ஆக்கம்: நாவுக் அரசன், ஒஸ்லோ, நோர்வே
இதை நீங்க வாசிக்கும் நேரம் வாழ்வுக்கும் சாவுக்கும் நடுவில் ஒரு மனிதர் இறுதி மூச்சை இறுக்கிப் பிடித்து வைக்க முடியாமல் இறந்துகொண்டு இருக்கலாம்.... என்று தொடக்கி எழுதத் தான் வேண்டி இருக்கிறது, கண்ணுக்கு தெரியாத மிக மிக புத்திசாலியான, எந்த எதிர்ப்பு வக்சினும் ,அல்லது அதன் வீரியத்தைக் குறைக்கும் மருந்துகளுக்கும் சொல்வழி கேட்காத இபோலா வைரஸ், ஆரம்ப சுகாதார வசதிகளுக்கு அல்லாடும் மேற்கு ஆபிரிக்க நாடுகளில் ஒவ்வொரு நாளும் பல உயிர்களைக் கொல்லும் இந்த வைரஸ் ஒரு உலகளாவிய ஆபத்து ,எப்படியோ அது இன்னும் எங்கள் வீட்டுக் கதவைத் தட்டாததால் அதன் நேரடி பாதிப்பு எங்களுக்கு விளங்கவில்லை. எப்போதும் போலவே இபோலா வைரஸ் பற்றி அதிகம் வெளியே தெரியாத கொஞ்சம் குழப்பமான விசயங்களைச் சொல்லுறேன்.. இபோலா வைரஸ் ஐரோப்பிய நாடான பெல்யியம் அதிகம் காலனி ஆதிக்கம் செய்த கொங்கோவில் எழுபதுக்களில் தான் ,அதுவும் வெள்ளை இன மிசனரி மார்களின் கண்காணிப்பில் இருந்த ஒரு கிராமத்தில் அது பலபேரைக் கொண்ற அதிகம் அறியப்படதா சம்பவம் போலவே அந்த வைரசும் அப்போது அதிகம் அறியப்படவில்லை. அந்த நேரமே வெள்ளை இன ஐரோப்பியர், கறுப்பு ஆபிரிக்க மக்களை புதிய புதிய மருந்து கண்டு பிடிக்க பரிசோதனைக்கு பயன்படுத்தி அந்த நோய் உருவானது எண்டு ஒரு சுதேசியக் கருத்து இருந்தாலும், உண்மையில் தக்காளி பயிர்ச் செய்கைக்கு வவ்வால்களின் எச்சத்தை சேகரிக்க இருண்ட மலைக் குகைகளுக்கு சென்று அதைச் சுரண்டி எடுத்த விவசாயிகள் தான் முதல் முதல் அந்த வைரசை வௌவால்களிடம் இருந்து காவி வந்த நோய் காவிகள், அவர்கள் அவளவு பேரும் மற்ற கிராம மக்களுக்கும் அதை தொற்ற வைச்சுப்போட்டு இறந்து போனார்கள்.
இபோலா 1976 ஆம் ஆண்டு ஆபிரிக்காவில் அதன் கதையை எழுதத் தொடக்கினாலும் ,அதைக் கண்டு பிடித்தவர்கள் இரண்டு ஐரோப்பிய வைரஸ் உயிரியல் என்ற வைரோலோயிஸ்ட் விஞ்ஞானிகள் ,அதுவும் அதை பெல்யியத்தின் , அண்டி வர்ப் நகரத்தில் வைத்துதான் அடையாளம் கண்டார்கள் என்பது அதிகம் வெளிய தெரியாத விசயம். அந்த இரண்டு விஞ்ஞானிகளும் அதை ஆராய்ச்சி செய்ய மேற்கு ஆபிரிக்காவில் சயர் நாட்டில் , உகண்டா நாட்டு எல்லைக்கு அண்மையில் அப்போது இயங்கிய ஒரு ஐரோப்பிய மிசனரியின் கண்காணிப்பில் இருப்பில் இருந்த அந்த கிராமத்துக்கு அவர்கள் போன போது ஏறக்குறைய எல்லா கிராம மக்களுமே அந்த விசித்திர காச்சலுக்கு இறந்து போய் விட்டார்கள். ஆனாலும் சிலர் அந்த விசித்திர காச்சலுக்கு தங்கள் உடல் நோய் எதிர்ப்பு சக்தியை எப்படியோ இயல்பாக உருவாக்கா தப்பி இருக்குறார்கள்
அந்த விஞ்ஞானிகள் 1976 ஆம் ஆண்டு மேற்கு ஆபிரிக்காவின் அப்போதைய சையர் நாட்டில், இப்போது கொங்கோ குடியரசு என்ற நாட்டில் ஒரு சிறு கிராமத்தில் , இபோலா ஆற்றங்கரையில் உள்ள கிராமதிலேயே அந்த வைரஸ் தாக்கி இறந்தவர்களையும், தப்பிய சிலரையும் முதன் முதலில் கண்டறியப்பட்டதால், அருகில் ஓடிய ஆற்றின் பெயரை வைத்து சயர் இபோலா வைரஸ் காச்சல் என்ற பெயர் மட்டும் தான் வைச்சு, இறந்தவர்களில் ரத்த சாம்பிள்களை, வேறு மெடிகல் தரவுகளை, நோயியல் அறிகுறிகள் போன்ற தகவல்களை எடுத்து அந்த நோயைப்பற்றி முழுமையாக அறிவியல் அடிப்படையில் படித்து அறிய முதலே, பல உள்நாட்டு ராணுவ அச்சுறுத்தலால் வெளியேற வேண்டி வந்திருக்கு ,அவர்கள் (Ebola Virus Disease ) (EVD) அல்லது இபோலா குருதி ஒழுக்குக் காய்ச்சல் (Ebola Hermorrhagic Fever) (EHF) என்று நான்கு வகைகளால் மனிதரில் ஏற்படும் நோய் என பெயரிடப்பட்டதுடன் அந்த பிரச்னை அதிகம் அறியபடாமல் அப்படியே ஆபிரிக்காவோடையே அமுங்கி விட்டது.

மறுபடியும் இந்த வருடம் மரணத்தைத் தரவல்ல இந்நோய் தற்போது நையீரியா ,லைபீரியா, சியாரா லியோன், கினா பிஸே ஆகிய நாடுகளுக்கு பரவிவிட்டது. இந் நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் மேற்குலகுக்கு வருவது மிகக்குறைவு என்பதால் இந்நோய் மேற்கில் பரவும் வாய்ப்பு மிக மிகக் குறைவு என்கிறார்கள். இபோலா நோயாளி காணப்படின் முதலில் அவரை அருகிலுள்ள வைத்தியசாலைக்குக் கொண்டு செல்ல வேண்டும். அங்கு அவர் தனிமைப்படுத்தப்பட வேண்டும். இபோலா வைரஸ் நோய்வாய்ப்பட்ட நோயாளியின் தொடர்பு கொண்டவர்களுக்கு அவற்றின் மூலமாக நோய் உட்செல்கிறது. இது காற்றின் மூலமாக பரவுவதில்லை.இரத்தம் மற்றும் மனிதக் கழிவுகள் மூலமே பரவுகின்றது. எனவே இபோலா நோயைத் தடுப்பது இலகுவானது இபோலா வைரஸ் வௌவால், சிம்பன்சி விலங்குகளிடம் இருந்துதான் மனிதர்களுக்கு அவைகளின் ரத்தம், மலம் உள்ளிட்டவற்றில் இருந்து பரவுகிறது. அது தொடர்சியாக இபோலா வைரஸால் தாக்கப்பட்டவரின் ரத்தம் அல்லது மல, ஜலத்தில் இருந்து பிற மனிதர்களுக்கு இந்த வைரஸ் பரவுகிறது. இபோலா வைரஸ் தாக்கி அறிகுறிகள் தெரிய 2 முதல் 21 நாட்கள் வரை கூட ஆகலாம்.
நோய் எதிர்ப்பு சக்தியைக் குறிவைச்சு தாக்கும் இபோலா நோய்க்கு இது தான் சிகிச்சை என்ற ஒன்று இல்லை,மேற்கு ஆபிரிக்காவில் மிசனரி ஆசபதிரியில் இபோலா நோயாளிகளுக்கு உதவிய ஒரு அமரிக்க டாக்டரும், அமரிக்க நோர்சும் இபோலா வைரஸ் தொற்றியபடி அமரிக்கா வந்த போது சீமக் என்ற ஒரே ஒரு பரிசோதனை மருந்து தான் அவர்களைக் காப்பாற்றியது . இதுவரை மூன்று மேலை நாட்டவர்களுக்கு மட்டுமே அந்த மருந்து கொடுக்கப்பட்டு, மூவரும் தப்பி தங்கள் உடலில் தானாகவே இபோலா நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் அளவுக்கு அந்த மருந்து வேலை செய்து வெற்றி கொடுத்து உள்ளது .அப்புறம் ஏன் அந்த மருந்தை தயாரித்து மேற்க்கு ஆபிரிக்காவில் ஒவ்வொரு நிமிடமும் இறந்துகொண்டு இருக்கும் மக்களுக்கு கொடுத்து காப்பற்ற முடியாதா எண்டு கேட்டா, அதைப் பெரும் தொகையாக தயாரிப்பதில் " amount of antibodies needed to treat a larger group of people would be difficult to manufacture " என்று நிறைய சிக்கல் இருக்கு என்கிறார்கள்.ஆனால் இபோலா வைரஸில் உள்ள சடை முளை போன்ற முட்கள் கலங்களுடன் இலகுவாக குத்தி உள் நுழைந்து ஆதாரமான புரோட்டின்களில் குழப்பம் ஏட்படுத்த விடாமல் அதன் சடைமுளைகளை வீரியம் இழக்க வைத்து அழித்து செயல்ப்படும் சீமேக் ஐக் கண்டு பிடித்த விஞ்சானி அதை எப்படியும் எல்லாருக்கும் கிடைக்கும் வடிவில் செயப்போவதா சொல்லுறார் .
ஒருவருக்கு இபோலா தொற்றும் போது முதல் அறிகுறிகள் மற்ற நோய்களை ஒத்திருக்கும். காய்ச்சல், உடல் தளர்ச்சி, தலைவலி, வயிற்றுவலி, மூட்டுவலி மற்றும் தொண்டை வலி ஆகியன முதல் அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகளால் மலேரியா அல்லது குடற்காய்ச்சல் நோயென தவறாக எண்ணப்படுவதுண்டு. பின்னர் நோய் தீவிரமாகி குருதி இழக்கத் தொடங்குகின்றனர். இந்நிலையில் அதிர்ச்சி குறைந்த குருதி அழுத்தம், விரைவான நாடித்துடிப்பு (இதயத் துடிப்பு) மற்றும் உறுப்புகளுக்கு குறைந்த குருதி வழங்கல் ஆகியன அறிகுறிகளாகும். இவற்றால் உறுப்புகள் செயலிழக்கத் தொடங்குகின்றன. இதனை உறுப்பு செயலிழப்பு என்கின்றனர். மேலும் நோயாளியின் உடலை இறுக்கமாவதால் படுக்கையிலேயே இருக்க வேண்டியதாகவுள்ளது.
கொஞ்சம் ஜோசித்துப் பார்த்தா இபோலா இவளவு இலகுவா மேற்கு ஆபிரிக்காவில் பரவ,அந்த ஆபிரிக்க மக்களின் கல்வி அறிவு குறைந்த , ஆரம்ப சுகாதார வசதிகளற்ற , கட்டுப்பெட்டி கலாசாரா பண்பாட்டு விடயங்கள் முக்கிய காரணம். முக்கியமா இபோலா தாக்கி இறந்தவர்களின் உடலைப் புதைக்க முதல் உறவினர் சுற்றி நிண்டு குளிக்க வார்த்து, கடைசியில் கன்னத்தில் முத்தமிட்டு இறுதிப் பிரியாவிடை கொடுப்பது போன்றவை அதிகம் பேரை அந்த வைரஸ் தொற்றிக் கொள்ள இலகுவா இருக்கு.உண்மையில் இறந்த ஒருவரில் இருந்து அந்த வைரஸ் மிக மிக இலகுவாக தொற்றும் என்றும், இபோலா வைரஸ் உடன் போராடி இறந்தவர்களை மனித நடமாட்டம் உள்ள இடங்களில் புதைப்பதும் ஒரு நீண்டகால பிரசினைகளை உருவாக்கலாம் என்கிறார்கள்..
இந்த நோய் உலக அளவில் ஒரு அபாயமாக வந்தால் , அமரிக்காவுக்கு என்ன நடக்கும் எண்டு ராபின் குக் என்ற அமரிக்க நாவலாசிரியர் Outbreak என்ற ஒரு நாவல் இபோலா கண்டு பிடித்து பத்து வருடங்களின் பின் 1987 இல் ஒரு medical thriller நாவல் ஆக எழுதி அந்த நாவல் சக்கை போடு போட்டது,அதை ஒரு படமாகவும் எடுக்க உலகம் எங்கும் உள்ள மக்கள் பயப்பிடாமல் பார்த்தார்கள், ரசித்தார்கள் . இப்ப நிலைமை கொஞ்சம் கற்பனையில் இருந்து நிஜம் ஆக மாற பயம் பதுங்கி பதுங்கி வருகுது .ஆனாலும் முன்னேறிய நாடுகளில் இபோலா போன்ற வைரஸ் அதிகம் பரவாது ,அதுக்கு ஏற்ற பல முன்னோடி சுகாதார அறிவும் ,வசதிகளும் மேற்கு ஆபிரிக்காவில் உள்ள நிலைமையை விட பணமடங்கு சிறப்பாக மேற்கில் உள்ளதால் இப்போதைக்குப் பயப்பிட தேவை இல்லை...
ஆனாலும் நாங்கள் அன்றாட வாழ்கையில், ஜோசிக்க நேரம் இல்லாமல் சந்தோசங்களை தேடி ஓடிக்கொண்டிருக்கும் இந்த உலகத்தின் இன்னுமொரு இருட்டு மூலையில், இறப்பதற்கான காரணங்கள் இறக்கும் நேரத்திலேயே புரிந்துகொள்ள முடியாமல் மனிதர்கள் இறப்பது மனசாட்சியை உலுக்குது ...
முக்கிய குறிப்பு: மேற்படி ஆக்கம் பொதுத் தமிழ் மற்றும் இலங்கைத் தமிழ் ஆகிய இரண்டு தமிழும் கலந்து எழுதப் பட்டுள்ளது என்பதைத் தமிழக வாசகர்களுக்கு அறியத் தருகிறோம்.
1 கருத்து:
நல்ல சமூக நற்சிந்தனை கட்டுரை.
கருத்துரையிடுக