திங்கள், அக்டோபர் 13, 2014

தன் மனைவியையும், நூற்றுக் கணக்கான பெண்களையும் உயிரோடு எரித்தவன்!

ஆக்கம்:விநாயக முருகன்,சென்னை 
வரலாற்றில் ஏன் தஞ்சாவூரும். மதுரையும் எப்போதும் கீரியும், பாம்புமாக சண்டை போட்டுக்கொண்டிருக்கிறது என்று ஒரு நண்பர் கேட்டார்.
சின்ன வயதில் எங்க ஊரில் பெண்கள் தெருவில் சண்டைப் போட்டுக்கொள்வதை பார்த்துள்ளேன். சண்டை போடும்போது இப்படி திட்டிக்கொள்வார்கள். "அவ மதுரைக்காரி. லம்பாடி முண்ட. அவகிட்ட வாயக்கொடுக்காத" என்று. உடனே மதுரைக்கார பெண் சொல்வார். "தஞ்சாவூர் மாடுதானே நீ. நீ ஊர் மேயுறத பத்தி எனக்கு தெரியாதா? என்று. காதைப்பொத்திக் கொள்ளுமளவுக்கு சரளமாக கெட்ட வார்த்தைகள் வந்து விழும். பெண்கள் சண்டைப் போட்டுக்கொண்டால் அவர்களை அறியாமல் ஊரின் பெருமை வெளியில் வந்துவிடும்.
மதுரையை ஆண்ட சொக்கநாத நாயக்கர் தஞ்சாவூர் மீது படையெடுத்து வருகிறார். தஞ்சாவூரை விஜயராகவ நாயக்கர் ஆண்டுக் கொண்டிருக்கிறார். மதுரைகாரர்கள் ஏற்கனவே நடந்த சண்டையில் வல்லத்தை தஞ்சாவூரிடம் இழந்து விட்டிருந்தார்கள். அதை மீட்க அந்தச்சண்டை ஆரம்பித்தாலும் உண்மையில் வேறு ஒரு காரணம் இருந்தது. அது விஜயராகவ நாயக்கரின் மகள். பேரழகியான அவளை திருமணம் செய்துக்கொள்ள சொக்கநாத நாயக்கர் விரும்பினார். சொக்கநாத நாயக்கரும் அழகான வாலிபன்தான். இரண்டு பேரும் நாயக்கர் வம்சம்தான். நினைத்திருந்தால் விஜயராகவ நாயக்கர் அந்த போரை தவிர்த்திருக்கலாம். ஆனால் அப்படி நடக்கவில்லை. விஜயராகவ நாயக்கர் அந்தப்புரத்தில் இருந்த நூற்றுக்கணக்கான பெண்களை, தனது மனைவியை, மகளை அந்தப்புரத்தில் வைத்து உயிருடன் எரித்துவிட்டு சொக்கநாத நாயக்கருடன் சண்டைப்போட்டு இறந்துப்போகிறார்.
இத்தனைக்கும் விஜயராகவ நாயக்கரின் தந்தை ரகுநாத நாயக்கர் மதுரையில் பெண் எடுத்தவர்தான். அதாவது விஜயராகவ நாயக்கரின் அம்மா மதுரையை சேர்ந்தவர். இருந்தாலும் மதுரை மீது ஏன் அவ்வளவு காண்டு? மதுரை திருமலை நாயக்கர் தஞ்சை ரகுநாத நாயக்கரின் பெண் அச்சுத ரகுனாதாம்பாவை திருமணம் செய்திருந்தார். திருமலை நாயக்கர் மதுரையில் ஏதோ ஒரு தருணத்தில் அச்சுத ரகுனாதாம்பாவை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டார் என்று சொல்லப்படுகிறது (இதற்கு ஆதாரம் இல்லை என்று வேறு சில வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்)
விஜயராகவ நாயக்கர் போருக்கு போவதற்கு முன்பு தனது பணியாள் அக்கிராஜூ என்பவனை அழைத்து நமது அந்தப்புர பெண்கள் ஒருபோதும் மதுரைவீரர்கள் கையில் சிக்கக்கூடாது என்று சொல்லிவிட்டு போகிறான். போர்க்களத்தில் விஜயராகவ நாயக்கரின் படை தோல்வியடைகிறது. தஞ்சை ராஜகோபாலசாமி கோயில் வாசலில் உள்ள வடக்கு வீதிக்கு அருகில் விஜயராகவ நாயக்கர் கொல்லப்படுகிறார். விஜயராகவ நாயக்கர் தலையை வெட்டிய மதுரை தளபதியின் பேர் வேங்கடகிருஷ்ணப்ப நாயக்கர். மன்னர் உடல் மண்ணில் விழுந்த செய்தி அரண்மனையை எட்டுகிறது. அக்கிராஜு அரண்மனை அந்தப்புரத்தை வெடிவைத்துத் தகர்கிறான் . உள்ளே இருந்த நூற்றுக்கணக்கான பெண்கள் சொக்கநாத நாயக்கர் திருமணம் செய்துகொள்ள நினைத்த விஜயராகவ நாயக்கரின் மகள் உட்பட அனைவரும் இறக்கிறார்கள். ஆனால் அதிலும் மூன்று பேர் தப்பிப் பிழைக்கிறார்கள். இரண்டு பெண்கள், ஒரு குழந்தை. அந்தக் குழந்தை மன்னரின் வாரிசு . பிறகு தஞ்சை மதுரையோடு இணைக்கப்பட்டது. சொக்கநாத நாயக்கரின் ஒன்றுவிட்ட தம்பி அழகிரி நாயக்கர் தஞ்சைக்கு மன்னராக முடிசூட்டி வைக்கப்பட்டார். 1673ஆம் ஆண்டு விஜயராகவ நாயக்கர் போர்க்களத்தில் கொல்லப்பட்டதோடு தஞ்சை நாயக்கர்கள் ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டது. ஆசைப்பட்ட பெண்ணை திருமணம் செய்துக் கொள்ள முடியாமல் துக்கம் தொண்டையை அடைக்க மதுரை திரும்பும் சொக்கநாத நாயக்கர் பிறகு மதுரையில் இருக்கும் இன்னொரு பெண்ணை திருமணம் செய்துக்கொள்கிறார். அவர்தான் ராணி மங்கம்மாள்.
வரலாற்றின் நீண்ட பக்கங்களில் மதுரையும், தஞ்சாவூரும் எப்போதும் அடித்துக்கொண்டே இருந்திருக்கிறது. பொன்னியின் செல்வன் , வீரபாண்டியன் மனைவி என்றில்லை எந்த சோழ, பாண்டிய கதையை படித்தாலும் தஞ்சாவூருக்கும், மதுரைக்கும் ஏதோ ஒருவித பகை இருந்துக்கொண்டே வந்திருக்கிறது. எனது பாட்டி மதுரை. அவருக்கு இரண்டாவது புருஷனாக வந்த எனது தாத்தா தஞ்சை. வேறு வேறு ஜாதியும் கூட... இரண்டு பேரும் சாலையில் இறங்கி சண்டை போட்டதை பார்த்து அந்தக்காலத்தில் பிரிட்டிஷாரே மிரண்டுப் போனதாக சொல்வார்கள். இதுல என்ன சிறப்புன்னா நான் தஞ்சாவூர். எனது மனைவி மதுரை. என்ன செய்றது? வரலாறு என்றாலே ரத்தப்போராட்டம்தானே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக