அனுப்பி
மகிழச் செய்தவர்: முதுவை ஹிதாயத்
அல்லாஹ்வின் திருப்பெயரால்….
கோபத்தை கட்டுப்படுத்துபவனே
சிறந்த வீரன் !
அல்லாஹ் கூறுகிறான்:
(பயபக்தியுடையவர்கள்) கோபத்தை அடக்கிக்கொள்வார்கள்.
மனிதர்(கள் செய்யும் தவறு)களை மன்னிப்பார்கள். அல்குர்ஆன்
3: 134
அபூ ஹுரைரா ( ரலி ) அவர்கள் கூறினார்கள்:
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து எனக்கு உபதேசம்
செய்யுங்கள் என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கோபம் கொள்ளாதே ! எனக்
கூறினார்கள். மீண்டும் அந்த மனிதர் உபதேசம் செய்யுங்கள் எனக்கூறவே, மீண்டும்
கோபம் கொள்ளாதே என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் : புகாரி
அபூ ஹுரைரா ( ரலி ) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
வீரன் என்பவன் கோபத்தின் போது தன்னை கட்டுப்படுத்திக்
கொள்பவனே சிறந்த வீரன் ஆவான் என நபி ( ஸல் ) அவர்கள் அருளினார்கள்.
நூல்கள் : புகாரி , முஸ்லிம்
பொதுவாகவே ஷைத்தான் மனிதனை ஆக்கிரமிப்பதற்கு அவனுடைய தலைவாயிலே மனிதனுக்கு
கோபத்தை சீண்டி விடுவதுதான் தேவையில்லாத விஷயத்திற்கு ஒருவர் கோபப்பட்டால்
அவரிடம் ஷைத்தான் குடி கொண்டிருக்கிறான் என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
எதிரில் யார் நிற்கிறார் என்று கூடத் தெரியாத அளவுக்கு பேசித் தீர்த்து
விடுவார். சிலவேளை அதையும் கடந்து சட்டை கையை மடக்கி முழங்கைக்கு மேல்
உயர்த்திக் கொண்டு பாய்வதற்கும் தயாராகி விடுவார். இதைத் தான் ஷைத்தான் அதிகம்
விரும்புகிறான். இருவர் அடித்துக் கொண்டு உருள ஆரம்பித்து விட்டால் அதற்குப்
பிறகு ஷைத்தான் அங்கிருந்து இடம் பெயர்ந்து விடுவான்.
மேலும் ஒருவன் தன்னை வீரன் என்று காட்டுவதற்காகவும் கோபத்தைக் காட்டுவான். "அவர்
பெரிய கோபக்காரர் அவருக்கு கோபம் வந்தால் அவரை யாராலும் கட்டுப்படுத்தவே
முடியாது" என்றெல்லாம் கோபம் கொள்பவர்களை சிலாஹித்து ஒரு சிலர் கூறி அவரை
வாழ்நாள் முழுவதும் கோபக்காரராக்கி விடுவார்கள். அதற்கு தகுந்தாற் போல் அவரும்
தன்னை ஆக்கிக்கொள்வார். தேவையில்லாததற்கெல்லாம் கோபப்படுவார். இவருக்கு சமுதாயம் 'வீரன்' என்று பட்டம் சூட்டி விடும். கோபம் மனிதனுக்கு தேவை தான், தேவை
இல்லை என்று கூறிட முடியாது. ஆனால் அதை தேவைக்கேற்ப பிரயோகிக்க வேண்டும்.
அன்புள்ள சகோதரர்களே புனித ரமளான் மாதத்தில் கோபத்தை கட்டுப்படுத்திக்
கொள்ளுங்கள். இந்த நற்செயல் ரமளானுக்குப் பிறகும் உங்களிடம் தொடர்ந்து கொள்ளும்.
இன்ஷா அல்லாஹ்.
கெட்ட வார்த்தைகள் பேசக் கூடாது.
