வியாழன், மார்ச் 31, 2011

தாரமும் குருவும்...,

இ.சொ.லிங்கதாசன்
(ஆசிரியர்களை அவதூறு செய்வது எனது நோக்கமல்ல)
பகுதி 2.2


பாலர் வகுப்பு(Nursery/kindergarten)

"அவன் உன்னை பிறாண்டுவதற்கு, நீ என்ன செய்தாய்? இது எனது தாயாரின் விசாரணையில் பிறந்த முதலாவது கேள்வி. நான் என்ன சொல்ல முடியும்? 'திருடனுக்குத் தேள் கொட்டியதுபோல' நெளிந்தேன். எனது பதிலும் ஒழுங்கில்லாமல் "அவன் என்ர சிலேட்டு, தலைமுடியப் பிடிச்ச...நான் அவனுக்கு அடிச்சு" என ஏதேதோ உளறினேன். 'உலகிலேயே அதி புத்திசாலியான'??? என் அண்ணன் எந்தவித தடுமாற்றமும் இல்லாமல் "அம்மா! சுதன், தம்பியின் சிலேட்டைப் பறிச்சு உடைக்கப் பார்த்தான், தம்பி அவனத் தள்ளி விட்டான், அதுதான் சுதன், தம்பிய பிறாண்டினவன்" இது எனது  அண்ணனின் சாட்சியம். அம்மாவுக்கு ஒன்று புரிந்திருக்க வேண்டும். 'தன்னுடைய பிள்ளையிலும்' எதோ தவறு என்று. உடனடியாக எனக்கு முதுகில் இரண்டு உறைக்கும்படியான 'கைவிசேடம்'(*அடிகள்) வழங்கப் பட்டது. இதை நானும் அண்ணாவும் சற்றும் எதிர்பார்க்கவில்லைதான். நான் அடியின் அகோரம் தாங்க முடியாமல் 'குய்யோ, முறையோ' என்று அழுதேன். முகத்தில் எந்தவித சலனமும் இல்லாமல் என்னைப் பார்த்த அண்ணனைக் காட்டிக் கொடுக்க மனம் விரும்பியது, ஆனால் அவ்வாறு செய்தல் பிரச்சினையை இன்னும் தீவிரப் படுத்தும். அது மாத்திரமின்றி வீட்டில் அம்மா,அப்பா யாருமில்லாத சமயம், அல்லது நாளை நாங்கள் பள்ளிக்குச் செல்லும் சமயம் என் அண்ணனால் நான் 'பழி வாங்கப் படலாம்'
கருக்கு மட்டை கீறிய வலி ஒரு பக்கமும்,அம்மா அடித்த அடி முதுகில் 'சுரீர்' என்று உறைத்தது.
பொழுது சாயும் நேரம் வீட்டிற்கு வந்த அப்பாவிடம், என் அண்ணன் முதல் வேலையாக தான் தயாரித்து வைத்திருந்த 'குறுந்திரைப்படத்தை(*தம்பிக்கு எதனால் காயம் ஏற்பட்டதென்பதை) போட்டுக் காண்பித்தான். அவ்வளவுதான் என் தந்தையார் பொங்கி எழ ஆரம்பித்தார். "என்ன கண்டறியாத புள்ள வளக்கினம்(*இது என்ன பிள்ளை வளர்ப்பு?) முதல் முதலா பள்ளிக்குடம் போன பிள்ளைக்கு, முகத்திலயும்,உடம்பிலையும் பிறாண்டி வைச்சிருக்குதுகள்........." இத ஒருக்கா கேக்கத்தான் வேணும்" என்று சாரத்தை(*கைலியை) மடித்துக் கட்டிக்கொண்டு புறப்பட்டவரை அம்மா தடுத்தார். இதை இந்த இரவு நேரத்தில் போய் கேட்டால் அதன் 'விளைவுகள்' என்னவாகும் என்பதை என் தாயார் அறிவார். அது மட்டுமல்லாமல் மேற்படி நாங்கள் கூறிய அந்த 'சுதனின்' அப்பா,சித்தப்பா, மாமா எல்லோரும் வெட்டு,குத்து போன்றவற்றில் மிகவும் பிரபலமான, ஊரைக் கலக்கிய 'சண்டியர்கள்' அவர்களோடு பிரச்னைக்கு போனால் எங்கள் தந்தையார் 'வெட்டு' வாங்குவது உறுதி என்பதும் என் தாயார் அறிவார். இறுதியாக, தான் தடுக்கப்பட்டது என் தந்தையாருக்கு 'ஆற்றாமை' நிலையை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அந்தக் கோபம் என் அம்மாவின் பக்கம் திரும்பியது. என் அம்மாவிற்கு எங்கள் 'திருகு தாளத்தினால்'(*பித்தலாட்டத்தினால்) இரண்டு மூன்று 'அடிகள்' கிடைத்தன.
இப்போது 'விசாரணைக் கமிஷன்' என் பக்கம் திரும்பியது "அவன் உடம்பு முழுக்க பிராண்டும்போது நீ கையக் கட்டிக் கொண்டு சும்மா நிண்டனியாடா?(*நின்றாயா) என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் 'பே பே' என்று முழித்தேன். இறுதியில் தப்பித்துக் கொள்ளும் நோக்கில் "ஓம்(*ஆம்) என்று பதிலளித்தேன். அவ்வளவுதான் எனக்கும் 'சடார் புடார்' என அடிகள் விழ ஆரம்பித்தன. வீட்டில் ஒரு மூலையில் எதுவுமே தெரியாததுபோல் 'கல்லுளி மங்கனாக' நின்று கொண்டிருந்த என் அண்ணனை 'எரித்து விடுவதைப் போல' பார்த்தேன்.
(தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.

நிறத்தில் *குறியிடப் பட்டிருப்பவை தமிழக வாசகர்களுக்கான விளக்கம் ஆகும்.

