புதன், ஜூலை 20, 2011

என்னையே நானறியேன் - 5

ஆக்கம்: கௌசி, ஜேர்மனி

சங்காரம் நடக்குது வீட்டிற்குள்ளே 
சஞ்சலம் தெரியுது மனதுக்குள்ளே
வஞ்சனை புரிந்தது வேதவனோ
மிஞ்சிய வாழ்வது வேதனையோ
  
என்னையே நானறியேன் என்றவளாய்த் தன் எண்ணங்கள் செயல்கள் அனைத்தையும் தன் மனதுக்கிணைந்த இரு மாணவர்களை அழைத்து நாளும் நடக்கும் தன் திருவிளையாடல்களைத் திரைவிமர்சனமாய் விளக்கினாள். அவர்கள் உதவி அவளை மனநிலை மருத்துவரிடம் அழைத்துச் செல்லப் பயன்பட்டது. காரியம் நடக்கிறது. காரணம் புரியவில்லை. சம்பவம் நடக்கிறது. சம்பவிப்பதன் அர்த்தம் புரியவில்லை. 

மருத்துவமனையில் உடலுக்கு உரமூட்டும் திரவகம் செலுத்தப்பட்டது. தனியாய் இருக்க ஒரு இடம் தரப்பட்டது. ஒரு சிலுவை மட்டும் அங்கே கர்த்தர் பட்ட வேதனையை உணர்த்திக் கொண்டிருந்தது. ஆனால், அந்தச் சிலுவை அவளுக்கோ அகங்கோரமாய்க் காட்சியளித்தது. அதிலிருந்து தன்னை நோக்கி வரும் ஒளியைத் தன் உடல், வாய் மூலம் வெளியகற்றும் வாயுவினால் ஊதிஊதித் துரத்தித் துரத்தி விட்டாள். நரக வேதனையே அங்கு கிடைத்தது. மனஅமைதி அங்கு கிடைக்கவில்லை. இடுப்பில் போடப்படும் ஊசியினால்த் துடித்துப் போவாள். இக்காலப்பகுதியில், அவள் ஆசைக் கனவாலயம் கைமாறப்பட்டது. பறிக்க நினைத்தவர்கள், போராடியவர்கள் பற்றிக் கொண்டனர். வேதனையின் விளிம்பானாள். ஒரு பெண்ணுக்குக் தான் செய்யும் தவறுகள் கறை படியச் செய்வதுண்டு. தன்னைச் சுற்றியுள்ள சுகங்களும் கறையினுள் அமிழ்த்தி விடுவதும் உண்டு. இங்கு சுற்றியுள்ள கண்கள் சுகத்தைக் கெடுத்துவிட்டன.

கால ஓட்டத்தில் விடுதலையாகிய கரண் நாடு திரும்பினான். உருமாறிய தன் வீட்டின் அலங்கோலங் கண்டான். நிற்காத கதிரைகளும், பழுதடைந்த சோபாக்களும், நிலத்தில் படுத்திருந்த படுக்கைகளும் கண்டு அதிர்ச்சியுற்றான். அயலவரின் அலசலின் பின் மனைவி, மகன் வாழும் இடம் கண்டறிந்தான். அமைதியான அந்தச் சூழலை விட்டு மீண்டும் ஒரு புதிய வீட்டிற்கு வரதேவியை அழைத்து வந்தான். மாற்றுத் தாயிடம் வளர்ந்த மகனைத் தன் சொந்தத் தாயுடன் இணைத்தான். ஆனால், தன் கணவனையே அடையாளம் காணமுடியாத நிலையில் அவள். வரதேவி வைத்தியசாலையில் அநுமதிக்கப்பட்டிருந்த வேளை அரசாங்க உதவியுடன் வரதேவி வீட்டைத் துப்பரவு செய்வதற்காக வந்து போன ஒரு பெண் அழகாக, வரதேவியால் அடித்து நொறுக்கப்படாது புதிதாய் இருந்த சோபாவைத் தன் மனைக்குச் சொந்தமாக்கி விட்டு அந்த இடத்தில் பழைய ஒரு சோபாவைப் போட்டிருந்த விடயம் வீட்டிற்கு வந்த பின்தான் உணரக்கூடியதாக இருந்து. யாரைத்தான் நம்புவதோ இவ்வுலகில்? மகன் போல் இருப்பான், மானத்தைக் கவர நினைப்பான். உயிராய் பழகுவார், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார். நல்லவராய் நடிப்பார், உண்மைக் கதை தெரிந்தும் நாலு பேருக்கு நயவஞ்சகமாய் உரைப்பார். புத்தியில் அவள் மத்திமம் என்று அறிந்திருந்தும் அவள் நிலை புரிந்துரைக்காது இகழ்ந்துரைப்பார். இப்படி எத்தனையோ கதாபாத்திரங்கள் அவளோடு வந்து உறவாடின.  

வரதேவி மீண்டும் தன் மனை புகுந்தாள். தான் செய்த தவறுகளை உணர்ந்த கரண் திருந்தி வாழ முயற்சித்தான். இந்நிலையில், அவள் சோர்ந்து நிமிரக் காரணமாகியது, இலண்டன் தமிழ் வானொலியில் ஒலித்த அந்த இளையவன் இனிய குரல். அவன் குரல் கேட்டு அடங்கிக் கிடந்த அவள் அறிவு விழித்துக் கொண்டது. ஆன்மாவின் உன்னதமான ராகங்களைத் தட்டி எழுப்பியது. காற்றலை வாழ்வியல் கூறும். வாழ்வைக் குதூகலமாக்கச் சிரிக்க வைக்கும். அறிவுக்குப் புதிர் போடும். ஆனால், ஒரு மனம் பேதலித்த பெண்ணை மகிழ வைக்குமா? அழிந்து கொண்டிருக்கின்ற வாழ்வுக்கு ஆறுதல் அழிக்குமா? ஆம், வானொலி கூட சிலருக்கு வைத்தியக் கருவியாகின்றது. மின்னலென மூளையில் பட்டுத் தெறித்த அந்தக் குரலுடன் அவள் பூரண நிறையறிவு நிரம்பப் பெற்றாள். சிந்தனை தூண்டப்பட்டது, சோர்வுகள் அகற்றப்பட்டன. சுதந்திர உணர்வு பெருக்கெடுத்தது. வானொலியில் ஒலித்த அந்தக் குரலுக்கும் வரதேவிக்கும் என்ன தொடர்பு. யார்யாரோ இதயத்துள் வருகின்றார்கள், போகின்றார்கள். வந்தவர்கள் யாவரும் மனதுள் நிலைத்து நிற்பதுவுமில்லை. நிலைத்து நிற்பவர்கள் தொடர்வதுவுமில்லை. காலஓட்டத்தில் கடந்துவந்த பாதையில் நண்பர்கள் ஆயிரம், நல்லவர்கள் ஆயிரம். ஆனால், நின்று நிலைப்போர் எத்தனை?  இங்கு வரதேவி நோய்க்கு மருந்தான அந்தக் இளையவன் குரலானது வரதேவி என்றும் சந்தித்திராத குரல்.  இதுதான் அலைகளின் தாக்கம் என்று விஞ்ஞானிகள் உரைக்கின்றார்களோ! குரல்கூட மருந்தான மாயம் இங்குதான் கேள்விப்படுகின்றோம். இப்போது வரதேவி வாழ்கிறாள். அடிக்கடி வந்து போகும் ஆதாரபுத்தியின் தடுமாற்றத்தில் அவள் சிலசமயங்களில் தடுமாறிப் போவாள். எதிர்காலம் என்ன சோதனைகளை வேதனைகளைத் தரப்போகின்றதோ எனத் துடித்துப் போவாள். சரியான முறையில் முழுவதுமாகத் தன்னால் வளர்க்க முடியாது போன தன் மகனை எண்ணி வேதனைப்படுவாள். நேர்மையற்ற வாழ்க்கைத் துணைவன் நிலை கண்டு ஆக்கிரோஷப்படுவாள். அடிக்கடி வந்து தொல்லை கொடுக்கும் நோயின் தாக்கத்தில் அக்கினியாவாள். 

           என்னையே நான் அறியேன் - என்
           இதயத்து வேதனை புரியேன் - பழைய
           நிலையது நினைவில் வருவதனால்
           மனதில் நிம்மதி மலர்வதெப்போ?

இப்போது வரம் இழந்த தேவியானாள். சோகங்கள் என்றும் தொடர்வதில்லை. அடிக்கடி இன்பங்களும் வந்த போகும் இது இயற்கை கற்பிக்கும் பாடம். வாழ்வின் அர்த்தமும், மகிழ்ச்சியும் ஆழமான அன்பிலேயே வரும். காற்று மனதுக்கு அவசியம் போல் இன்பமான வாழ்வுக்கு நல்ல தொடர்பும் உறவும் தேவை. அன்பு செய்து உரிமை பாராட்டி வரவேற்புணர்வு தர ஒருவர் இருக்கும் போது மகிழ்ச்சி பெருகும் அந்த இன்பமான வாழ்க்கையை நோக்கி நம்பிக்கையோடு  நடக்கிறாள் வரதேவி.
வரதேவி ஜேர்மனி வந்தது அடைக்கலக்காதை கணவனால் துன்புற்றது துயருறுகாதை நோயினால் துன்புற்றது துயருறுகாதை இப்போது அவள் வாழ்வில் நடப்பது எதிர்கொள்காதை எதிர்கொள் காதை காட்டிய அதிசயம் அறிய, பொறுத்திருங்கள் தொடர்கின்றேன்.

 பிடித்திருந்தால் இன்ட்லியில் ஓட்டுப் போடுங்கள். உங்கள் எண்ணப்பதிவை Comments என்னும் பகுதியில் குறிப்பிடுங்கள்

5 கருத்துகள்:

kumar சொன்னது…

very good article thanks

seetha சொன்னது…

ஒரு குடும்பத்தை கொண்டு செலுத்த, பெண்ணால் முடியாது. கணவனும் உணர்ந்து நடக்க வேண்டும்; அதுவே நீதி
கணவன் மனைவியை திட்டம் போட்டே வருத்தினால்,அவள் விளித்து எல்லா வேலைகளையும் செய்யவேண்டும்'
அவளே நோயளியகினால் எதிரி வென்றுவிடுவான்,,,,

Uthayan சொன்னது…

i am very interesting to reading this story,
thanks Gowsi

Prabha, France. சொன்னது…

So pitty.

Ramesh, DK சொன்னது…

துன்பம் பல விதங்களில் வரும். வாழ்க்கையின் நியதியே அதுதானே.

கருத்துரையிடுக