புதன், நவம்பர் 23, 2011

டேய்! கண்டியை எப்படா ஆங்கிலேயர் கைப்பற்றினார்கள்?


ஆக்கம்: செ.சஞ்சயன், நோர்வே.
சம்பவத்தின் பெயர்:
டேய்! கண்டியை எப்படா ஆங்கிலேயர் கைப்பற்றினார்கள்?

கதாநாயகன்:-
சர்மா சேர் என்று அழைக்கப்படும் ஈஸ்வரசர்மா சேர்.

வில்லன்கள்:-
7B அல்லது 8B படித்துக் கொண்டிருந்த நானும் எனது வகுப்பு அறிவுக் கொழுந்துகளும்.

இடம்:-
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி.

காலம்:-
1977 அல்லது 1978 இல் ஒரு நாள்.

நேரம்:-
மதியமிருக்கும்.

வெய்யிலில் நொண்டிப் பிடித்து விளையாடி பாடசாலை மணியடிக்க வகுப்புக்குள் வேர்த்து வழிந்தபடியே ஓடிவந்து உட்கார்ந்து நேர அட்டவணையைப் பார்த்து ஐயோ.. சமூகக்கல்வி ... கிழிஞ்சுதுடா டோய் சர்மாசேரின்ட பாடம்டா என்றார் எனது நண்பர் புரொபசர் அமீர் அலி
சர்மா சேர் ..இந்த பெயர் காணும் எனக்கு வயித்த கலக்க...(எனகக்கு மட்டுமில்ல எல்லாருக்கும் தான்)

வகுப்பின் மொனிட்டர் ”பொன்ஸ்” (பொன்னையா) யார் யார் கதைக்கிறார்கள் என்று சர்மாசேரிடம் போட்டுக் குடுக்க லிஸ்ட் எழுதிக் கொண்டிருந்தான்.எங்கட பெயர் தினமும் அவனின் லிஸ்டில் இருப்பதால் நாங்கள் (அமீர் அலி, ராஜேந்திரன், நான்) அவனைக் கண்டுகொள்வதில்லை.

எமக்கு முன்னுக்கு இருந்த வேணன் பொன்ஸ்ஐ 'டேய் கொன்னை (பொன்னையாவுக்குக் கொஞ்சம் கொன்னை இருந்தது) என்ட பெயர எழுதினியென்டால் கொல்லுவன்' என்று வெருட்டிக் கொண்டிருக்கும் போது வகுப்பு வாசலில் நின்றிருந்த உருவத்தைக் கண்டதும் அமைதியாயிற்று வகுப்பு.

Good Afternoon Sir! என்று எழுந்து நின்று ஒரு கோரஸ் ஆக நாங்க பாடி முடிக்க,

'சரி, சரி இருங்கோடா' என்றார் சர்மா சேர் வேர்வையின் எரிச்சலில்....

"பொன்ஸ்" இடமிருந்து லிஸ்டை வாங்கிப் பார்த்தவர்
வேற யார்ட பெயர் இதுல இருக்கும் என்ற படியே தலையாட்டிக் கொண்டு எம்மை எட்டிப் பார்த்தார். நாங்கள் ஏதும் நடவாதது போல முகத்தை வைத்துக் கொண்டிருக்க....
'கொஞ்சம் பொறுங்கோடா.. வந்து தாறன்' என்றார் சுத்த யாழ்ப்பாணத்து தமிழில்.

சரி, கொப்பிய எடுங்கோடா என்றவர் ஏதோ திடீர் என்று ஞாபகம் வந்தது போல வேண்டாம் வைய்யுங்கோ என்றார்.

சற்றே யோசித்தவர்..
டேய் கண்டிய எப்படா ஆங்கிலேயர்கள் கைப்பற்றினார்கள் என்று சொல்லுங்கோ என்றார்.

மற்றய நேரங்களில் ”பீக்கு முந்திய குசு மாதிரி” சேர் கேள்வி கேக்க முதலே பதில் சொல்லும் முதல் வரிசையில் அமர்ந்திருக்கும்
அறிவாளிகள் கூட அமைதியாக இருந்தனர் அன்று.

நான் சொன்னது கேக்கேல்லியோடா என்றார் கொஞ்சம் கடுமை கலந்து வொலியூமைக் கூட்டி

கரண்ட் இல்லாத ஸ்பீக்கர் கடை ஸ்பீக்கர் போல சத்தமே வரவில்லை வகுப்பிலிருந்து...

கதிரையிலிருந்து எழும்பி மேசைக்கு முன்னால் வந்து நின்று இரு கை ஊன்றி,எம்பி மேசையில் ஏறி இருந்தார். கால்கள் மேசையின் கீழே ஆடிக் கொண்டிருந்தது.பிரம்பைத் தன் கையில் தட்டியபடி தலையையும் காலின் ஆட்டத்துக்கு ஏற்ற மாதிரி ஆட்டியபடியே வகுப்பை ஒரு நோட்டம் விட்டார்.

இப்ப நான் உங்களுக்கு எங்கட வகுப்பை பற்றி கொஞ்சம் சொல்லணும்.
நாங்க கிட்டத்தட்ட 32 பேர், 4 வரிசைகள்.ஆகவே, ஒரு வரிசையில் 8 அறிவாளிகள்.

முன்வரிசையில் முன்னுக்கு இருந்தவர்களை பிரம்பால் காட்டிப் புருவத்தை மேலே உயர்த்தி நீ சொல் என்றார் வாய் திறக்காமலே.

வழமையாக சேர் இப்படித்தான் கேள்வி கேப்பார்.முன் வரிசயில இருக்கிற அறிவுக் கொழுந்துகள் பதில சொல்லி எங்களைக் காப்பாற்றுவார்கள்.

சேர் எங்களையும் இருந்திட்டு கேள்வி கேப்பார் ஆனால் பதில அவர் தான் சொல்லுவார். (எங்களுக்கு தெரியுமா என்ன?.. நாங்க படிக்கத்தானே வந்திருக்கிறம், சேருக்கு தானே இதுகள் தெரியும் என்கிற புரட்சியாளர்கள் நாங்கள்).இடைக்கிடை இல்ல, இல்ல அடிக்கடி அடிவிழும்..
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா என்பது போல நாங்களும் அவரோட கோவிக்கிறதில்ல.. ஹி..ஹி

இந்த முறை சேர் கேட்ட கேள்வி முன்வரிசை அறிவாளிகளையும் ஆட்டிப் போட்டது என்றால் எங்கட நிலமயச் சொல்லவா வேணும்?

புரொபசர்அமீர் அலி மேசைக்கு கீழ தன்னட கொப்பியப் புரட்டிக் கொண்டிருந்தார்... அவனப் பார்க்க எனக்குப் பாவமாயிருந்தது.
ஏனென்றால் எனக்குத் தெரியும் அந்த கொப்பில அவன் என்ன எழுதுறவன் எண்டு. எம்.ஜி. ஆர் வாழ்க.. சிவாஜி ஒழிக எதாவது ஒரு சினிமாபாட்டு (அன்பு மலர்களே! .. நாளை நமதே படப் பாட்டு)
மற்றும் பாத்திமா.இதைவிட அரபில ஏதோ எழுதியிருப்பான்.
அது பாத்திமா ஐ லவ் யூ என்பதாகத் தான் இருக்கும்.
அது அவன் பில்ட் அப் குடுக்கிறத்துக்காக வைத்திருக்கிற கொப்பி
அதுல எங்க கண்டியப் பற்றி இருககப் போகுது.

சர்மாசேரின் பயத்தில் பொடியனுக்கு தான் என்ன எழுதினது என்டே
தெரியாமல் போனதில ஆச்சரியமொன்டும் இல்ல அதுக்கிடையில சர்மா சேர் நீங்க சொல்லுங்கோ, நீங்க சொல்லுங்கோ என்று குசும்பும், நக்கலும் கலந்து பூனை தன்னிடம் அகப்பட்ட எலியின் உயிருடன் விளையாடுவது போலக் கேட்டுக் கொண்டிருந்தார் முன்வரிசை முழுவதையும்.
இண்டைக்கு நாங்க சாத்திரம் கேட்டிருந்தால் வகுப்பில் இருந்த எல்லோருக்கும் ஏழரைச்சனி உச்சத்தில எண்டும், இண்டைக்கு பள்ளிக்கு போகாத மனே எண்டும் சொல்லியிருப்பான்.. சாத்திரி

'அப்ப உங்களுக்கு உந்த கேள்விக்கு பதில் தெரியாது' என்றார் மீன்டும் சுத்த யாழ்ப்பாணத் தமிழில். சாதாரண நேரமாயிருந்தால் அமீர் அலி
உந்த, குந்த என்று யாழ்ப்பாணக் கதையை நக்கல் பண்ணியிப்பான்,
ஆனால் இன்றிருந்த நிலையில் அவனுக்கு நக்கலடிப்பதைப் பற்றி யோசிக்கவே நேரமிருக்கவில்லை.

கேள்வி என்னிடம் வரமுதல் இன்னும் 22 பேர் இருந்தது எனக்கு ஒரு வித மோரல் சப்போட் (moral support) ஆக இருந்தாலும் மனதுக்குள் ஒரு சின்னப்பயம் இருந்தது.ஆனால் கிறிக்கட் இல் பட்டிங் பண்ணுறவங்கள் அவுட் ஆகினால் எப்படியிருக்குமொ அப்படியிருந்தது வகுப்பின் நிலை.
பதில் சொல்லக் கூடயவர்கள் அவுட்டாகி விட்டார்கள்;இனி இருப்பதை நம்பிப் பயனில்லை என்ற நிலை.

இந்தாளிட்ட இண்டைக்கு மாட்டுப்பட்டா..
இண்டைக்கு கதைத்ததுக்கும் நேற்று வீட்டு வேலை செய்யாததுக்கும்
இண்டைக்கு பதில் சொல்லாததுக்கும் சேர்த்து தோலை உரித்துப் போடுமே என்று மனம் கணக்குப் போட்டது. தப்ப வழிதேடிக் கொண்டிருந்தேன்.

திடீர் என்று மூன்றாம் வரிசை வேணன் சேர் என்றான்.
மெதுவாய் திரும்பி என்ன என்பதை வாய் திறக்காமல் கண்ணால் கேட்டார். (மனிசனிட்ட ஒருவிதமான ஸ்டைலும் இருந்தது அப்ப. 1977, 1978 இல் அவர் புது மாப்பிள்ளையும் கூட)
ஒண்டுக்கு போக வேணும் என்றான். ஆகா.. எப்படியெல்லாம் போசிக்கிறாங்கள் என்று நான் யோசிச்சுக் கொண்டிருக்கேக்க

'ஓ அப்பிடியே...
அடக்கேலாம இருக்குமே' என்கிறார் சர்மா சேர் (ஓம் எண்டு தலைய ஆட்டுறான் வேணன்).

'பறவாயில்ல உதிலயே போ' என்றார் சர்மாசேர்.எனக்கு வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டேன்.வேணனிடம் 'டேய் எங்களாலேயே இந்த மனிசன ஏமாத்தேலாம இருக்கு நீ ஏன்டா வாயத்திறக்கிறாய்' என்று சொல்ல ஆசைப்பட்டாலும்.. அடக்கிக் கொண்டேன் இப்ப இரண்டாவது வரிசையையும் எழுப்பி விட்டிருந்தார் சர்மா சேர்.

அன்பு ஒழுக, 'பொன்னையா இங்க வாங்கோ' என்றார்.கிட்ட போன பொன்னையாவைப் பார்த்துச் சொன்னார் போய் 3 நல்ல பிரம்பு எடுத்திட்டு வா என்று. வழமையாய் இப்படியான வேலைக்கு குதித்துக் கொண்டு ஒடுற ஆள் அவன்.ஆனால் இன்று மட்டும் விருப்பமி்ல்லாமல் நடந்து போனான்.(அவர் ஏற்கனவே எழும்பி நிற்கும் அறிவாளிகளில் ஒருவர்)

டேய்! எத்தின தரமடா உங்களுக்கு சொல்லுறது படிக்க ஏலாட்டி
மாடுமேக்க போங்கோடா எண்டு என்றார்.(வீட்ட விடுறாங்க இல்ல சேர் என்று சொல்ல யோசித்தேன் என்றாலும் இதையும் அடக்கிக் கொண்டேன்).அடுத்து மூன்றாவது வரிசையையும் கேட்டுப் பார்த்தார்.
அதில ஒருத்தன் சேர் 1935 என்றான் (எனக்கே அது பிழை என்டு தெரியும்). டேய் உன்ட கொப்பர் பிறந்த ஆண்டையே கேட்டனான் என்றார் மகா எரிச்சலுடன். (குசும்பும், நக்கலும் அவருக்கு கைவந்த கலை)

‌பிரம்பெடுக்க போன பொன்னையா ஒண்டுக்கும் உதவாத 3 பிரம்புகளைக் கொண்டுவர, 'டேய் பொன்னய்யா இங்க வா' என்றார்..கொன்னையும், பயமும் ஒன்றாய் சேர, 10 தரம் சே.. சே.. சே.. போட்டுக் கடைசியாய் ”ர்” போட்டான்.அதுவரைப் பொறுமையாய் இருந்த சர்மாசேர், 'டேய் நீ என்ன எமாத்ததேலாது... கையை நீட்டு' என்றார் அவனைப் பார்த்து.அவன் கொண்டு வந்த பிரம்பால அவனுக்கே 2-3 போட்டு, 'போய் கெதியா நல்ல பிரம்பாக் கொண்டு வா இல்லாட்டித் தெரியும் தானே' என்றார்.வளமையா பெரிய எடுப்பு எடுக்கிற பொன்னையா
கையை உதறி உதறிப் போவதைப் பார்த்த போது சந்தோசமாக இருந்தது.

அந்த நேரம் பார்த்து மோசஸ் டீச்சர் வந்து ஏதோ சேரிடம் கேக்க
சேர் அவவுடன் கதைத்துக் கொண்டிருந்தார்.

‌இது தான் சமயம் என்று சில அறிவுக் கொழுந்துகள்
டிஸ்கஷன் நடத்திச்சுதுகள்.டேய் 1700 டா என்றான் ஒருவன்.இல்லடா 1800க்கு பிறகு என்றான் மற்றவன். இல்ல 1600 ஆ இருக்குமோ என்று முதலாமவன் சொல்ல,அது ஒல்லாந்தர்டா என்றான் இன்னொருவன்.
டேய் ஒல்லாந்தரும் ஆங்கிலேயரும் ஒண்டுடா மடையா
என்றான் ‌வேணண். (சேர் அதைக் கேட்டிருந்தால் கொலையே செய்திருப்பார் அவனை).

டீச்சர் வந்த வேலை முடிந்து போனதும், டேய் நான் டீச்சருடன் கதைக்கேக்க உதுக்குள்ள கதைத்தவங்கலெல்லாம் முன்னுக்கு வாரீங்களோடா என்றார்
மிகுந்த மரியாதையுடன்.பலியிடப் போகும் ஆட்டுக்கு மரியாதை செய்வது போல இருந்தது அது.

ஓருவரும் போகவில்லை

டேய்! பேர் சொல்லி கூப்பிடடோனுமோடா உங்கள? கெதில முன்னுக்கு வாங்கோ என்றார்.3 பலியாடுகள் முன்னுக்கு போயின.வேடா நீயும் வா என்றார்.(வேணனின் பட்டப்பெயர் வேடன்) பயல் ஆடிப்பொயிட்டான்.
பெயர் சொன்னாப் பிறகு நிக்கிறது தற்கொலைக்கு சமம் என்பது ‌வேணணுக்கு தெரிந்ததால் அவனும் முன்னுக்குப் போனான்.'முழங்கால்ல இருங்கோடா' என்று கட்டளை வந்தது.சமூகக்கல்விச் சக்கரவர்த்தியிடம்
மண்டியிட்டார்கள் நால்வரும்.

