வியாழன், அக்டோபர் 09, 2014

புலிக்கும் மனிதனுக்கும் ஆறு வித்தியாசங்கள்

ஆக்கம்:யோகினி 
சமூக வலைதளங்களில் வளர்ப்புப் புலி ஒரு பார்வையாளனை 20 நிமிடம் அடித்துக் கொன்றதே உலகமே பார்த்து வியந்து போகிறது. தகவல் புரட்சியின் வீரியத்தால் புலியிடம் சிக்கிய மனிதனைக் காப்பாற்ற மனம் இல்லாமல் ஒருவர் அதைப் படமெடுத்து வெளியிடுகிறார். புலி தாக்கியது கண்டு அவர் பதறவில்லை, நடுங்க வில்லை, நிதானமாக படமெடுக்கிறார்.தகவல் புரட்சி உலகத்தில் தகவல்களை அதி விரைவாக மின்னல் வேகத்தில் உலகெங்கும் பரப்புவதில் ஏராளமான நன்மைகள் உண்டு. இதே மனிதன் இந்தப் படத்தை எடுத்ததற்கு பதிலாக இவரைக் காப்பாற்றப் பல துறை அதிகாரிகளுக்கும் உடனே தொடர்பு கொண்டிருக்கலாம்.உயிரியல் பூங்காவில் இருந்த புலிக்கு இரை தேடிக் கொன்று தின்று பழக்கமில்லை. அது யாரோ அந்நிய உயிரி, தன்னைத் தாக்க வந்திருப்பதாக அஞ்சி அந்த மனிதரைத் தாக்கியிருக்கிறது. ஆனால் உயிருக்கு போராடும் ஒரு மனிதரை ரத்தம் சிந்தி, காயப்பட்டு, புலியின் வாயிலும் கூரிய நகத்திலும் உடலுறுப்புகள் கிழிபட்டுக் கிடக்கும் ஒரு அப்பாவியை பார்த்து உள்ளம் பதறாமல் நிதானமாக ஒருவர் படம் எடுத்தால் அவர் மனிதராக இருக்க இயலாது. மனித நேயம் செத்துப்போன ஒரு இயந்திரமாகத் தான் அவரை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் மக்களால் மக்களுடைய மக்களின் ஆட்சி நடைபெறுகிறது. ஆனால் மக்களின் துயரம் மக்களுக்கே புரியவில்லை. அண்டை அயலாருக்கு உதவும் குணம் இல்லை.
http://images.indianexpress.com/2014/09/tiger-l2.jpg?w=600மக்கள் கேமராவிற்கு அடிமையாகி ஸ்டேட்டஸ் போடும் போதையில் மூழ்கிக் கிடக்கின்றனர். யானை பாகனைக் கொன்றாலும் படம்பிடிக்கின்றனர். புலி ஒரு மனிதனைக் கொன்றாலும் படம் பிடிக்கின்றனர். படம் எடுப்பதும் அதை வெளியிடுவதும் ஒரு போதை தரும் விஷயமாகிவிட்டது.
மனிதரை மனிதர் நேசிப்பதும், ஓடிப்போய் உதவுவதும் மறைந்துவிட்டது. யார் எப்படி கஷ்டப்பட்டாலும் எனக்கென்ன? எனக்கு வராதவரை எல்லாமே எனக்கு வேடிக்கை தான் என்ற மனோபாவம் அதிகரித்துவிட்டது.
'புலிக்குத்திக் கல்' என்று கிராமங்களில் மக்கள் வணங்கி வழிபடும் கற்கள் உண்டு. இவை புலியடித்து இறந்துபோன மனிதனுக்காக நட்டப்பட்ட நடுகற்கள். ஊருக்குள் புலி வந்தாலும் மேய்ச்சல் நிலத்தில் ஆடு, மாடுகளை புலி தாக்கினாலும் அந்தப் புலியை எதிர்த்து தாக்கிக் குத்திக் கொன்றவன் இறந்துவிட்டால் அவனை அவ்வூர் மக்கள் தெய்வமாக வழிபடுவார்கள். இன்றைக்கும் பல கிராமங்களில் மக்கள் வணங்கும் ஆண் தெய்வங்களில் புலி அடித்து இறந்த வீரர்கள் உண்டு.
ஊருக்காக வாழ்ந்தவர்களையும் உயிர் இழந்தவர்களையம் வணங்கி கௌரவிப்பது மனித மாண்பு. ஓர் உயிர் தவிக்கும் போது ஒரு உடல் துடிக்கும் போது ஒரு மனித மனம் அழுது கதறும்போது அவரை படம் எடுப்பதை ஆறறிவு பெற்ற மனிதன் செய்யலாமா? நல்லது, தீயது என்பதை பகுத்தறியும் ஆறாவது அறிவை மனிதனது தொழில்நுட்பம் தோற்கடித்துவிட்டது. தகவல் தொழில்நுட்ப புரட்சி வெற்றி பெற, மனிதநேயம் இங்கே தோற்றுவிட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக