ஞாயிறு, மார்ச் 16, 2014

இதயம் உள்ளவர்கள் இந்தப் படத்தைப் பார்க்காதீர்கள்!

ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன்
இந்த வருடத்திற்கான ஆஸ்கார் விருதுகளில் மூன்றை வென்ற, ஸ்டீவ் மெக்குய்ன்(SteveMcQueen) அவர்கள் இயக்கி 'சிவ்டெல் எஜியோபர்'(Chiwetel Ejiofor) கதாநாயகனாக நடித்த 'டுவெல்வ் இயர்ஸ் எ ஸ்லேவ்' (12 Years a Slave / "ஒரு அடிமையாகப் பன்னிரண்டு ஆண்டுகள்") என்ற ஆங்கிலத் திரைப்படத்தை நேற்று முன்தினம்(14.03.2014) டென்மார்க்கில் உள்ள ஒரு திரை அரங்கில் என் மனைவியுடன் சென்று பார்த்தேன். எனது வாழ்நாளில் கடந்த 1997 ஆம் ஆண்டிலிருந்து ஆஸ்கார் விருது பெறும் படங்களை உடனடியாகவோ அல்லது சிறிது தாமதமாகவோ பார்த்து விடுவது என்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். இவற்றில் சில படங்கள் என்னை ஏமாற்றியுள்ளன, சில படங்களின் வெற்றி என்னை ஆனந்தத்தில் மிதக்க வைத்தது. உதாரணமாக டைட்டானிக்(Titanic), மற்றும் ஸ்லம்டோக் மில்லியனர்(Slumdog Millionaire), படங்கள் விருதுகளை அள்ளிக் குவித்தபோது ஆனந்தத்தில் மிதந்திருக்கிறேன். அதிலும் டைட்டானிக் படத்தின் கடைசி மணித்துளிகள் என்னைக் கலங்கி அழ வைத்தது. இந்திய நடிகர்களை மட்டுமன்றி நமது 'இசைப்புயல்' ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களையும் 'ஸ்லம்டோக் மில்லியனர்' படம் ஆஸ்கார் வெற்றியின் சிகரத்திற்கு அழைத்துச் சென்றபோது மகிழ்ச்சியில் திக்கு முக்காடிப் போனேன். ஆனால் 'அமெரிக்கன் பியூட்டி' படம் சிறந்த படத்திற்கான விருது, சிறந்த இயக்குனருக்கான விருது, சிறந்த நடிகருக்கான விருது, சிறந்த கதைக்கான விருது, சிறந்த புகைப்படக் காரருக்கான விருது என பல ஆஸ்கார் விருதுகளை அள்ளியபோதும், 'மில்லியன் டாலர் பேபி'(Million dollar Baby) திரைப்படம் 2004 ஆம் ஆண்டிற்கான நான்கு ஆஸ்கார் விருதுகளைத் தட்டிச் சென்ற போதும் என்ன காரணத்திற்காக இந்தப் படங்கள் விருது பெற்றன என்று அன்றிலிருந்து இன்றுவரை மூளையைக் குடைந்த வண்ணம் இருக்கிறேன்.
சரி தற்போது 2013 ஆண்டிற்கான சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குனருக்கான விருதுகளை வென்ற 'டுவெல்வ் இயர்ஸ் எ ஸ்லேவ்' படத்தின் விடயத்திற்கு வருகிறேன்.கடந்த ஆண்டு நவம்பரில் இந்தப் படம் வெளியாகியதிலிருந்து இந்தப் படத்தைப் பற்றிய எனது எதிர்பார்ப்புகளும் அதிகரித்துக் கொண்டே வந்தது. போதாக் குறைக்கு நான் தினமும் பல்கலைக் கழகத்திற்குச் செல்லும் விரைவுப் பேருந்தில் பொருத்தப்பட்டிருக்கும் தொலைக்காட்சியில் இந்தப் படத்தைப் பற்றிய விளம்பரத்தையும், துண்டுக் காட்சிகளையும் காட்டிக்கொண்டே இருந்தார்கள். டேனிஷ்(டென்மார்க்) ஊடகங்கள் படத்தைப் பற்றியும், படத்தின் கதையைப் பற்றியும் புகழ்ந்து எழுதத் தொடங்கி விட்டன. எனது நட்பு வட்டத்தில் உள்ளவர்களும், என் மனைவியின் நட்பு வட்டத்தில் உள்ளவர்களும் படத்தை ஆகா, ஓகோ என்று பாராட்டத் தொடங்கி விட்டார்கள். அப்புறமென்ன?படத்தைப் பார்த்தே தீரவேண்டும் என்று கடந்த வெள்ளிக்கிழமை கிளம்பி விட்டோம். ஆனால் ஒரு விடயத்தை இவ்விடத்தில் குறிப்பிட வேண்டும். "உங்கள் இதயம் மிகவும் இளகியதாக இருந்தால் இந்தப் படத்தைப் பார்க்காதீர்கள் என்றோ, இரண்டேகால் மணித்தியாலங்கள் நீடிக்கும் இந்தப் படத்தைப் பார்க்கும்போது நீங்கள் ஒரு தடவையாவது கதறி அழ நேரிடும் என்றோ யாரும் எம்மை எச்சரிக்கவில்லை.
படத்தின் கதையை நான்கே வரிகளில் கூறி விடலாம். அஃதாவது அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்திற்கு அண்மையில் உள்ள சரடோகா(Saratoga) எனும் சிறிய நகரத்தில் தன் மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள் சகிதம் நிம்மதியாக, மகிழ்ச்சியாக, சுதந்திரமாக வாழ்ந்து வரும் மரவேலைத் தொழிலாளியும், சிறந்த பிடில் கலைஞனுமாகிய சாலமன் நார்த் அப்('சிவ் டெல் எஜியோபர்') என்ற கறுப்பின அமெரிக்கனை, கயவர்கள் சிலர் எவ்வாறு ஆசை வார்த்தைகள் கூறி, நயவஞ்சகமாக ஏமாற்றி 'வாஷிங்டன் நகரத்திற்கு அழைத்துச் சென்று அடிமையாக விற்கிறார்கள் என்பதும், அங்கு அவனை அடிமைகளை வாங்குபவர்களிடம் 600 டாலர்களுக்கு விற்கப்படுவதும், அங்கிருந்து அவன் கைவிலங்கு மற்றும் கால் விலங்குகள் மாட்டப்பட்டு 'ஒர்லியான்ஸ்' மாநிலத்திற்கு அழைத்துச் செல்லப் பட்டு, மனிதர்களின் இரத்தத்தையும், வியர்வையையும் பிழிந்தெடுத்து வேலை வாங்குகின்ற மிகவும் கொடிய பண்ணை உரிமையாளர்களால் எவ்வாறு ஈவிரக்கமற்ற முறையில், மனித நாகரிகமே வெட்கித் தலை குனியும் அளவிற்கு மிகவும் கொடூரமான முறையில் துன்புறுத்தப் படுகிறான் என்பதும். அந்த நரகத்திலிருந்து பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து எவ்வாறு விடுதலை அடைந்து தனது மனைவி, பிள்ளைகளைச் சென்றடைகிறான் என்பதும்தான் கதை.
கதாநாயகனாக வரும்  'சிவ்டெல் எஜியோபர்' நடிப்பில் அத்தனை
முன்னணிக் கதாநாயகர்களையும் தூக்கிச் சாப்பிடும் அளவிற்கு நடித்திருக்கிறார். அவர் 12 வருடங்கள் வாழும் 'வலிசுமந்த வாழ்க்கை' எம் இதயங்களை வலிக்கச் செய்கிறது. அவரோடு நாமும் படாத பாடு படுவதாக உணர வைக்கிறார். பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு அடிமை பட்ட துன்பங்கள் அத்தனையும் எங்கள் கண்முன்னால் கொண்டு வந்து, இதயங்களைப் பிழியும் அவருடைய நடிப்பிற்கு எத்தனை ஆஸ்கார் கொடுத்தாலும் தகும். ஆனால் இந்தப் படத்தில் அவருக்கு விருது கிடைக்கவில்லை. அது எனக்குப் பலத்த ஏமாற்றமே. 
படத்தில் 'பற்ஸீ' என்ற அடிமைப் பாத்திரத்தை ஏற்று நடித்த மெக்ஸிக்கன்+கென்யா கலப்பு இனத்தைச் சேர்ந்த கறுப்பின நடிகை லுப்பிட்டா நியோங்கோ(Lupita Nyong'o) ஒரு சில கட்டங்களில் மட்டுமே வந்து போனாலும், படத்தில் தனது பாத்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். ஓய்வு, ஒழிச்சல் ஏதுமின்றி, பண்ணையில் காலை முதல் மாலை வரை முதுகு ஒடியப் பாடுபட்டு உழைப்பதிலும், இரவானால் தனது எஜமானனின் பாலியல் தேவைகளை பூர்த்தி செய்வதில் படும் நரக வேதனை, இம் என்றால் குற்றம், அம் என்றால் குற்றம் கண்டு பிடிக்கும் எஜமானியிடம் அனுபவிக்கும் சித்திரவதைகளை இவரை விட வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக நடித்திருக்க முடியாது. இவர் தனது எஜமானனால் மரத்தில் நிர்வாணமாகக் கட்டப்பட்டு, செய்யாத குற்றத்திற்காக உடம்பு முழுவதும் சவுக்கால் அடிக்கப்பட்டு, உடலில் அத்தனை தோலும் பிய்ந்து தொங்க, இரத்த வெள்ளத்தில் கிடக்கும் காட்சி வந்தபோது எம்மோடு திரையரங்கத்தில் படம் பார்த்துக் கொண்டிருந்த இளைஞர், யுவதிகள் உட்பட அத்தனை டேனிஷ் பார்வையாளர்களும் கதறி அழத் தொடங்கி விட்டார்கள். சிலர் தங்கள் அருகில் இருந்த தமது கணவன் அல்லது மனைவியின் கண்ணீரைத் துடைப்பதற்குக் காகிதக் கைக்குட்டை கொடுத்து உதவியதைக் கண்டேன். இவருக்கு இந்தப் படத்தில் சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கார் விருது கிடைத்தது 'தகுதியும், நியாயமும்' ஆன செயலே.
