வியாழன், ஜனவரி 31, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 
அதிகாரம் 63 இடுக்கண்  அழியாமை
 
வெள்ளத்து அனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும். (622) 
 
பொருள்: வெள்ளம்போல் துன்பம் பெருகி வருகிறபோது அறிவுடையவன் அதைப் போக்க நினைக்கும் அளவிலேயே அத்துன்பம் இல்லாமல் ஓடிவிடும்.

இன்றைய பழமொழி

தமிழ்நாட்டுப் பழமொழி 

ஆயிரம் ரூபாயில் ஒரு காலணா குறைந்தால் கூட அது ஆயிரம் ரூபாயல்ல. நேர்மையானவன் ஒரு தடவை நேர்மை தவறினாலும் அவன் நேர்மையானவன் அல்ல.

சுரைக்காயின் மருத்துவ குணங்கள்..!

மனிதனின் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களையும் கொடுப்பதில் காய்கறிகளின் பங்கு அளப்பறியது. காய்கள் அனைத்துமே எளிதில் செரிக்கும் தன்மை கொண்டவை.

நம் கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிலும் தோட்டப்பயிராக காய்கறிகளைப் பயிர்செய்து பயன்படுத்தி வந்தனர். அவற்றில் ஒன்றான சுரைக்காய் பற்றி தெரிந்துகொள்வோம்.

சுரைக்காயை பல இடங்களில் வீடுகளின் கூரைமேல் படர விட்டிருப்பார்கள். அது வெள்ளை நிறப் பூக்களையும், பெரிய குடுவை போன்ற காயையும் கொண்டிருக்கும்.

சுரையின் இலை, கொடி, காய், விதை அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை.

உடல் சூடு நீங்க
இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் உடல் சூடு இயல்பாகவே அதிகமாகக் காணப்படும். இதனால் உடலானது பலவகையான இன்னல்களைச் சந்திக்க நேரிடும். இதனால்தான் நம் முன்னோர்கள் உடல் சூட்டைத் தணிக்க சுரைக்காயை உணவில் அதிகம் சேர்த்து வந்துள்ளனர். சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு குறையும், வெப்ப நோய்கள் ஏதும் அணுகாது.

சிறுநீர் பெருக
மனித உடலில் உள்ள தேவையற்ற நீர்கள் வியர்வை, சிறுநீர் வழியாக வெளியேறும். சிறுநீரகமானது இரத்தத்தில் உள்ள இரசாயனத் தாதுக்களைப் பிரித்து வெளியேற்றுகிறது. சில சமயங்களில் இவை வெளியேறாமல் மீண்டும் இரத்தத்தால் உறிஞ்சப்பட்டு உடல் பலவகையான இன்னல்களைச் சந்திக்க நேரிடுகிறது. இந்த நிலையைப் போக்கி சிறுநீர் நன்கு வெளியேற சுரைக்காய் சிறந்த மருந்து.

பித்தத்தைக் குறைக்க
உணவு மாறுபாட்டாலும், மன அழுத்தத்தாலும் உடலினை இயக்குகின்ற வாத, பித்த, கபத்தில் பித்தத்தின் நிலை அதிகரிக்கும்போது உடல் பலவீனமடைந்து பல நோய்களின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். இந்த பித்தத்தைக் குறைக்க சுரைக்காய் சிறந்தது.

சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து அருந்தி வந்தால் பித்தம் சமநிலைப்படும்.

  •   சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.
  •   உடலை வலுப்படுத்தும்.
  • பெண்களுக்கு உண்டாகும் சோகையைப் போக்கும்.
  • இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.
  •  குடல் புண்ணை ஆற்றும்.
  • மலச்சிக்கலைப் போக்கும்
  • மூலநோய் உள்ளவர்களுக்கு சுரைக்காய் சிறந்த மருந்து.

சுரைக்காயின் சதையை சிதைத்து உடலில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் உடல் எரிச்சல் குறையும்.

சுரைக்காயைச் சுட்டு சாம்பலாக்கி தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் கண்நோய் நீங்கும்.

சுரையின் இலைகளை நீரிலிட்டு ஊறவைத்து அந்த நீரைப் பருகி வந்தால் வீக்கம், பெருவயிறு, நீர்க்கட்டு நீங்கும். காமாலை நோய்க்கும் கொடுக்கலாம்.

ஒரு துண்டு சுரைக்காய், விதை நீக்கிய ஒரு நெல்லிக்காய் இவற்றை நீர்விட்டு அரைத்து சாறு பிழிந்து வாரம் இருமுறை காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.

நன்றி:  இருவர் உள்ளம் 

புதன், ஜனவரி 30, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 
அதிகாரம் 63 இடுக்கண்  அழியாமை
 
 
இடுக்கண் வருங்கால் நகுக; அதனை
அடுத்தூர்வது அஃதுஒப்பது இல். (621) 
 
பொருள்: துன்பம் வரும் போது அதற்காக வருந்தாமல் நகைத்து ஒதுக்குக. அத்துன்பத்தை வெல்லுவதற்கு அதைப் போன்றது வேறு இல்லை.

இன்றைய சிந்தனைக்கு

மார்கஸ் அரேலியஸ் 
  

வயதும், பலமும், அதிகாரமும் உன்னிடம் உள்ளபோதே நல்ல செயல்களைச் செய்யத் தொடங்கிவிடு.

செவ்வாய், ஜனவரி 29, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 
அதிகாரம் 62 ஆள்வினை உடைமை
 
 
ஊழையும் உப்பக்கம் காண்பவர் உலைவுஇன்றித்
தாழாது உஞற்று பவர். (620)
 
பொருள்: மனத்தளர்ச்சியில்லாமல் எத்தகைய குறைபாடும் இன்றி மேன்மேலும் முயன்று உழைப்பவர் வெற்றி பெறும் முயற்சிக்கு இடையூறாக வரும் விதியையும் வென்று விடுவார்.

இன்றைய பழமொழி

மூத்தோர் சொல்

அரைக் காசுக்கு இழந்த மானம் ஆயிரம் பொன் கொடுப்பினும் திரும்பி வராது. 

திங்கள், ஜனவரி 28, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 

அதிகாரம் 62 ஆள்வினை உடைமை
 
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருந்தக் கூலி தரும். (619)
பொருள்:ஊழின் காரணத்தால் ஒரு செயல் முடியாமல் போனாலும், முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியையாவது கொடுக்கும்.
 

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல் 

நல்ல செயல்கள் தேனீ போன்றவை. அவை மலரிலிருந்து தேனை எடுப்பது போன்றது. தீய செயல்கள் சிலந்தி போன்றது அது இனிய மலரில் இருந்து கூட விஷத்தை மட்டுமே எடுக்கக் கூடியது.

மூளை சுறுசுறுப்பாக இயங்க வேண்டுமா???

பகலில் தூங்கினால் உடல் குண்டாகிவிடும், அது உடல் நலத்திற்கு தீங்கானது என்ற கருத்து நிலவுகிறது. வயிறு முட்ட உணவு உண்ட பின், கும்பகர்ணன் போல, அடித்தால் கூட எழுந்து கொள்ளாத அளவுக்குத் தூங்கினால்தான் ஆபத்து. ஆனால், குட்டித் தூக்கம் நல்லது என, கண்டறியப்பட்டுள்ளது. நம் உடலே, தினமும் இரண்டு வேளைக்குத் தூங்கும் பழக்கம் கொண்டது தான். இரவு நேரத்தில், குறைந்தது ஆறு மணி நேரம் முதல் எட்டு மணி நேரம் வரை தூங்க வேண்டும்.
காலை முதல் மதியம் வரை, உடல் அல்லது மூளைக்குக் கடுமையான வேலை கொடுக்கும்போது, சற்று நேரம் ஆசுவாசப்படுத்திக் கொள்வது போல், மூளையோ, உடலோ தானாகவே ஓய்வு கேட்கும். அந்த நேரத்தில், வேலைகளை உடனே நிறுத்தி விட்டு, எல்லாவற்றையும் மறந்து, அரை மணி நேரம் கண்ணயர்ந்து விட்டால், உடலும், மூளையும் மீண்டும் சுறுசுறுப்பாகி விடுகின்றன என, மருத்துவர்கள் கூறுகின்றனர்.
 பகல் நேரத்தில் தூங்கினால் மூளையின் செயல்பாடு அதிகரிப்பதாக கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. பெர்கலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் 39 பேரிடம் மேற்கொண்ட ஆய்வில் பகல் தூக்கத்தினால் மூளை செயல்பாடு அதிகரித்து அறிவுத்திறன் வளரும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 39 பேரை இரவு நேரத்தில் நன்றாக தூங்கவைத்து பகல் நேரத்தில் நீண்ட நேரம் படிக்கவைத்தனர்.
 அதே நேரத்தில் சுமார் 20 பேரை பகலில் 90 நிமிடம் மட்டும் சிறிய அளவில் உறங்கவைத்தனர். இவர்களின் செயல்திறன் பின்னர் பரிசோதிக்கப்பட்டது. இதில், இரவில் மட்டுமே தூங்கியவர்களை விட, பகலில் சிறிது நேரம் தூங்கியவர்களின் மூளைசெயல்பாட்டு திறன் அதிகரித்து காணப்பட்டது. இந்த சோதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட போதிலும் இதே முடிவுதான் கிடைத்தது. இதயத்தை காக்கும் பகல் நேரத்தில் தூங்குவது இதயத்துக்கு நல்லது என்றும் சமீபத்திய ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
பென்சில்வேனியா நகரில் உள்ள ஒரு கல்லூரியில் பணியாற்றும் ரியான் பிரின்டில், சாரா காங்கிளின் ஆகியோர் 85 மாணவர்களிடம் மேற்கொண்ட ஆய்வில் இதனை கண்டறிந்துள்ளனர். மாணவர்களில் ஒரு பாதியினரை பகலில் ஒரு மணிநேரம் தூங்கும்படியும், இன்னொரு பகுதியினரை பகலில் தூங்காமல் இருக்கும்படியும் செய்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் முடிவில் பகலில் ஒரு மணிநேரம் தூங்கினால் ரத்தம் அழுத்தம் குறைவது கண்டறியப்பட்டது.
இதன் மூலம் பகலில் தூங்குவதன் மூலம் இதயநோய் தாக்குவது தடுக்கப்படுகிறது என்பது இதன் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அரை மணி நேரத் தூக்கம், ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் என நீடித்தால், அவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம்.
நன்றி: Spotதமிழ்.com  

ஞாயிறு, ஜனவரி 27, 2013

எடை குறையணுமா?

பெண்கள் ஒரு நாளைக்கு 4 கப் கோப்பி குடித்தால் அவர்களின் எடை குறைய வாய்ப்பு உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். கோப்பி குடிப்பது என்பது உலகம் முழுவதும் பரவலாக நடப்பது ஒன்றாக உள்ளது. அதேபோல் பெண்களின் எடையை குறைக்க உதவும் ஒரு வழியில் இதுவும் ஒன்றாக உள்ளது.
இதற்காக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கடந்த 26 வருடங்களாக 86 ஆயிரம் நர்ஸ்களை கணக்கில் கொண்டு அவர்களை கண்காணித்தனர். ச்சரியப்படும் வகையில் அதிக அளவில் காபியை குடித்தவர்களுக்கு குறைந்த அளவே சதை போட்டிருந்தது.
தினந்தோறும் 4 கப் கோப்பி குடித்து வந்த பெண்களில் 57 சதவீதத்தினர் குறைந்த அளவே எடை கொண்டிருந்ததையும், 2 முதல் 3 கப் கோப்பி குடித்தவர்களில் 22 சதவீத அளவே எடை குறைந்திப்பதையும் கண்டறிந்தனர்.

நன்றி:  யாழ்மின்னல்.com
  

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 
அதிகாரம் 62 ஆள்வினை உடைமை
 
  
 
பொறிஇன்மை யார்க்கும் பழிஅன்று அறிவுஅறிந்து
ஆள்வினை இன்மை பழி (618)

பொருள்: நல்வினை இல்லாதிருத்தல் யார்க்கும் பழியன்று. அறிய வேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாதிருத்தலே பழியாகும்.

இன்றைய பொன்மொழி

ஜோர்ஜ் வில்லியம் 

ஆயிரம் முறை சிந்தனை செய்யுங்கள். ஒரு முறை முடிவெடுங்கள்.

சனி, ஜனவரி 26, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 
அதிகாரம் 62 ஆள்வினை உடைமை
 
  
 
மடிஉளாள் மாமுகடி என்ப மடியிலான் 
தாள்உளாள் தாமரையி னாள். (617)

பொருள்: ஒருவனுடைய சோம்பலில் கரிய மூதேவி வாழ்கின்றாள். சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியில் ஸ்ரீ தேவி (திருமகள்) வாழ்கின்றாள்.

இன்றைய பொன்மொழி

மாஜினி 

உழைப்பு என்பது இந்தப் பிரபஞ்சத்தின் விதி. வெட்டியாக சும்மா இருப்பதும் தற்கொலையும் ஒன்றுதான்.

குதிகால் வெடிப்பு பிரச்சினையா?

கால்களில் பெரும்பாலும் வரும் பிரச்சனை குதிகால் வெடிப்பு. அந்த குதிகால் வெடிப்பு வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு அதிகம் வரும். மேலும் இந்த வெடிப்பு அதிகம் நடப்பவர்களுக்கும், எடை அதிகம் உள்ளவர்களுக்கும் வரும். அப்படி வரும் போது நாம் நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே அதனை சரிசெய்ய முடியும்.

குதிகால் வெடிப்பைப் போக்க.

1. படுப்பதற்கு முன் சற்று வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிது எலுமிச்சைப்பழச் சாற்றை விட்டு 56 நிமிடங்கள் பாதங்களை அதில் ஊற விட்டு, பின் எண்ணெய்யை பூசி படுக்க வேண்டும்.

2. வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிது கெமிக்கல் அதிகம் இல்லாத ஷாம்புவை ஊற்றி, அதில் பாதங்களை சிறிது நேரம் ஊற வைக்கவும். பின் மெருகேற்ற உதவும் ஒரு வகை மாக்கல்லை வைத்து தேய்த்தால், குதிகாலில் இருக்கும் அழுக்குகள் நீங்கி அழகோடும், மென்மையோடும் காணப்படும். மறக்காமல் எண்ணெய்யை பூச வேண்டும்.


3. தேனும் பாதங்களை அழகாக்க உதவும் ஒரு வகையான சிறந்த மருந்தாகும். மிதமான சூடு உள்ள தண்ணீரில் சிறிது தேன் மற்றும் எலுமிச்சைப்பழச் சாற்றை விட்டு அதில் 8 10 நிமிடங்கள் பாதங்களை ஊற விடவும். பின் பாதங்களை கழுவி, காய்ந்ததும், சிறிது ஆலிவ் எண்ணெய்யைத் தடவ வேண்டும். இதனால் வெடிப்புகள் குறைந்து அழகாகக் காணப்படும்.

4. பேக்கிங் சோடாவை வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து பாதங்களை ஊற வைத்து கழுவினால், பாதங்களில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளை நீக்கி பாதங்களுக்கு மென்மையையும், அழகையும் தரும். இதனை வாரத்திற்கு 2 முறை செய்தால் பாதங்கள் பொலிவோடு காணப்படும்.

5. வறண்ட சருமம் உள்ளவர்களுக்கே பொதுவாக குதிகால் வெடிப்பு வரும். அவர்கள் தினமும் குளிப்பதற்கு முன் மெருகேற்ற உதவும் ஒரு வகை மாக்கல்லை வைத்து தேய்த்து பின் குளிக்க வேண்டும். குளித்தப் பின்னும், படுப்பதற்கு முன்னும் எண்ணெய்யை பூச வேண்டும்.

செய்யக்கூடியவை.. செய்யக்கூடாதவை..

1. சருமம் வறண்டு இருக்கிறது என்று பாதங்களில் ரேஸரை பயன்படுத்தக் கூடாது. இதனால் ஏதாவது நோய் அல்லது ரத்தம் வடிதல் போன்றவை வரக்கூடும்.

2. எப்போதும் காலனியை அணிந்து இருக்க வேண்டும். தினமும் பாதங்களை சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் குதிகால் வெடிப்பு இல்லாமல், பாதங்கள் பொன் போல் மிளிரும்.

நன்றி:  தமிழ்கதிர்.com 

வெள்ளி, ஜனவரி 25, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 
அதிகாரம் 62 ஆள்வினை உடைமை
 
 
முயற்சி திருவினை ஆக்கும்; முயற்சியின்மை
இன்மை புகுத்தி விடும். (616) 
 
பொருள்: முயற்சி ஒருவனுடைய செல்வத்தைப் பெருகச் செய்யும். முயற்சி இல்லாமை அவனிடத்து வறுமையைச் சேர்த்து விடும்.

இன்றைய பொன்மொழி

புத்தர்

ஆயிரம் பேர்களை வென்றவனை விடத் தன்னைத்தான் வென்றவனே மிகப் பெரிய வீரன்.

வியாழன், ஜனவரி 24, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 
அதிகாரம் 62 ஆள்வினை உடைமை
 
 
இன்பம் விழையான், வினைவிழைவான், தன்கேளிர்
துன்பம் துடைத்துஊன்றும் தூண். (615)
 
பொருள்: இன்பத்தை விரும்பாதவனாகித் தான் மேற்கொண்ட தொழிலை முடித்தலை விரும்புபவன் தன் சுற்றத்தாரது துன்பத்தை ஒழித்து அவர்களைத் தாங்கும் தூண் ஆவான்.

இன்றைய பழமொழி

பாரசீகப் பழமொழி
  

ஆயிரம் பறவைகளின் நிம்மதியைக் கெடுக்க ஒரு கல் போதும். ஆயிரம் மனிதர்களின் நிம்மதியைக் கெடுக்க ஒரு 'கெட்டவன்' போதும். 

புதன், ஜனவரி 23, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 
அதிகாரம் 62 ஆள்வினை உடைமை
 
 
 
தாள்ஆண்மை இல்லாதான் வேளாண்மை, பேடிகை
வாள்ஆண்மை போலக் கெடும். (614) 
 
பொருள்: முயற்சி இல்லாதவன் பிறருக்கு உதவி செய்ய நினைப்பது, பேடி(கோழை) தன் கையில் வாளை எடுத்து ஆண்மையைக் காட்டுவது போன்றது.

இன்றைய பொன்மொழி

 சோக்கிரட்டீஸ் 

எதுவுமே செய்யாமல் இருப்பவன் மட்டுமே சோம்பேறியல்ல; தன்னால் முடிந்ததைச் செய்யாமல் இருப்பவனும் சோம்பேறியே.

செவ்வாய், ஜனவரி 22, 2013

தன்னம்பிக்கையை ஊட்டிய ஆசானுக்கு அஞ்சலிகள் !

மக்கள் சக்தி இயக்கத் தலைவர் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்கள் நேற்றைய தினம் (21.01.2012) சென்னை திருவான்மியூரில் உள்ள அவரது இல்லத்தில்  உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 85.
-
இவரது மனைவி சீதா லட்சுமி 10 ஆண்டுகளுக்கு முன்பே காலமாகி விட்டார். சித்தார்த்தா, அசோகன் என்ற 2 மகன்களும், கமலா என்ற மகளும் அமெரிக்காவில் பணி புரிகின்றனர்.
-
"மக்கள் சக்தி இயக்கம்" என்ற பெயரில் இளைஞர்களிடையே எம்.எஸ். உதயமூர்த்தி அவர்கள் நடத்திய நிகழ்ச்சிகள் தன்னம்பிக்கையை விதைப்பவையாக இருந்தன. பல்வேறு சுயமுன்னேற்ற நூல்களையும் எழுதிய எம்.எஸ். உதயமூர்த்தி அவர்கள் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். திரு.கே.பாலசந்தர் அவர்கள் இயக்கி கமல்ஹாசன் மற்றும் சீதா நடித்த "உன்னால் முடியும் தம்பி" எனும்  திரைப்படம் இவரது கொள்கைகளை இளைஞர்கள் மத்தியில் விதைப்பதற்காகவே தயாரிக்கப்பட்டது என்று நம்பப் படுகிறது. அது மாத்திரமன்றி "மேற்படி படத்தின் தலைப்பையும் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்களிடமிருந்தே எடுத்துக் கொண்டேன்" என இயக்குனர் திலகம் பாலசந்தர் அவர்கள் ஒரு பேட்டியில் கூறி இருந்தார். எல்லாவற்றிற்கும் மேலாக மேற்படி திரைப்படத்தில் டாக்டர் உதயமூர்த்தி அவர்களைக் கௌரவிக்கும் முகமாக படத்தில் கதாநாயகனாகிய நடிகர் கமல்ஹாசனுக்கு 'உதயமூர்த்தி' என்ற பெயரையே  இயக்குனர் பாலசந்தர் அவர்கள் சூட்டியிருந்தார்.
வாழ்வில் இளைய தலைமுறைக்கு 'தன்னம்பிக்கை' எனும் பெரும் சொத்தை விட்டுச் சென்றிருக்கும் எம் ஆசானை வணங்குகிறோம். அவர்தம் மறைவுக்கு எங்கள் கண்ணீர் அஞ்சலிகள். அவர்தம் பிரிவால் துயருறும் அவரது பிள்ளைகளுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது ஆத்மா சாந்தி அடைவதாக.

 "வையத்துள் வாழ்வாங்கு வாழ்வான் -வானுறையும் 
தெய்வத்துள் வைக்கப் படும்". (வள்ளுவம்)

ஆசிரியபீடம் 
அந்திமாலை இணையம் 
www.anthimaalai.dk 

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 
அதிகாரம் 62 ஆள்வினை உடைமை
 
 
 
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னும் செருக்கு. (613)
 
பொருள்: பிறர்க்கு உதவி செய்தல் என்னும் மேம்பட்ட நிலைமை முயற்சி என்னும் சிறந்த பண்பில் நிலைத்திருக்கின்றது.

இன்றைய பொன்மொழி

யூரிப்பிடிஸ் 

ஆயிரக் கணக்கான நெருங்கிய உறவினர்களைக் காட்டிலும் சமூக இரக்கவுணர்வு காரணமாக உள்ளமுருகும் ஒருவர் எவ்வளவோ மேல்.

கருப்பாக இருப்பவர்களுக்காக சில டிப்ஸ்

இந்த உலகில் அழகாக இருக்க வேண்டும் என்று நினைக்காதவர்கள் எவரும் இருக்க முடியாது. அவ்வாறு அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக அழகு நிலையங்களுக்கு சென்று அழகுப்படுத்திக் கொள்கின்றனர். அதில் பெரும்பாலும் அழகு நிலையங்களுக்குச் சென்று அழகுப்படுத்துவதில் முதல் காரணமாக இருப்பது, கருப்பாக இருக்கிறோம் என்பதற்காகவே.

இவ்வாறு கருப்பாக இருப்பதற்கு முதல் காரணம் உடலில் இருக்கும் நிறமி செல்களான 'மெலனின்' அளவு அதிகமாக இருப்பது. அவ்வாறு அதிக நிறமிசெல்கள் உடலில் இருந்தால் அந்த இடமானது கருப்பாக இருக்கும். சிலர் திடீரென்று கருப்பாக மாறுவார்கள், அதற்கு அவர்களது உடலில் உள்ள நிறமிச் செல்கள் அதிக அளவு மெலனினை சுரக்கும்.

அதுமட்டுமல்லாமல் இத்தகைய செல்களின் சுரப்புத் தன்மையை குறைவுப்படுத்த பல கெமிக்கல் கலந்த அழகு சாதனப் பொருட்கள் இருந்தாலும், வீட்டில் இருந்தே சில இயற்கையான பொருட்களை வைத்து செய்தால், சருமமானது அழகோடு இருப்பதுடன், மெலனின் அளவையும் கட்டுப்படுத்தலாம் என்று அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

* பாதாம், பால் மற்றும் தேன் போன்றவை சருமத்திற்கு ஏற்ற சிறந்த பொருள். ஆகவே 3-4 பாதாம் பேஸ்ட், 1/2 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின் அந்த பேஸ்டை முகத்திற்கு தடவி, 30 நிமிடம் ஊற வைத்து பிறகு கழுவவும். அதனை தொடர்ந்து செய்தால் முகத்தில் இருக்கும் கருப்பானது மறையும்.

* 2-3 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து முகத்தில் குளிர்ந்த நீரில் அலசி வந்தால், முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் போவதோடு, முகமும் பளிச்சென்று இருக்கும்.

* சந்தன பவுடர் ஒரு நல்ல சிறந்த சரும பராமரிப்பிற்கு ஏற்ற பொருள். அதனை தண்ணீரில் குலைத்து, கருமை அதிகமாக இருக்கும் இடத்தில் தடவ வேண்டும். வறண்ட சருமம் உள்ளவர்கள், அதோடு பால் மற்றும் சிறிது தேனை சேர்த்து கலந்து தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து செய்யுங்கள். அதனை நாள்தோறும் செய்து வந்தால், நாளடைவில் நிறமி செல்களான மெலனின் அளவு குறைந்துவிடும்.

* கோக்கோ வெண்ணெய் ஒரு நல்ல மாஸ்சுரைசர் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த பொருள். அது விரைவில் மெலனின் அளவை சரிசெய்யும். மேலும் எந்த இடம் அதிகமான அளவு கருப்பாக உள்ளதோ, அந்த இடத்தில் தடவி, 10 நிமிடம் ஊற வைத்து கழுவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். அதுவும் அதனை செய்தால் உடலில் இரத்த ஓட்டத்தின் அளவு அதிகரிக்கும்.

மேலும் இது செல்கள் பாதிப்படையாமல் காத்துக் கொள்ளும். இந்த முறை உடலுக்கு விரைவில் நல்ல நிறத்தைக் கொடுக்கும். மேற்கூறியவாறெல்லாம் செய்தால் உடலில் அதிகமாக இருக்கும் மெலனின் அளவு குறைவதோடு, முகமும் அழகாக பொலிவோடு இருக்கும். 

நன்றி: மாலைமலர் 

திங்கள், ஜனவரி 21, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 

அதிகாரம் 62 ஆள்வினை உடைமை
  
வினைக்கண் வினைகெடல் ஓம்பல்; வினைக்குறை 
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு. (612)

பொருள்: ஒரு செயலைச் செய்து முடிக்காமல் இடையில் விட்டவரை உலகம் கைவிடும். ஆதலால் முயற்சியைக் கைவிடல் ஆகாது.

இன்றைய பொன்மொழி

ஜேம்ஸ் அலன்

உங்கள் கனவுகளுக்கு இன்னும் கற்பனைச் செறிவூட்டுங்கள், உங்கள் கொள்கைகளுக்கு இன்னும் தார்மீகச் செறிவூட்டுங்கள், உங்கள் எண்ணத்தில் உருக்கொள்ளும் அழகுக்குச் செறிவூட்டுங்கள். ஏனெனில் இவற்றிலிருந்துதான் மகிழ்ச்சி அளிக்கும் வாழ்க்கை முறையும், தேவலோகத்திற்கு இணையான சூழ்நிலைகளும் உருவாகின்றன. இவற்றையெல்லாம் மிக விருப்பத்துடன் நீங்கள் செய்யும்போது இதோ! உங்கள் உலகம் கடைசியில் உங்கள் கையில்.

ஞாயிறு, ஜனவரி 20, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 
அதிகாரம் 62 ஆள்வினை உடைமை
 
  
 
அருமை உடைத்துஎன்று அசாவாமை வேண்டும் 
பெருமை முயற்சி தரும். (611)
 
பொருள்: இது செய்வதற்கு முடியாத செயல் என்று சோர்வடையாமல் இருக்க வேண்டும்; இடைவிடாத முயற்சி அதைச் செய்து முடிக்கும் வலிமையைத் தரும். 

இன்றைய பழமொழி

தமிழ்நாட்டுப் பழமொழி 

 அழுதுகொண்டே ஆயிரம் ரூபாய் தருவதை விட இன்முகமாய் இல்லையென்று சொல்வது சிறந்தது.

பழைய சாதத்துல இவ்வளவு விஷயமா?

திரைப்படங்களில் கிராமத்து சீன். கதாநாயகி பித்தளைத் தூக்கில் பழங்கஞ்சி எடுத்துக் கொண்டு போய் கதாநாயகனுக்குத் தருவாள். நீரும் சோறுமாக அதை அள்ளி அவன் உண்பான். இன்றைய நிஜ கிராமங்களில் கூட இந்தக் காட்சியைப் பார்க்க முடியாது.
ஆனால் முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் பி6, பி12 ஏராளமாக இருக்கிறது என்கிறார் அமெரிக்காவில் இருக்கும் ஒரு மருத்துவர்.

தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் 'ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்' (கவனியுங்கள்: 'மில்லியன்' அல்ல 'ட்ரில்லியன்') பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்!

கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்தக் காய்ச்சலும் நம்மை அணுகாது!

பழைய சாதத்தின் மகத்துவத்தைப் பற்றி அமெரிக்காவில் வசிக்கும் நம் இந்திய விஞ்ஞானி ப்ரதீப் கூறியதில் இருந்து சில:

1. "காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால், உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது.

2. இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் இலட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது.

3. மறுநாள் இதை குடிக்கும் போது உடல் சூட்டைத் தணிப்பதோடு குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும்.

4. அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செய்கிறது.

5. இந்தப் பழைய சாதம் உணவு முறையை சில நாள் தொடர்ந்து நான் சாப்பிட்டதில் நல்ல வித்தியாசம் தெரிந்தது. இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிட்டதோடு, உடல் எடையும் குறைந்தது." என்கிறார்.

6. மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது.


7. அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சட்டென்று சரியாகி விடும்.


8. அல்சர் உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்து வர, ஆச்சரியப்படும் அளவிற்குப் பலன் கிடைக்கும்.


9. எல்லாவற்றிற்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் அருகில்கூட வராது.


10. ஆரோக்கியமாக அதே சமயம் இளமையாகவும் இருக்கலாம்".


**

பழைய சாதத்தை எப்படி செய்வது:

பழைய சாதத்திற்கு மிகவும் சிறந்தது பிரெளன் ரைஸ் என்று அழைக்கப்படும் கைக்குத்தல் அரிசிதான்.

ஒரு கல் சட்டி அல்லது மண் சட்டியில் சிறிது சாதத்தைப் போட்டு, சுத்தமான தண்ணீரை நிறைய ஊற்றவும்.

மறுநாள் சாதத்தை நன்கு பிசைந்து, மோர் சிறிது சேர்த்து, சின்னவெங்காயம் சேர்த்துக் குடிக்க 'ஜில்'லென்று இருக்கும் (மிகவும் சூடாக இருக்கும் சாதத்தில் தண்ணீரை ஊற்றக் கூடாது.)


மதிய உணவு நேரம் வரை டீ, காபி கேக்காது வயிறு!


நன்றி: தகவல்களஞ்சியம்.blogspot.com  

சனி, ஜனவரி 19, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 
அதிகாரம் 61மடி இன்மை 
 
  
 
மடிஇலா மன்னவன் எய்தும் அடிஅளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு. (610) 
 
பொருள்: ஆள்கின்றவனுக்குச் சோம்பல் இல்லையென்றால் திருமாலின் திருவடிகளால் அளக்கப் பெற்ற இந்த உலகம் முழுவதையும் அவன் அடைவான்.

இன்றைய பொன்மொழி

 ஜேம்ஸ் அலன் 
ஒரு அழகிய கனவை, உயரிய கொள்கையைத் தன் இதயத்தில் ஏந்திய ஒருவன் ஒருநாள் அது உண்மையாவதைக் காண்பான்.

வெள்ளி, ஜனவரி 18, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 
அதிகாரம் 61மடி இன்மை 
 
  
 
குடிஆண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
மடிஆண்மை மாற்றக் கெடும். (609) 
 
பொருள்: ஒருவனுடைய குடியிலும், ஆண்மையிலும் ஏற்பட்ட குற்றங்கள் அவன் சோம்பலை ஆளும் தன்மையைக் கைவிடுவதால் நீங்கும்.

இன்றைய பொன்மொழி

மகாத்மா காந்தி 
அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் மீது தனக்கு அன்பு
இருக்கிறது என்பதை அவர்கள் நன்கு உணரும்படி ஒருவர் செய்ய வேண்டும். தான் கூறும் முடிவு சரியானதாகவே இருக்கும் என்ற நம்பிக்கை அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட
வேண்டும். அதோடு தன்னுடைய முடிவை அவர்கள் ஏற்றுக்கொள்ளவோ, அமலாக்கவோ இல்லையானால், அதனால் தனக்கு எந்தவிதமான
மனக்கஷ்டமும் ஏற்படாது என்பதும், நிச்சயமாக இருக்க வேண்டும். இப்படியெல்லாம் இருந்தால்தான் குற்றம் குறைகளைக்
கூறிக் கடுமையாகக் கண்டிக்கும் உரிமையை ஒருவர் பெற்றவராவார்.

வியாழன், ஜனவரி 17, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 
அதிகாரம் 61மடி இன்மை 
 
 
மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு 
அடிமை புகுத்தி விடும் (608)
 
பொருள்: நல்ல குடியில் பிறந்தவனிடம் சோம்பல் வந்து சேர்ந்து கொண்டால், அவன் குடும்பமே பகைவருக்கு அடிமையாகி விடும்.

இன்றைய பொன்மொழி

சோக்கிரட்டீஸ்

மிகக் குறைந்த செல்வத்தைக் கொண்டு எவன் திருப்தி அடைகிறானோ அவன்தான் முதன்மையான செல்வந்தன். ஏனெனில் இயற்கையின் செல்வம் திருப்திதான்.

புதன், ஜனவரி 16, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 
அதிகாரம் 61மடி இன்மை 
 
 
இடிபுரிந்து எள்ளும்சொல் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்று இலவர். (607)
 
பொருள்: சோம்பேறியாக முயற்சி ஏதும் இல்லாமல் வாழ்பவன் பிறருடைய ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாவான்.  
 

இன்றைய பழமொழி

தமிழ்நாட்டுப் பழமொழி 

ஆயிரம் கோடி பணம் இருந்தாலும் உண்மையான நண்பன் இல்லாதவன் பெரிய ஏழை.

புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துக்கள்!!!

வாய், தொண்டை, நுரையீரல், வயிறு, சிறுநீரகம், சிறுநீர்ப்பை போன்ற உடல் பாகங்களால் புற்றுநோய் ஏற்பட புகையிலை காரணமாகிறது.
தொடர்பான தகவல்கள்
§ புகையிலையினால் ஏற்படுகிற வாய்ப்புற்று நோய் கொண்ட நோயாளிகள், உலகிலேயே, இந்தியாவில் மிக அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.

§ இந்தியாவில், ஆண்கள் மற்றும் பெண்களில் ஏற்படும் புற்றுநோய்களுக்கு, முறையே 56.4% மற்றும் 44.9% புகையிலை காரணமாயிருக்கிறது.

§ 90%கும் அதிகமான நுரையீரல் புற்றுநோய் மற்றும் பிற நுரையீரல் நோய்களை, புகைபிடித்தல் ஏற்படுத்துகிறது.

இதயம் மற்றும் இரத்தக்குழாய் நோய்கள், மாரடைப்பு, மார்புவலி, இதயக்கோளாரினால் ஏற்படும் திடீர் மரணம், ஸ்ட்ரோக் (மூளை பாதிப்பு), கால்களில் ஏற்படும் காங்கரின் எனப்பட்ட புற இரத்தக்குழாய் நோய்கள் போன்றவை ஏற்பட புகையிலை காரணமாகிறது.
தொடர்பான தகவல்கள்
§ இந்தியாவில் 82% நாட்பட்ட நுரையீரல் சுவாசக்குழாய் அடைப்பு நோய் ஏற்பட, புகைப்பிடித்தல் காரணமாய் அமைகிறது.

§ புகையிலை மறைமுகமாக நுரையீரல் டியூபர்குளோஸிஸினை (டி.பி) ஏற்படுத்துகிறது. எப்போதும் புகைபிடிப்பவர்களுக்கு, டியூபர்குளோஸிஸ் ஏற்படும் வாய்ப்பு மூன்று மடங்கு அதிகம் ஆகும். சிகரெட் அல்லது பீடிகளை அதிகளவு புகைபிடிப்பவர்களுக்கு, டியூபர்குளோஸிஸ் ஏற்படும் வாய்ப்பு மிகவும் அதிகம்.

§ புகைத்தல்/புகையிலை திடீரென இரத்த அழுத்தத்தினை அதிகரிக்கிறது மற்றும் இதயத்திற்கு செல்லும் இரத்தத்தின் அளவினை குறைக்கிறது.

§ புகையிலை, கால்களுக்கு செல்லும் இரத்த ஓட்டத்தையும் குறைக்கிறது. கால்களில், கரங்களில் காங்கரின் எனப்படும் கால் மாமிசத்தை அரித்துவிடும் புண்களை ஏற்படுத்தலாம்.

§ புகையிலை, உடல் முழுவதிலும் உள்ள தமனி எனப்படும் இரத்தத்தை ஏந்திச்செல்லும் இரத்தக்குழாய் சுவர்களை சேதப்படுத்துகிறது.

§ புகைத்தல், சிறுபிள்ளைகள் மற்றும் குடும்பத்திலுள்ள மற்றவர்களுக்கு உடல்நலக்கேட்டினை ஏற்படுத்துகிறது. புகைப்பழக்கமில்லாத ஒருவர், புகைப்பழக்கம் (ஒரு நாளைக்கு இரண்டு பாக்கெட் சிகரெட் புகைக்கும்) உள்ளவரோடு சேர்ந்து வாழும்போது, புகைபிடிக்காத நபர் அவரை அறியாமலேயே மூன்று சிகரெட்டினை புகைக்கிறார். இது அவரின் சிறுநீரில் உள்ள நிகோடின் அளவு கொண்ட கணிக்கப்பட்டது.

§ புகைத்தல்/புகையிலை பயன்பாடு டையாபிடிஸ் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிற காரணியாக அமைகிறது என கண்டறியப்பட்டுள்ளது.

§ புகையிலை, இரத்தத்திலுள்ள நன்மை பயக்கக்கூடிய கொழுப்பின் அளவை குறைக்கிறது.

§ புகைபிடிப்பவர்கள் / புகையிலை பயன்படுத்துபவர்களுக்கு, பயன்படுத்தாதவர்களை, விட இதயநோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு 2 முதல் 3 மடங்கு அதிகமாக உள்ளது.

 ஒவ்வொரு 8 விநாடிகளில் 1 புகையிலை சம்மந்தமான மரணம் நிகழ்கிறது.
தொடர்பான தகவல்கள்
§ இந்தியாவில் புகையிலை சம்மந்தமான உயிரிழப்பு ஆண்டிற்கு 8 முதல் 9 லட்சம் ஆகும்.

§ புகையிலையை தவிர்ப்பதால் ஒரு விடலைப்பருவத்தினரின் வாழ்வில் 20 ஆண்டுகள் கூடுகிறது.

§ புகையிலை பயன்படுத்தும் விடலைப்பருவத்தினரில் பாதிப்பேர் புகையிலை உபயோகத்தால் கொல்லப்படுகின்றனர். (மீதமுள்ளவர்களில் பாதிபேர் நடுத்தரவயதிலும், பாதிபேர் முதிர்வயதிலும் கொல்லப்படுகின்றனர்).

§ புகையிலை பயன்பாட்டினால் ஏற்படும் உயிரிழப்பு, மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது, இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் வேகமாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆண்கள் மற்றும் பெண்களில், புகைத்தல் / புகையிலை உபயோகம், கெடுதலான விளைவுகளை ஏற்படுத்துகிறது
தொடர்பான தகவல்கள்
§ ஆண்களில் மலட்டுத் தன்மை ஏற்பட, புகைப்பழக்கம் ஒரு காரணமாக அமைகிறது.

§ புகைத்தல் / புகையிலை பயன்பாடு, பெண்களில் ஈஸட்ரோஜன் எனும் ஹார்மோன் சுரப்பதை குறைக்கிறது. மாதவிடாய் நின்றுபோவது குறித்த காலத்திற்கு முன்பே ஏற்படுகிறது.

§ புகைத்தல் / புகையிலை பயன்பாடு உடலின் செயல் மற்றும் திறனை குறைக்கிறது.

§ புகைக்கும் பெண்கள், கர்ப்பத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்தும் போது, ஸ்ட்ரோக் (மூலை பாதிப்பு) ஏற்படும் வாய்ப்பு விகிதம் அதிகரிக்கிறது.

