செவ்வாய், நவம்பர் 01, 2011

நாடுகாண் பயணம் - டென்மார்க்




நாட்டின் பெயர்:
டென்மார்க் (Denmark)

வேறு பெயர்கள்:
டென்மார்க் இராச்சியம் (Kingdom of Denmark)
*ஆங்கிலத்திலும் தமிழிலும் 'டென்மார்க்' என உச்சரிக்கப் பட்டு Denmark என பெரும்பாலான மொழிகளில் எழுதப் படுகிறது. டேனிஷ் மொழியில் 'டன்மார்க்' என உச்சரிக்கப்பட்டு Danmark என எழுதப் படுகிறது.

Greenland
உலக அரங்கில் டென்மார்க் எனக் குறிப்பிடப் படும்போது டென்மார்க் நாட்டிற்குச் சொந்தமான 406 தீவுகளையும், உலகின் மிகப்பெரிய தீவாகிய(அவுஸ்திரேலியாவின் பரப்பளவில் மூன்றிலொரு மடங்கு) கிரீன்லாந்தையும் (Greenland), ஐஸ்லாந்திற்கும் ஸ்கொட்லாந்திற்கும் நடுவில் அமைந்திருக்கும் சுயாட்சிப் பிரதேசமாகிய பாரோ தீவுகளையும்(Faroe Islands) உள்ளடக்கிய டென்மார்க் இராச்சியத்தைக் குறிக்கும்.

அமைவிடம்:
வட ஐரோப்பா 


எல்லைகள்:
தெற்கில் மட்டுமே நிலப் பரப்பை(ஜேர்மனி) எல்லையாகக் கொண்டுள்ளது இருப்பினும் மூன்று பக்கமும் வடகடல் மற்றும் பால்டிக் கடலையும் கடலுக்கு அப்பால் வட மேற்கில் நோர்வேயும், கிழக்கில் சுவீடன் நாடும் அமைந்துள்ளன.

தலைநகரம்:
கொப்பன்ஹேகன்(Copenhagen)
*கொப்பன்ஹேகன் என்பது ஆங்கில மொழிப் பெயராகும். டேனிஷ் மொழியில் இந்நகரம் குப்பென்ஹாவன்(København) என்று அழைக்கப் படுகிறது.

அலுவலக மொழி:
டேனிஷ்(Danish)

இனங்கள்:
டேன்கள்(டேனிஷ் இனத்தவர்) 90,1 %
ஏனையோர்(பிற நாட்டவர் மற்றும் இனத்தவர்) 9,9 %


சமயங்கள்:
இவாஞ்சலிக்கல் லுத்தரன்(புரட்டஸ்தாந்துகள்) 95%
ஏனைய கிறீஸ்தவர் 3%
முஸ்லீம்கள் 2 %


கல்வியறிவு:
99 %

ஆயுட்காலம்:
ஆண்கள் 76,2 வருடங்கள் 
பெண்கள் 81,1 வருடங்கள் 

ஆட்சிமுறை:
சம்பிரதாயபூர்வமான அரசியின் ஆட்சிக்குட்பட்ட ஒற்றையாட்சிப் பாராளுமன்ற ஜனநாயக ஆட்சிமுறை.

சம்பிரதாயபூர்வமாக நாட்டின் தலைவி:
இரண்டாவது மார்கிரெத்(Margrethe II) 

பிரதமர்:
ஹெல தொன்னிங் ஸ்மித் (Helle Thorning-Schmidt) *இது 01.11.2011 அன்று உள்ள நிலவரமாகும்.


பரப்பளவு:
43,075 சதுர கிலோ மீட்டர்கள் 

சனத்தொகை:
5,564,219 (2011 மதிப்பீடு)

நாணயம்:
டேனிஷ் குரோன் (Danish krone / DKK)

இணையத் தளக் குறியீடு:
.dk

சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
00 + 45


விவசாய உற்பத்திகள்:
பார்லி, கோதுமை, சீனிக்கிழங்கு, பன்றி இறைச்சி, பால் மற்றும் பால் சம்பந்தமான பொருட்கள், கோழி இறைச்சி, கோழி முட்டை, மீன்.

தொழில் மற்றும் தொழிற்சாலை உற்பத்திகள்:
இரும்பு, உருக்கு, இரும்பு சாராத உலோகங்கள், இரசாயனப் பொருட்கள், உணவு தயாரிப்பு மற்றும் பதனிடல், இயந்திரங்கள் உற்பத்தி, வாகனங்கள் உற்பத்தி, துணிவகை உற்பத்தி, மின்சார உபகரணங்கள், கட்டிடப் பொருட்கள், கட்டிடங்கள் கட்டிக் கொடுக்கும் பணிகள், மரம், மற்றும் மரத் தளபாடங்கள் உற்பத்தி, கப்பல் கட்டுதல், கப்பல் திருத்த வேலை, மின்சாரத்தை உற்பத்தி செய்யும் காற்றாடிகள் தயாரிப்பு, மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் தயாரிப்பு.

ஏற்றுமதிகள்:
இயந்திரங்கள், மின்சார உபகரணங்கள், இறைச்சி வகைகள், கோழி முட்டை, கால்நடை உற்பத்திகள், மீன், மருந்து வகைகள், மரத் தளபாடம், மின்சாரத்தை உற்பத்தி செய்யும் காற்றாடிகள்.

நாட்டைப் பற்றிய சிறு குறிப்புகள்:
  • உலகில் உள்ள அமைதியான நாடுகளில் இரண்டாவது இடத்தில் உள்ளது.முதலாவது இடத்தில் ஐஸ்லாந்து உள்ளது.
  • உலகில் மிகவும் மகிழ்ச்சியான மக்கள் வாழுகின்ற நாடுகளின் வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளது. முதலாவது இடத்தில் பூட்டான் உள்ளது.
  • உலகில் ஊழல் மற்றும் லஞ்சம் இல்லாத நாடுகளின் வரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ளது. முதலாம் இரண்டாம் இடங்களில் முறையே சிங்கப்பூரும், பின்லாந்தும் உள்ளன.(இவ்வரிசைப் பட்டியல் வருடத்திற்கு வருடம் மாறுபட்டாலும் டென்மார்க் முதல் ஐந்து இடங்களுக்குள் ஒரு நாடாக இருக்கும்)
  • உலகில் மொத்தத் தேசிய வருமானத்தில் மிகப்பெரும் தொகையைக் கல்விக்காகச் செலவு செய்யும் நாடுகளில் முதலாவது இடத்தில் உள்ளது. இரண்டாம் மூன்றாம் இடங்களில் முறையே சுவீடனும் சைப்பிரஸ்ஸும் உள்ளன.("ஒவ்வொரு மனிதனுடைய மூளையும்/அறிவும் ஒரு மதிப்புவாய்ந்த இயற்கை வளம்" என டேனிஷ் மக்கள் கூறுவதுண்டு)
  • மக்களின் நல்வாழ்வைக் காப்பாற்றுகின்ற, ஒவ்வொரு மனிதனுடைய நலமான, நிம்மதியான வாழ்விற்கும் 'உத்தரவாதம்' வழங்கியுள்ள நாடுகளின் வரிசையில் முதலாவது இடத்தில் உள்ளது. நாட்டில் வாழும் ஒவ்வொரு பிரஜைக்கும் அரசு இலவச மருத்துவக் காப்புறுதி வழங்கியுள்ளது. அது மட்டுமல்லாமல் உலகத் தரம் வாய்ந்த மருத்துவ சேவை ஒவ்வொரு பிரஜைக்கும் உறுதிப் படுத்தப் பட்டுள்ளது. 250 நோயாளிகளுக்கு ஒரு மருத்துவர் என்ற உயர்ந்த நிலை காணப் படுகிறது. உலகில் ஒரு லட்சம் நோயாளிகளுக்கு மூன்று மருத்துவர்கள் என்ற நிலை காணப்படும் ஆபிரிக்க நாடுகள் உள்ளன என்பதை நீங்கள் அறிவீர்கள்.
  • சகல விதமான நல வாழ்வையும் அனுபவிக்கும் இந்நாட்டு மக்கள் தமது வருமானத்தில் பெரியதொரு தொகையை அரசுக்கு வரியாகச் செலுத்த வேண்டும் என்பது நீண்ட காலமாக நடைமுறையில் உள்ள சட்டமாகும். மக்கள் வரியாகச் செலுத்தும் தொகை அவர் வகிக்கும் பதவி, அவர் உழைக்கும் தொகை என்பவற்றிகேற்ப வேறுபாடும். சாதாரண ஒரு தொழிலாளி தனது வருமானத்தில் 37 % தை வரியாகச் செலுத்த வேண்டும். அரசு உதவியில் வாழ்கின்றவர்கள், ஓய்வூதியம் பெறுவோர் போன்ற அனைத்துத் தரப்பினரும் வரி செலுத்த வேண்டும் என்ற கடப்பாடு உள்ளது. உயர் பதவி வகிப்போர், வங்கி முகாமையாளர் போன்றோர் தமது வருமானத்தில் 60% வரை வரியாகச் செலுத்துகின்றனர்.
  • இந்நாட்டில் வங்கி முகாமையாளராகப் பணிபுரியும் ஒருவரின் மாதாந்தச் சம்பளம் ஒரு லட்சத்து இருபதினாயிரத்திற்கு மேற்பட்ட அமெரிக்க டாலர்களாகும்.(இலங்கை ரூபாயில் சுமார் இரண்டு கோடியே நாற்பது லட்சமாகும்) இத்தொகையில் அவர் 50 % தை அரசுக்கு வரியாகச் செலுத்த வேண்டும். 
  • 'சட்டத்தின் ஆட்சி' என்பதை இந்நாட்டில் கண்கூடாகக் காண முடியும். இந்நாட்டில் 'சட்டத்தின் முன் அனைவரும் சமம்'. ஆசிய நாடுகளைப் போல் மக்கள் அரசியல்வாதிகளுக்கு, பணக்காரர்களுக்குப் பயப்படும் நிலை டென்மார்க்கில் கிடையாது. மக்கள் சட்டத்திற்கு மட்டுமே பயப்படுவர்(சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுவதற்குப் பயப்படுவர்) குற்றச் செயல்களில் ஈடுபட்டால் செலுத்தவேண்டிய மிகப்பெரிய தண்டத்தொகை, சிறைத்தண்டனை போன்ற விளைவுகளை எண்ணுவதால் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரின் தொகையும் மிகவும் குறைவாகும். 
  • 1914 ஆம் ஆண்டில் ஒரு ஏழை நாடாகத் திகழ்ந்த டென்மார்க் நாட்டை இந்நாட்டு மக்கள் தமது உழைப்பின் மூலம் ஐரோப்பாவின் முதல் ஐந்து பணக்கார நாடுகளில் ஒன்றாக மாற்றியுள்ளனர். இதில் 'உலக மகா ஆச்சரியம்' என்னவெனில் இந்நாட்டில் ஏனைய பணக்கார நாடுகளில் உள்ளதைப்போல் மண்ணிற்கு அடியில் எந்தவிதமான இயற்கை வளங்களோ, மூலப் பொருட்களோ கிடையாது.
  • டேனிஷ்(டென்மார்க்) கட்டிட நிபுணர்களும், பொறியாளர்களும் உலகப் பிரசித்தம் வாய்ந்தவர்கள். அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள 'ஒபரா ஹவுஸ்' மற்றும் துபாய், பஹ்ரெயின் நாடுகளில் உள்ள பல விண்ணை முட்டும் அடுக்கு மாடிக் கட்டிடங்கள் டேனிஷ் கட்டிட நிபுணர்களின் கைவண்ணத்தில் உருவானவையே.
  • இந்நாடு ஒரு பணக்கார நாடாக இருப்பினும் நாட்டு மக்கள் தொகையில் 12 % பேர் வரையில் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கின்றனர். இதற்குக் காரணம் அரசு வழங்கும் உதவித் தொகையை அவர்கள் மது, போதைப்பொருள் போன்ற விடயங்களில் செலவு செய்வது ஆகும்.
  • இந்நாட்டில் சுமாராக 11,000 தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் 1980 களில் இலங்கையிலிருந்து யுத்தம் காரணமாக குடிபெயர்ந்து டென்மார்க்கில் அரசியல் தஞ்சம் பெற்றவர்களும் அவர்தம் சந்ததியினரும் ஆவர்.
  • அணுவைப் பிரிக்க முடியும் எனக் கண்டுபிடித்த 'நீல்ஸ் போர்' (Niels Bohr) போன்ற நூற்றுக் கணக்கான விஞ்ஞானிகளையும், குழந்தைகள் முதல் பெரியவர்களாலும் நேசிக்கப்படும் 'ஹன்ஸ் கிறிஸ்டியான் அண்டர்சன்' (Hans Christian Andersen) போன்ற உலகப் பிரசித்தி பெற்ற எழுத்தாளர்களையும், மேற்கத்திய நாட்டவர்களால் மட்டுமன்றி கீழைத்தேய நாட்டவர்களாலும் போற்றப்படும் 'ஸோறேன் கியக்க கோ' (Søren Kierkegaard) போன்ற தத்துவ மேதைகளையும் உலகிற்குத் தந்தது டென்மார்க் நாடே ஆகும்.
  • உங்களையும் எங்களையும் இணைய உலகில் இணைக்கும் உறவுப் பாலமாகிய 'அந்திமாலை' இணையத்தின்(www.anthimaalai.dk) 'ஆசிரிய பீடம்' டென்மார்க் நாட்டிலிருந்தே இயங்குகிறது என்பதும் குறிப்பிடத் தக்கது.
இவை மட்டுமன்றி இன்னும் ஏராளமான சிறப்புக்களையும், ஒரு சில விரும்பத் தகாத விடயங்களையும் 'டென்மார்க்' தன்னகத்தே கொண்டுள்ளது. டென்மார்க் பற்றிய மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள ஆர்வம் உடையவர்கள் 'கூகுள்' மற்றும் 'விக்கிப்பீடியாவில்' தேடி அறிந்து கொள்ளலாம்.
      ஆசிரிய பீடம் 
      அந்திமாலை 

      2 கருத்துகள்:

      vinothiny pathmanathan dk சொன்னது…

      நான் இதுவரை அறிந்திராத பல தகவல்களை வாசித்தேன். நன்றி .

      Vetha. Elangathilakam. சொன்னது…

      மிக சுவையான கட்டுரைத் தொகுப்பு எம்மை வாழவைத்துக் கொண்டிருக்கும் நாடல்லவா! நன்றி டென்மார்க் நாட்டீற்கும் அந்தி மாலைக்கும்.

      கருத்துரையிடுக