இந்த நேரம பார்த்து பிரம்பு தேடப் போன பொன்னையா
3 நீண்ட பச்சைப் பிரம்புகளை கொண்டு வந்து மேசையில் வைத்தான்.
பிரம்புகளை ஒரு தரம் குவாலிடி செக் பண்ணி காற்றில் விசிறிப் பார்த்து திருப்திப்பட்டுக் கொண்டார்.திடீர் என மூன்று பிரம்பையும் ஒன்றாக பிடித்து வேணணின் இடுப்புக்குக் ‌கீழே ஆனால் பின்னந் துடைக்கு மேலே உள்ள சதைப்பிடிப்பான பகுதியை நோக்கி அவர்
பிரம்பை இறக்கவும் வேணண் 'சேர் சேர் நோகுது நோகுது' என்று
எழும்பி நின்று கத்தவும் சரியாய் இருந்தது. 'டேய் உன்னை எழும்பச் சொன்ன நானே' என்று கேட்டு அவனை மீண்டும் மண்டியிட வைத்தார்.

அடுத்தது எங்கட வரி மட்டும் தான் பாக்கியிருந்தது.
கிட்ட வந்து 'அட... நீஙகள் மும் மூர்த்திகள் மூன்று பேருமோ மிச்சமிருக்கிறீங்கள்'
என்றார் குரலில் 110 வீதம் நக்கல் கலந்து. 'உன்ட கொப்பர் போலீஸ்;அம்மா ஒரு டொக்டர்;மகன் கடைசிவரிசையில குந்தியிருக்கிறார்' என்றார் என்னைப் பார்த்து.எனக்குத் தொண்டையும் பிறகு நாக்கும் வறண்டது.காதுக்குள் எதோ செய்தது.கண்கள் இருட்டிக் கொண்டு வந்தன.நான் தற்கொலைக்கு முயற்சித்துக் கொண்டிருந்தேன்.என் இதயம் வெளியில் வந்து விழவா என கேட்டுக் கொண்டிருந்தது.

அமைதியாய் நின்றிருந்தேன்.

உனக்கு வெக்கமில்லையே என்றார் (அப்படி என்றால் என்ன சேர்?)

நான் குனிந்த தலை நிமிராமல் நின்றிருந்தேன்.

புரொபசர் அமீர் அலியிடம் போனார்.

ஆட... நீங்களோ என்றார் அமீர் அலியைப் பார்த்து. பயங்கர நக்கலாய்
திரும்பிப் பார்த்தேன் எங்களின் ”தலைவர்” . தலைகுனிந்து நின்றிருந்தார்
டேய்! கண்டியை எப்படா ஆங்கிலேயர் கைப்பற்றினார்கள்? என்றார் அவனிடம்.

இப்படிப்பட்ட கேள்வியை அவனிட்ட கேக்காம
எந்த தியட்டரில என்ன படம் எத்தன மணிக்கு எப்ப ஓடுது எண்டு கேட்டிருந்தால் வீரகேசரி பேப்பரில இருக்கிற கடைசிக்கு முன் பக்கம் பாக்காமலே சொல்லக் கூடிய டலன்ட் அவனிட்ட இருந்தது.
வாழைச்சேனை, ஏறாவூர்,மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி வரை இருந்த
எல்லா தியட்டர்களும் அத்துப்படி அவனுக்கு..அவனிட்ட இருக்கிற அறிவுக்கு ஏற்ற மாதிரி கேள்வி கேக்காதது சர்மா சேரின் பிழையா அல்லது அவனின தூரதிஸ்டமா என்பது தெரியவில்லை அன்று நெருப்படி வாங்கினான்.

அடுத்தது ராஜேந்திரன். அட சோழச் சக்கரவர்த்தி.. நீங்களாவது சொல்லுங்கோ என்றார் அவனைப் பார்த்து.(அவனுக்கு ஒரு சக்கரவர்த்தியின் பெயரை வைக்காமலே இருந்திருக்கலாம் அவனின் அப்பா) .அவன் குனிந்த தலை நிமிரவில்லை.

இப்ப முழு வகுப்பும் எழும்பி நிற்கிறது..

சோரின் வெள்ளை நிற முகம் சிவந்திருக்கிறது. ஏமாற்றம் தந்த கோவத்தினால். தான் கற்பித்ததை ஒருவரும் ஞாபகம் வைத்திருக்கவில்லை என்பதும்; தான் கஸ்டப்பட்டுக் கற்றுக் கொடுத்ததை நாங்கள் கற்காமல் உதாசீனப்படுத்தி விட்டோம் என்பதும் அவரை அதிகமாக பாதித்திருந்தது என நினைக்கிறேன்..
அந்த ஏமாற்றம்.. கடுங் கோபம் கொள்ளச்செய்தது அவரை .
மனிதம் நிரம்பிய எந்தவொரு ஆசிரியருக்கும் வரவேண்டிய நியாயமான கோபம் தான் அது. (அது அன்று புரியவில்லை, இன்று நன்கு புரிகிறது)

தனது ஏமாற்றத்தையும், துக்கத்தையும் கலந்து கோபம் கனக்க சேர்த்து அடி இடி என அடித்தார். அன்று கிடைத்த அடி வாழ்க்கை முழுக்க மறக்காது.

பாவம் பெடியள்! மோட்டுத்தனமாக அடித்துப் போட்டேன் என்று சுயர்விமர்சனம் செய்து கொண்டாரோ என்னவோ தெரியாது.
அது தான் சர்மா சேர் கடைசியாகப் பயங்கரமா அடித்தது.
அதன் பின்பும் அடித்திருக்கிறார் ஆனால் அவை .. அந்த ஒரு நாளைப் போல பயங்கரமானவை அல்ல.

சர்மாசேர் பற்றிய சில குறிப்புகள்:

மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பேரன்பு மிக்க ஆசான்களில் முக்கியமானவர். 1977 அல்லது 1978 தொடக்கம் 2006- 2007 வரை மட்டக்களப்பு மத்திய கல்லூரிக்காக தன்னையே தந்த ஆசான்.
பிரபல கிறீஸ்தவ பாடசாலை எனினும் சைவசமய நிகழ்வுகள் அதிகளவில் மிகச் சிறப்பாக நடைபெற இவரே காரணம். சரஸ்வதிப் பூசை என்றால் அவர் தான் கிங்.வேட்டியுடன் உலா வருவார். இரவிரவாக திட்டமிட்டு, கட்டளையிட்டு அடுத்த நாள் எல்லாம் முடியும் வரை ஓயாமல் ஓடிக் கொண்டிருப்பார். வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு புக்கை கிண்டவும் செய்வார். சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா என்ற பாட்டு சேருக்கு நல்ல விருப்பம்.

எங்கள் இல்லத்தின் தலைமை ஆசிரியரும் அவர் தான்.. 'கிட்ட வந்து ரகசியமாய் டேய் தோக்கப்படாதுடா என்ன..' என்பார் அடிக்கடி.

இவரின் அடிக்குப் பயந்து நான் மட்டக்களப்பு 'ஆனைப்பந்திக் கோயில் பிள்ளையாரப்பா இந்த மனிசனை மட்டும் வேற பள்ளிக்கூடம் மாத்து' என்று 25 சதத்துக்கு நேத்தி வைத்திருந்தேன். அதை விட ஒவ்வொரு வெள்ளியும் 5 சதம் உண்டியலில போட்டன். ஆனப்பந்திப் பிள்ளையார் உதவி செய்யவே இல்லை. (அதுவும் நல்லதுக்குத் தான்)

ஒரு நாள் நவனீதனை வெருட்டி (அவனின் அப்பா புண்ணியமூர்த்தி சேர் தான் பள்ளிக்கூடத்துக்கு டைம்டேபிள் போடுவார்) சர்மா சேரை மாத்தப் பார்த்தோம் நாம் மூவரும். அடுத்த நாள் புண்ணியமூர்த்தி சேர் தனிய கூப்பிட்டு காத திருகி அனுப்பினார்.... (பிறகு நவனீதனுக்கு அடி போட்டது வேற கதை)

32 ஆண்டுகளின் பின்னான ஒரு நாளில் Facebook இல் உலா வந்துகொண்டிருந்த போது கண்ணில் பட்டது "Students of Sarma Sir" என்னும் பக்கம்..அதுவும் கனடாவிலிருந்து.
ஒரு நப்பாசையில் சும்மா புகுந்து பார்த்தால்... அட நம்மட சர்மா சேர். குடும்பத்தில் இருந்து பிரிந்த உறவொன்றை நீண்ட காலத்தின் பின் மீண்டும் கண்டு கொண்டது போலிருந்தது எனக்கு. தினம் தினம் பல மாணவர்கள் வந்து வாழ்த்திவிட்டு செல்கிறார்கள் அவரை. பொறாமையாய் இருக்கிறது அவரைப் பார்க்கும் போது...நான் ஆசிரியனாக வராததையிட்டு மனம் வருந்துகிறேன்.

சேர் சுகமாயிருக்கிறீங்களா? என்னை தெரிகிறதா, நான தான் அவன், நான் தான் இவன், இப்படி எத்‌தனை
எத்தனை மரியாதைகள், கேள்விகள், என்ன அன்பு, என்ன வாஞ்சை. ஆண்டுகள் கடந்த பின்பும் சேர், சேர் உருகி மீண்டும் குழந்தையாய் மாறி நிற்கும் அவரின் மாணவர்கள்.. குடுத்து வைத்த மனிதன் சேர் நீங்கள். இதை விட வேறென்ன வேனும் ஒரு மனிதனுக்கு...

நான் திருத்திர கொம்பியூட்டர்கள் நான் பென்சன் எடுத்தாப் பிறகு இப்படி மரியாதை செய்யுமா எனக்கு? ஏன்டா நாயே என்று கூட சொல்லாதுகள் அதுகள்.

சேர் விசில் அடித்தால் உலகம் முழுவதிலிருந்தும் ”சர்மா சேர் படையணி” ஒரு நிமிசத்தில் தயாராக நிற்குதே.
ஒபாமாவுக்கு கூட பென்சன் எடுத்தாப் பிறகு இப்படி மரியாதை இருக்காது.

சேர்....யு ஆர் ரியலி கிரேட்!

இறுதியாக....... கட்டாயம் நான் இதை சொல்லியே ஆக வேண்டும்...

கடைசிவரிசை 3 குரங்குகளில்

அமீர் அலி கொழுப்பில் கடை வைத்திருப்பதாக அறிந்தேன் -- (இப்பவும் படம் பார்ப்பதை நிறுத்தவி்ல்லையாம்) பாத்திமாவுக்கு எங்கிருந்தாலும் வாழ்க என்று 10ம் வகுப்பில் பாட்டு படித்திட்டான்..

சோழச்சக்கரவர்த்தி, ஞானம் மாஸ்டர் என்ற பெயரில் கிழக்கிலங்கை இஸ்லாமிய சமூகத்தவரிடையே மிகவும் அதிகமாய் நேசிக்கப்படும் ஒரு மனிதனாயும், புலம் பெயர்ந்த சமூகத்தில் கிழக்கு மாகாணத்ததிற்காக குரல் கொடுப்பவனாயும் வாழ்ந்து வருகிறான்.... புத்திஜீவி என்கிறார்கள் அவனை.

