வியாழன், ஜூலை 21, 2011

ஞாபக நதிக்கரையில்...,

ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன்
பாழுங்கிணறு

"அவனுக்கு உங்க பொண்ணக் கட்டி வைக்கிறதுக்கு பதிலா நீங்க உங்க பொண்ண பாழுங் கிணத்திலேயே தள்ளி விடலாம்", "எல்லாம் தெரிஞ்சுக்கிட்டே உங்க பொண்ணப் பாழுங் கிணத்தில தள்ளீட்டீங்களே !இவ்வாறான வாக்கியங்களை திரைப்படத்திலோ, நாடகங்களிலோ கேட்டிருப்போம். நிஜ வாழ்க்கையில் ஒரு பெண்ணின் வாழ்க்கை சீரழிந்து போகும் கட்டத்தில் இதைப்போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் இடம்பெறுவது தமிழ்நாட்டில் வழமை. இலங்கையில் இத்தகைய சூழ்நிலைகளில் பிரதேசத்திற்குத் தகுந்தாற்போல் வார்த்தைகள் மாறுபடும்.
நான் சிறுவனாக இருந்த காலத்தில் இந்தப் 'பாழுங்கிணறு' என்ற வார்த்தை காதில் விழும்போதெல்லாம், இது உப்புத் தண்ணிக் கிணறு, நல்ல தண்ணிக் கிணறுபோல ஒரு 'கிணறு' என்று நினைத்துக் கொண்டேன்.பாழடைந்த ஒரு கிணறுதான் 'பாழுங்கிணறு' என்பதை அறியும்போது எனக்குப் பதினாறு வயது ஆகியிருந்தது. அப்படியானால் பாழ்+கிணறு= பாழ்கிணறு அல்லது பாழ்+கிணறு= பாழுங்கிணறு என்றெல்லாம் ஐந்தாம் வகுப்பில் தமிழாசிரியர் கற்பித்ததில்லையாஎன்றெல்லாம் யாரும் கேட்கக் கூடாது. ஏனென்றால் நான் சிறுவனாக வாழ்ந்த மண்டைதீவு, அல்லைப்பிட்டிக் கிராமங்களில் 'பாழடைந்த கிணற்றை' பொதுவாகவே 'பாண்கிணறு' என்றுதான் அழைப்பார்கள். பாணுக்கும்(Bread) கிணற்றிற்கும் என்ன சம்பந்தம்? என்றுமட்டும் தயவு செய்து கேட்டு விடாதீர்கள். தமிழ் மருவியதால்/திரிபடைந்ததால் ஏற்பட்ட குழப்பங்களில் இதுவும் ஒன்று என்பது நான் சொல்லாமலேயே உங்களுக்குப் புரிந்திருக்கும். ஆனால் இந்தப் 'பாழுங்கிணறு' என் வாழ்வில் மறக்கவே முடியாத துன்பியல் பதிவு ஒன்றை என் மனதில் விதைத்து விட்டது.
அப்போது எனக்கு ஐந்து வயது இருக்கும். மண்டைதீவில் எங்கள் வீட்டிற்கு மிகவும் அருகில் ஒரு'பாழுங்ககிணறு' இருந்தது. பொதுவாகவே பாழுங்கிணறுகளில் பெரிதாகத் தண்ணீர் இருக்காது. ஆனால் நான் குறிப்பிடும்  இக்கிணற்றில் ஆடு மாடுகளோ, மனிதர்களோ தவறுதலாக வீழ்ந்தால் "இறப்பு நிச்சயம்" என்று கூறுமளவிற்கு ஆழமாகத் தண்ணீர் இருந்தது என்பது உண்மையும், சத்தியமும் ஆகும். அது மட்டுமல்லாமல் இக்கிணற்றில் மனிதர்களோ ஆடு மாடுகளோ வீழ்ந்தால் காப்பாற்ற முடியாத அளவிற்கு கிணற்றைச் சுற்றிப் பல செடி கொடிகளும், கிணற்றின் விளிம்பிலிருந்தே ஒரு சில முட் செடிகளும், ஒரு சில வடலிகளும் வளர்ந்திருந்தன. கிணற்றின் அடிப்பகுதியிலிருந்து ஒரு 'மஞ்சு வண்ணா' மரம் ஆழமாக வேரூன்றி, செழித்து வளர்ந்திருந்தது. இவைகள் எல்லாம் கிணற்றின் வாய்ப்பகுதியை மறைக்கும்படியாக வளர்ந்திருந்தாலும், கிணறு தரை மட்டத்தில் இருந்ததால் ஆபத்து மிகுந்ததாக இருந்தது. ஏனெனில் குழந்தைகளோ, ஆடு மாடுகளோ அதனருகில் சென்றால் தவறி விழுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எல்லாவற்றிற்கும் மேலாக இக்கிணற்றிற்குள் ஏராளமான கொடிய 'நாக பாம்புகள்' வசித்து வந்ததாகவும் அக்காலத்தில் பேசப்பட்டது. இக் கிணற்றின் தண்ணீர் என்ன நிறமாக இருக்கும் என்று அறிய விரும்பினால் இவ் உண்மைக் கதையின் 'தலைப்பு' என்ன நிறத்தில் எழுதப் பட்டுள்ளது என்பதைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். இந்த ஆபத்துக்கள் போதாதென்று இக்கிணற்றுக்கு அருகாமையில் வாழ்ந்த மக்கள் தங்கள் வீடுகளில் போத்தல்களோ (பாட்டில்கள்), கண்ணாடியால் ஆன பொருட்களோ உடைந்தால் அவற்றை இதற்குள்ளே கொண்டு சென்று போட்டு விடுவார்கள். அதேபோல் தங்கள் வீடுகளில் முள்ளு மரங்கள் வெட்டிச் சாய்க்கப் பட்டால் அவற்றையும் இக்கிணற்றுக்குள்ளே கொண்டு சென்று போட்டு விடுவார்கள்.மொத்தத்தில் இக்கிணறு எத்தகைய ஆபத்தின் உறைவிடம் என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள்.
இக்காலப் பகுதியில் ஒரு நாள். எனக்கு ஏறத்தாள ஐந்து வயதும், என் அண்ணனுக்கு ஏறத்தாழ ஏழு வயதும் இருக்கும். மேற்படி 'பாழுங்கிணறு' இருந்த தென்னந் தோப்பில் விளையாடிக் கொண்டிருந்த நாம் மெல்ல மெல்ல 'பாழுங் கிணற்றின்' அருகில் சென்று விட்டோம். எங்களை வீட்டிற்கு வெளியே நின்றபடி அவதானித்துகொண்டிருந்த எங்கள் தந்தையார் நாங்கள் கிணற்றினருகில் செல்வதைத் தடுக்கும் முகமாக எங்களைச் சத்தமிட்டுப் பல தடவை அழைத்திருக்கிறார். அவர் கூப்பிட்டது எங்கள் காதுகளில் விழவில்லை. இறுதியாக கையில் கிடைத்த ஒரு கல்லை (அது 'கல்' அல்ல உடைந்த மண்பானையின் ஒரு துண்டு அது) எடுத்து எங்கள் கவனத்தைத் திசை திருப்புவதற்காக எறிந்திருக்கிறார். அக்கல் சரியாக என் தலையைப் பதம் பார்த்தது.
என் மண்டை உடைந்து இரத்தம் பீறிட்டு ஓடியது, நானும் அண்ணாவும் கதறியபடி வீட்டை நோக்கி ஓடினோம். வீட்டு வாசலில் தலையிலிருந்து இரத்தம் வடிந்த நிலையில் வந்த என்னைக் கண்ட என் அம்மா "குய்யோ, முறையோ" என ஒப்பாரி வைத்து அழத் தொடங்கி விட்டார். அங்கு வந்த எங்கள் அப்பா, கல்லால் எறிந்தது 'தானே' என்பதை ஒப்புக் கொண்டார். பிள்ளைகள் 'பாழுங் கிணற்றில்' விழுவதைத் தடுக்கும் முகமாகவே கல்லால் எறிந்ததாகக் கூறினார். என் தந்தையாரின் விளக்கத்தை அங்கு எனக்கு 'முதலுதவி' செய்ய வந்த அயலார்கள் யாரும் கேட்கவில்லை. என் தந்தையை 'இரக்கமற்ற பிறவி' 'பாதகன்' 'பெற்ற பிள்ளையின் மண்டையை உடைத்த பாவி', என்றெல்லாம் தூற்றினர். அங்கு வந்த வயோதிபர் ஒருவர் மாட்டுக் கன்றின் 'சாணி' எடுத்து நெருப்பில் சுட்டு எனது மண்டை உடைந்த இடத்தில் தடவி ஒத்தடம் கொடுத்தார். மண்டை உடைந்தால் செய்ய வேண்டிய முதலுதவியாம் !!! இதன் பொருள் இன்றுவரை எனக்குத் தெரியாது.
நாங்கள் வாழ்ந்த மண்டைதீவு எட்டாம் வட்டாரத்தில் உடனடியாகவே 'வதந்திப் பறவை' சிறகடித்துப் பறக்க ஆரம்பித்தது. "பெற்ற பிள்ளையின் தலையை சுவரோடு மோதியவன்", "பெற்ற பிள்ளையின் மண்டையை குடிவெறியில் பொல்லால் (உருட்டுக் கட்டையால்) அடித்து உடைத்த பாதகன்" என்றெல்லாம் அயலவர்களால் என் தந்தைக்குப் பட்டங்கள் சூட்டப் பட்டன.


அமரர் இரா. சொர்ணலிங்கம்
இந்தச் சம்பவத்தில் தவறு என்பது முழுக்க முழுக்க என் மீதும், என் அண்ணன்மீதும் என்பது மூவர் மட்டுமே அறிந்த விடயம். என் வாழ்நாளில்இச் சம்பவத்திற்காக என் தந்தையிடம் ஒரு தடவையேனும் மன்னிப்புக் கேட்டுவிட ஆசைப்பட்டேன். ஆனால் மிகவும் காலம் தாழ்த்தி விட்டேன் என்று எண்ணுகிறேன். நான் அவ்வாறு ஆசைப்பட்ட தருணத்தில் காலம் என்னையும் என் பெற்றோர்களையும் நீண்ட காலம், நீண்ட தூரம் பிரித்து விட்டது. என் தந்தையை சந்திக்கும்போது மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பது எனது இறுதி முடிவாக இருந்தது.


31.08.20009 அன்று, தனது மூன்று வருடகால வவுனியா 'அகதி வாழ்வை' நிறைவு செய்துவிட்டு, அல்லைப்பிட்டி மண்ணில் கால் பதிக்கும் ஆவலோடு வவுனியாவிலிருந்து என் தாய், என் தம்பி, என் தங்கை சகிதம் இரா.சொர்ணலிங்கம் என்ற பெயரோடு பேருந்தில் ஏறிய என் தந்தையார், யாழ்ப்பாண நகரத்தில் வைத்துப் 'பிணம்' என்ற பெயரில் பேருந்திலிருந்து கீழே இறக்கப் பட்டார். அதுவே அவர் செய்த இறுதிப் பயணம் ஆகியது. அவர் மூன்று வருடங்களாக பார்க்க ஆசைப்பட்ட 'அல்லைப்பிட்டி' மண்ணைத் தரிசிக்காமலே எங்களிடமிருந்து விடைபெற்றார். 
இவ் உண்மைக் கதையை வாசிக்கும் வாசகர்களிடம் நான் கேட்டுக் கொள்வதெல்லாம்;
நமது வாழ்வில் பாராட்டுவதற்கும், நன்றி கூறுவதற்கும், மன்னிப்புக் கேட்பதற்கும் மகத்தான தருணங்கள் அடிக்கடி வராது. வரும்போது பற்றிக் கொள்ளுங்கள். இது எனது அனுபவ மொழியாகும். 

"துயரம் தோய்ந்த உள்ளத்துடன்"
உங்களன்பின் 
இ.சொ.லிங்கதாசன். 

8 கருத்துகள்:

Arumugam Denmark சொன்னது…

cerapaka ulathu. vallathukkal.

Vamathavan Swiss சொன்னது…

Excellent.

Vetha சொன்னது…

Touching story. Mr sornalingham like a film star. Thanks.

vinothiny pathmanathan dk சொன்னது…

உண்மை தான் தாசன். சந்தர்ப்பங்கள் சூழ்நிலைகள் எப்போதுமே ஒருவருக்கு சாதகமாக அமைவதில்லை. உங்கள் தந்தையிடம் நீங்கள் உள்ளத்தால் கேட்ட மன்னிப்பு மானசீகமாக நிச்சயம் அவரை சேர்ந்திருக்கும் .இறைவனாக வாழ்ந்து கொண்டிருக்கும் உங்கள் தந்தை நிச்சயம் உங்களை புரிந்து கொண்டிருப்பார் .வாசகர்கள் மத்தியில் நீங்கள் மனம் திறந்து பேசியிருக்கின்றீர்கள் ,நிச்சயம் உங்கள் மனவேதனை சற்று குறைந்திருக்கும் என நினைக்கின்றேன் .உங்கள் உள்ளத்தில் பதிந்த இந்த சம்பவம் மிக அழகாக அந்திமாலையில் வெளிவந்திருக்கிறது. உங்கள் அப்பா என் மனதிலும்
ஒரு ஹீரோவாகத்தான் தெரிகிறார்.

seelan சொன்னது…

very sad you are right thasan

Vathani DK சொன்னது…

நன்றாக உள்ளது .

mathan சொன்னது…

this story is very sad, only not for you like this happed 70% people are as did not to get what they are liked.

இ. சொ. லிங்கதாசன், டென்மார்க். சொன்னது…

கருத்துரைத்த அன்பு உள்ளங்களுக்கு என் உளமார்ந்த நன்றிகள்.

கருத்துரையிடுக