அப்துல்லாஹ் இப்னு அம்ரு ( ரலி ) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
கெட்ட வார்த்தைகளை பேசுபவன் மீது அல்லாஹ் கோபம்
கொள்கிறான் என அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் அருளினார்கள். நூல் :
அஹ்மத் , இப்னு ஹிப்பான்
அல்லாஹ்வையும் , மறுமை நாளையும் நம்பியவர்கள் நல்லதை
சொல்லட்டும், அல்லது (தீயவைகளை)
பேசாமலிருக்கட்டும். என அல்லாஹ்வின்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக
அபூஹுரைரா ( ரலி ) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல் : புகாரி , முஸ்லிம்
, அபூதாவூத்.
நாம் ஏற்கனவே குறிப்பிட்டப்படி தேவையில்லாத விஷயத்திற்கு ஒருவர் கோபப்பட்டால்
அவருடைய வாயிலிருந்து முதலில் வெளியாவது கெட்ட வார்த்தை தான். இதைத்தான்
ஷைத்தான் விரும்புகிறான். ஏன் என்றால் இது அல்லாஹ்வுக்கு கோபத்தை ஏற்படுத்துகிற
செயல் என்று ஷைத்தானுக்குத் தெரியும். அதனால் மனிதர்களுக்கு மத்தியில் கோபத்தை
ஏற்படுத்தி, கெட்ட வார்த்தைகளை பேச வைத்து அல்லாஹ்வுடைய கோபத்திற்கு ஆளாக்கி,
அவர்களை வழி பிறழச்செய்து விடுகிறான் என்பதை பெரும்பாலான மக்கள் விளங்கிக்
கொள்ள மறுத்து விடுகின்றனர்.
இன்று மனித சமுதாயத்தில் மிகச் சாதாரணமாக புழக்கத்தில் இருப்பவைகள் தான்
நாகூசாமல் பேசப்படும் கெட்ட வார்த்தைகள். அதிலும் முஸ்லிம் சமுதாயத்தில்
மிகஅதிகம் என்றால் மிகையாகாது. அவர்கள் மிகவும் இலேசாக எண்ணிப் பேசுவது அருவருக்கத்தக்க அசிங்கமான வார்த்தைகள் ஆகும். "இதற்கு மேல் பேசுவதற்கு வேறு
அசிங்கமான வார்த்தைகள் எதுவுமே கிடையாது" என்று கூறுமளவுக்கு கீழான வார்த்தைகளை
சாதாரணமாக பேசுவார்கள். இதை அல்லாஹ் தடைசெய்வதுடன் இவ்வாறு பேசக்கூடியவர்களை
அல்லாஹ்வின் தூதரவர்கள் கீழ்காணுமாறு தரம் பிரிக்கவும் செய்துள்ளனர்.
அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பியவர்கள் யார்?
முஸ்லீம்கள்!
நம்பாதவர்கள் யார்? ஓரிறை மறுப்பாளர்கள்!
இதிலிருந்து நாம் எந்த அந்தஸ்தில் இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்து
கொள்ளுங்கள்.
ஆகவே அன்புள்ள முஸ்லிம் சகோதரர்களே ! எந்தளவுக்கு கடுமையான வார்த்தைகளை
அல்லாஹ்வுடைய தூதர் அவர்கள் கெட்ட வார்த்தைகள் பேசுவபர்கள் மீது
பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதை கவனிக்கவேண்டும். மேலும் அப்படிப்
பேசுபவர்கள் மீது அல்லாஹ் கோபம் கொள்வதாகவும் கூறுகிறார்கள். அல்லாஹ்வின் கோபம்
நம் மீது இறங்கினால் நாம் என்னவாகுவோம் என்பதை சிந்தித்துக்கொண்டு உங்களில்
எடுத்ததற்கெல்லாம் கெட்டவார்த்தைகள் பேசும் பழக்கமுடையவர்கள் இருந்தால்
இப்புனித ரமளான் மாதத்தில் அவைகளை தவிர்த்துக் கொள்ளுங்கள். இந்த நற்செயல்
இன்ஷா அல்லாஹ் ரமளானுக்குப் பின்பும் உங்களைப் பின் தொடரும்
எதேச்சையானப் பேச்சுக்கள்
"ஒரு அடியான் எதையும் சிந்திக்காமல் (சில) வார்த்தைகளை
பேசுகிறான்.(இதனால்)கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே உள்ள தூரமளவுக்கு
நரகத்தின் உள்ளே விழுந்து விடுகிறான்" என
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ( ரலி ) அவர்கள்
அறிவிக்கிறார்கள். நூல்கள்: புகாரி,
முஸ்லிம், திர்மிதீ, முஅத்தா
எவனைப் பற்றியாவது எதையாவது தீர விசாரிக்காமல் சில வார்த்தைகளை மிக சாதாரணமாகப்
பேசிவிடுவது இறுதியில் அவ்வார்த்தைகள் சம்பந்தப்பட்டவனை வெகுவாக பாதித்து
விடும். அதனால் அவன் மாபெரும் இழப்பை அடைய நேரிட்டு விடும் . அதன் பிறகு இவன்
வருந்துவான் அல்லது ஒன்றும் அறியாதவனைப்போல் சமாளிப்பான். ஆனால் மறுமையில்
கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே உள்ள தூரமளவுக்கு நரகத்தின் உள்ளே விழுந்து
விடுகிறான் அதனால் நிதானமாகப் பேசுவதே சாலச்சிறந்தது என்று அண்ணலார்
கூறுகிறார்கள்
அடியான் அல்லாஹ்வுக்கு திருப்தியளிக்கும்
பேச்சை பேசுகிறான் அதன்மூலம் அல்லாஹ் அவனை பல அந்தஸ்த்துகளுக்கு உயர்த்துகிறான்.
மற்றொரு அடியான் எதையும் பொருட்படுத்தாமல் அல்லாஹ்வுக்கு கோபம் ஏற்படுத்தும்
வார்த்தைகளை பேசுகிறான். அதனால் அல்லாஹ் அவனை நரகத்தில் வீசி எறிகிறான். என
அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ( ரலி ) அவர்கள்
அறிவிக்கிறார்கள் : நூல் : புகாரி
அல்லாஹ்வுக்கு திருப்தியளிக்கும் பேச்சுக்கள் எங்கு நடைபெறுமோ (மார்க்க
நிகழ்ச்சி அமர்வுகளில்) அங்கு நாம் அமர்ந்து கொள்ள வேண்டும். அங்கு நடைபெறும்
நல்ல பேச்சுக்களில் நாம் கலந்து கொள்ள வேண்டும். அங்கு நாம் செவியுற்ற நல்ல
விஷயங்களை பிறருக்கும் அறிவிக்க வேண்டும்.
அதன்மூலம் அல்லாஹ் அவனை பல
அந்தஸ்த்துகளுக்கு உயர்த்துகிறான்.
வெறுக்கத்தக்க சபைகளில் அமர்ந்து கொள்வதும் (மார்க்கத்தைப் பேணாதவர்களுடைய
பொழுது போக்கு இடங்களில்) அங்கு உரையாடப்படுகிறவைகளை செவியுறுவதும் அவைகளை
தாமதமின்றி பிறருக்கும் பரப்புவதும் கூடாது. அதனால் அல்லாஹ் அவனை நரகத்தில் வீசி எறிகிறான்.
குறிப்பு: கடந்த வருட நோன்பு மாதத்தில் அனுப்பப்பட்டது போல் தலைப்புகள்
இருந்தாலும் விளக்கங்கள் அதிகம் சேர்க்கப்பட்டுள்ளது. அதனால் தாங்கள்
படிப்பதுடன், தங்களோடு தொடர்பில் இருக்கும் அனைவருக்கும் தவறாமல் மின்னஞ்சலில் அனுப்பி அவர்களையும்
பயன் பெறச் செய்யும் படி கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி: chittarkottai.com