சனி, நவம்பர் 05, 2011

சிரிக்கக் கூடாது !

ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன்
"வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும், சிரித்தால் என்ன செலவா ஆகும்? என்று கேட்கிறான் ஒரு கவிஞன். அந்தக் கவிஞனுக்கு பதில் சொல்லும் விதமாகவும், நகைச்சுவை உணர்வு எனக்குத் தந்த சில பாடங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளும் முகமாகவும் இந்தச் சிறிய அனுபவப் பகிர்வு.  
எங்கள் குடும்பத்திடம் எது இருந்ததோ இல்லையோ, 'நகைச்சுவை உணர்வு' தாராளமாக இருந்தது. என் பெற்றோர்களை சிறிய ஒரு நகைச்சுவைக் கதையைச் சொல்லிக்கூடச் சிரிக்க வைக்க முடியும். இதற்கு எனது பேரன், பேர்த்தி கூட விதிவிலக்கு அல்ல. இந்த நகைச்சுவை உணர்வு இரத்தத்தில் சேர்ந்து ஓடுகிறது, பரம்பரை பரம்பரையாக வருகிறது என்பன போன்ற கருத்துக்கள் மூட நம்பிக்கையாக எனக்குப் படவில்லை. எனது பேரன் பேர்த்தியின் வாரிசுகளில் ஒரே ஒருவர் மட்டும் வெளிநாட்டில் இருக்கிறார். அது எனது தாயின் கடைசிச் சகோதரி.(என் சித்தி) அவர் ஐக்கிய இராச்சியத்தில்(U.K) வசிப்பவர். எனது பேரன் பேர்த்தியின் நகைச்சுவை உணர்வுக்கு 'அடுத்த வாரிசு'
அவர் என்று கூடச் சொல்லலாம். அவரை மிகவும் இலகுவாகச் சிரிக்க வைக்கலாம். இதற்காகவே நான் கவுண்டமணி, செந்தில், ஜனகராஜ், வடிவேலு வகையறாக்களின் ஜோக்குகளையும், பார்த்த, கேட்ட, படித்த ஜோக்குகளையும் தயாராக வைத்திருப்பேன். நான் வெளிநாடு வந்த புதிதில் என்னோடு பேசுவதற்காக என் சித்தி டெலிபோன் எடுத்தால் போதும், முக்கியமான கதைகளுக்கு நடு நடுவே "ஹமாம் சோப் விளம்பர இடைவேளை போல" எனது 'இத்துப்போன' ஜோக்குகளை அவிழ்த்து விடுவேன். என் சித்தியும் எதிர்முனையில் டெலிபோனில் 'விழுந்து விழுந்து' சிரிப்பது எனக்கு நன்றாகவே கேட்கும். காலங்கள் உருண்டோடின. என் சித்தி மட்டுமல்ல நானும் ஐரோப்பாவின் 'பரபரப்பான' வாழ்க்கைக்குள் அமிழ்ந்து போனதால் ஒரு மாத, இரண்டு மாத, மூன்று மாத இடைவெளியில்தான் டெலிபோனில் பேசுகிறோம். இதில் கவுண்டமணி ஜோக்கிற்கு எங்கே நேரம் இருக்கப் போகிறது?. வாழ்வு சுவையானதாக இல்லாமல் 'சுமையானதாக' மாறிவிட்டது. இந்தப் பரபரப்பான ஐரோப்பிய வாழ்க்கை நாங்களே விரும்பிச் சுமக்கும் சிலுவைதானே?
உலகம் முழுவதும் வாழும் என் நண்பர்கள் மிகவும் பொல்லாதவர்கள். நான் முன்பே ஒரு தடவை கூறிய 'ஜோக்கை' மறந்து போய் கூட திரும்பக் கூறினால் போதும் "இருபத்தைஞ்சாவது வெள்ளி விழா" என்று ஜோக்கடித்த என்னையே 'கடுப்பேற்றுவார்கள். அதிலும் கனடாவில் வாழும் ஒரு நண்பன் இப்படிக் கேட்பான் "அடேய் என்னப் பார்த்தா உனக்குப் பாவமாக தெரியவில்லையா? ஒரு பகிடிய(ஜோக்கை) எத்தனை தடவையடா சொல்லுவாய்? என்று கேட்பான் பாருங்கள் அவ்வளவுதான் நான் வடிவேல் பாணியில் "வேணாம் அழுதுடுவன்" என்று பின்வாங்க வேண்டியதுதான்.