படப் பிடிப்பிற்கான தளத்தை தேர்வு செய்வதில் இயக்குநர் மிகவும் அவதானமாக செயற்பட்டிருக்கிறார். காட்டுக்குள் கதை நடக்கும்போது நாமும் காட்டுக்குள் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. வயல் வெளிகளில், பண்ணைகளில், பருத்தித் தோட்டங்களில், காலை மற்றும் மாலை வேளைகளில் கதை நகரும்போது ஒளிப்பதிவாளரின் திறமை பளிச்சிடுகிறது. நாமும் அவ்விடத்தில் குளிருக்குள் நிற்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. 'பாலு மகேந்திராக்கள்' அமெரிக்காவிலும் இருக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது. என்னைக் கேட்டால் ஒளிப்பதிவாளருக்கு ஒரு ஆஸ்கார் விருதைப் பரிந்துரை செய்திருப்பேன். இசையமைப்பாளர் பிறப்பால் ஜெர்மானியராகிய ஹான்ஸ் ஸிம்மர்(Hans Zimmer) ஆவார். பயமுறுத்த வேண்டிய இடங்களில் 'இசைப் புயலையும்' கிராமத்தில் தாலாட்டும் இடங்களில் 'இசை ஞானியையும்' நினைவூட்டுகிறார். இவரும் ஆஸ்கார் விருதுக்குத் தகுதியானவர் என்பது எனது கருத்து.
இரண்டேகால் மணி நேரத்தில், 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு கறுப்பின மனிதனின் 'உண்மைக் கதையை', துன்பியல் கதையை ஐரோப்பியர்களுக்கும், அமெரிக்கர்களுக்கும் 'பொட்டில் அறைந்தாற்போல்' இந்த இயக்குநரைத் தவிர(Steve McQueen) வேறு யாரும் திரைப்படமாகக் காட்டியிருக்க முடியாது.
படம் முடிந்து திரை அரங்கத்தை விட்டு வெளியே வரும்போது எங்களோடு படம் பார்க்க வந்த பல பெண்களின், ஆண்களின்(டேனிஷ் இனத்தவர்) முகங்கள் அழுததால் சிவந்திருந்ததை அவதானிக்க முடிந்தது. படம் பார்க்கும்போது நானும் என் மனைவியும் அழுதோமா இல்லையா என்பதை உங்கள் ஊகத்திற்கே விட்டு விடுகிறேன். நான் கூற விரும்புவதெல்லாம் உங்கள் இதயம் மிகவும் இளகியதாக இருந்தால் இந்தப் படத்தைப் பார்க்காதீர்கள். மன வலிமை உள்ளவர்களும், ஆபிரிக்க அடிமைகள் அமெரிக்கக் கண்டத்தில் முந்நூறுக்கும் மேற்பட்ட வருடங்களாக எத்தனை துன்பங்களை அனுபவித்தார்கள் என்பதை உண்மையாகவே அறிய ஆர்வம் உள்ளவர்களும் மட்டும் படத்தைப் பாருங்கள்.
திரை அரங்கத்தை விட்டு வெளியே வரும்போது ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது. இந்த ஆபிரிக்க அடிமைகள் அமெரிக்க மண்ணில் பட்ட துன்பங்களோடு ஒப்பிடும்போது நான் எனது வாழ்வில் பட்ட துன்பங்கள் எல்லாம் ஒன்றுமேயில்லாத தூசிக்குச் சமம். நிறைவான வாழ்க்கை ஒன்றை எனக்களித்த இந்தப் 'பிரபஞ்ச சக்திக்கு' நன்றி கூறி வணங்குகிறேன்.

1 கருத்து:

ஜோதிஜி சொன்னது…

இந்த ஆபிரிக்க அடிமைகள் அமெரிக்க மண்ணில் பட்ட துன்பங்களோடு ஒப்பிடும்போது நான் எனது வாழ்வில் பட்ட துன்பங்கள் எல்லாம் ஒன்றுமேயில்லாத தூசிக்குச் சமம். நிறைவான வாழ்க்கை ஒன்றை எனக்களித்த இந்தப் 'பிரபஞ்ச சக்திக்கு' நன்றி கூறி வணங்குகிறேன்.

தெளிவான புரிந்துணர்வு மிக்க வரிகள்.

ஆன் லைன் இணைப்பு இருந்தால் கொடுங்களேன்.

கருத்துரையிடுக