வியாழன், ஜூலை 21, 2011

ஒட்டகத்தைக் கட்டிக்கோ.., பகுதி 1.4

டேனிஷ் மொழியில்: Johan Joelsson மற்றும் Jonathan Jacobson

தமிழில்: இ.சொ.லிங்கதாசன்

வெகு விரைவில் ஐரோப்பியக் கடைகளில் ஒட்டகப் பால் !
வெளிநாடுகளுக்கு ஒட்டகப் பாலை ஏற்றுமதி செய்யும் நிறுவனமாகிய EICMP இன் கால்நடை வைத்தியர்களும், துபாயின் கால்நடை ஆராய்ச்சி நிறுவனமாகிய CVRL உம் மேற்கொண்ட ஆய்வுகளின்படி 'ஒட்டகப் பால்' ஒரு மிகச் சரியான சத்துணவு என்பது தெளிவாகி உள்ளதுடன், ஒட்டகப் பாலில் பசுப் பாலை விடவும் குறைந்த அளவில் கொழுப்பும், மிகக் குறைந்த அளவில் ஆபத்தான கொழுப்பும்(கொலஸ்டிரோல்) உள்ளது என்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அத்துடன் பசுப்பாலில் உள்ளதை விடவும் உயிர்ச்சத்து C ஒட்டகப் பாலில் அதிகமாக உள்ளது என்பதும் தெளிவாகி உள்ளது. பசுப்பால் மற்றும் ஒட்டகப் பாலில் உள்ள 'புரதங்கள்' இடையேயான வேறுபாடு யாதெனில் ஒட்டகப் பாலில் ஒவ்வாமையை(அலர்ஜி) ஏற்படுத்துகின்ற புரதங்கள் மிகக் குறைவாகவே காணப் படுகின்றன. அது மாத்திரமன்றி 'ஒட்டகப் பால்' மிகவும் சுலபமாகச் சமிபாடு அடையும் தன்மை(செரிமாணம்) உள்ளது.
"பசுப்பால் ஒத்துக் கொள்ளாத குழந்தைகள் 'ஒட்டகப் பாலை' அருந்தலாம்" என்கிறார் பீட்டர் நாகி(Peter Nagy) துபாயில் EICMP நிறுவனத்தால் வளர்க்கப் படுகின்ற, வெட்ட வெளியில் மேய்ந்துகொண்டிருக்கும் ஒட்டகங்கள் ஒரு நாளைக்கு இரண்டு தடவைகள் கூரை வேயப்பட்டு, போதுமான காற்றோட்ட வசதி உள்ள ஒரு இடத்திற்கு அழைத்து வரப் படுகின்றன. அங்கு மிகவும் நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்திப் பால் கறக்கப் படுகிறது. அங்கு வளர்க்கப்படும் சுமார் 600 வரையான ஒட்டகங்கள் ஏறக்குறைய 4000 லீட்டர் பாலைத் தருகின்றன. இதிலும் ஒட்டகங்கள் பால் தரும் அளவுகள் வேறுபடுகின்றன. ஒரு சராசரி ஒட்டகம் ஒரு நாளில் 6 தொடக்கம் 7 லீட்டர் பாலைத் தருகிறது. ஆனால் ஒரு மிகச் சிறந்த 'ஒட்டகம்' ஒரு நாளைக்கு 20 லீட்டர் பாலைத் தரும் வல்லமை கொண்டது. 
 (தொடரும்)
நன்றி: Samvirke. juli 2011

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக