செவ்வாய், ஜனவரி 22, 2013

தன்னம்பிக்கையை ஊட்டிய ஆசானுக்கு அஞ்சலிகள் !

மக்கள் சக்தி இயக்கத் தலைவர் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்கள் நேற்றைய தினம் (21.01.2012) சென்னை திருவான்மியூரில் உள்ள அவரது இல்லத்தில்  உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 85.
-
இவரது மனைவி சீதா லட்சுமி 10 ஆண்டுகளுக்கு முன்பே காலமாகி விட்டார். சித்தார்த்தா, அசோகன் என்ற 2 மகன்களும், கமலா என்ற மகளும் அமெரிக்காவில் பணி புரிகின்றனர்.
-
"மக்கள் சக்தி இயக்கம்" என்ற பெயரில் இளைஞர்களிடையே எம்.எஸ். உதயமூர்த்தி அவர்கள் நடத்திய நிகழ்ச்சிகள் தன்னம்பிக்கையை விதைப்பவையாக இருந்தன. பல்வேறு சுயமுன்னேற்ற நூல்களையும் எழுதிய எம்.எஸ். உதயமூர்த்தி அவர்கள் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். திரு.கே.பாலசந்தர் அவர்கள் இயக்கி கமல்ஹாசன் மற்றும் சீதா நடித்த "உன்னால் முடியும் தம்பி" எனும்  திரைப்படம் இவரது கொள்கைகளை இளைஞர்கள் மத்தியில் விதைப்பதற்காகவே தயாரிக்கப்பட்டது என்று நம்பப் படுகிறது. அது மாத்திரமன்றி "மேற்படி படத்தின் தலைப்பையும் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்களிடமிருந்தே எடுத்துக் கொண்டேன்" என இயக்குனர் திலகம் பாலசந்தர் அவர்கள் ஒரு பேட்டியில் கூறி இருந்தார். எல்லாவற்றிற்கும் மேலாக மேற்படி திரைப்படத்தில் டாக்டர் உதயமூர்த்தி அவர்களைக் கௌரவிக்கும் முகமாக படத்தில் கதாநாயகனாகிய நடிகர் கமல்ஹாசனுக்கு 'உதயமூர்த்தி' என்ற பெயரையே  இயக்குனர் பாலசந்தர் அவர்கள் சூட்டியிருந்தார்.
வாழ்வில் இளைய தலைமுறைக்கு 'தன்னம்பிக்கை' எனும் பெரும் சொத்தை விட்டுச் சென்றிருக்கும் எம் ஆசானை வணங்குகிறோம். அவர்தம் மறைவுக்கு எங்கள் கண்ணீர் அஞ்சலிகள். அவர்தம் பிரிவால் துயருறும் அவரது பிள்ளைகளுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது ஆத்மா சாந்தி அடைவதாக.

 "வையத்துள் வாழ்வாங்கு வாழ்வான் -வானுறையும் 
தெய்வத்துள் வைக்கப் படும்". (வள்ளுவம்)

ஆசிரியபீடம் 
அந்திமாலை இணையம் 
www.anthimaalai.dk 

2 கருத்துகள்:

கவியாழி சொன்னது…

உண்மை,தன்னம்பிக்கை விதைத் தூவியவர்.ஐயா உதயமூர்த்தி என்பதில் எல்லா தமிழனுக்கும் அறிந்த ஒன்று. அன்னாரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்

பெயரில்லா சொன்னது…

எனது 16களில் ஆனந்தவிகடனில் தொடராக வந்த அவரது கட்டுரைகள் வாசித்து சேகரித்து - புத்தகமாகக் கட்டி -
இன்றும் மகள் இலண்டனில் வைத்திருக்கிறார்.
அவருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.

கருத்துரையிடுக