ஹி ..ஹி என்னைப் பற்றி என்னத்த சொல்ல...
வின்சன்ட ல ஒருத்திய சுத்தி
(அப்பா! என்னத்த எழுதிக் கிழிக்கிறியள்? கோழிய வெட்டித்தந்திட்டு போயிருந்து எழுதுங்கோ எண்டு கத்துறாள்...)
புலம் பெயர்ந்து..
கலியாணம் கட்டி.
2 குட்டி போட்டு
மொட்டை விழுந்து,
வண்டி வைத்து,....
சில பல வியாதிகளுடன்
கணணித்துறை முகாமையாளனாக
பழைய நினைவுகளை
அசை போட்டபடி
இடைக்கிடை
இப்படி
ஏதாவது எழுதிய படி
காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறேன்.

சேர்! உங்கள் கேள்வியின் பதில் 1815.
என்ன... சரி தானே?
கொஞ்சம் லேட்டாக .....கனக்க இல்ல ....32 வருடங்கள் கழித்து பதில் சொன்னதற்கு மன்னிக்கவும்...

சேர்! நீங்கள் சொல்வது போல் அடியாத மாடு படியாது.

அன்புடன்
உங்களின் அடியால் படிந்த 3 மாடுகளில் ஒன்றான
சஞ்சயன். செ

ஆயிலும் கடைசியாய் ஒரு கேள்வி: ஏன் நீங்கள் யாழ்ப்பாணம் சென்று க‌டமையாற்ற நினைக்கவில்லை?
பதில் எனக்குத் தெரியும் சேர்... எங்கள் அன்பான மண்ணுக்கு நீங்கள் பெருந்தன்மையாய் தந்த பரிசு அது. .இதைத்தான் சிலர் புரியாமல் ”மருந்து போட்டுட்டாங்கள்”, ”பாய் போட்டுட்டாங்கள்” என்கிறார்கள்.

வாழ்க மட்டக்களப்பு மெதடித்த மத்திய கல்லூரியும் எங்கட சர்மா சேரும். எங்கட வகுப்பும்

3 கருத்துகள்:

Kamar சொன்னது…

All the best; and thanks you for taking the time.

பெயரில்லா சொன்னது…

அன்புடன்

அடிவாங்கிப் படித்து முன்னுக்கு வந்தவர்கள் தற்போது துணிச்சலுடனும் பெருமையூடனும் எழுதமுடியூம். அடிவாங்கி வாங்கி முன்னுக்கு வராதவர்கள் எம்முகத்துடன் எழுதுவார் நான் பாடசாலையில் அடிவாங்கி யதால்தான் படிக்கவில்லை இதற்கு ஆசிரியர் கானா சோனா தான் காரணம் என்று. ஆசிரியர்கள் மாணவர்களை அடித்தல் தடைசெய்யப்படவேண்டி விடயம் அதற்கு ஆதரவூஅழிப்பதுபோல் உள்ளது உங்கள் படைப்பு. ஆங்கிலேயரால் கொண்டு வரப்பட்ட கல்லிமுறையில் இன்று பல மாற்றங்களை அவர்கள் செய்துவிட்டார்கள்; ஆனால் நாங்கள்??????????

சஞ்சயன் சொன்னது…

நண்பரே! எனக்கு ஒரு அதிபர் இருந்தார் பெயர். Prince G Casinader. அவரைக் கண்டால் பாடசாலை நடுங்கும் என்று கூறுவது பொய். ஊரே நடுங்கும். மனிதர் 80 வயது கடந்த வாழ்கிறார். சென்றவருடம் அவரைச்சந்தித்த போது தான் மிகவும் கடுமையானதொரு ஆசிரியனாக இருந்ததால் முழுமையான ஆசிரியனாக இருக்கமுடியாமல் போயிற்றோ என்று வருத்தமுடன் கூறினார். அமிர்தமும் அளவுக்கு மிஞ்சினால் நஞ்சு என்பதனை நாம் மறத்தலாகாது.

கருத்துரையிடுக