ஞாயிறு, நவம்பர் 13, 2011

பெண்களை வசியம் செய்யும் மாந்திரீகம்

ஆக்கம்:செ.சஞ்சயன், நோர்வே 
ஏறத்தாள 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் வாழ்ந்திருந்த காலமது. என்னைச் சுற்றியிருந்தவர்கள் எல்லோருமே யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள். நான் மட்டுமே மட்டக்களப்பைச் சேர்ந்தவன். மட்டக்களப்பு என்பதாலேயே சில நக்கல் கதைகள் என்னை நோக்கி வரும். அதில் நக்கல், பகடி இருந்ததே அன்றி விஷம் பூசிய வார்த்தைகள் இருந்ததில்லை. அப்படி நான் உணர்ந்ததுமில்லை. 

"டேய் உன்னூர் பாயில் படுத்தால் அப்படியே ஒட்டி விடுமே" என்பார்கள். நானும் பதிலுக்கு "எங்களூர் உபசரிப்பில் நீங்கள் மயங்கி, சில பல வேளையில் காதலித்து கசிந்து உருகி எங்களூர் மனிதர்களாய் மாறிப்போவதை நாங்கள் மாந்தரீகம் செய்து பாயில் போடுகிறோம் என்கிறீர்கள்" என்பேன்.

பின்பு மாந்திரீகம் பற்றி பேசுவார்கள். "காதலித்த பெண்ணை வசியம் செய்வது பற்றித் தெரியுமா? என்பார்கள் மிகுந்த ஆர்வத்துடன். நானும் அந்தக் காலத்தில் கேட்டறிந்த  சில விடயங்களைக் கூறி எங்கள் ஊரின் மேலான அவர்களின் ஒரு வித 'பயத்தன்மையை' ரசித்திருப்பேன்.

பெண்ணை வசியம் செய்வது பற்றியே அடிக்கடி கதை வரும்.  அப்போதெல்லாம் "அமாவாசை அன்று காலை அவளின் காலடி மண் எடுத்து, ஒரு தலைமுடியுடன், ஒரு கோழி, சாராயப்போத்தில் ஆகியவற்றுடன்  மந்திரவாதியிடம் கொடுத்தால் அவர் அவளை உன் பின்னால் அலையவைப்பார்" என்பேன். திறந்த வாய்க்குள் கொசு பூந்தது கூட தெரியாமல் மெய் மறந்து கேட்டுக்கொண்டிருப்பார்கள். 

எங்கள் ஏறாவூர் காளி கோயில் ”சாமி கட்டுதல், பலி கொடுத்தல்” விடயங்களையும் ஏகத்துக்கும் 'சஸ்பென்ஸ்' கலந்து சொல்வதால் என்னைப் பற்றி ஒரு வித 'மாந்திரீகம் தெரிந்தவன்' என்னும் எண்ணம் சிலரிடம் இருந்தது. 

அதனாலோ என்னவோ ஒரிருவர் காதலுக்காக என்னை நாடிய கதையும் இருக்கிறது. உண்மையில் "நமக்கு அதெல்லாம் தெரியாதப்பா" என்று அவர்களை நான் நம்பவைக்க பெரும் பாடுபட்டேன். 

ஆனால் ஒரு இடத்தில் மட்டும் நமக்கு தெரிந்த ஜால வித்தையைக் காட்டினேன். அதனால் என் மீது ஏற்படுத்தப்பட்ட ”இமேஜ்” இன்னும் கலைந்ததாயில்லை.

என் நண்பர் ஒருவரின் நெருங்கிய உறவினர், பெண். எதற்கெடுத்தாலும் பயமும், சந்தேகமும் கொண்டவர். பேய், மந்திரம் போன்றவற்றில் நம்பிக்கையுள்ளவர்.  நான் மட்டக்களப்பைச் சேர்ந்தவன் என்பதற்காகவே பல காலம் எடுத்தது அவர் என்னுடன் சகஜமாகப் பழக. எனது நண்பரும் மிகவும் ஜாலியான பேர்வழி. ஒரு நாள் தனது உறவினரை கலாய்க்க எண்ணி தனது உறவினரிடம் எனக்கு மாந்திரீகம் தெரியும் ‌என்றும், நான் அவருக்கு வாழைப்பழத்ததை உரிக்காமலே துண்டு துண்டாக வெட்டிக் காட்டினேன் என்றும் சொன்னதனால் அதை நிருபித்தக் காட்ட வேண்டும் என்று உறவினர் கேட்டிருக்கிறார். நண்பரும் என்னை அழைத்த வருவதாக கூறி என்னை அழைத்த வந்தார்.

நானும் இரண்டு பழுத்த வாழைப்பழங்களை ஒரு வெள்ளைத் துணியில் வைத்து மூடி, ஊதுபத்தி கொழுத்தி, கற்பூரம் காட்டி, தேசிக்காய் வெட்டி, மந்திரம் சொல்லிய பின் நண்பரின் உறவினரை அந்த இரண்டு வாழைப்பழங்களையும் உரிக்கச் சொன்னேன். அவர் அவற்றை உரித்த போது அவை கத்தியால் வெட்டப்பட்ட துண்டு துண்டுகள் போன்று கீழே விழ, அவர் பலத்த அலறலுடன் கத்தியபடியே வாழைப்பழத்தை கீழே போட்டுவிட்டு நண்பரின் பின்னால் நின்று கொண்டார். நண்பரும் "பார்த்தீர்களா இவரின் சக்தியை" என்று உறவினரை வெருட்டித் தள்ளினார். உறவினர் உண்மையாகவே  என்னை ஒரு மந்திரவாதியாகவே நம்பிவிட்டார். அதன் பின் ஊருக்குள் 'தான் கண்ணால் கண்டதை' சிலரிடம் கூறவும் செய்தார்.

நிலைமை சற்று மோசமடைவதை கண்ட நான் நண்பரை அணுகி உண்மையை கூறுவோம் என்றேன். அவருக்கும் ஏற்புடையதாய் இருந்ததால் உண்மையை செய்முறையால் செய்து காட்டினோம்.  அந்த உறவினரால் நம்ப முடியவில்லை. எனது நண்பனும் அதை செய்து காட்டிய பின்பே அவர் ஓரளவு நம்பினார்.  ஏறத்தாள  18 ஆண்டுகளின் பின் அவரை சில மாதங்களுக்கு முன் சந்தித்தேன். "வாடா வா, வாழைப்பழ மந்திரவாதியே" என்று அன்பாய் அழைத்தார். சேர்ந்து சிரித்தோம்.

பி.கு: ஒரு வாழைப்பழத்தை எடுத்து அதனை ஒரு மெல்லிய ஊசியினால் குத்தி வாழைப்பழத்தினை குறுக்காக வெட்டினால் தோலின் உள்ளே வாழைப்பழம் வெட்டுப்படும். தோல் வெட்டுப்படாது. இது தான் எனது மாந்திரீகத்தின் 'சிதம்பர ரகசியம்'. இதை விட மட்டக்களப்பு மாந்தரீகம் தெரிந்தவன் நான் என்று நீங்கள் நினைத்தால் அது ரொம்ப டூமச்.

..............................
தலைப்பைப் பார்த்து பெண்ணியம் அது, இது என்று சண்டைக்கு வராதீங்கப்பா. நம்ம உடம்பு தாங்காது. தலைப்பு ஒரு நகைச்சுவைக்காக வைக்கப்பட்டது.
..............................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக