சனி, ஏப்ரல் 14, 2012

தாரமும் குருவும் பகுதி - 7.1

ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன்
(ஆசிரியர்களை அவதூறு செய்வது எனது நோக்கமல்ல)
பகுதி 7.1
இந்தத் தொடரை எழுத ஆரம்பித்த போது என் மனதில் சில சங்கடமான உணர்வுகள் ஏற்பட்டன. அதாவது என் பாடசாலை நாட்களில் மனதுக்குப் பிடிக்கும் விதத்தில் நடந்து கொண்ட ஆசிரியப் பெருமக்களைப் போற்றியும், மோசமாக நடந்து கொண்ட ஆசிரியர்களைத் தூற்றியும் எழுதுவது தார்மீக அடிப்படையில் சரியா? தவறா? இவ்வாறு சிந்தித்துப் பார்த்ததில் எனக்குத் தோன்றியது இதுதான் "என்னைத் தண்டித்த, முரட்டுத் தனமாக நடந்து கொண்ட ஆசிரியர்களை அவதூறு செய்வதற்கு நான் இந்தத் தொடரை எழுத ஆரம்பிக்கவில்லை, எனது பள்ளி நாட்களின் மனப் பதிவுகள் சிலவற்றை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதே எனது நோக்கம். இதில் சிந்திப்பதற்கு என்ன இருக்கிறது? மேற்படி தொடரில் நான் குறிப்பிடும் ஆசிரியர்கள் உயிரோடு இருந்தால் தமது செய்கைகளுக்காக வெட்கித் தலை குனிவர்.(அதுவும் இதனை அவர்கள் வாசிக்க நேர்ந்தால் மட்டுமே) என்னால் பாராட்டப் படுபவர்கள் அதனை அறிய நேர்ந்தால் தங்களின் பண்பான செயல்களின் நிமித்தம் பெருமிதம் அடைவர் அவ்வளவே. இன்னும் ஒரு விடயத்தையும் எனது தொடர் சாதிக்கக் கூடும். அதாவது ஆசிரியத் தொழிலுக்குப் 'புதியவர்கள்' என இருக்கும் ஒரு சிலரேனும் எனது இந்தத் தொடரைப் படிக்க நேர்ந்தால் ஒரு ஆசிரியர் எவ்வாறு இருக்க வேண்டும்? எவ்வாறு இருக்கக் கூடாது என்பதை முடிவு செய்வதற்கு உதவியாக எனது தொடரும் ஒரு சிறிய 'மணற்துகள்' ஆக இருந்துவிட்டுப் போகட்டுமே.
இந்தத் தொடரை எழுத ஆரம்பித்த போது எனது பள்ளி வாழ்க்கையில் நான் சந்தித்த மனிதர்களிடம் இருந்து கண்டனக் கணைகளை அல்லது கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிடும் என எண்ணினேன். என்ன ஆச்சரியம்? அப்படி ஒன்றும் பெரிதாக வரவில்லை. இருப்பினும் எனது நண்பர்களில் ஒருவராகிய 'அமலதாஸ்' என்பவர் கடந்த 31.03.2012 அன்று அந்திமாலையில் வெளியாகிய மேற்படி தொடரில் நான் தெரிவித்த ஒரு கருத்து சம்பந்தமாக மென்மையான முறையில் தனது 'மறுப்பினைத்' தெரிவித்திருந்தார். அவர் என்ன கூறியிருந்தார் என்பதை அறிய ஆவல் உள்ளவர்களுக்காக அவரது கருத்துரையைக் கீழே தருகிறேன்.
##########################################
amalathas சொன்னது...
வணக்கம் தாசன் உங்களது தாரமும் குருவும் 6 .7 மற்றும் 6 .9 இல் குறிப்பிடுவது போல 1980 களில் எமது பாடசாலையில் வசதிக் கட்டணம் செலுத்த முடியாத பெற்றோருக்காய், மாணவர்கள் அதிபரினால் தண்டிக்கப்பட்டதாய் நீங்கள் சொல்வதை என்னால் நினைவுகூர முடியவில்லை. அப்போதைய அதிபர் பொன்.தியாகராசா அவர்கள் அல்லைப்பிட்டியின் அனைத்துக் குடும்பங்களின் நிலைமைகளையும் அநேகமாய் அறிந்திருந்தார். அவர் ஏழ்மைக்காய் ஒரு மாணவனைத் தண்டித்ததாய் அறிந்ததுமில்லை.நம்பவும் முடியவில்லை. ஒருவேளை வசதி படைத்த ஒரு மாணவன் அயத்து மறந்து போனதற்காயோ அல்லது வசதிக்கட்டணத்தை அசட்டை செய்ததற்காகவோ தண்டித்திருக்கலாம். அதுமட்டுமல்லாமல் வாத்தியாரிடம், கல்வியில் பின்தங்குவதற்காகவும் குழப்படிக்காகவும் ஏழை மாணவர்கள் அடிவாங்குவதைக்காட்டிலும், குழப்படி குறைந்த ஓரளவு கெட்டிக்கார மாணவர்களான வாத்திமாரின் பிள்ளைகள் அப்பா அம்மா கண்முன்னாலேயே பின்னியெடுக்கப் பட்டத்தை நான் பார்த்திருக்கிறேன்.(எனினும் ஊரே மெச்சும் அதிபராய் பல்லாண்டுகாலம் எம் பள்ளியை ஆண்டிருந்தாலும், அவரது அன்றைய கண்டிப்பு முறையை 'இன்று' என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.)நல்லது தொடர்ந்து எழுதும் வாசிக்க ஆவலாய் உள்ளோம்.
1/04/2012 10.17 PM
########################################################################
