திங்கள், நவம்பர் 21, 2011

பங்காளிகள்

ஆக்கம்: ஜோ மில்டன், சிங்கப்பூர்
ஒரு ஊரில் ரெண்டு பங்காளிங்க இருக்காங்க. ரெண்டு பேருக்கும் பொதுவான சொத்தை சம்பந்தம் இல்லாத இன்னொருத்தன் அபகரிச்சு
வச்சுக்கிறான். வெகுகாலமா இவங்க ரெண்டுபேரும் ஒத்துமையா அந்த ஜென்ம விரோதிய எதிர்த்து போராடுறாங்க. நீண்ட போராட்டதுக்கப்புறம், அடி பட்டு, ரத்தம் சிந்தி அந்த சொத்தை மீட்குறாங்க. சொத்து அவங்க கைக்கு வந்தவுடனே பங்காளிங்க ரெண்டுபேருக்கும் இருந்த ஒத்துமை காணாமப் போச்சு. ரெண்டு பேரும் சேர்ந்திருந்தா சரிப்பட்டு வராதுண்ணு, சொத்த பிரிச்சுக்கிறாங்க. அதுக்கப்புறம் பாத்தீங்கண்ணா ஊருலயே இவங்க ரெண்டு பேரும் தான் ஜென்ம விரோதி. பாத்தா முறச்சுகிறாங்க. அடிச்சுகிறாங்க. அவங்க பிள்ளைகளையும் விரோத விஷம் ஏத்தி வளக்குறாங்க. இப்போ பழைய எதிரி இருந்தானே அவன் கூட ரெண்டு பேருக்கும் நல்ல தோஸ்து தான். அவன் கூட்டம் இவங்க ரெண்டு பேருக்குள்ள சண்டைய மூட்டி விட்டு, உள்ளுக்குள்ள 'பைத்தியக்கார பசங்க'-ன்னு சிரிக்கிறாங்க .

இது தமிழ் சினிமாக்கதையாவும் இருக்கலாம் .ஆனா நான் சொல்லுறது இந்தியா - பாகிஸ்தான் உண்மைக் கதைங்க. ஒரு சராசரி இந்தியனும்,பாகிஸ்தானியும் தேசபக்தி என்பது தன் சொந்த நாட்டில் பொறுப்புடன் நடந்து கொள்வது ,நாட்டின் முன்னேற்றத்துக்கும் உலக அரங்கில் அதன் பெருமைக்கும் பாடுபடுது போன்றவற்றை விடவும், எந்த அளவுக்கு இந்த எதிரி நாட்டை வெறுக்கிறான்,உணர்ச்சி வசப்படுகிறான் என்பதில் தான் இருக்கிறது என்ற எண்ண ஓட்டத்தில் தான் வளர்க்கப்படுகிறான். நானும் ஒரு சராசரி இந்தியன் என்றாலும் பாகிஸ்தானியர் மீது எப்போதும் வெறுப்பை வளர்த்துக்கொள்ளவில்லையெனினும் ,ஒரு அன்னியத்தன்மை ,அவர்கள் நம்மிடம் எப்படி நடந்து கொள்வார்கள் என்ற நிச்சயமற்ற மனநிலை இருந்தது உண்மை.அப்படிப்பட்ட பிரமை தோற்றுவிக்கப்பட்டது.

முதன்முதலில் நான் ஒரு பாகிஸ்தானியரை சந்தித்தது கம்போடியாவில் . வேலைநிமித்தம் சில காலம் அங்கு தங்கியிருந்த போது இந்திய உணவகம் தேடியபோது கண்ணில் பட்டது 'ராயல் இந்தியா' என்ற உணவகம் .அங்கு சென்று உட்கார்ந்திருந்த போது அந்த
உணவகத்தை நடத்துபவர் என்னிடம் வந்து பேசினார் .நான் அவரிடம் "நீங்கள் இந்தியாவில் எந்த பகுதியைச் சேர்ந்தவர்?" என்று கேட்டேன் ."நான் ஒரு பாகிஸ்தானி" என்று சொன்னார். "நீங்கள் இந்தியாவைச் சேர்ந்தவரா?' என்று கேட்டார் .அந்த நேரத்தில் நான்
என்ன நினைத்தேனோ "இல்லை. நான் இலங்கையிலிருந்து வருகிறேன்" என்று பொய் சொல்லி விட்டேன். எது அப்படி என்னை சொல்ல வைத்தது என்று எனக்கே தெரியவில்லை. அவர் என்னை மிக நன்றாக கவனித்தார் .(நான் இந்தியன் என்று சொல்லியிருந்தால் இதைவிட பல மடங்கு என்னை கவனித்திருப்பார் என்பதை பின்னர் தான் உணர்ந்தேன். நான் அவ்வாறு நடந்து கொண்டது எனக்கு வெட்கத்தைக் கொடுத்தது).

அதன் பின்னர் அங்குள்ள ஒரு இலங்கைத்தமிழர் நடத்தும் உணவகத்துக்கு அடிக்கடி செல்வது வழக்கம். அங்கே இன்னொரு பாகிஸ்தானியரோடு நட்பு கிடைத்தது. நான் இந்தியர் என்பதை அறிந்து அவர் மிகவும் மரியாதையோடு பழகினார். பல பொதுவான விஷயங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டார்.
இன்னொரு முறை ஹாங்காங் சென்றிருந்தேன் .4 நாட்கள் இந்திய உணவு சாப்பிடாமல் பின்னர் இந்திய உணவகம் தேட ஆரம்பித்தேன் .ஓட்டல் அறையில் இருந்த செய்தித்தாளில் ஒரு பாகிஸ்தானிய உணவக விளம்பரம் கண்ணில் பட்டது.உடனே அதிலுள்ள தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டேன். உணவக உரிமையாளரே பேசினார் .நானிருக்கும் இடத்தை சொல்லி ,இங்கிருந்து எப்படி உணவகம் இருக்கும் இடத்திற்கு வருவது என்று கேட்டேன் ."நீங்கள் எந்த நாட்டினர்?" என்று கேட்டார்.நான்
இந்தியன் என்று சொன்னேன் .மகிழ்ச்சி தெரிவித்த அவர் அங்கிருந்து சுரங்க ரயில் மூலம் ஒரு குறிப்பிட்ட நிலையத்தில் இறங்கி 5 நிமிடம் நடக்க வேண்டும் .நீங்கள் எப்போது வருவீர்கள் என்று சொன்னால் நிலையத்தில் இருந்து உங்களை அழைத்து வர நான் ஒருவரை அனுப்புகிறேன் என்று சொன்னார். நான் "சிரமம் வேண்டாம் .நான் அந்த நிலையத்துக்கு வந்து விசாரித்து வருகிறேன்" என்று சொல்லிவிட்டு கிளம்பினேன்.

நிலையத்தின் சுரங்கத்தை விட்டு வெளியே வந்தபோது அங்கே சில பாகிஸ்தான் இளைஞர்கள் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள் (அந்த பகுதி பாகிஸ்தானியர்கள் அதிகமாக இருக்கும் பகுதியாம்) .அவர்களிடம் சென்று நான் ஒரு இந்தியன் என அறிமுகப்படுத்தி விட்டு
,உணவகத்தின் முகவரியை சொல்லி வழி கேட்டேன் .அவர்களுக்குள் ஏதோ பேசிவிட்டு ,ஒருவரை என் கூடவே அனுப்பி விட்டார்கள் .அவர் என்னை அழைத்து சென்று உணவக வாசலில் விட்டு விட்டு விடை பெற்றார்.நன்றி சொல்லி உள்ளே நுழைந்தேன்.தொலைபேசியில் உரையாடிய பாகிஸ்தானியர் என்னை மகிழ்ச்சியோடு வரவேற்று உட்கார வைத்தார் .இன்னொருவர் மெனுவோடு வந்தார். அவர் கல்கத்தாவை சேர்ந்தவராம் .பட்டியலில் இருந்த மீன் குழம்பு கேட்டேன் . அவரோ "மன்னிக்கவும் .தற்போதைக்கு மீன் இல்லை" என்றார் .பரவாயில்லை என்று சொல்லி சிக்கன் வகை ஒன்று ஆர்டர் செய்தேன் .அவர் சென்ற பிறகு சிறிது நேரத்தில்
பாகிஸ்தானியர் வந்து "உங்களுக்கு அவசரம் இல்லையென்றால் ,நான் மீன் வாங்கி வரச்செய்கிறேன் .இங்கே பக்கத்தில் தான் சந்தை" என்று சொல்ல நான் சிரமம் வேண்டாமென்று சொல்ல ,ஒன்றும் சிரமமில்லை என்று சொல்லி என்னை சம்மதிக்க வைத்தார் .எனக்காக
மீன் வாங்கி வரச்செய்து சமைத்துக் கொடுக்கச் செய்தார் .மிகவும் மரியாதையாக நடத்தினார்.வற்புறுத்தி இலவசமாக குளிர்பானம் கொடுத்து உபசரித்தார்.

