செவ்வாய், செப்டம்பர் 09, 2014

இசைக்கு மொழியில்லை

ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன் 
மொழி: பஸ்தோ (Pashto)
நாடு: ஆப்கானிஸ்தான் 
பாடல்: "தாஷர மினா லரம்"
பாடியோர்: ஷாபிக் முரீட்(Shafiq Mureed) மற்றும் சீத்தா கஷேமி(Seeta Qasemi)
இசை: ஷாபிக் முரீட்(Shafiq Mureed)

'விஸ்வரூபம்' திரைப்படம் தடை செய்யப்பட்ட தருணத்தில் தமிழ் ஊடகங்களில் இரு வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்களும் காரசாரமான வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட்டனர்.அந்தச் சூழ்நிலையில் 'ஆப்கானிஸ்தான்' நாட்டின் பெயர் தமிழ் ஊடகங்களில் இடம் பிடித்ததை என்னால் அவதானிக்க முடிந்தது. அந்த வேளையில் தற்செயலாக எனது கண்ணில் பட்ட, நான் ரசித்த ஒரு ஆப்கான் பாடலை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.
அவர்களது இசை பற்றிய உங்களது கருத்துக்களை அறிய விரும்புகிறேன்.
பாடலைப் புரிந்து கொள்வதற்கு மொழி அவசியமில்லை என்றே கருதுகிறேன். காட்சியை வைத்தே பாடலுக்கான சூழ் நிலையினைப் புரிந்து கொள்வீர்கள் என்பது எனது நம்பிக்கை.
ஆப்கானிய மக்கள் திரைப்படம் மற்றும் பாடல்களுக்காக இந்தியத் திரை உலகத்தையே(பாலிவூட்) நம்பி உள்ளனர் என்பது நம்மில் பலர் அறிந்த விடயம் ஆனால் பாலிவூட் திரையின் முன்னணி நட்சத்திரங்களாகிய ஷாருக்கான், அமீர்கான், சல்மான்கான் போன்றவர்கள் ஆப்கானிய பரம்பரையில் வந்தவர்கள் என்பது நம்மில் பலர் அறியாதது.

காணொளி உதவிக்கு நன்றி: Mintoo(fiveriversfilms.com) 

ஆப்கானிஸ்தானில் கடந்த நாற்பது வருடங்களாக என்ன நடை பெறுகிறது என்பதை எழுதி அரசியல் சகதிக்குள் சிக்கிக் கொள்ள நான் விரும்பவில்லை. 
இருப்பினும் இந்திய வரலாற்றைப் படிக்கின்ற இந்திய மாணவர்கள்  ஆப்கானிஸ்தான் நாட்டின் கஜினி(Ghazni) மாகாணத்தை மறக்கவே மாட்டார்கள். இந்தியாவின் மீது 17 தடவைகள் படையெடுத்து வந்து இந்தியாவைச் சூறையாடிய கஜினி முகம்மது(Mohammad of Ghajini) எனும் அரசன் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவன்.
இந்திய இலக்கியங்களில் ஒன்றாகிய மகாபாரதக் கதையில் வரும் கௌரவர்கள்(துரியோதனனும் அவனது 100 சகோதர்களும்) ஆண்ட தேசம் இது எனக் கருதப் படுகிறது. இதில் துரியோதனின் தாய் காந்தாரி ஆப்கானிஸ்தானின் கந்தகார்(Kandahar) நகரத்தைச் சேர்ந்தவர் என்று கூறப் படுகிறது.
பல ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் இந்து இராச்சியமாகவும், ஒரு சில ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் பௌத்த நாடாகவும் இருந்த ஆப்கானிஸ்தான் தற்போது முழுக்க முழுக்க இஸ்லாமிய நாடு ஆகும். இந்நாட்டில் இந்துக்கள், புத்த மதத்தவர், சீக்கியர், கிறீஸ்தவர் ஆகிய மதத்தவர்கள் 1% இற்கும் குறைவான சிறுபான்மையினர் ஆவர்.

 55 மீட்டர்கள் உயரமான உலகின் மிகப் பெரிய புத்தர் சிலையாகிய 'பாமியான் புத்தர் சிலை' இந்நாட்டிலுள்ள பாமியான் மலையில் கிறீஸ்துவுக்கு பின் 6 ஆம் நூற்றாண்டில் செதுக்கப் பட்டது. உலகில் பாதுகாக்கப் படவேண்டிய முக்கியமான சின்னங்களுள் இதுவும் ஒன்று. மேற்படி வரலாற்றுச் சின்னம் 2001 ஆம் ஆண்டில் தாலிபான்களால் பீரங்கித் தாக்குதலின் மூலம் சிதைத்து அழிக்கப் பட்டது.

உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக