புதன், ஜூலை 13, 2011

என்னையே நானறியேன் - 4


ஆக்கம்: கௌசி, ஜேர்மனி


குடும்ப வாழ்க்கை என்பது கண்ணடிப்பாத்திரம் போல் பேணிப்பாதுகாக்க வேண்டியது. அத்தனை உறுப்பினரும் அவதானமாக அதனைப் பயன்படுத்தாவிட்டால் கண்ணாடி வாழ்க்கை உடைந்து சுக்குநூறாகிவிடும். அதனாலேயே இல்லறத்தை நீள்கடலுக்குள் பயணம் செய்யும் படகுக்கு ஒப்பிடுவார்கள். துடுப்புக்கள் இரண்டின் துடிப்பும் சீராய் இராது போனால், படகில் பயணம் செய்வது எப்படிச் சாத்தியமாகும். வாழப்படுதலே வாழ்க்கை அவ்வாழ்க்கை எப்படியோ வாழ்ந்து விடுவதற்கானதல்ல. அதை நரகமாக்குவதும் சொர்க்கமாக்குவதும் வாழுகின்ற முறையில்த் தான் இருக்கின்றது. சட்டரீதியாய் அத்தாட்சிப்பத்திரம் பெற்று உறவு சொல்ல ஒரு பிள்ளையைப் பெறுதல் மாத்திரம் குடும்ப வாழ்க்கையல்ல. அன்புத் தொடர்பு ஆக்கிரமித்து இருத்தல் வேண்டும். இது உடல் உள்ளம் ஆன்மீக வேதனைகளைப் பகிர்ந்து கொண்டு ஏற்படுத்தும் ஆழமான உறவாகும். போதைக்கு அடிமையாகிய மனிதனால் குடும்ப வாழ்க்கை வேதனைப்படுகிறது சமுதாய வாழ்க்கை சஞ்சலப்படுகிறது. பணம், சொத்து, அந்தஸ்து போன்றவையே குடும்ப சக்தி என நினைத்து 
அன்புள்ள உறவுகளை மனிதன் மறந்து விடுகின்றான். இவ்வழியே நல்வழி எனக் கொண்ட கரண் சட்டரீதியற்ற முறையில் பல சங்கதிகள் செய்யத் தொடங்கினான். பலரை ஏமாற்றலாம். ஆண்டவன் கண்களைக் கட்டமுடியுமா! கடவைச்சீட்டுக்கள் தயாரித்தல் வெளிநாடுகளுக்கு மக்களைக கொண்டுவருதல் இவ்வாறு இன்னோரன்ன காரியங்களில் கவனம் கலந்து கொண்டது.
       
தூண்டியவரை எரிக்கும் மனத்தீ
துயருறவைக்கும் வாழ்வைத் தீக்கிரையாக்கும்
சொல்லும் செயலும் தடுமாறிய வாழ்வை
 நல்லவர்கள் கொள்வதில்லை.

கரண் நல்லவனா? கெட்டவனா? அவசரஅவசரமாகத் தன் தேவை கருதி தன் கடவைச் சீட்டை வீடு முழுவதும் ஆராய்ந்து தேடி சோர்ந்து போனாள் வரதேவி. அப்போதுதான் அவள் மூளைக்குள் அகப்பட்டது கரண் தாயகம் நோக்கிச் சென்ற திடீர்ப் பயணம். வரதேவி கடவைச் சீட்டில் யாரோ ஒரு பெண்ணை வாழுகின்ற நாட்டிற்குள் சட்டரீதியற்ற முறையில் அரசுக்குக் கண்ணைக் கட்டி அந்தப் பெண்ணை வரவழைத்து வருவதற்காகத் தாயகம் நோக்கிப் பறந்த மாயம். புலப்பட்டது.வாழ்வதற்கு வாழும் நாடு அங்கீகாரம் வழங்கிவிட்டால் அந்நாட்டின் புலனாய்வுக்கு வேலை கொடுத்து ஏமாற்றத் தொடங்கிவிடுவார்கள் நன்றிமறந்தவர்கள். சட்டதிட்டங்களுக்குள் அடங்கிவாழ மாட்டாத மனிதன் சமூகத்துரோகி அல்லவா! தவறுகள் தண்டிக்கப்படல் தர்மம் அல்லவா? சிறிய அறையினுள் சிறைக்கம்பிகளுக் கூடாக உலகைப் பார்க்கும் கட்டளை கரணுக்குத் தாயகத்துக் காவல்துறையினரால் வழங்கப்பட்டது. தன் கடவைச்சீட்டுடன் தன் கணவன் நாட்டைவிட்டுத் தலைமறைவாகிவிட்டான் என்னும் உண்மை சொல்லி ஜேர்மனி நாட்டு அரசிடம் தஞ்சம் அடைந்தாள் வரதேவி. நரம்பில்லாத நாவாலும் முகத்தால் மனமறியவொண்ணா பிறப்பாலும்,  பொய்யையும் மெய்யாக்கி வாழும் நாட்டில் பிடுங்க வேண்டியவற்றைப் பிடுங்கி எடுப்பவர்கள் ஆயிரம். இல்லறத்தில் இருந்தபடியே இல்லை இப்போ இல்லறம். இல்லறத்தான் இப்போ இல்லில் இல்லை. என் இதயத்திலும் இல்லை என்று சொல்லால் சொந்தக்கதை மறைத்துச் சுரண்டி வாழ்பவர்களும் உண்டு. ஜேர்மனியர் எம் நாட்டைச் சுரண்டி வாழ்ந்ததாகச் சரித்திரம் சொல்லவில்லையே இப்படியிருக்கும் போது நாம் மட்டும் ஏன் தஞ்சம் தந்தவரை வஞ்சிப்பது. ஆனால் வரதேவி உண்மையை மறைக்காது வாழ வழியின்றி ஆதரவு தேடிப் பெற்றாள். நிம்மதியுடன் வீடு வந்தாள். உடலயர்ச்சி போக்க மெத்தையிலே பொத்தென்று விழுந்தான். மனம் முழுவதும் சொல்லவொண்ணாத் துயரம். உடலெல்லாம் அயர்ச்சி. சோர்ந்திருந்த மூளை ஓய்வுகாணத் துடித்தது. கண் இமைகள் அவளை அறியாமலே கீழ்நோக்கிச் சாய்ந்தது.
           
வானத்து நிலவானது சாளரம் நோக்கி மெல்ல மெல்ல அண்மித்தது. கண்விழித்துப் பார்த்தாள். அறையினுள் நுழைந்துவிடத் துடிக்கும் நிலாவைக் கண்கள் மொய்த்துக் கொண்டது. சிறிது நேரம் அப்படியே பார்த்துக் கொண்டிருந்திருப்பாள். மண்டைக்குள் மின்சாரம் வெடிப்பது போன்ற ஒரு சத்தம். உடலின் தலைமையகத்தை மேலே மேலே உயர்த்தி உயர்த்திப் பார்த்தாள். முடியவில்லை. சிரசின் உள்ளே ஒரு சங்காரமே நடந்தேறியது. அன்றைய இருள் அகன்றதே தெரியாது வயிற்றைக் குமட்டிக் கொண்டு வந்தது. காலைப்பொழுது உண்ட உணவின் ஒவ்வாமையோ என மனதைக் கட்டுப்படுத்தினாள். அவளையும் மீறிப் பீறிட்ட வாந்தியைக் குளியலறைத் தொட்டியினுள் கொட்டிவிட்டாள். அதிர்ச்சியில் திறந்த வாயை அடைக்கமுடியவில்லை. தொடர்ச்சியாக வந்த இரத்தவாந்தி தொட்டியை நிரப்பிக் கொண்டிருந்தது. உணவு செரித்து மலமாவது இயற்கை. அது மயிராவதன் மாயம்தான் என்ன? கத்தைகத்தையாய் உடல் வெளியேற்றிய மயிர்க்குவியல் கண்டு மலைத்துப் போனாள். மலத்துடன் இணைந்தே மயிர்க்குவியல் சிக்கிக்கிடந்தது. இவ்வளவும் எங்கேயிருந்து வருகின்றது. புரியவில்லை. மலைத்துப் போனாள். எனக்கு என்ன நடக்கிறது. அலறினாள். துடித்தாள். அந்தச் சின்னவனோ தாயுடன் இணைந்து அழுவதைத் தவிர எதைத்தான் செய்வான். நேரத்துக்கு நேரம் புத்தியில் தடுமாற்றம் புரியாதவளாய் உடலுள் ஏற்படுகின்ற உள்ளுணர்வுகளைப் புரியாது தவித்தாள். ஆயிரக்கணக்கான ஊசிகளால் ஆயிரம் பேர் சேர்ந்து உடலிலே குத்தி எடுப்பது போன்ற வலி உடலிலே தோன்றித்தோன்றி மறைந்தது. 