"சிரிப்பவர்களின் வீட்டுத் திண்ணையில் 'மரணம்' வந்து உட்கார்வதே இல்லை" என்பார் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள். அதன்படி பார்த்தால் எனக்கு மரணம் வரவே வராது என்றுதான் கூறுவேன்.ஆனால் ஒரே ஒரு சோகம் பாடசாலை நாட்களில் அதுவும் பணக்காரர்கள் படிக்கும் மிகப்பெரிய கல்லூரியில் படித்தபோது நண்பர்களைக் கலகலப்பாக வைத்திருக்க விரும்பி பல நகைச்சுவைக் கதைகளைக் கூறிய என்னை என் நண்பர்கள் ஒரு 'கோமாளியாகப்' பார்த்ததுமில்லாமல், மெல்ல மெல்ல என்னோடு சொறியத் தொடங்கி(வலிய வம்பிழுக்கத் தொடங்கி) நாளடைவில் மிகப்பெரிய  சேட்டைகள் செய்வதற்கு, பல நண்பர்கள் சேர்ந்து என்னை நையாண்டி பண்ணுவதற்கு என் நகைச்சுவை உணர்வே காரணமாக அமைந்து விட்டது.
"சிரிக்கத் தெரியாதவர்களுக்கு வாழ்க்கை ஒரு சுமை" என்ற சித்தாந்தம் இங்கு அடிபட்டுப் போகிறதல்லவா?
"நகைச்சுவை உணர்வு உள்ளவன் நண்பர்களாலும் சுற்றத்தாராலும் மிகவும் விரும்பப் படுவான், அவன் அனைவரையும் இலகுவாகக் கவர்ந்து விடுவான்" என்றல்லவோ அறிஞர்கள் கூறுகின்றனர். இங்கு டென்மார்க்கில் வெள்ளையர்களுடன்(டேனிஷ் மக்களுடன்) சேர்ந்து கல்வி கற்ற, வேலை செய்த அனுபவம் எனக்குத் தாராளமாகவே உண்டு. இங்கும் அதே நிலைதான். ஆரம்பத்தில் என் நகைச்சுவை உணர்வை ஆகா,ஓகோ என்று பாராட்டிய வெள்ளையர்கள், பின்னர் என்னை ஒரு 'கோமாளியாக' பார்க்க ஆரம்பித்தனர், நாளடைவில் கிண்டலும், கேலியும் அதிகரித்து இறுதியில் வலிய வம்புக்கு இழுக்கின்ற நிலை ஏற்பட்டது. "மனிதர்கள் எல்லா நாட்டிலும் ஒன்றுதானோ??
கேட்டால் டேனிஷ் மொழியில் இதற்கு 'Sort humor' என்று பெயராம். குப்பையில் போடச் சொல்லுங்கள் அவர்களது அடுத்தவனைக் 'குதறி' இன்பம் காணும் 'நகைச்சுவை உணர்வை'.
நாம் ஒவ்வொரு தடவையும் சிரிக்கும்போதும் நமது இருதயம் ஒரு தடவை 'ஒட்டடை' அடிக்கப் படுகிறதாம்(இரத்தச் சுத்திகரிப்பு மிக வேகமாக நடைபெறுகிறது) இது உடலுக்கு மிகவும் நல்லது என்றுதான் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதை ஒரு இருபது வருடங்களுக்கு முன்பே வாசித்து அறிந்து அதன்படி நடக்க முற்பட்ட என்னை நான் வாழும் ஐரோப்பிய நாட்டின் சமூகமும், என் தமிழ்ச் சமூகமும் ஏளனமாகப் பார்த்ததுமல்லாமல், என்னைக் காலில் போட்டுமல்லவா மிதித்தது. எங்கே தவறு நடந்தது என்று எனக்கு இன்றுவரை தெரியாது.
நான் வேலை பார்க்கும் இடத்திலோ, கல்வி கற்கும் இடத்திலோ இப்போதெல்லாம் நான் ஜோக்கடிப்பதில்லை. நன்றாகப் பழகிய ஒரு சில டேனிஷ் நண்பர்கள் மட்டும் "உடல் நலமில்லையா? கவலையாக இருக்கிறாயா? என்று கேட்பார்கள். கேட்கட்டுமே......
"சிரிக்கத் தெரிந்தவர்கள் பேறு பெற்றோர். ஏனெனில் மோட்ச இராச்சியம் அவர்களுடையதே". இயேசுவுக்கு மட்டும்தான் 'மலைப்பொழிவின்போது' பொன்மொழி உதிர்க்கத் தெரியுமா என்ன? நாங்களும் உதிர்ப்போமில்ல...

7 கருத்துகள்:

vinothiny pathmanathan dk சொன்னது…

நகைச்சுவை பற்றிய உங்களின் பதிவு மிகவும் நன்றாக இருந்தது. என்ன சில நேரங்களில் எதுவும் அளவுக்கு மீறி இருப்பதாக உணர்ந்தால் சில விடயங்கள் கேலியுடன் நிராகரிக்கப்படுகின்றன.அடுத்தவர்களை சிரிக்க வைப்பது என்பது எல்லோராலும் இலகுவில் முடியாத காரியம் .அது உங்களால் முடியும் என்பது நிச்சயம் நீங்கள் சந்தோசப்பட்டுக்கொள்ள கூடிய ஒரு விடயம். மனித வாழ்வில் நிராகரிப்புகளும், அவமானங்களும்
ஏற்றங்களும் ,வெற்றியும் தோல்வியும் சகஜம் தானே .

பெயரில்லா சொன்னது…

''...இந்தப் பரபரப்பான ஐரோப்பிய வாழ்க்கை நாங்களே விரும்பிச் சுமக்கும் சிலுவைதானே?...''
அந்தக் சிமிலி (smily)உருண்டுருண்டு சிரிக்க நானும் உருண்டுருண்டு சிரிக்க ஆசை வருகிறது.(அருமையான படம் நான் சுட்டு வைக்கிறேன்) நன்றி பதிவிற்கு.. வாழ்த்துகள்.
வேதா.இலங்காதிலகம்.

Vijitha Kamal சொன்னது…

Very good... agree with you.

Uthayan சொன்னது…

Very good laughing. Thasan I LIKE ALSO THIS

இ. சொ. லிங்கதாசன், டென்மார்க். சொன்னது…

கருத்துரைத்த, உரைக்க இருக்கின்ற அன்புள்ளங்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.

amalathas சொன்னது…

உங்கள் ஆதங்கம் புரிகிறது தாசன்.
இக்காலச் சூழலும் நேரமின்மையும்,அவரவர் வாழ்க்கைப்பாடும் நகைச்சுவை உணர்வின் முக்கியத்தைக் குறைப்பதுடன் அதன் மேல் ஒரு எரிச்சல் உணர்வை ஏற்படுத்துகிறதாகவே நான் நம்புகிறேன்.அல்லைப்பிட்டியின் சிறந்த நகைச்சுவையாளர்களாய் பேரின்பநாதன் அண்ணன் (அமரர் க.வீரசிங்கம்), 'better ' சின்னத்துரை அண்ணன் (அமரர்.சவிரிமுத்து) ஆகியோர் என்றும் என் நினைவில் நிற்கின்றனர்.

இ. சொ. லிங்கதாசன், டென்மார்க். சொன்னது…

நண்பர் அமலதாஸின் கருத்துக்கு நன்றி. மேற்படி கருத்துரையில் பேரின்பநாதன் அண்ணன்(அமரர் க.வீரசிங்கம்) எனக் குறிப்பிடப்படுபவர் எனது சிறிய தந்தையார் ஆவார். அவரை 'better' என அமலதாஸ் குறிப்பிட்டதற்குக் காரணம் எங்கள் கிராமத்தில் அவர் ஒரு 'பந்தயக்காரர்' எது எதற்கெல்லாம் 'பந்தயம்' பிடிக்க முடியுமோ அதற்கெல்லாம் பந்தயம் பிடிப்பார். "ஒரு போத்தல் ஷாம்பூவை குடிப்பேன் என்ன பந்தயம்? ஒரு கட்டி சோப்பை உண்பேன் என்ன பந்தயம்? அரைக்கிலோ மிளகாயை உண்பேன் என்ன பந்தயம்? என்பார். இவ்வாறு தனது 'குடலைப்' பாழாக்கியதன் விளைவு தனது 50 ஆவது பிறந்த தினத்தன்று 'வயிற்றோட்டம்' காரணமாக இறந்து விட்டார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சாதனை படைப்பதற்காகத் தமது உடலை வருத்துபவர்கள் கவனிக்கவும்.

கருத்துரையிடுக