக்குக் கடினமாக இருந்தால் உங்களால் சற்றும் ஜீரணிக்கமுடியாத ஒரு விடயத்தைக் கூறுகிறேன். அல்லைப்பிட்டி எங்கே இருக்கிறது? என்று என்னிடம் வினவிய யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நண்பருக்கு மேற்கூறிய வாய்பாட்டை நான் ஒப்புவித்தபின்னர், முகத்தில் எந்தவித சலனமும் இல்லாமல் கூறினார் "ஓ அப்ப உங்கட ஊர் மன்னாருக்குப் பக்கத்தில இருக்கெண்டு சொல்லுங்கோ" என்றார். இவர்களை என்னெவென்று சொல்வது. விவேக் ஒரு படத்தில் "நூறு பெரியார் வந்தாலும் உங்களைத் திருத்தவே முடியாதடா" என்று சொல்வார் அல்லவா? அதுபோலவே நானும் தலையச் சுவரில் முட்டவேண்டிய நிலை ஏற்பட்டது. அந்தத் துன்பியல் நிகழ்வு அத்துடன் முற்றுப் பெறவில்லை நான் டென்மார்க் நாட்டிற்கு வந்து ஓரிரு வருடங்கள் கழித்து, 2005 ஆம் ஆண்டில் ஒரு நாற்பது வயதிற்குள் இருக்கக் கூடிய யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நபரைச் சந்தித்தேன் மறுபடியும் அதே கேள்வி முளைத்தது. ஊரில நீங்கள் எந்த இடம்? இது அவர், "அல்லைப்பிட்டி" இது நான். மறுபடி புதிய கேள்வி அல்லைப்பிட்டியா? அது எங்க இருக்கு? திரும்பவும் நான் என் வாழ்வில் நூற்றுக் கணக்கான தடவைகள், நூற்றுக் கணக்கானவர்களிடம் ஒப்புவித்த மேலே நிறத்தால் எழுதப் பட்டிருக்கும் வாய்ப்பாட்டை ஒப்புவித்தேன். ஓரளவு தெளிந்தவராக ஒரு வாசகத்தை உதிர்த்தார் பாருங்கள் அதைத்தான் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. "ஓ அப்ப மட்டக்களப்பு மாவட்டம்" இதுதான் அவர் உதிர்த்த வாசகம். அவர் என்னிடம் அல்லைப்பிட்டி, திருகோணமலை மாவட்டத்திலுள்ளதா? என்று கேட்டிருந்தால் ஓரளவு விடயம் தெரிந்தவர் என்று எண்ணியிருப்பேன். காரணம் திருகோணமலை மாவட்டத்தில் மகாவலி கங்கை கடலை நோக்கிச் செல்லும் பாதையில் 'சேருவில' எனும் இடத்திற்கருகில் 'அல்லை' என ஒரு கிராமம் உள்ளது. இங்கு மகாவலி கங்கையை மறித்து ஒரு அணை கட்டியிருப்பார்கள். இவ்வணைக்கு 'அல்லை அணை'(Allai Tank) அல்லது 'அல்லை கந்தளாய் நீர்த்தேக்கம்' என்று பெயர். இது தவிரவும் அல்பிட்டிய(Alpitiya) எனும் பெயரில் சிங்களப் பகுதிகளில் மூன்று வெவ்வேறு கிராமங்கள் உள்ளன, அல்லைப்பிட்டிக்கு வரவேண்டிய கடிதங்கள் சில யாழ் மாவட்டத்திலுள்ள 'அளவெட்டி' தபால் அலுவலகத்திற்குத் தவறுதலாக அனுப்பப் பட்டு மீண்டும் அல்லைப்பிட்டிக்குத் திரும்பி வந்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. இவை எல்லாம் இத்தொடரைத் தொடர்ந்து வாசித்து வரும் வாசகர்களுக்கான மேலதிகத் தகவல்கள் ஆகும்.


எங்கோ தீவகத்தின் நுழைவாயிலில் இருக்கும் 'அல்லைப்பிட்டியை', அதன் புவியியல் அமைவிடத்தை யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள அனைவரும், இலங்கையிலுள்ள சகலரும் அறிந்து வைத்திருக்க வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பல்ல. அவ்வாறு எதிர்பார்ப்பது 'பேராசை' மட்டுமன்றி, மிகப்பெரிய 'முட்டாள் தனமுமாகும்'. ஆனால் என்னுடைய குறைந்தபட்ச ஆசை என்னவென்றால் இத்தகைய 'அறிவாளிகள்' சக மனிதன் தனது ஊர் எங்கே இருக்கிறது என்று புவியியல் சார்ந்த விளக்கத்தைக் கொடுக்கும்போது அது புரியாவிட்டால், "எனக்குத் தெரியவில்லை" என்று ஒப்புக் கொள்கிற நாகரீகமோ, பெருந்தன்மையோ இவர்களுக்கு வரவேண்டும் என்பதே.
இப்போது நான் எழுதுகின்ற இத் தொடரின், இந்த அத்தியாயம் ஒரு சில வாசகர்களுக்கு சலிப்புத் தட்டுவதாக அமைந்திருக்கும். அதற்காக நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும். விசேடமாக "அல்லைப்பிட்டி எங்கே இருக்கிறது என்று நன்கு தெரிந்த, எனது தொடருக்கு உடனுக்குடன் ஆக்கபூர்வமான கருத்துரைகள்(Comments) இடுகின்ற வினோதினி பத்மநாதன் போன்ற வாசகர்கள் பொறுத்தருள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நம் மக்களில் எத்தனை ரகமான, தனது அறியாமையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாத மனிதர்கள் உள்ளனர் என்ற விடயத்தை உங்களிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் காரணமாகவே மேற்படி விடயங்களைப் பட்டியலிட்டேன்.
(தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.     

3 கருத்துகள்:

Anu, USA சொன்னது…

Very interesting facts I got in this article. Thanks anthimaalai.dk

vinothiny pathmanathan dk சொன்னது…

உங்கள் எழுத்துக்களைப் பார்க்கும் போது நீங்கள் எந்த ஒரு விடயத்தை எடுத்துக் கொண்டாலும் அதனை எல்லோரும் முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும் என்று எத்தனிப்பதும் ,அதற்காக குறிப்பிட்ட விடயத்தை வாசகர்களுடன் மிக நீண்ட விளக்கமொன்றை பகிர்ந்து கொள்ள விரும்புவதும் புரிகின்றது . உங்கள் விளக்கம் கொஞ்சம் நீண்டு விட்டதாக எடுத்துக் கொண்டாலும் ,உங்களைப் போன்ற அதே சிக்கல்களை நான் கூட எனது ஊர் பற்றிய அறிமுகத்தின் போது பெற்றிருக்கிறேன் .உண்மையில் இந்த பிரச்சனை உங்களுக்கு மட்டுமல்ல சகோதரரே ,நிறைய பேர் சந்தித்திருக்கும் ஒரு விடயமாகத் தான் என் பார்வையில் தெரிகிறது. எனவே உங்கள் அடுத்த அல்லைபிட்டி பற்றிய இணைப்புக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் .
நன்றி

Vetha. சொன்னது…

அல்லைப்பிட்டி! எனக்கொரு தோழி ஸரான்லி கல்லூரியில் ஸ்கொலர்ஷிப்பில் எடுபட்டு படிக்கும் போது இருந்தார் சிவபாக்கியம் பெயர். அவர் இதை வாசித்தால் தொடர்பு கொள்வாரா? 1959, 60துகளில் விடுதியில் இருந்து படித்தோம். அல்லைப்பிட்டி!....கேட்குதா?.......

கருத்துரையிடுக