2 நாட்களுக்குப்பின் மீண்டுமொரு முறை சென்றேன் .என்னைப் பார்த்ததும் பழக்க தோஷத்தில் "அஸ்லாமு அலைக்கும்" என்று சொல்லி விட்டு சுதாரித்து 'சாரி" என்று சொன்னார் .நான் உடனே "அலைக்கும் ஸலாம்" சொல்லி விட்டு "எதற்கு சாரி கேட்கிறீர்கள் ?.நீங்கள் எனக்கு சமாதனம் உண்டாகட்டும் என்று சொல்லுகிறீர்கள் .நான் பதிலுக்கு உங்களுக்கும் அவ்வாறே என்று சொல்லுகிறேன் .இது பொதுவான வாழ்த்து தானே .எங்கள் சர்ச்சில் கூட திருப்பலியில் இதைத்தான் சொல்லுகிறோம் .குருவானவர் அனைவரையும் பார்த்து "சமாதானம் உங்களோடு இருப்பதாக" என்று சொல்ல அனைவரும் பதிலுக்கு "உம்மோடும் இருப்பதாக" என்று சொல்லுகிறோம்" என்று சொன்னேன் .அவர் ஆமோதித்தார் .நீண்ட நேரம் என்னோடு பேசிக்கொண்டிருந்தார் .வயதில் எனக்கு பெரியவராக இருந்த, படித்த அவரிடம் ,பாகிஸ்தான் பற்றிய பல விஷயங்களை கேட்க முடிந்தது .அவருடைய உரையாடலில் இந்தியா மீதும் இந்தியர் மீதும் அவர் வைத்துள்ள நல்லெண்ணம் பளிச்சிட்டது . அரசியல் காரணங்களுக்காக நிலவும் பகைமைக்கு அவரும் என்னைப்போலவே வருந்தினார்.இன்றும் அவருடன் நட்பு தொடர்கிறது.

இன்று பொதுவாக,பரஸ்பர வெறுப்பு உள்ளூர் தேசபக்தியின் அளவுகோலாகவே மாறிவிட்டது .நல்லிணக்கத்தை வளர்ப்பதாக சொல்லப்படும் கிரிக்கெட் சில நேரங்களில் நல்லிணக்கத்தை பிரதிபலிப்பதாகவும் ,பல நேரங்களில் அர்த்தமற்ற வெறுப்பை
வளர்ப்பதாகவுமே எனக்குப்படுகிறது .படிக்காத பாமர மக்களை விட்டுவிடுவோம் .படித்த நண்பர்கள் பலரே கிரிக்கெட்டில் ஜெயிப்பதில் தான் இந்தியாவின் மானமே அடங்கியிருப்பதைப் போல அரைவேக்காட்டுத்தனமாக நடந்து கொள்வதை பார்த்திருக்கிறேன் .நம்முடைய நாடு வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணம் கண்டிப்பாக இருக்க வேண்டும் .அதற்கு அவர்களை விட நம்மவர்கள் நன்றாக விளையாட வேண்டும் என்று எதிர்பார்க்கலாம் .நம் அணி மோசமாக விளையாடினாலும் அவர்கள் தோற்கவேண்டும் .இல்லையென்றால் அவர்களைத் திட்டுவது எந்த வகையில் நியாயம்
.6 வருடங்களுக்கு முன்பு ,சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெறும் நிலையிலிருந்து கடைசி நிமிடத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது .அரங்கு நிறைந்த மக்கள் கூட்டம் ஏமாற்றத்தில் 2 நிமிடம் அமைதியாக இருந்து ,பின்னர் பாகிஸ்தான் வீரர்களை பாரட்டும் விதமாக எழுந்து நின்று கரவொலி எழுப்பிய போது ,சில பாகிஸ்தான் வீரர்களின் கண்களில் நெகிழ்ச்சியின் கண்ணீர் .சென்னை மக்களை நினைத்து நான் காலரை தூக்கி விட்டுக்கொண்டேன்.பாகிஸ்தானில் இப்படி நடக்குமா என்று பலர் கேட்டார்கள் .ஆனால் பாகிஸ்தான் மக்கள் சமீபத்திய இந்திய அணி பயணத்தின் போது
சரியான பதில் தந்தார்கள் .இந்திய அணிக்கு மாபெரும் வரவேற்பு கொடுத்தார்கள்.

சில அரசியல் பிரச்சனைகளில் நாம் வேறுபட்டிருக்கிறோம் .அதை ராஜ்ஜிய முறையில் தீர்த்துக்கொள்ளலாம் .ஆனால் அடிப்படையில் ஒரு தாய்ப்பிள்ளைகளான மக்கள் நண்பர்களாக இருப்பதில் என்ன சிக்கல். இரு புறங்களிலிலுமே ,சாதாராண மக்களிடையே பரஸ்பரம்
தவறான புரிந்துணர்வு இருக்கிறது .இது மாற்றப்பட வேண்டியது.

சில நேரங்களில் நண்பர்கள் பலருடைய அணுகுமுறை எனக்கு புரிவதில்லை. விளையாட்டு என்பதையும் மீறி ,உணர்வுபூர்வமாக ஒரு சார்பு நிலை வருவது இயல்பு தான் .நம் நாட்டு அணி எந்த நாட்டோடு மோதினாலும் ,உணர்வுபூர்வமாக நம் நாடு வெற்றி பெற
வேண்டுமென நாம் விரும்புகிறோம் .அது இயல்பு .ஆனால் பாகிஸ்தானும் இங்கிலாந்தும் விளையாடினால் ,நாம் இங்கிலாந்து வெற்றி பெறவேண்டுமென (பாகிஸ்தான் தோற்க) விரும்புவது என்ன உணர்வு என தெரியவில்லை. நமக்கு இங்கிலாந்தை விட
பாகிஸ்தானல்லவா சொந்தம்? பாகிஸ்தானை விட இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் எந்த வகையில் நமக்கு நெருக்கம்? நியாயமாக பார்த்தால் நம் உணர்வுகள் பாகிஸ்தானோடல்லவா பொருந்த வேண்டும்?நாம் ஒன்றாக சுதந்திரத்துக்காக போராடினவர்கள் அல்லவா?.சில அரசியல் காரணங்களுக்காக அந்த முடிவு எடுக்கப்படாதிருந்தால் நாம் ஒரே நாட்டில் இருந்திருக்க வேண்டியவர்கள் அல்லவா?

நம்ம குடும்பத்து பங்காளிச்சண்டை கோர்ட்-ல இருக்கலாம் .இருந்தாலும் பங்காளிகளோட பிள்ளைங்க நாம அன்பா இருப்போமே? நாளை அதுவே பங்காளிச்சண்டையின் உக்கிரம் குறைய பயன்படலாமில்லியா?
என்ன சொல்லுறீங்க?
நன்றி:cdjm.blogspot.com /29.11.2005

6 கருத்துகள்:

Kumar சொன்னது…

Congratulation

Arul, DK சொன்னது…

Very good..

Malar சொன்னது…

Excellent' and graet thanks for your time.

Suthan frans சொன்னது…

I like read like this story. following like thanks a lot.

கந்தசாமி சொன்னது…

ரொம்பத்தான் நல்லாயிருக்கு சார்...

ஜோ/Joe சொன்னது…

குமார்,
உங்களுடைய வாழ்த்துகளுக்கு நன்றி.

Arul, DK உங்கள் கருத்துக்கு நன்றி.

மலர் , உங்கள் கருத்துரைக்கு நன்றி.

சுதன் , படித்து அதை மேற்கொள்வதற்கும் மிக்க நன்றி.

கந்தசாமி , நன்றி!

கருத்துரையிடுக