நண்பர் அமலதாஸின் கருத்துக்கு எனது நன்றிகள். தொடர்ந்து பல வாரங்கள் இத் தொடரை ஒரு புள்ளியிலிருந்து நகர்த்திச் செல்வதற்குத் தேவையான ஊக்கத்தை எனக்கு இந்தக் கேள்வியின் மூலம் நீங்கள் வழங்கியுள்ளீர்கள்.பாராட்டுகிறேன். நான் இத் தொடரில் மேற்படி அதிபரின் பெயரைக் குறிப்பிடுவதைத் தவிர்த்திருந்தேன். காரணம் ஐரோப்பாவில் வாழும் அவரது உறவுகளுக்குத் தர்ம சங்கடமான நிலையைத் தோற்றுவித்து விடக் கூடாது எனும் ஒரு உளப்பாங்கினால் ஆகும். மற்றபடி நீங்கள் குறிப்பிடும் அதிபர் பொன்.தியாகராசா அவர்கள் ஒரு அதிபர் எப்படியெல்லாம் தனது பணிக் காலத்தில் நடந்து கொள்ளக் கூடாதோ, அப்படியெல்லாம் நடந்து அந்தப் பணியின் 'மகிமையைக்' குறைத்துள்ளார் என்றே சொல்வேன். இரண்டு வாரங்களுக்கு முன்னர் நான் எழுதிய இத் தொடரில் மேற்படி அதிபர் "வசதிக் கட்டணம் கட்டாத பிள்ளையை அடித்தார்" என்று எழுதியதை உங்களால் ஏற்றுக் கொள்ளவோ, ஞாபகத்தில் கொண்டு வரவோ முடியவில்லை. ஆனால் அந்தச் செய்கையால் பாதிக்கப் பட்ட மாணவர்களில்/அடி வாங்கியவர்களில் நானும் ஒருவன் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? 
1983 ஆம் ஆண்டின் முற்பகுதி:- எங்கள் குடும்பத்தில் எனது அண்ணன் 'ஈசன்' என அழைக்கப்பட்ட 'லிங்கேஸ்வரன்', நான், மற்றும் எனது தம்பி 'வாசன்' என அழைக்கப்படும் 'லிங்கவாசன்' ஆகிய மூவரும் அல்லைப்பிட்டிப் பராசக்தி வித்தியாசாலையில் வெவ்வேறு வகுப்புகளில் படித்துக் கொண்டிருந்தோம். மூவரும் அம்மம்மா(பேர்த்தியார்) வீட்டிலிருந்தே பள்ளிக்குச் சென்று வந்தோம். எனது பெற்றோர்கள் மண்டைதீவில் வசித்து வந்தனர். அது என்ன காரணத்தால் என்று விளக்குவதாயின் 'முப்பது அத்தியாயங்கள்' எழுத வேண்டும். ஒவ்வொரு முறையும் வசதிக் கட்டணம் செலுத்தும் காலம் வரும்போது தம்பி வாசன் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. மூன்று பிள்ளை படித்தால் ஒரு பிள்ளைக்கு 'விதிவிலக்கு' என்ற கோட்பாடு இதற்குக் காரணம். அந்த ஒரு தடவை நாங்கள் (நானும் என் அண்ணனும்) பணம் செலுத்தத் தாமதம் ஆகி விட்டது. வகுப்பில் வசதிக் கட்டணம் செலுத்தாத மாணவர்களை, காலையில் கூட்டுப் பிரார்த்தனை முடிந்து வகுப்புத் தொடங்கும் நேரம் வகுப்பாசிரியர் அந்த மாணவனை/மாணவியை வகுப்புக்கு வெளியே நிற்க விடுவார். அதிபர் வந்து விசாரித்து, இரண்டு மூன்று பிரம்படிகள் கொடுத்த பின்னர் மாணவன்/மாணவி வகுப்பிற்குச் செல்ல அனுமதிக்கப் படுவார். நானும் என் அண்ணனும் இன்னும் சில ஏழை மாணவர்களும் வெளியே நின்றோம். எங்கள் ஒவ்வொருவருக்கும் தலா மூன்று 'பிரம்படிகள்' தண்டனையாகக் கிடைத்தன. இந்த நடைமுறை 1984 வரை அதிபர் பொன்.தியாகராசா அவர்கள் ஓய்வு பெற்றுச் செல்லும் வரை நடைமுறையில் இருந்தது. நீங்கள் மறந்தால் நான் என்ன செய்ய முடியும்? ஒவ்வொரு முறையும் ஒழுங்காகப் பணம் தந்த எனது பேத்தியாரிடம் அந்த ஒரு தடவை மட்டும் பணம் இருக்கவில்லை. "இந்த முறை உங்க அம்மா அப்பாட்டப் போய்க் கேழுங்கோடா" என்று எங்களை மண்டைதீவுக்கு அனுப்பி விட்டார் எங்கள் பேர்த்தியார். பெற்றோரிடம் சென்று பணம் கேட்டோம். இரண்டு நாளில் பணம் வரும் நீங்கள் பள்ளிக்கூடம் ஒழுங்காகச் செல்ல வேண்டும் எனப் பணித்தனர் பெற்றோர். "காசு கொண்டு போகாமல் பள்ளிக்குப் போனால் அதிபரிடம் அடிவாங்க வேண்டி வரும் ஆதாலால் பணம் வரும்வரை நாங்கள் பள்ளிக்குச் செல்ல மாட்டோம்" என்று கூறி நாங்கள் இரண்டு நாடகள் பள்ளிக் கூடத்திற்கு 'கள்ளம் அடித்தோம்'(மட்டம் போட்டோம்) நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த எங்கள் தந்தையார் ஒரு நாள் மட்டும் தனது கள்ளுக் கடைக் காசைத் தியாகம் செய்து பள்ளிக்குப் பணத்தோடு அனுப்பி வைத்ததார். அதிபரிடம் பிரம்படி வாங்கியதும், இரண்டு நாட்கள் பள்ளிக்கு மட்டம் போட்டதும், எங்களிடம் மொத்தமாக 6 ரூபாய்(3+3=6Rs)இல்லாத காரணத்தால் என்பதை நினைவில் கொள்ளுங்கள். என்னைப் போல் அடி வாங்கிய, காசு இல்லாததால் பள்ளிக்கு மட்டம் போட்ட அந்தப் பள்ளியின் பழைய மாணவர்கள் பூமிப் பந்தின் பல மூலைகளில் இருப்பார்கள். ஆனால் இதையெல்லாம் அவர்கள் வெளியே சொல்ல மாட்டார்கள். காரணம் "அத்தகைய நிலையில் எல்லாம் வாழ்ந்தோம்" எனக் கூறித் தங்கள் கௌரவத்தை இழக்க யாரும் விரும்புவார்களா என்ன? என் பேர்த்தியார் அடிக்கடி கூறும் வாசகம் ஒன்று நினைவுக்கு வருகிறது. "பஞ்சம் போய் விடும், ஆனால் பஞ்சத்தினால் பட்ட 'வடு' போகாது"
(மீண்டும் சந்திப்போம்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.

3 கருத்துகள்:

amalathas சொன்னது…

நல்லது தாசன். எனது கருத்துரைக்கு உங்கள் பதில் நன்றாகவே அமைந்திருந்தது. ஒரே தரமான மாணவர்கள் (நானும் நீரும்),ஒரே மாதிரியான வாழ்க்கைத் தரம், ஒரே மாதிரியான பெற்றோர் எனினும் அதிபரின் அணுகுமுறை வேறுபட்டிருக்கிறது.(எனக்கு அடி விழ இல்லை.) உங்களை மறுத்தோ, என்னை ஆதரித்தோ நாமே எழுதிக்கொள்ளுவதை விட, நூறாண்டுகால பழமைகொண்ட எமது பள்ளியின் மாணவர்கள் உலகெங்கும் பரவியிருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து மூன்றாம் தரப்பு கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். (நிச்சயம் பலர் உங்களின் வாசகர்களாக இருப்பார்கள்.) எனினும் உங்கள் கட்டுரையில் எழுதியது போல, எங்கள் பள்ளியில் படித்ததையே'பஞ்ச வடு'எனப் பலர் நினைப்பதனால் கருத்துரை எழுதுவார்களா என்பது ?.

விசேட குறிப்பு: உங்கள் மூன்றாம்(அல்லது)நான்காம் வகுப்பு ஆசிரியையின் அமுதவிழா நெருங்குகிறது. விழா மலரில் உங்கள் நேர்மையான கட்டுரையை எதிர்பார்க்கிறேன்.

Suthan france சொன்னது…

Very sad our country like this;, perans are poor they ar got salary a littel, but shool teacher are never thinking ours sitivation. here is totaly diffirant as life.

Allaipiddy old Student சொன்னது…

I'm also a student from Allaipiddy... Thiyagarasa was a very strict... If he was angry, it's us he shows anger at giving beatings .. He must surely have had much lower self-esteem and other psychological problems since he behaved like that. Lucky for me to get rid of him after a few years of his beatings. I had marks in the back as he has made.

கருத்துரையிடுக