ஆக்கம்:வேதா இலங்காதிலகம், டென்மார்க்.
காலையுணவு முடித்து அறைக்கு வந்தவுடனேயே கணவர் தொலைக் காட்சியில் செய்தி தான் கேட்பார்.
செய்தியின் பின்ணனியில் படங்கள் வருவதால் ஓரளவு என்ன விடயமென்று ஊகிக்க முடிந்தது. தாய்லாந்து இளவயதினர் ஆணும் பெண்ணுமாகவே செய்தி வாசித்தனர். அவர்கள் மொழியின் தொனியில் தேவையான இடத்தில் அழுத்தம் கொடுத்து செய்தி வாசித்த முறை மிக கம்பீரமாகவே இருந்தது. தமது மொழியை அவர்கள் அழகாகக் கையாண்டனர்.
ஒவ்வொரு வசனங்களின் முடிவில் முற்றும் தரிப்புக்கு முன் இறுதிச் சொற்களை உச்ச சுருதியில் எம்மவரில் சிலர் உயர்த்தி ராகம் இழுப்பது போல அசிங்கம் எதுவுமே செய்யவில்லை. வாசித்தார்…கூறினார் என்று முடிக்கும் போது அந்த ர்…ர்..க்குக் கொடுக்கும் அழுத்தம் இருக்கே அது சொல்லும் தரமன்று…( ஒரு வகையில் தமிழ் கொலை தான் என்பது என் கருத்து.)
எமது அழகான தமிழை, தாம் இலக்கம் ஒன்றான செய்தியாளர் என்ற நினைப்பில் சிலர் செய்தி வாசிப்பில் மேலே கூறிய முறையில் இங்கு அசிங்கம் பண்ணுவதை இந் நேரத்தில் என்னால் கூறாமல் இருக்க முடியவில்லை.
ஆரம்ப நாட்களில் அழகாகச் சித்திரம் போல செய்தி வாசிப்பார்கள். நாம் ரசிப்போம். நாட்கள் செல்லச் செல்ல, சிறிது அனுபவம் வர தலை, கண்களால் அபிநயங்கள் பிடித்து நாடகமாகவே இங்கு ஆக்குகிறார்கள் செய்தி வாசிப்பை.
சரி மேலே தொடருவோம்.
பத்து மணி போல நாம் வெளியே வெளிக்கிட்டோம்.
முதலாவதாகத்
தாய்லாந்தில் வாங்கப் போகும் பொருட்களைக் கடல்வழி மார்க்கமாக டென்மார்க் அனுப்புவதற்குத் தரகர்களைத் தேடினோம். அங்கு தடுக்கி விழுந்தாலும் தரகர்கள், cargo ஏஐன்சிக் கடையாகவே இருந்தது. மூட்டை மூட்டையாகப் பொதிகளைக் கட்டிக் கப்பலுக்கு அனுப்ப, கனரக வாகனங்களில் தெருவை அடைத்து ஏற்றியபடியே உள்ளனர்.
இந்தத் தரகு வேலையோடு, உடம்பு பிடித்து விடுதலையும், அதாவது மசாஜ் செய்வதையும் அவரவர் தங்கியிருக்கும் வாடி வீட்டினரும் செய்கின்றனர்.
விலைகளிலே தான் வித்தியாசம் உள்ளது.
இலங்கைத் தமிழர், சிங்களவர், ஆபிரிக்கர், இந்தியர், மொறிசியர், பிலிப்பைன்ஸ் என்று பல்லின மக்களும் வந்து பொருட்கள் வாங்கிப் பொதி பொதியாக சுமந்தபடி தாம் தங்கியிருக்கும் வாடி வீட்டிற்கு நடக்கின்றனர். யாரைப் பார்த்தாலும் கையில் ஒரு பெரிய பொதியுடனே தான் நடக்கிறார்கள். இவைகளைப் பார்க்க எமக்கு ஆச்சரியமாகவே இருந்தது.
கடைகளில் ஒரு பொருளைக் கண்டு வாங்க விலை கேட்டால் 200 பாத் என்கிறார்கள். ஒரு பொருளை 2 அல்லது 3 ஆக வாங்கினால் மொத்த வியாபார விலை 180, 160 பாத் என்கிறார்கள். அதையே 10 பொருளாக வாங்குகிறோம் என்றால் 120 அல்லது 80 பாத்துக்கும் விலையில் இறங்குகிறார்கள் பேரம் பேச வேண்டும். பயணத் தகவலில் இதையும் தருகிறார்கள். பொருட்கள் மிக மிக மலிவு தான்.
இரண்டாவதாக
நாம் தங்கிய அறையில் ஒரு பழைய மணம், பூஞ்சண மணம், தூசி மணம் வந்தது. அது எனக்கு அருவருப்பாக இருந்தது. இரண்டு இரவுக்குப் பிறகு அறைக்கு அங்கேயே தொடர்ந்து பதிய வேண்டும், அல்லது வேறு இடம் தேட வேண்டும். நாம் வேறு இடம் தேட விரும்பினோம்.
மூன்றாவதாக
உடம்பு பிடித்து விடுதல், மசாஜ் செய்ய இடம் தேடினோம். தெருவுக்குத் தெரு உடம்பு பிடித்து விடும் இடங்கள் இருந்தன. முதலில் உடம்பு பிடித்து விடும் நிலையத்திற்குச் சென்றோம். ஒரு மணி நேரம் உடம்பு பிடித்து விட, 180 பாத் அதாவது 30 குரோனர்கள். 60 நிமிடங்களும் பிடித்து விடுகிறார்கள். இதுவே டென்மார்க்கில் என்றால் ஒரு மணித்தியாலத்திற்கு 300 குரோனர்கள். ஒரு மணித்தியாலம் என்று கூறி 20 நிமிடங்களே பிடித்து விடுவார்கள். எதுவும் கூற முடியாது. ஒரு தடவை அது பற்றி நான் டென்மார்க்கில் கேட்டும் பார்த்தேன். அது அப்படித் தான்.
முதலில் 180 பாத் என்று தயங்கினேன். 6 ஆல் பிரித்து 30 குரோணர் தானே என்று ஊக்கப் படுத்தியது கணவர் தான்.
நான் தாய் மசாஜ் ம், (body massage) ம்,
கணவர் பாதம் மசாஜ்ம் செய்தோம்.
பத்து வருடமாக டென்மார்க்கில் தேவை ஏற்படும் போது நான் இந்த மசாஜ்க்குச் செல்கிறேன்……. 10 வருடங்கள் என்பது மிக நீண்ட காலமல்லவா! …..