பாட்டுடைத் தலைவனையுடைத்தாய் பாடுபொருள் கொண்டு ஏட்டிலே வடிப்பது இலக்கியமானால், பாட்டுடைத் தலைவன் தெய்வீகத் திருமகனாய் திகழ்வது மட்டுமே திறமன்று. ‚
'' எரிமருள் வேங்கை கடவுள் காக்கும்
குறுகார் களனியின் உடலத்தங்கன்
ஏதிலாளன் கவலை கவற்ற
ஒருமுலை அறுத்த திருமாவுண்ணி''
என்னும் நற்றுணைச் செய்யுள் ஒன்றில் துன்பம் மீதுறப் பெற்ற பெண்ணொருத்தித் தன் முலை அறுத்தெறிந்த செய்தியை எடுத்துத் தன் காலத்தில் நடந்தேறிய உண்மை நிகழ்ச்சியாய் நூலைப் படிப்பவர்கள் யாவரும் நம்பும் வண்ணம் கதைபுனைந்த இளங்கோவடிகளின் இலக்கியம் மட்டுமே திறமன்று. நம்மோடு வாழ்ந்து நாமறியாச் செய்தி பல காட்டி, ஊரோடு நாம் வாழ உன்னத அறிவுரைகள் காட்டி நிற்கும் குடிமகளின் வாழ்வும் ஒரு இலக்கியமாய் இடம்பிடிப்பதும் திறமன்றல்லோ. இன்றிலிருந்து அந்திமாலையில் வெளிவரும் 'என்னையே நானறியேன்' இலக்கியம் ஒரு உண்மைக் கதை. கதைகள் யாவும் கற்பனையல்ல. வாழ்வின் தத்துவங்களே.
***
ஆக்கம்: கௌசி, ஜேர்மனி
என்னையே நானறியேன்
தாலி என்ற பந்தம் நாடு கடந்ததால், அத்தாலிப்பந்தம் வாழும்நாடு தேடி வந்தாள் வரதேவி. தாலி ஒரு பெண்ணுக்கு வேலி என்பது ஒரு பழமொழி. தாலி தாங்கும் பெண் தன் கணவனை என்றும் தன் மார்பில் தாங்குவாள் தாலம்பனை என்னும் பனையோலையினால், செய்யப்பட்ட மாலையையே ஆதி காலத்தில் மணமகன் பெண்ணுக்கு அணிவிக்கின்றான். அதனால், தாலம் தாலியானது. பனையோலை பழுதுபடும் என்ற காரணத்தினால், பின் மஞ்சள் கயிற்றில் அணிந்து பின்னர் உலோகத்தால் உருமாறி, இன்று பெண்ணின் எடைக்கு ஏற்ப தங்கத்தால் அணியப்படும் அந்தஸ்துத் தாலியாக தரம் உயர்ந்திருக்கின்றது. எப்படியாயினும் இவனுக்கு இவள் என்ற அந்தஸ்தைப் பெண்ணுக்குக் கொடுப்பது இந்தத் தாலியே. அத்தாலியே வரதேவியை ஜேர்மனிக்குத் தளம் இறக்கியது. பெற்றோர் பெருந்தவமிருந்து பெற்ற மகள் என்ற காரணத்தால், வரம் பெற்று வந்த மகளை 'வரதேவி' என்று வாயார அழைத்து அப்பெயரிட்டனர் பெற்றோர். இளமைக் கனவுகளின் இதயத் துடிப்போடு இரு பாதங்களையும் ஜேர்மனி மண்ணில் பதித்தாள். பாதணி அணிந்த பாதமென்றாலும், உடல் சில்லிட்டது. காலநிலை மாற்றத்தில் புது உணர்வொன்று ஏற்பட்டது. யாழ்ப்பாணம் இப்படி உடலை விறைக்கச் செய்த அநுபவத்தை அவள் எங்கே பெற்றிருக்கின்றாள். வெள்ளைத் தோல்களுக்கு நடுவே இலங்கைப் பெண்ணாள், நம்பிக்கை என்னும் ஆயுதத்தின் வலு தாங்கியவளாக நடந்தாள். நாடோ நாட்டுமக்களோ அவளைப் பயமுறுத்தவில்லை. சஞ்சிகையிலும் திரைப்படங்களிலும் மாத்திரமே கண்ட அந்த வெளிநாட்டு இன்பம், இன்று அவளை ஒட்டி வந்து பற்றிக் கொண்டது. மனமெங்கும் மகிழ்ச்சி பிரவாகித்திருந்தது. "என்னைப் போல் அதிர்ஷ்டசாலி யாருமில்லை" என்று தன்னைத்தான் அறிந்து கொண்ட களிப்பில் பெருமிதம் கொண்டாள். வழியெல்லாம் கொட்டிக்கிடந்த பனிநுரைகளை அள்ளிக்கொள்ளக் கொள்ளை ஆசை கொண்டாள்.
பனிமலர்கள் மேலிருந்து பவனி வர
நனியாவல் கொண்டதனைக் கன்னம் வைக்க
கனியாய்த் தன்கன்னம் சிவந்து வர
கழிபேருவ கையுடன் கணவன் கண்டாள்.
புதிய இடமும், புதிய சூழலும் பார்த்தவுடன் இன்பத்தை அள்ளித் தரும். அடியிலிருந்து கரும்பை உண்ணுமாப் போல் இன்பம் தோன்றும். நாளாகநாளாக இன்பத்தின் வேகம் குறைந்து செல்ல துன்பத்தின் பலம் சோபையுறும். முதல் நாள் கண்ட அநுபவம் 20 வருடங்கள் கடந்தும் அனைவருக்கும் இனிப்பாய் இருக்கும். களவாய்ப் பொதிஅடக்கிகளில் கொண்டுவந்து, நாடுகள் பல கடந்து, கால்நடையாய் வந்து, உண்ண உணவும் உடுக்க உடையுமின்றி, குளிரிலே வாடி, மழையிலே நனைந்து, குற்றுயிராய்க் குறித்த நாட்டிற்குள் கால் வைக்கும் போது ஏற்படும் அந்தத் தரிசன இன்பம் இருக்கின்றதே, காலங்கடந்தாலும் நெஞ்சில் பசுமையாய்ப் புலப்படும். இன்பமும் துன்பமும் சந்தர்ப்பம் சூழ்நிலைக்கேற்பவே அமைகிறது. சந்தர்ப்பம் வந்தமைவதும் அவர்கள் சந்திக்கும் மனிதர்களையும் சம்பவங்களையும் பொறுத்தது. நாம் கேட்டுக்கொண்டு இப்பூமியில் வந்து பிறப்பதில்லை. ஏற்றபடி வாழ்வு அமைவதும் இல்லை. சாதித்தவர், வாழ்வைத் தன் முயற்சியில் சாதித்துவிட்டேன் என்பார். முயன்றுமுயன்று தோற்றவர், முடிவு என் கையில் இல்லை என்பார். இந்த வரதேவி என்ன வரம் பெற்று ஜேர்மனிக் காற்றைச் சவாசிக்க வந்தாளோ?.....
எதிர்நின்ற தன் குங்குமத்திற்குச் சொந்தக்காரன். குழந்தை போல் அவளை அணைத்தெடுத்தான். அவள் வாழ அழகுபடுத்திய அந்த அற்புத அரண்மனையாம் வீட்டிற்குள் அழைத்து வந்தான். 'எப்படி, வரா! இந்தவீடு உமக்குப் பிடிச்சிரிக்கே?'' அன்பொழுகக் கேட்டான் அவள் கணவன் கரண். ஆனால், வரதேவியோ வீட்டை நோக்கினாள். நெஞ்சிற்குள் ஏதோ ஊசிபோல் குத்தியெடுத்தது ...
(தொடரும்)
11 கருத்துகள்:
Nice
தங்களின் ஆக்கம் ரொம்ப அருமையாக உள்ளது.
இலக்கிய நயம் செறிந்த அருமையான தொகுப்பு . வரா ஏன் தான் வாழும் வீட்டை பார்த்து நெஞ்சில் ஊசி குத்தியது போன்று உணர்ந்தாள்? ஆவலுடன் காத்திருக்கிறேன் .அடுத்த தொடருக்காக . நன்றி
அருமையான இணையப்பக்கத்தில் இனிய தொடர்கள். இந்த தொடரில் என்னை உடன் கவர்ந்த விடையம் கௌசியின் தமிழ். மிகவும் அழகாக உள்ளது. வாழ்த்துக்கள்.
Your use of metaphor is very good. For example "எதிர்நின்ற தன் குங்குமத்திற்குச் சொந்தக்காரன்" I think that is really good. I can guess that you also write poems .. Very well written. Super.
The pictures is very good..
Super good
Romba nalla irukkirathu
Vallathukal.
excellent
super do you like this article to the fuature
வாழ்த்துகள் சொன்ன இதயங்களுக்கு நன்றி. இவை எழுதத் தூண்டும் ஊட்டச்சத்துக்கள் அல்லவா
கருத்துரையிடுக