§ புகைப்பழக்கம் உள்ள கர்ப்பிணிகளில், குழந்தையை இழக்க அதிகவாய்ப்பு உள்ளது. குறைந்த எடையுடன் கூடிய பிள்ளைபிறக்கும் வாய்ப்புள்ளது. வளர்ச்சியில் கோளாறுகள் கொண்ட குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது. பிறந்த குழந்தை திடீரென இறக்க வாய்ப்புள்ளது.
* * *

 புகையிலையினை தவிர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்
 புகையிலையை தவிர்ப்பதால் உடலில் ஏற்படும் நன்மைகள்:
  1. உங்களுக்கு புற்றுநோய் மற்றும் இதயநோய் ஏற்படும் ஆபத்து குறைகிறது.
  2. உங்கள் இதயத்தில் ஏற்படும் அழுத்தம் குறைகிறது.
  3. நீங்கள் நேசிக்கும் நபர் புகையிலையினால் பாதிக்கப்படமாட்டார்.
  4. உங்கள் புகைப்பழக்கத்தினால் ஏற்படும் இருமல் மற்றும் சளி மறையலாம்.
  5. உங்கள் பற்கள் வெண்மையாகவும், சுத்தமாகவும் மாறும்.
புகையிலையை தவிர்ப்பதால் ஏற்படும் சமுதாய நன்மைகள்:
  1. நீங்கள் கட்டுபாட்டிற்குள் இருக்கும் ஒரு நபராக இருப்பின், சிகரெட் உங்களை கட்டுப்படுத்தாது.
  2. உங்கள் சுயதோற்றம் மற்றும் சுயநம்பிக்கை வளரும்.
  3. இப்போதும் மற்றும் எதிர்காலத்திலும் நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல பெற்றோராய் இருப்பீர்கள்.
  4. புகையிலையை தவிர்ப்பதால் மிஞ்சும் பணம், மற்ற காரியங்களுக்கு பயன்படுத்த முடியும்
 புகையிலை பயன்பாட்டினை விட்டுவிட எந்நேரமும் நல்ல நேரம் தான்
 § புற்றுநோய் மற்றும் பிற மோசமான நோய்கள் ஏற்படும்முன், நடுத்தரவயதில் புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்துவது, பிற்காலத்தில், புகையிலைப் பழக்கத்தினால் ஏற்படும் மரணம் மற்றும் பிற ஆபத்துகளை தவிர்க்கிறது.

§ புகையிலை பழக்கத்தினை ஆரம்ப வயதிலேயே நிறுத்துவதின் பலன் மிகவும் அதிகம்.

§ புகைபிடிக்கும் பழக்கத்தை நீங்கள் விட்டுவிட்டால், இதயநோய் வரும் அபாயம், புகைபிடிக்காதவர்களைப்போலவே 3 வருடங்களில் குறைந்து, இயல்பான நிலைக்கு வருகிறது.

 புகைத்தல் / புகையிலை பயன்பாட்டினை தவிர்க்க சில ஆலோசனைகள்
  1. சிகரெட் சாம்பல் போடும் தட்டுகள், பான், ஜர்தா போன்றவற்றை கண்ணிற்கும், மனதிற்கும் மறைவாக வைக்க வேண்டும்.
  2. சிகரெட், பான், ஜர்தா போன்றவற்றை சுலபமாக கிடைக்காத, எட்டாத இடத்தில் வைக்கவும். .ம். வீட்டின் பிற அறைகளிலோ, அடிக்கடி செல்லாத இடங்களிலோ அல்லது அலமாரிகளில் வைத்து பூட்டியோ வைக்க வேண்டும்.
  3. புகை, பான், ஜர்தா போன்றவற்றை பயன்படுத்த தூண்டும் காரியங்கள், புகைப்பிடிப்போர் கூட்டம் போன்றவற்றை கண்டறிந்து, சிறிது காலத்திற்கு அவற்றிலுருந்து விலகியிருக்க முயற்சிக்க வேண்டும்.
  4. சுவிங்கம், இனிப்புகள், பெப்பர்மென்ட் மிட்டாய்கள், சர்க்கரை மிட்டாய் போன்றவற்றை வாயில் போட்டுக் கொள்ளுதல்
  5. எப்பொழுதெல்லாம் புகையிலை, பான் போன்றவை நினைவுக்கு வருகிறதோ, அப்பொழுதெல்லாம் உட்கார்ந்த அல்லது படுத்த நிலையில், மூச்சினை நன்கு இழுத்து விட முயற்சிக்கவும். ஒரு டம்ளர் தண்ணீர் அருந்துவது மற்றும் உடற்பயிற்சி செய்வது புகைப்பழக்க எண்ணத்தை குறைக்க உதவுகிறது.
  6. புகையிலை எடுக்க நீங்கள் நினைக்கும்போது, உங்கள் குழந்தைகள் பற்றி சிந்தியுங்கள். மேலும், புகையிலையினால் நோய் ஏற்படின், அது உங்கள் பிள்ளையின் எதிர்காலத்தை எப்படி பாதிக்கும் என்பதனை சிந்தனை செய்து பாருங்கள்.
  7. புகையிலை பழக்கததினை நிறுத்த ஒரு தேதியை குறியுங்கள்.
  8. உங்களுக்கு உதவும் நபரை கண்டறியுங்கள்.
  9. புகையிலை, பான், ஜர்தா போன்றவை இல்லாத முதல் நாளுக்காய் திட்டமிடுங்கள்.
  10. புகையிலை, பான், ஜர்தா போன்றவற்றின் மேல் விருப்பம் ஏற்படும் போது கீழ்க்காணும் 4 வழிகளைப் பின்பற்றுங்கள்:
    1. ஏதேனும் ஒரு வேலையை செய்யுங்கள்,
    2. அடுத்த சிகரெட்டினை புகைக்க / பயன்படுத்த தாமதியுங்கள்,
    3. மூச்சை நன்கு உள்ளிழுத்து விடுங்கள்,
    4. தண்ணீர் அருந்துங்கள் 
  11. புகையிலைபழக்கததினைவிடுவதற்குஉங்களால்முடியும்எனஉறுதியாகநம்புங்கள்
  12. உங்களுக்கு நீங்களே பரிசளித்துக் கொள்ளுங்கள்
  13. மனதைத் தளர்ததும் உக்திகளை (யோகா, நடைபயிற்சி, தியானம், நடனம், இசை போன்றவை) ஒவ்வொரு நாளும் செய்யுங்கள்.
  14. காஃபின் (காபியில் இருக்கும் ஒரு வகை வேதியல் பொருள்) மற்றும் ஆல்கஹால் (மது) உட்கொள்வதை குறைத்துகொள்ளுங்கள்
  15. மேலும சுறுசுறுப்பாக இருந்து, ஆரோக்கியமாக உணவினை உட்கொள்ளுங்கள்.
நன்றி: சாந்தன்.com