ஆக்கம்: வேதா இலங்காதிலகம், டென்மார்க்
நேரம் மாலை ஏழு மணியிருக்கும். இருட்டி விட்டது. அப்பா என்னைக் கூப்பிட்டு ”..அப்பப்பா வீட்டில் இன்றைய வீரகேசரியை எடுத்து வா!..வெளிச்சம் எடுத்துக் கொண்டு போ! (லன்ரன் அல்லது ரோச் லைட்)..”…என்பார். சாதாரணமாக ஒரு எழுபது மீட்டர் தூரமிருக்கும், கூப்பிடு தொலைவில் தான் ஆச்சி அப்பு வீடு உள்ளது. ( ஆச்சி அப்பு )
இருட்டில் போவதென்றால் எனக்குப் பொல்லாத பயம். ஒளிக் கருவியை எடுத்துக் கொண்டு வீட்டுப் படிக்கட்டால் மண் நிலத்தில் கால் வைக்கும் போது..”தோடுடைய செவியன்..”….என்று தேவாரம் பாடத் தொடங்கி, அங்கு இங்கு திரும்பிப் பார்க்காது, (அது தான் சுற்றி வர இருட்டே!) பாதையை மட்டும் பார்த்த படி, வேக வேகமாக நடந்து, (சில சமயம் ஓடுவதும் உண்டு,) அப்பு ஆச்சி வீட்டுப் படியேற..”பீடுடைய பிரமா புரமேவிய பெம்மானிவனன்றே..” என்று தேவாரம் முடியும்.
” என்ன பிள்ளை தனியாகவா வந்தாய்?..” என்பினம். ”..ஓ!… தேவாரம் பாடிய படி வந்தேன் ..” என்பேன். அப்பு சாய்மானக் கதிரையில் படுத்திருப்பார். தலைவாசல் மேசையில் விளக்கெரியும். ”..அப்பு பேப்பர் வாசித்து விட்டீர்களா?..”..என்பேன். பிறகு பத்திரிகையை ” அப்பாக்கு கொண்டு போகிறேன்…”…என்று கூறி எடுத்துச் செல்வேன்.
”…தனிய பயமில்லாமல் போவாயா?. நான் கூட்டிக் கொண்டு போய் விடட்டா..?”… என்பார் ஆச்சி. ”..இல்லையாச்சி!… நான் தனியப் போவேன்..” என்று கூறி..மறுபடி மண் நிலத்தில் கால் பதிக்கும் போது ஒரு தேவாரம், அது சொற்றுணை வேதியனாகவும் இருக்கும். வீடு போய்ச் சேர்ந்திடுவேன்…சில வேளை குடல் தெறிக்கும் ஓட்டம் தான். ஒரு நூறு மீட்டர் தூரத்தில் உள்ளது பெரியப்பாவின் வீடு. அவர்கள் பத்திரிகை வாங்கிப் படித்து விட்டு, அப்புவிற்குக் கொண்டு வந்து தருவார்கள். நாங்களும் அதைப் பகிர்வோம். (அப்பா,பெரியப்பா)
நான் இறுதிப் பக்க வலது மூலையில் வரும் சினிமாச் செய்தியைத் தவறாது வாசிப்பேன். அப்பா யாழ்பாணப் பட்டினத்தில் ஒரு புத்தகக் கடையில் வேலை செய்தார். தினமனி, தமிழ்நாடு போன்ற பத்திரிகைகள் அப்பா கொண்டு வருவார். பெரிய கொட்டை எழுத்தில் உள்ள தலைப்புகள் பார்த்து, பிடித்தமானதை வாசிப்பேன். இந்தியப் பத்திரிகைகளாதலால் நிறைய சினிமா செய்திகள் அழகழகான படங்களுடன் வரும், ஆவலாகப் பார்ப்பேன். அப்போது தான் கல்கி வாசிக்கப் பழகினேன். பாப்பா மலர், வாண்டு மாமா சிறு கதைகள், அதற்கு வரும் படங்கள் என்று ரசிக்கத் தொடங்கினேன் .
ஓவியர் லதா, மணியன் கீறும் அழகிய படங்களை அப்படியே பார்த்துக் கீறத் தொடங்கினேன். மாமிமார் இருவர் நான் கீறுவதைப் பார்த்து வடிவாக இருக்கு என்பார்கள். எனக்கே எனக்காகப், படம் வரையும் வரைதல் கொப்பி வைத்து, கீறிய படங்களை அலுப்பு வரும் நேரங்களில் நானே பார்த்து ரசிப்பேன்.
பாடசாலையில் நிறப் பென்சில்கள், தண்ணிரில் கரைக்கும் நிறங்கள் என்று, வகுப்பு வளர்ச்சியின் படி வளர்ந்தது எனது இந்த ஆர்வம்.
எனக்கு நல்ல ஞாபகம் சக்கரவர்த்தித் திருமகள், அலையோசை, குறிஞ்சி மலர் கதைகள் வந்;தன. மாமிமார் அவைகளை வாசிக்க, நான் பாப்பா மலர் வாசிக்க, வீரவிஜயன் சித்திரத் தொடர் பார்க்க என்று குறிப்பிட்ட நாளில் படலையடியில் அப்பாவிற்காக காத்திருப்போம். அப்பா துவிச் சக்கர வண்டியில் பட்டினத்திலிருந்து மாலை ஆறு மணிக்கு வருவார். சொல்லப் போனால் மாமிமாருக்கும் எனக்கும் போட்டி தான். நான் முந்தினால் ” ஓ!…எடுத்திட்டாயா!..” என்று மாமி சிரிப்பார். நான் வாசிக்கும் வரை காத்திருந்து அவர்கள் புத்தகத்தை எடுத்துப் போவார்கள். அதே போன்று அவர்கள் முந்தினாலும் நான் பொறுமையுடன் காத்திருப்பேன். அப்பு ஆச்சி வீட்டில் அவர்கள் வசித்தனர்…( மாமிமார் )
தனித் தனி வீடுகளில் வாழ்ந்தாலும் ஓரளவு கூட்டுக் குடும்பம் போன்ற வாழ்வில் பலவற்றை கண்ணுக்குத் தெரியாத மாதிரியே நாங்கள் பயின்றோம். இவைகளைத் தானே இன்றைய பிள்ளைகள் இங்கு தொலைத்து…..
அது ஒரு நிலாக் காலம்!
அது ஒரு கனாக் காலம்!
புது தேன் சிந்திய காலம்!
தொடரும்.