நோய் வந்தால் கட்டிலை அணைப்பார் நோயாளிகள். கட்டிலை உடைப்பாரோ? வரதேவி நோய் கண்டாள். வீட்டுத்தளபாடங்கள் அவள் கைபட்டு சுக்குநூறாயின. அனைத்தையும் தன் இரு கரங்களால் அடித்து நொறுக்கி ஆண்வலுவுடன் வீட்டின் வெளிப்பகுதியில் அடுக்கி விட்டாள். ஒரு பெண்ணால் இப்படி முடியுமா? பெண்ணின் மறுபக்கம் அசுர வேகத்திலும் தொழிற்படும் என்பதற்கு இதுவும் எடுத்துக் காட்டல்லவா? புத்தி தடுமாறிய நிலையிலும் அதிவிசேடபுத்தி தொழிற்பட்டது. வீட்டுப் பாதுகாவலரை அழைத்தாள். அன்புக்குரிய தன் இரு மாணவர்களை அழைத்தாள். 'உயிரோடு இருக்கும் என் காலங்கள் ஒடுங்கிப் போவது போல் உணர்கின்றேன். என் பிள்ளையை அவனுடைய பாலர்பாடசாலை ஆசிரியரிடம் தயவுசெய்து ஒப்படைத்து விடுங்கள். என்னை நானறியும் போது என் பிள்ளை என்னிடம் வந்தடையட்டும். என்று வேண்டிக் கேட்டாள். சிரிப்பவர்கள் எல்லோரும் மனதால் சிரிப்பதுவும் இல்லை. கதைப்பவர்கள் எல்லாரும் உண்மை அனைத்தும் கதைப்பதுவும் இல்லை. ஒவ்வொரு மனிதன் வாழ்க்கைக்குள்ளும் ஆயிரம் சோகக்கதை இருக்கும். வாழ்க்கையே சோகமானால்?

மீண்டும்தொடர்கிறேன். அதுவரை உங்கள் எண்ணத்தை எழுதிவிடுங்கள்

6 கருத்துகள்:

Thavapalan DK சொன்னது…

வாழ்க்கேயே போரட்ட களம் தானே?

Janathan Denmark சொன்னது…

கடவுளை யாராலும் ஏமாற்ற முடியாது .

seetha சொன்னது…

ஆமாம் காசி குடும்பத்தை
கணவனும் மனைவியும் சேர்ந்து நடத்த வேண்டும், இல்லா விட்டால், கண்ணாடி பத்திரம் உடைவது போல உடைந்து விடும். வரதேவி என்ன செய்வாள். வாழ்வில் அன்பையும் பாசத்தையும், எதிர்பத்தவள் துன்பத்தையும்
சோகத்தையும் கண்டாள் யாரிடம் சொல்லுவாள் தன் துயரை, தான் பெற்ற
குழந்தைக்கும் தான் சமைத்து கொடுக்கவே முடியாத நிலையாகி விட்டதே, தெய்வம் தான் அவள்ளுக்கு
உசறை கொடுக்க வேண்டும், அந்த கொடியவக்கு அறிவே இல்லையா? thanks gowsi

vinothiny pathmanathan dk சொன்னது…

உண்மைக் கதை என்று ஏற்கனவே சொல்லியிருக்கின்றீர்கள் . கதை உண்மையிலேயே மிகவும் சோகமாக இருக்கிறது. யாருக்கும் இப்படியொரு நிலையை இறைவன் கொடுக்கக் கூடாது .எனவே கதையை நன்றாக வாசிப்பவர்களுக்கு சலிப்புத் தட்டாத வகையில் நகர்த்திச் செல்கிறீர்கள். .பாராட்டுக்கள் கௌசி .

பாபு, ஜேர்மனி. சொன்னது…

ஐரோப்பிய மண்ணில் சில தமிழ்க் குடும்பப் பெண்களின் நிலை இதுதானே. இருப்பினும் நீங்கள் தொண்ணூறுகளைப் பற்றிப் பேசுகிறீர்கள் என்று நினைக்கிறேன். எதுவாக இருப்பினும் உங்கள் படைப்பிற்குப் பாராட்டுக்கள்.

uthayan சொன்னது…

look before as marry from yours husband family than to marryed. not thinking after

கருத்துரையிடுக