ஆக்கம்: வேதா இலங்காதிலகம், டென்மார்க்.
மொழி பெயர்ப்பாளர் 12மணிக்கு ஒரு பெயர்ப் பட்டியலுடன் வந்து எங்களைத் தேடினார், சென்று கை குலுக்கி இணைந்தோம். எங்களை ஒரு மினி வானில் அழைத்துப் போனார். எம்மோடு இன்னும் 4, 5 பல்லினத் தம்பதிகளையும் ஒவ்வொரு வாடிவீடாகச் சென்று சேகரித்துக் கொண்டு ஒன்றாக பயணித்தோம்.
தெருவில் தெருக்கள் பெயர் எழுதும் நீலம், பச்சை நிற பெயர்ப் பலகைகள் தலைக்கு மேலே தெரியுமே! அதில் முக்கிய தெருவில் தெருவின் படம் நவீன பார்த்த சாரதி போல, அதாவது நவிகேட்டர் போல கீறப்பட்டு, அந்தப் பாதை எந்த இடத்தை நோக்கிச் செல்கிறது என்று தெளிவாக எழுதிக் காட்டியிருந்தது. நாம் நிற்கும் இடமும் ஒளி போட்டு மின்னியபடி இருந்தது. இது வேறு நாட்டில் நாம் காணாத ஒரு புது விடயமாக, மிகத் தெளிவான வழி காட்டியாகத் தெரிந்தது. ஒரு வேளை இப்போது இந்த முறை பல இடங்களிலும் வந்து விட்டதோ எனவும் தெரியவில்லை.
ராம்1, ராம்4, ராம்5, என்று தெருக்கள் பெயர்கள் காணப்பட்டது. ஆரம்பத்தில் இது என்ன! ராம், ராம் என்று பெயர்கள! என்பது புரியாத புதிராக இருந்தது. பின்பு தான் புரிந்தது அவை அரசர்கள் பெயர் என்று.
இதை விட, தெருவெல்லாம் நல்ல வண்ணமயமாக வாடகை வண்டிகள், டாக்சிகள் ஓடின. பச்சை, நீலம், மெல்லிய நீலம், மஞ்சள், இளஞ்சிவப்பு, ஆரஞ்சு, வெள்ளை, சிவப்பு வண்ணங்களில் இவைகள் காணப்பட்டது. கற்பனையில் பாருங்கள் வண்ணமயமாக இவை தெருவில் ஓடுவதை! இதற்கு முன்னர் ஓரிரு நிறத்தில் வாடகை வாகனங்களைக் கண்டோம். இப்போது பல நிறங்களாகத் தெருவில் ஓடியது, ஒரு வித அழகாகவும், விசேடமாகவும் தெரிந்தது.
இவைகள் தனியார் கூட்டுறவுக் குழுமங்கள் நடத்துவது. ஒவ்வொரு இணையமும் தம்மை அடையாளப் படுத்தத் தமக்கென ஒரு நிறமும், வண்டியில் குழுமப் பெயர்களுடனும் உண்டு.
வாடகை வாகனச் சாரதிமாரும் தமது அறிமுக அட்டையை வாகனத்தில் ஒட்டியுள்ளனர். எம்மால் அவர்கள் பெயர் முகவரியை வாசிக்க முடிகிறது. அரை மணி நேரத்திற்கும் மேலாக ஓடி Wat pho எனும் reclaining புத்தா என்ற கோயிலுக்குச் சென்றோம்.
தூங்கும் புத்தர் கோயில். உள்ளே போனதுமே கோயிலின் பிரசித்தம் வெளிப்படையாகவே தெரிந்தது. என்னவென்கிறீர்களா? இந்திய சினிமாக்களில் தாய்லாந்தில் கடற்கரை தவிர்ந்த காதல் காட்சிகள் எடுக்கப்படும் அழகிய மாளிகை மாதிரியான இடங்கள் தான். இவைகள். மிக அழகான தொழில் நுட்பக் கலையழகோடு இக் கோயில்கள் விளங்குகிறது.
முதன் முதலில் இலங்கை நடிகர் ஆகாஷ் (இலண்டனுக்குப் புலம் பெயர்ந்தவர்) நடித்த படத்துக் காதல் காட்சி, ஜாம்பவான் படத்தில் நிலா- பிரசாந்தின் காதல் காட்சியும் இங்கு தான் எடுக்கப் பட்டுள்ளது, எல்லாக் கோயில்களையும் துண்டு துண்டாக எடுத்துக் கலந்து காட்டியுள்ளனர்.
இக் கோயிலில் கைப்பிடியுள்ள கோயில் மணிகளை நிலத்தில் வைத்தது போன்ற தோற்றமுடைய உருவில் கோபுரங்கள் கட்டப்பட்டுள்ளது.
அழகென்றால் அழகு! அத்தனை அழகு! உள்ளக அனுமதிக் கட்டணம் 20 பாத்.. 20 ஏக்கர் விஸ்தாரமான இடத்தில் உள்ள மிகப் பெரியது இக் கோயில்.
இங்கு படுத்திருக்கும் புத்தர் 46 மீட்டர் நீளமும், 15 மீட்டர் உயரமுமான தங்கக் கவசம் போட்ட சிலை. இது தாய்லாந்தில் உள்ள பெரிய புத்தர் சிலையாகும். இச் சிலை புத்தரின் நிர்வாணா எனும் நிலையைச் சித்தரிக்கிறது. புத்தரின் கண்களும், பாதமும் முத்துகள் வைத்துக் கட்டப்பட்டுள்ளது. அதாவது mother of pearl வைத்துக் கட்டப் பட்டுள்ளது.
இக் கோயில் 200 வருடங்களுக்கு முன் பாங்கொக் தலைநகராக முன்னர் கட்டப்பட்டு, காலத்திற்குக் காலம், இறுதியில் ராமா ஒன்றினால் புதுப்பிக்கப்பட்டுள்ளது. சுற்றியுள்ள கட்டிடத்தில் 394 புத்தர் சிலைகளைப் பார்த்தோம்.
தாய் மசாஜின் பிறப்பிடமே இந்தக் கோயில் தானாம். 1962ல் தாய்லாந்தின் பாரம்பரிய மருத்துவமும், மசாஜ்ம் ஆக முதன் முதல் சர்வகலாசாலை இங்கு தான் உருவகமான பெருமையும் கொண்டது இக் கோயில்.
புத்தபிக்குப் பாடசாலையும் அருகே உள்ளது. மிக ஆடம்பரமான காட்சியாக இக் கோயிலின் அழகு இருந்தது. இதைப் பார்க்க எமக்கு சந்தர்ப்பம் கிடைத்தது மிக மகிழ்வைத் தந்தது.
–பயணம் தொடரும்—-
7 கருத்துகள்:
Good, Keep it up.
பயணத் தொகுப்பு நன்றாக உள்ளது. உங்களை ஜோடியாக பார்த்ததில் மகிழ்ச்ச்சி .வாழ்க பல்லாண்டு .
நன்றாக உள்ளது. தொடருங்கள்.
நல்லது .
மிகவும் அழகிய புகைப்படங்கள். அத்துடன் உங்கள் கட்டுரை மிகவும் அருமை.
சுவையான கட்டுரை. பாராட்டுக்கள்
பயணக்கதை வாசித்த, கருத்திட்ட அன்புள்ளங்களுக்கும், இனி வரப்போகிறவர்களுக்கும், அந்திமாலைக்கும் சேர்த்து எனது மனம் நிறைந்த நன்றியைக் கூறுகிறேன். எல்வோருக்கும் இறை ஆசி கிடைக்கட்டும்.
கருத்துரையிடுக