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


அன்புஈனும் ஆர்வம் உடைமை; அதுஈனும்
நண்புஎன்னும் நாடாச் சிறப்பு. (74)

பொருள்: தொடர்புடையவரிடம் கொள்ளும் பற்று, தொடர்பு இல்லாதவரிடமும் விருப்பத்தைத் தரும். அவ்விருப்பம் யாவரும் இவர்க்கு நண்பர் என்று கூறத்தக்க அளவிற்குச் சிறப்பைத் தரும். 

புதன், மார்ச் 30, 2011

தாரமும் குருவும்...,

இ.சொ.லிங்கதாசன்
(ஆசிரியர்களை அவதூறு செய்வது எனது நோக்கமல்ல)
பகுதி 2.1

பாலர் வகுப்பு(Nursery/kindergarten)

இப்போது என் முன்னாலும், என் அண்ணன் முன்னாலும் மிகவும் சிக்கலானதொரு 
சூழ்நிலை தோன்றியிருந்தது. அதாவது எனது கைகளில், தோளில், முகத்தில் கருக்கு மட்டை (*கூரான பனை மட்டை) கீறியதால் ஏற்பட்ட காயங்களைப் பற்றி வீட்டில் அம்மா,அப்பா விசாரித்தால் என்ன கூறுவது.? "திருட்டுத் தனமாக இலந்தைப் பழம் பொறுக்கப் போனதால் ஏற்பட்ட காயம் என்று கூற முடியுமா? "தர்ம அடியல்லவா விழும்? என்ன செய்வது என நான் மூளையை கழற்றி வைத்து யோசித்துக்கொண்டிருந்தபோது 'எதற்கும் அஞ்சாத' என் அண்ணன் ஒரு 'புத்தி சாதூர்யமான' திட்டமொன்றை முன்வைத்தார். அதாவது "இந்தக் காயங்கள் எவ்வாறு ஏற்பட்டன? என வீட்டில் அம்மா அல்லது அப்பா வினவினால், உடனடியாக "இது முன் வீட்டு 'சுதன்'(*ஒரு சிநேகிதனின் பெயர்) பிறாண்டியதால் ஏற்பட்ட காயங்கள்" என்று கூறித் தப்பித்துக் கொள்வோம். என்பதுதான் திட்டமாகும்.
இவ்வளவு புத்திசாலித் தனமாக திட்டம் தீட்டித் தந்த என் அண்ணனாலும், என்னாலும் அவ்வாறு ஒரு 'மாபெரும்' பொய்யைக் கூறுவதால் ஏற்படக் கூடிய 'பின் விளைவுகள்' பற்றிச் சிந்திக்க முடியாமல் போனது பெரும் துரதிர்ஷ்டமே.
இந்த இடத்தில் இதை வாசிக்கும் பெற்றோர்களுக்கு ஒரு சில வார்த்தைகள் கூற விரும்புகிறேன்.
###############################################
உங்கள் பிள்ளை தன்னோடு படிக்கின்ற இன்னொரு பிள்ளை/அயல்வீட்டுப் பிள்ளை அடித்ததாகவோ, கடித்ததாகவோ, கிள்ளியதாகவோ, உங்களிடம் புகார் கூறினால் 'பிள்ளைப் பாசம்' காரணமாக விரைந்து நடவடிக்கை எடுப்பதற்கு முன்னால் சில கேள்விகளை உங்களை நீங்களே கேளுங்கள்:
  1. எங்கள் பிள்ளை கூறுவது எத்தனை சதவீதம் உண்மை?
  2. பிரச்சனையின் வீரியம்(Seriousness) எத்தகையது?
  3. பிள்ளையின்மீது கொண்ட பாசத்தினால் அயலவருடன் பிணக்கு ஏற்படாமல், இப்பிரச்சனையை எவ்வாறு அணுகலாம்?
  4. நாங்கள் பெற்றோர்களாக இல்லாமல் ஒரு 'சராசரி மனிதராக' இருப்பின் இப்பிரச்சனையை எவ்வாறு கையாளுவோம்?
  5. இப்பிரச்சனையைக் கையாளும் மிகவும் சிறந்த உத்தி(technic) அல்லது ராஜதந்திரம் (Diplomacy) எது?
ஏனெனில் இலங்கையில் பெரியவர்களுக்கிடையில் ஏற்படும் பிணக்குகளில்(Conflict) சுமார் 40% ஆனவை சிறுவர்களால்(தம் பிள்ளைகளால்) ஏற்படுகின்றன எனப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கையிலும், தமிழகத்திலும் பிள்ளைகளால் பெற்றோர் மத்தியில்  ஏற்பட்ட விரோதங்கள் அடிதடி,வெட்டுக், குத்து, கொலையில் முடிவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
###############################################

நாங்கள் நினைத்தது போலவே, வீட்டிற்குத் திரும்பியதும் அம்மாவின் பார்வையில் எனது காயங்கள் பட்டது. கேள்விகள் ஆரம்பித்தன. நாங்களும் எங்களால் தயாரிக்கப் பட்டு, தயாராக வைத்திருந்த கதை,திரைக்கதை, மற்றும் வசனத்தை அம்மாவிடம் ஒப்புவித்தோம். என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் அண்ணனிடமிருந்து 'டாண், டாண்' என்று பதில் வந்தது. நானோ 'மோதகத்தை முழுங்கியவன்' போலக் காட்சியளித்தேன்.
(தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.

 நிறத்தில் *குறியிடப் பட்டிருப்பவை தமிழக வாசகர்களுக்கான விளக்கம் ஆகும்.

அந்திமாலையில் அறிவியல்

அன்பார்ந்த வாசகப் பெருமக்களே!
கடந்த சில வாரங்களாக 'அந்திமாலையில் அறிவியல்' பகுதியில் எமது நண்பரும், விஞ்ஞானியுமாகிய திரு.க.பொன்முடி அவர்களின் தொலைக்காட்சி நேர்காணல்கள் இடம்பெற்று வருகின்றமை நீங்கள் அறிந்ததே. மேற்படி விஞ்ஞானி அவர்கள்  'ராஜ்' தொலைக்காட்சியில் 1.11.2009 அன்று நேரடியாக ஒளிபரப்பாகிய 'மக்கள் மேடை' நிகழ்ச்சியில் 'நில அதிர்ச்சி' குறித்து நேயர்களின் கேள்விகளுக்கும், ஊடகவியலாளர் திரு.முருகானந்தம் அவர்களின் கேள்விகளுக்கும் விளக்கமளித்தார். அதன் முதலாவது பகுதி கடந்த வாரம் இடம்பெற்றது. அதன் இரண்டாவது பகுதியை இன்று உங்களுக்காகத் தருகிறோம்.

விஞ்ஞானி க.பொன்முடி அவர்கள் 'ராஜ்' தொலைக்காட்சியில் அளித்த விளக்கம். (சுனாமி ஏன்? எதற்கு? எப்படி?)

பகுதி 2



உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


அன்போடு இயைந்த வழக்கு என்ப; ஆர்உயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு. (73) 

பொருள்: உயிரும் உடம்பும் தொடர்பு கொண்டு ஒன்றியிருக்கும் உறவானது, அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன் என்று கூறுவர்.


செவ்வாய், மார்ச் 29, 2011

நாடுகாண் பயணம் - பூட்டான்




நாட்டின் பெயர்:
Bhutan flagபூட்டான் (Bhutan)

முழுப் பெயர்:
பூட்டான் இராச்சியம் 

தலைநகரம்:
திம்பு (Thimphu)

அமைவிடம்:
தெற்கு ஆசியா 

எல்லைகள்:
தெற்கு,மேற்கு,கிழக்கு:இந்தியா
வடக்கு:சீனா 

எல்லையிலுள்ள இந்திய மாநிலங்கள்:
மேற்கு -சிக்கிம் 
தெற்கு - மேற்கு வங்காளம்

அலுவலக மொழி:
ஷோங்கா (Dzongkha)

ஏனைய மொழிகள்:
ஆங்கிலம் 

சமயங்கள்:
புத்த சமயம்:76 %(வஜ்ராயன பௌத்தம்)
இந்து சமயம்: 23 %
ஏனையோர்: 1 %

கல்வியறிவு:
59.5 %

ஆயுட்காலம்:
ஆண்கள்: 61 வருடங்கள் 
பெண்கள்: 64.5 வருடங்கள் 

அரசாங்க முறை:
மன்னரின் ஆட்சிக்குட்பட்ட பாராளுமன்ற ஜனநாயக ஆட்சி.

மன்னர்:
ஜிக்மே கேசார் நம்யேல் வாங்சுக் (Jigme Khesar Namgyel Wangchuk)

பிரதமர்:
ஜிக்மே Y.தீன்லே (Jigme Y.Thinley)

மன்னரின் பதவி சம்பிரதாயபூர்வமாக்கப் பட்ட/அதிகாரம் குறைக்கப் பட்ட ஆண்டு:
2007

சனத்தொகை:
691,141 (2009 மதிப்பீடு)

பரப்பளவு:
38,816 சதுர கிலோ மீட்டர்கள் 

நாணயம்:
ங்குல்ரம்(Ngultrum)
இந்திய ரூபாயும் உபயோகிக்க முடியும்.

இணையத் தளக் குறியீடு:
.bt

சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
00-975


வருமானம் தரும் தொழில்கள்:
விவசாயம், சுற்றுலாத்துறை.

கனிய வளங்கள்:
மரம்,இயற்கை மின்சாரம், ஜிப்சம்,கல்சியம் கார்பனேட்.

ஏற்றுமதிப் பொருட்கள்:
அரிசி,கோதுமை, சோளம், பார்லி, கிழங்கு வகை, மிளகாய், பால் உணவுகள், தோடம்பழம்(ஆரஞ்சு), எலுமிச்சை, அப்பிள் பழம்(ஆப்பிள்)

தொழிற்சாலை உற்பத்திகள்:
சீமெந்து, மரங்கள், பழங்கள் பதனிடல், மதுபானம் தயாரிப்பு.

நாட்டைப் பற்றிய சிறு குறிப்புகள்:
  • Business Week என்ற சஞ்சிகை உலகளாவிய ரீதியில் நடத்திய ஆய்வில் ஆசியாவிலேயே மிகவும் மகிழ்ச்சியான மக்கள் வாழுகின்ற(கிடைப்பதைக் கொண்டு திருப்தியுடன் வாழ்கின்ற / இருப்பதைக் கொண்டு சிறப்போடு/மன நிறைவோடு வாழ்கின்ற) நாடாகவும், உலகில் மகிழ்ச்சியான மக்கள் வாழ்கின்ற நாடுகளின் வரிசையில் எட்டாவது இடத்திலும் பூட்டான் மக்கள் உள்ளனர்.(டென்மார்க் மக்கள் உலக அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத் தக்கது)
  • இலங்கை அரசுக்கும் தமிழ்ப் போராளிக் குழுக்களுக்கும் இடையில் 1985 ஆம் ஆண்டில் இடம்பெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகள் இலங்கை மற்றும் இந்தியாவுக்கு வெளியே நடைபெற வேண்டும் என இரு தரப்பினரும் விரும்பியதால் அப் பேச்சுவார்த்தைகள் பூட்டானின் தலைநகர் 'திம்புவில்' நடைபெற்றன. இதனாலேயே இப்பேச்சுவார்த்தைகள் 'பூட்டான் பேச்சுவார்த்தை' என்றோ அல்லது 'திம்புப் பேச்சுவார்த்தை' என்றோ அழைக்கப் படுகின்றது. 






தாரமும் குருவும்...,

இ.சொ.லிங்கதாசன்
(ஆசிரியர்களை அவதூறு செய்வது எனது நோக்கமல்ல)
பகுதி 2.00


பாலர் வகுப்பு(Nursery/kindergarten)

ஒரு நாயும், ஒரு வயோதிபரும் எங்களைத் துரத்தி வருவது எங்களுக்கு நன்றாகவே தெரிந்தது. எங்களைத் துரத்திக்கொண்டு ஓடிவரும் வயோதிபர்தான் 'கந்தையா அப்பாவாக' இருக்க வேண்டும் என்பது எனது ஊகமாக இருந்தது. அவரிடம் பிடிபட்டு அடி வாங்குவதை விட, அவரது நாயிடம் 'கடி' வாங்காமல் தப்புவதே மிகவும் அவசியமாகப் பட்டது. ஏனெனில் நாய் கடிக்கும்போது காலில் ஒரு துண்டு சதையை(*தசை/கறி) எடுத்துவிடும். அதன்பின் தொப்புளைச் சுற்றி பத்திற்கு மேற்பட்ட ஊசிகள் போடவேண்டிய நிலை ஏற்படும். ஓடினோம்,ஓடினோம், வாழ்க்கையின் விளிம்பிற்கே ஓடினோம். உயிரைக் கையில் பிடித்தபடி ஓடினோம். முட்கள், கற்கள், உடைந்த போத்தல்(*பாட்டில்) துண்டங்கள் போன்றவை எங்கள் கால்களைப் பதம்பார்க்க ஓடினோம். வேலியின் ஓட்டை ஏற்படுத்தப் பட்டிருந்த இடத்தில் அனைவரும் ஒரே நேரத்தில் வெளியேறுவது மிகுந்த சிரமமான காரியமாக இருந்தது. ஆனால் ஒரேயொரு ஆறுதல் 'கந்தையாப்பா' அதட்டிய அதட்டலில் அவரது நாயும் எங்களை நோக்கி ஓடி வராமல் அரைவாசியில் நின்று விட்டது. எங்கள் குழுவில் அனைவரும் அந்த சிறிய வேலி ஓட்டையால் கண்ணிமைக்கும் நேரத்தில் புகுந்து வெளியேற நான் மட்டும் கடைசியாக வளைந்து,தவழ்ந்து கைகளில் கருக்கு மட்டை(*கூரான பனை மட்டை)கீறியதால் ஏற்பட்ட காயங்களுடன் வெளியேறினேன். ஒரு சிறுவன் கூட தன் கையில் சிக்காத ஆத்திரத்தில் கந்தையாப்பா தன்னால் முடிந்தவரை 'வசவு' வாக்கியங்களை உதிர்க்க ஆரம்பித்தார். "பறக் கீழ்சாதியள், முளைச்சு மூண்டு இலை விடேல்ல, அதுக்குள்ள பொட்டுப் பிரிச்சு களவெடுக்க வெளிக்கிட்டிட்டியளோ "(*"சாதியால் தாழ்ந்தவர்களே! இந்தச் சிறிய வயதிலேயே வேலியில் ஓட்டை செய்து திருட ஆரம்பிச்சிட்டீங்களா?")(மேற்படி வாசகங்களை யாழ் மாவட்டத்துக் கிராமங்களைச் சேர்ந்த சில வயோதிபர்கள், கோபம் வரும்போது உதிர்ப்பது வழக்கம். அவர்களைப் பொறுத்தவரை தவறு செய்கின்ற/அட்டகாசம் செய்கின்ற அனைவருமே கீழ்சாதியள்) மேற்படி வாசகங்கள் காற்றில் பரவி நம் எல்லோர் காதுகளிலும் வீழ்ந்தன. எனக்கு இவ்வார்த்தைகள் அப்போது எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. எனக்கு மேற்படி வார்த்தைகளின் அர்த்தம் புரியாத வயது அல்லவா?
ஒரு விடயம் தெளிவாகியது ஒரு உழுத்துப்போன இலந்தைப் பழத்திற்காக என் உடம்பில் பல 'கீறல்' காயங்களை நான் விலையாகக் கொடுக்க நேரிட்டது. இதேபோல் எங்கள் குழுவில் இருந்த ஏனைய சில சிறுவர்களுக்கும் சில கீறல், சிராய்ப்புக் காயங்கள். ஆக மொத்தத்தில் எங்களுடைய 'ஒப்பரேஷன் இலந்தைப் பழம்' என்ற இராணுவ நடவடிக்கை பலத்த இழப்புக்களுக்கு மத்தியில் 'தோல்வியில்' முடிவடைந்தது.
(தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.

நிறத்தில் *குறியிடப் பட்டிருப்பவை தமிழக வாசகர்களுக்கான விளக்கம் ஆகும்.

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


அன்பிலார் எல்லாம் தமக்குஉரியர் அன்புடையார் 
என்பும் உரியர் பிறர்க்கு. (72) 

பொருள்:அன்பு இல்லாதவர் எல்லாப் பொருள்களையும் தமக்கே உரிமையாக்கிக் கொண்டு வாழும் தன்னலக்காரராய் இருப்பர். அன்புடையவரோ தம் உடம்பையும் பிறர் நலத்துக்காக ஈந்து மகிழும் இயல்புடையவராக வாழ்வார்.

திங்கள், மார்ச் 28, 2011

தாரமும் குருவும்...,

இ.சொ.லிங்கதாசன்
(ஆசிரியர்களை அவதூறு செய்வது எனது நோக்கமல்ல)
பகுதி 1.9

பாலர் வகுப்பு(Nursery/kindergarten)

அது மனிதர்கள் குடியிருக்கும் ஒரு வளவு என்பதைப் பற்றியெல்லாம் நாங்கள் கவலைப் படவில்லை. ஆனால் அந்த இலந்தை மரத்தருகே எவ்வாறு செல்வது என்பதுதான் கேள்வி. அதற்கும் வழி கண்டுபிடித்தான் அந்த 'மேதாவி' கந்தையாப்பாவின் நான்கு பக்க வேலிகளில் ஒன்றில் ஒரு ஓட்டை(யாழ்ப்பாணத்துத் தமிழில் 'பொட்டு' எனவும் *தமிழக வழக்கில் 'பொத்தல்' எனவும் அறிக) ஏற்படுத்தப் பட்டிருந்தது. அந்த ஓட்டை வழியாக எங்கள் அணியிலேயே மிகவும் 'குண்டான' மேதாவி உட்பட நாங்கள் அனைவரும் அந்த இலந்தை மரம் நோக்கித் தவழ்ந்து சென்றோம். 'இலந்தை' மரம் ஒரு 'முட்கள் நிறைந்த' மரம் என்பதை வாசகர்களாகிய உங்களில் பலர் அறிவீர்கள். ஆதலால் மரத்தில் ஏறிப் பழங்களைப் பறிப்பது எமது நோக்கமாக இருக்கவில்லை.அது மிகவும் ஆபத்தான முயற்சி. ஆதலால் எமது மேதாவியின் 'புலனாய்வுத் தகவலின்படி' அம்மரத்தின் கீழே விழுந்து கிடக்கும் பல்லாயிரக்கணக்கான 'இலந்தைப் பழங்களை' பொறுக்குவதே எமது நோக்கமாக இருந்தது. ஆனால் அந்த இலந்தை மரத்தை நெருங்கியபோதுதான் எங்கள் 'மேதாவி' எங்களிடம் கூறியிருந்த தகவல்கள் யாவுமே வெறும் 'பம்மாத்து'(*தமிழகத்து தமிழில் 'டாவு', அல்லது 'பேத்தல்')என்பது எங்கள் அனைவர்க்கும் தெரிய வந்தது. அங்கே இலந்தை மரத்தின் கீழே அங்கொன்றும் இங்கொன்றுமாக நன்றாகப் பழுத்த, புழு அரித்த, அல்லது  வெயிலில் வெதும்பிய இலந்தைப் பழங்கள் சில மண்ணில் வீழ்ந்து கிடந்தன. அவற்றைப் பொறுக்குவதில் நமது பிரிவினரிடையே பலத்த போட்டி காணப் பட்டது. இவ்வளவு நேரமும் நண்பர்களாக இருந்த அனைவரும் 'பழம் பொறுக்கும்' முயற்சியில் 'பரம எதிரிகளாயினர்'. "இது நான் கண்டுபிடித்த பழம் அதை நீ எப்படி எடுக்கலாம்"? என்ற விசாரணையுடன்,சேட்டைப் பிடித்து இழுத்தபடி(*சட்டையைப் பிடித்தபடி)  நாயே, சனியனே, மூதேசி(*மூதேவி) என்ற 'அசுத்த வார்த்தைப் பிரயோகங்கள்' பொறி பறந்தன.நான்  இவற்றையெல்லாம் கண்களில் திகைப்புடனும், "ஒரு பழமாவது கிடைக்காதா"? என்ற ஏக்கத்துடனும் பார்த்துக் கொண்டே நின்றேன். இறுதியில் என் அண்ணனின் 'கருணையால்' எனக்கு ஒரு பழம் கிடைத்தது. 'பை நிறைய இலந்தைப் பழம்' எனும் கனவில் நின்ற எனக்கு கிடைத்த ஒரு பழம் அது 'புழு' அரித்ததோ,வெம்பிப் பழுத்ததோ தெரியாது 'தேனாமிர்தமாக', மிகவும் தித்திப்பாக இருந்தது.
அந்தப் 'பழம் பொறுக்குதல்' என்ற சாதாரண நடவடிக்கையுடன் நாங்கள் எமது அன்றைய முயற்சியை நிறுத்தியிருக்க வேண்டும். "ஆசை யாரைத்தான் விட்டது?" எங்கள் குழுவில் ஓரிருவர்(என் அண்ணன் உட்பட) ஒரு 'அதிரடி' நடவடிக்கையில் இறங்கினர்.அதாவது கையில் கிடைக்கும் கற்களை எடுத்து பலம்கொண்ட மட்டும் அந்த மரத்தில் இருந்த பழங்களை நோக்கி வீசி எறிந்தனர். "இதை அவர்கள் செய்திருக்கவே கூடாது" இவர்களில் ஒருவன் வீசிய கல் ஒன்று கந்தையாப்பாவின் வீட்டிற்குப் பின் பக்கத்தில் 'சிவனே' என்று மேய்ந்துகொண்டிருந்த 'கோழிகள்+சேவல்கள் மீது பட்டது. அவ்வளவுதான் கோழிகளும், சேவல்களும் பெருங்குரலெடுத்து கத்த(ஓலமிட) ஆரம்பித்தன. கோழிகளின் சத்தத்தினால் தனது ஆழ்ந்த உறக்கம் கலைக்கப் பட்டதால் சினமடைந்த கந்தயாப்பாவின் 'செல்ல நாயனார்'(*நாய்) கடுமையாகக் கர்ச்சனை செய்தபடி எங்களை நோக்கி ஓடி வர, எங்கிருந்தோ "டேய், டேய்" என்ற சொற்கள் எங்களை நோக்கி எறிகணைகளாக வந்து வீழ்ந்தன. அவ்வளவுதான் நாங்கள் அனைவரும் 'ஓட்டம் பிடிப்பதைத்' தவிர எங்களுக்கு வேறு 'தெரிவு' இருக்கவில்லை.
(தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.
இந்த நிறத்தில் எழுதப்பட்டிருக்கின்ற, *அடையாளமிடப் பட்டிருப்பவை தமிழக வாசகர்களுக்கான விளக்கம் ஆகும்.

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 


அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்? ஆர்வலர் 
புன்கணீர் பூசல் தரும். (71)

பொருள்: அன்புக்கு அடைத்து வைக்கும் தாழ் ஏதேனும் உண்டோ? அன்புடையாரின் சிறிதளவு கண்ணீரே அவர் அன்பைப் பலர் அறிய வெளிப்படுத்திவிடும். 


ஞாயிறு, மார்ச் 27, 2011

தாரமும் குருவும்...,

இ.சொ.லிங்கதாசன்
(ஆசிரியர்களை அவதூறு செய்வது எனது நோக்கமல்ல)
பகுதி 1.8


பாலர் வகுப்பு(Nursery/kindergarten)

நல்ல ஆரம்பம், வெற்றிக்கு அத்திவாரம் என்பார்கள், அதுபோலவே எனது பாலர் பாடசாலையின் முதலாவது நாளும் நல்ல படியாக, இனிதே தொடங்கி, இனிதே நிறைவு பெற்றது. மதியம் ஒரு பன்னிரண்டு மணிக்கெல்லாம் எனது அண்ணன் என்னை அழைத்துச் செல்வதற்காக வந்திருந்தார். அவர் எனது பாலர் பாடசாலைக்கு மிகவும் அருகிலிருக்கும் 'மண்டைதீவு மகா வித்தியாலயத்தில்' முதலாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார். அவரோடு சேர்ந்து அவரது கூட்டாளிகளும் வந்திருந்தனர். அவர்களைப் பொறுத்தவரை நான் ஒரு 'கைக் குழந்தை', என்னைப் பத்திரமாக வீட்டிற்கு அழைத்துச் செல்வது அவர்களது பொறுப்பு. நானும் அந்தப் 'படையணியின்' பாதுகாப்பில்??? வீதிகளின் ஓரத்தால் வீட்டை நோக்கிச் சென்றுகொண்டிருந்தேன். நல்ல படியாக வீட்டை நோக்கிச் சென்றுகொண்டிருந்த நாம் அனைவரும் அந்தக் கூட்டத்தில் இருந்த ஒரு 'மேதாவியின்' பிரச்சாரத்தினால் திசை திருப்பப் பட்டோம். "கந்தையாப்பா(*இலங்கைத் தமிழில் கந்தையா+அப்பா எனவும் தமிழகத் தமிழில் கந்தையா+தாத்தா எனவும் வாசிக்கவும். வயதான 'தாத்தாக்களை' இலங்கைத் தமிழில் 'அப்பா' எனவும் அழைப்போம்) வளவிற்குள் நிற்கும் 'இலந்தை மரம்' கொப்பாயிரம், குலையாயிரமாக(*இதுவும் யாழ்ப்பாணத்துக் கிராமப் பேச்சு வழக்கு) காய்த்துப், பழுத்துக் கிடக்கிறது, அங்கு போனால் ஒவ்வொருவரும் புத்தக பை நிறைய 'இலந்தைப் பழம்' அள்ளி வரலாம்" என திருவாய் மலர்ந்தருளினான் என் அண்ணனின் பள்ளித் தோழர்களுள் ஒருவனாகிய அந்த 'மேதாவி'.என் அண்ணன் உட்பட அந்தப் பள்ளித் தோழர்கள் அனைவருமே மறு பேச்சின்றி அந்த 'மேதாவியின்' திட்டத்திற்கு சம்மதித்தனர். எனக்கோ ரெண்டுங் கெட்டான் நிலை. ஒன்று 'இலந்தப் பழம் என்றால் என்ன? அதனை ஒருதடவை ருசிபார்த்தே ஆகவேண்டும் என்பது ஒரு பக்க ஆவல், மறுபக்கம். காலையில் என்னைப் பாடசாலைக்கு அழைத்து வரும்போது என் தாயார் கூறிய வாசகங்கள் என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது. "பள்ளிக்கூடம் விட்ட உடன அங்கன இங்கன நிண்டு, ஏமலாந்திக் கொண்டு நிக்காம நேர வீட்ட வந்து சேர வேணும்"(*பள்ளிக்கூடம் விட்டதா,எங்கேயும் 'பராக்கு' பார்க்காம நேரா வீட்டுக்கு வந்து சேரணும்)என்ற எனது தாயாரின் கட்டளையை மீறவும் பயமாக இருந்தது. ஆனாலும் 'இலந்தப் பழத்தின் மீது உள்ள 'ஆசை' பயத்தை வென்றது. காரணம் 'புத்தகப் பை' நிறைய இலந்தப் பழம் அல்லவா கிடைக்கப் போகிறது.
ஒரு வழியாக 'மேதாவி' காட்டிய வழியில் நடந்து 'கந்தையாப்பா' வீட்டடியை அடைந்தோம். அவரது வீட்டிற்குப் பின்புறமாக உள்ள வளவில் வானளாவ வளர்ந்திருந்தது அந்த இலந்தை மரம்.
(தொடரும்)
*இந்த நிறத்தில் நட்சத்திரக் குறியிடப் பட்டிருப்பவையும், எழுதப் பட்டிருப்பவையும் தமிழக வாசகர்களுக்கான விளக்கம் ஆகும்.  

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை 
என்நோற்றான் கொல்எனும் சொல். (70)

பொருள்: மகன் தந்தைக்குச் செய்யும்(கடமை) பிரதியுபகாரம் "இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ" என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லும் சொல்லேயாகும். 

சனி, மார்ச் 26, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


ஈன்ற பொழுதின் பெரிதுஉவக்கும் தன்மகனைச் 
சான்றோன் எனக்கேட்ட தாய். (69)

பொருள்:தான் பெற்ற மைந்தனை அறிவு,ஒழுக்கங்கள் நிறைந்த சான்றோன் என்று அறிவுடையோர் புகழ்ந்து கூறக்கேட்ட தாய், அவனைப் பெற்றபோது அடைந்த மகிழ்ச்சியிலும் பெருமகிழ்ச்சி அடைவாள்.


வெள்ளி, மார்ச் 25, 2011

மண்ணும்,மரமும், மனிதனும் அத்தியாயம் 17

சேர்.ஜகதீஷ் சந்திர போஸ் (1858-1937)

சாதாரண ஒரு இந்தியக் குடும்பத்தில் பிறந்த ஒரு மனிதனால் அக்காலத்திலிருந்த சூழ் நிலையில் ஒரு பட்டப் படிப்பையே இங்கிலாந்தில் படித்து முடிப்பதற்குப் பல போராட்டங்களை வாழ்வில் சந்திக்க வேண்டியிருந்த நிலையில், போஸ் அவர்களால் பல பட்டப் படிப்புகளை இங்கிலாந்தின் பிரபலமான பல்கலைக் கழகங்களில் படித்து முடித்தல் எவ்வாறு சாத்தியமானது? "அறிவிற்கு இவ்வுலகம் அடிமையானது", "இவ்வுலகை அறிவுதான் ஆளுகிறது" ("knowledge is wealth", "Knowledge is power") எனும் ஆங்கிலப் பழமொழிகள்  இங்குதான் நினைவு கூரப் படுகிறது.
ஆம் நான் மேலே குறிப்பிட்டபடி ஒரு சராசரி இந்தியக் குடும்பத்தில் பிறந்த 'போஸ்' அவர்கள் இங்கிலாந்தில் பல பட்டப் படிப்புகளைப் படித்து முடிப்பதற்கு எங்கிருந்து 'பணம்' கிடைத்தது? அக்காலத்தில் ஒரு மனிதன் கல்வியைச் சுலபமாகக் கற்று முடிப்பதற்கு உதவுகின்ற எந்தவகையான 'வாய்ப்புகளும்' காணப்படவில்லை.பள்ளிகளோ, கல்லூரிகளோ,பல்கலைக் கழகங்களோ இலவசக் கல்வியை வழங்குவதில்லை. சமூக நல உதவித் திட்டங்களும் 'பிரித்தானிய ஆட்சிக் காலத்தில்'கிடையாது, 'புலமைப் பரிசில்'(Scholarship)திட்டம் என்றால் என்னவென்றே தெரியாத காலம் அது. இவ்வாறிருக்கையில் திரு.போஸ் அவர்கள் நான்கு வெவ்வேறு துறைகளில் படித்து, அதுவும் இங்கிலாந்துப் பல்கலைக் கழங்களில் படித்து பட்டம் பெறுவதற்கு எவ்வாறு உதவி கிடைத்தது?
இங்குதான் 'அறிவின் முன்னால்' ஆட்சியதிகாரம் கூட தலை வணங்குவதைக் காண முடிகிறது.இவரது அறிவாற்றலைக் கேள்வியுற்ற அக்காலத்து 'பிரித்தானிய ஆட்சியாளர்கள்' போஸ் அவர்களின் கல்விக்கு தேவையான உதவிகளைத் தாமாகவே முன்வந்து வழங்கினர். இவர் கல்விகற்ற புனித சவேரியார் கல்லூரியின் அதிபர்கள்,ஆசிரியர்கள் அனைவருமே ஆங்கிலேயர்களாகவும், ஆங்கிலேயப் பாதிரியார்களாகவும் இருந்தனர். இவர்கள் திரு.போஸ் அவர்களிடம் உலகெங்கிலும் காண முடியாத ஒரு 'ஒப்பற்ற அறிவாற்றல்' காணப் படுவதைக் கண்டு கொண்டனர். இவர் மேற் கல்வியைக் கற்றால் அது பாரத நாட்டிற்கு மட்டுமன்றி பிரித்தானியாவிற்கும், ஏன் முழு உலகிற்குமே மதிப்பிடமுடியாத அரிய செல்வமாக மாறும் என உறுதிபட நம்பினர். இதனாலேயே 'திரு.போஸ்.அவர்களின் கல்விக்கு பேராதரவு நல்கி, அளப்பரிய உதவிகளும் புரிந்தனர்.

விஞ்ஞானி திரு.போஸ் அவர்களின் கண்டுபிடிப்புகள்
நான் ஏற்கனவே இத்தொடரின் கடந்த அத்தியாயத்தில் குறிப்பிட்டதுபோல் உலகம் முழுவதுமுள்ள விஞ்ஞானிகள் பலர் மனித இனத்திற்கு நன்மை பயக்கக் கூடிய வகையில் கண்டு பிடித்த வானொலி,தொலைக்காட்சி,தொலைக்காட்சிக்குத் தேவையான அலைவாங்கி(Antenna), தொலைபேசி, கம்பியில்லாமல் தந்தி அனுப்பும் முறை, விமான நிலையக் கட்டுப்பாடு அறையில் செயற்படுத்தப்படும் 'ராடார்' தொழில் நுட்பங்கள் போன்ற அனைத்திற்கும் தேவையான அடிப்படை மின்னோட்ட, 'மின்னியல்'கண்டுபிடிப்புகளை திரு.போஸ் அவர்களே கண்டு பிடித்தார்.ஆனால் அந்தோ பரிதாபம், இவர் தனது கண்டுபிடிப்புகளை 'ஏனைய விஞ்ஞானிகள்' போல் இரகசியமாக வைத்துக் கொள்ளாமல், இங்கிலாந்திலும், பிரிட்டிஷ் இந்தியாவிலும் தன்னோடு உடன்படித்த மாணவர்கள், மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பகிரங்கமாக வெளியிட்டார்.இவரது கண்டுபிடிப்புகளை அடிப்படையாக வைத்தே விஞ்ஞானி 'மார்க்கோனி' அவர்களால் 'வானொலிப் பெட்டியையும்', கிரஹாம் பெல் அவர்களால் தொலைபேசியையும் கண்டுபிடிக்க முடிந்தது. 
சாதாரணமாக எமது வீடுகளில் ஒலிக்கும் 'அழைப்பு மணி'கூட(Calling bell) யாரால் கண்டு பிடிக்கப் பட்டது? என்று வரலாற்றின் பக்கங்களில் தேடினால் 'ஜோசப் ஹென்றி' என்ற பெயரே நமக்கு விடையாகக் கிடைக்கும் அவர்தான் இதைக் கண்டு பிடித்தார் என்பது உண்மையே, ஆனால் மிகவும் கடினமான செயற்பாடுகளின் மூலம் இயக்கக் கூடிய அந்தத் தொழில் நுட்பத்தை இலகுபடுத்திய/நவீனப் படுத்திய பெருமை திரு.போஸ் அவர்களையே சாரும்.
அது மட்டுமல்லாமல் அக்காலத்தில் ஒவ்வொரு விஞ்ஞானியும் தனது கண்டுபிடிப்புகளை ஏனையோர் தயாரிக்க முடியாத வகையில் அக்கண்டுபிடிப்புக்கு(பொருளுக்கு) காப்புரிமை(Patent right) பெறுவது வழக்கம். ஆனால் திரு போஸ் அவர்கள் தனது கண்டு பிடிப்புகள் எவற்றிற்குமே காப்புரிமை வாங்காமல் இருந்துவிட்டார். இது வரலாற்றில் அவர் விட்ட மாபெரும் தவறு என்று பல அறிவியல் நிபுணர்களாலும் கருதப் படுகிறது. இத்தகைய விமர்சனங்களுக்கு திரு.போஸ் அவர்களின் பதில்தான் என்ன? "நான் எனது கண்டுபிடிப்புகளை மனித இனத்திற்கு நன்மை பயப்பதற்காகவே கண்டுபிடித்தேன், இதன்மூலம் 'கோடி ரூபாய்கள்' கிடைக்கும் என எதிர்பார்த்து நான் ஆராய்ச்சிகளில் இறங்கியதில்லை.இந்த மனித இனத்திற்கு எனது கண்டுபிடிப்புகளால் நன்மை கிடைக்குமானால் அதுவே நான் இம்மண்ணில் பிறப்பெடுத்தமைக்கான பயனாகும்" எனக் கூறியவர்   
தனது கண்டுபிடிப்புகள் எதற்குமே காப்புரிமை வாங்காமலே இருந்துவிட்டார்.இத்தகைய ஒரு விஞ்ஞானியை இக்காலத்தில் இம்மண்ணில் காண முடியுமா? இத்தகைய ஒரு மனிதன் இக்காலத்தில் நம் மத்தியில் வாழ்ந்தால் "பொழைக்கத் தெரியாத புள்ள" எனப் பெயர் வாங்கியிருப்பார் அல்லவா? சரி இவர் மட்டும்தான் தனது கண்டுபிடிப்புகளுக்கு 'காப்புரிமை' வாங்காது விட்ட விஞ்ஞானியா? என வரலாற்றின் பக்கங்களில் தேடிப் பார்த்தபோது, இன்னும் இரண்டு விஞ்ஞானிகளின் பெயர்களை மட்டுமே வரலாற்றின் பக்கங்களில் காண முடிந்தது.
(தொடரும்)

தாரமும் குருவும்...,

இ.சொ.லிங்கதாசன்
(ஆசிரியர்களை அவதூறு செய்வது எனது நோக்கமல்ல)
பகுதி 1.7

பாலர் வகுப்பு(Nursery/kindergarten)

அந்தப் பாலர் பாடசாலையின் முதலாவது நாள் பல பிள்ளைகளின் அழுகையோடு ஆரம்பிக்கப் பட்டது. எனக்கு எங்கள் வீட்டில் என் தாயாரால் நிலத்தில்(வீட்டுத் தரையில்) மணலைப் பரப்பி '' ''என்ற தமிழ்த்தாயின் முகவரியை எழுதுவதற்குப் பயிற்றுவிக்கப் பட்டிருந்தது. ஆனால் இன்றோ எனக்குப் புதியதொரு அனுபவம் அதாவது 'அ' 'ஆ' வை கையிலுள்ள 'slate' என அனைத்துத் தமிழ் மக்களாலும் அழைக்கப் படும் 'எழுத்துப் பலகையில்(இது எனது மொழிபெயர்ப்பாகும்,ஏனெனில் 'slate' இற்கு தமிழில் என்ன பெயர் என்று நானறியேன். தமிழ் மக்கள் அனைவருமே இதனை சிலேற்(இலங்கைத் தமிழ்) என்றோ அல்லது சிலேட்(இந்தியத் தமிழ்) என்றோதான் அழைக்கிறார்கள்) எழுத வேண்டும். இது எனக்கு ஒரு சவாலாகவே இருந்தது. காரணம் வீட்டில் சிலேட்டில் எழுதிப் பழக்கமில்லையே, தவிரவும் எனக்கு நேற்றைய தினம்தானே வாழ்வில் முதல்தடவையாக ஒரு 'சிலேட்' எனது தந்தையாரால் வாங்கித் தரப்பட்டிருந்தது. அதைப் 'புதுப் புடவையை'சில பெண்கள் பத்திரமாகப் பெட்டியில் பூட்டி வைத்துப் பாதுகாப்பார்களே, அதைப் போலவே நானும் பத்திரமாகப் பூட்டி வைத்துப் பாதுகாத்தேன். என் அண்ணன் அதைத் தொட முனைந்தால் கத்திக் கதறித் தீர்த்தேன், தம்பி அதைத் தொட முனைந்தால் 'அடி போட்டு' தடுத்தேன்.
இப்படியாகப் பாதுகாக்கப் பட்ட அந்தச் 'சிலேட்டுக்கு' இன்று 'வெள்ளோட்டம்'.நான் ஏற்கனவே கூறியிருந்த அந்த ஆசிரியை என்ற 'தேவதை' எல்லாப் பிள்ளைகளுக்கும் சிலேட்டில் எழுதுவதற்கு மிகவும் பொறுமையாக இருந்து கற்பித்தார். கரும்பலகையில் மிகப் பெரிய இராட்சத  '','','' போன்றவற்றையும் எழுதிக் காட்டியதாக ஞாபகம். அத்தோடு மிகப்பெரிய அட்டையில் வண்ணப் படத்தில் அச்சிடப் பட்டிருந்த 'அணில்', 'ஆடு', 'இலை' போன்ற சொற்களையும் எங்களை சேர்ந்து உரத்த குரலில் சொல்ல வைத்ததாக ஞாபகம்.
(தொடரும்)

வியாழன், மார்ச் 24, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து 
மன்னுயிர்க்கு எல்லாம் இனிது. (68)

பொருள்:தம் மக்கள் அறிவுடையவராயிருத்தல் பெற்றோராகிய தங்களுக்கு நன்மை தருவதைவிட இவ்வுலகில் வாழும் எல்லா உயிர்களுக்கும் மிக்க நன்மையையும், மகிழ்ச்சியும் தருவதாகும்.