ஆக்கம்:கு.ஜெயச்சந்திர ஹாஷ்மி, திருவள்ளூர், தமிழ்நாடு.
இன்னும் ஒரு தோசை போதும்’ என்று குரல் கொடுத்தபின் வரும் தோசை, முந்தைய
தோசைகளைவிட தடிமனாக இருக்கிறதென்றால், தோசை சுடுவது அம்மாவாகத்தான்
இருக்கும். ‘டயட்ல இருக்கேன்னு எத்தன தடவ சொல்றது’ என்று அம்மாவை வைதாலும்,
அம்மா ஊட்டி விடுகையில் அளவுச் சாப்பாடென்பது நிராசைதான்.‘சாதம் வடிச்சுருக்கேன்டா… சாப்பிட்டுட்டு போ’ என்றவளிடம், ‘நான் ஆபிஸ்ல போய் டேஸ்ட்டான சாப்பாடு சாப்பிடப் போறேனே’ என்று எப்போதும்போல் கிண்டலடித்துவிட்டு கிளம்பிப் போய் மாலை வீடு வந்தேன். அதன்பின் அம்மா கையால் ஒரு பருக்கைகூட சாப்பிடக் கொடுத்து வைக்கவில்லை. 'நெஞ்சு படபடன்னு அடிச்சுக்குதுடா. தொட்டுப் பாரேன்’ என்று அழத்தொடங்கினாள் அம்மா. வீட்டில் நான் மட்டும்தான் இருந்தேன். ‘அய்ய… இதுக்கேம்மா அழற. வா, ஹாஸ்பிட்டலுக்கு போய்ட்டு வரலாம்’. போனோம். திரும்ப அவள் வரவில்லை. மூன்று மருத்துவமனைகளுக்குச் சென்று காத்திருந்து, 'மருத்துவர் இல்லை, அனுமதி இல்லை' என்று சொல்லி, நான்காவதாய் ஒரு மருத்துவமனைக்குள் நுழையும்போது என் கையை மிகமிக இறுக்கமாய் பிடித்தபடி படியேறினாள் அம்மா. அந்த இளஞ்சூடு என் கருவறை வெம்மை. அதன்பின் அம்மாவின் கையை நான் தொடுகையில், அது சில்லிட்டு போயிருந்தது. அன்று இரவு என்னோடு சிரித்து பேசிய, தோளில் கைப்போட்டு பைக்கில் வந்த, இறுகக் கைப்பற்றி நடந்த என் அம்மாவை, அடுத்த நாள் மதியம் அஸ்தியாக்கி அதே இளஞ்சூட்டோடு கையில் கொடுக்கையில் சத்தியமாய் செத்துதான் போனேன்.
அம்மா எங்களுக்கானவள் மட்டுமல்ல. எங்களை சேர்ந்தவர்களுக்குமானவள். எங்கள் வீட்டுக்கு ஒருமுறை நீங்கள் வந்துவிட்டால் சாப்பாடு சாப்பிடாமல், ஒரு கப் காபியாவது குடிக்காமல் உங்களால் வெளியே போக முடியாது. அம்மா அனுப்பவே மாட்டாள். பல நேரங்களில், எதிர்பாராமல் நண்பர்கள் யாராவது வந்துவிட, தனக்கு வைத்திருந்த உணவை அவர்களுக்கு அளித்து, நேற்றைய பழைய சாதத்தோடு தனது இரவை முடித்திருக்கிறாள் அம்மா. ஒரே ஒருமுறை அம்மாவை நீங்கள் பார்த்து பேசிவிட்டால், இன்னொரு முறை எங்கள் வீட்டிற்கு நிச்சயம் நீங்கள் வருவீர்கள். அம்மாவை உங்களுக்கு அவ்வளவு பிடித்துப்போகும். இதுவரை வீட்டுக்கு நீங்கள் வந்திருக்கவில்லை என்றால், அந்த தேவதைப் பெண்ணை நீங்கள் தவறவிட்டு விட்டீர்கள்.
அம்மாவுக்கென்று பெரிதாக என்ன ஆசைகள் இருந்துவிட்டது? ஒரு தங்க நகை வாங்கணும். ஒரேயொரு பட்டுப் புடவை வேணும். அதிகபட்சமாக சொந்த வீட்டுல வாழணும். இவ்வளவுதான். அவள் ஒரு தங்கச் செயின் வைத்திருந்தாள்தான். சென்ற வருடம், நான் குறும்படம் எடுக்க ஏற்பாடுகள் செய்து, பணமில்லாமல் நின்றபோது, அந்த செயினை அடகு வைத்து எனக்கு பணம் கொடுத்தாள். இறக்கும் அன்று காலையில், ‘முதல்ல காசு சேத்து வெச்சு உனக்கொரு ஆட்டோமேடிக் வாஷிங்மெஷின் வாங்கணும்மா’ என்றபோது, அம்மா தயக்கத்தோடு கேட்டது ‘அப்படியே அந்த செயினை திருப்ப முடியாதோடா?’. இன்னும் அதை நான் மீட்கவில்லை. நிச்சயம் மீட்டுவிடுவேன். யார் கழுத்தில் போட?
உங்கள் அம்மாக்களுக்கும் நிச்சயம் ஒரு ஆசை இருக்கும். அது நிச்சயம் உங்கள் சம்பாத்யத்துக்கு உள்ளேதான் இருக்கும். நாம் சம்பாதிப்பதைத் தாண்டி ஆசைப்பட அம்மாக்களுக்குத் தெரியாது. அது என்னவென்று கேளுங்கள். துருவித் துருவிக் கேளுங்கள். இல்லை என்று மறுத்தாலும் இறுதியில் தயங்கித் தயங்கிச் சொல்வாள் அந்த சிறு ஆசையை. உடனே நிறைவேற்றிவிடுங்கள். பணம் வெளியில் புரட்டியாவது நிறைவேற்றிவிடுங்கள். உங்களுக்கு பணம் வரும் வேளைகளில் ஆசைகளை நிறைவேற்றி அழகு பார்க்க அம்மா இல்லாமல் போகலாம். அந்த வலி கொடுமையாய் இருக்கிறது.
அம்மா அதை பார்ப்பாள். ஆம். அம்மாவின் கண்களை தானம் செய்திருக்கிறோம். எங்காவது இருந்து அந்த கண்கள் எங்கள் படத்தைப் பார்க்கும். என் பெயரை பார்க்கும். நாளை என் சினிமாவில் நான் ஜெயித்து, எனக்கான மேடைகளில் நிற்கும்போது, அத்தனை விருதுகளையும் அங்கீகாரங்களையும் மொத்தமாக அம்மாவுக்கு சமர்ப்பிக்கும்போது, உலகின் ஏதோவொரு மூலையில் இருந்துகொண்டு அந்த இரண்டு கண்களும் என்னைப் பார்க்கும்தானே? அப்படிப் பார்க்கும்போது, அந்த கண்கள் கலங்கும்தானே?
2 கருத்துகள்:
சிறந்த பதிவு
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்
நெகிழ வைத்த பதிவு.
கருத்துரையிடுக