சனி, ஜனவரி 15, 2011

கலைஞனுக்கு மரியாதை

அன்பார்ந்த வாசகப் பெருமக்களே!
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நாளில் அந்திமாலை ஒரு கலைஞனைக் கௌரவித்து மகிழ்வெய்துகிறது. எமது தாயகத்தில் நாற்பது வருடங்களுக்கு மேலாக ஒரு கவிஞன் தனது கிராமத்தில் வாழ்ந்தபடி, தனக்குப் புகழ் கிடைப்பதைப் பற்றியோ, கிடைக்காததைப் பற்றியோ கவலை கொள்ளாமல் வாழ்ந்து வருவதை அறிந்துள்ளீர்களா? தமிழ்நாட்டில் நாற்பது வருடங்களுக்கு மேலாகக் கவி எழுதி வரும் கவிஞர். வாலி, கவிஞர். புலமைப் பித்தன் போன்றோர் அடைந்திருக்கும் புகழ் நீங்கள் அறியாததல்ல. ஆனால் ஈழத்தில் யாழ்ப்பாண நகரிலிருந்து 5 கிலோமீற்றர்கள் தொலைவிலிருக்கும் 'அல்லைப்பிட்டி' எனும் சிறிய கிராமத்தில் வாழ்ந்தபடி, கடந்த நாற்பது வருடங்களுக்கும் மேலாகக் கவிதைகள் எழுதிவரும் பாலசிங்கம் என அழைக்கப்படும் திரு.சந்தியாப்பிள்ளை சேவியர் வில்பிரெட் அவர்களையே இவ்விடத்தில் குறிப்பிடுகிறேன்.
இவரைப்பற்றிக் குறிப்பிடுவதென்றால் இவர் தனது கவி எழுதும் பணியைக் கடந்த நாற்பது வருடங்களுக்கு முன்னரே தனது இருபதாவது வயதில் ஆரம்பித்து விட்டார். கடந்த நாற்பது வருடங்களில் இலங்கையில் வெளிவந்த, வெளிவருகின்ற தமிழ்ப் பத்திரிகைகளாகிய வீரகேசரி, மித்திரன், சிந்தாமணி, சுதந்திரன், பாதுகாவலன், ஈழநாடு, ஈழமுரசு, முரசொலி, உதயன், சஞ்சீவி, வலம்புரி ஆகிய அனைத்துப் பத்திரிகைகளிலும் கவிதை எழுதிய பெருமைக்குரியவர். ஆனால் இந்த நான்கு தசாப்த காலத்தில் அந்தக் கலைஞனை ஒரு நிறுவனமோ, அல்லது எமது கிராமியச் சமுதாயமோ கண்டு கொள்ளாமலும், கெளரவிக்காமலும் விட்டது ஒரு வரலாற்றுத் தவறாகும். இந்த வரலாற்றுத் தவறை திருத்தும் ஒரு முயற்சியாக இந்தக் கலைஞனுக்கு அந்திமாலை இணையம் 'கவி வித்தகர்' எனும் பட்டத்தை வழங்கிக் கௌரவிக்கிறது.
எமது சமூகத்தில் உள்ள மிகப்பெரிய குறை ஒரு கலைஞனை அவன் வாழும் காலத்தில் கெளரவிக்காமல் விட்டுவிடுவோம், பின்னர் அவன் மறைந்தபின்னர் அவனுக்கு மாபெரும் பட்டங்களைச் சூட்டி, நினைவு மண்டபம் கட்டுவோம். 'மகாகவி' பாரதியும், 'கவியரசு' கண்ணதாசனும் மிகச் சிறந்த, போதுமான உதாரணங்கள் என எண்ணுகிறேன்.
இத்தகைய நிலையை மாற்றும் ஒரு புதிய முயற்சியாகவே 'அந்திமாலை' மேற்படி கவிஞரை மரியாதை செய்கிறது. எமது கிராமத்தில் ஒரு கவிஞனாக மட்டுமன்றி ஒரு பேச்சாளராக, நடிகராக பல்வேறு பரிமாணங்களில் வலம் வந்த இந்தக் கலைஞரை இன்றைய தமிழர் திருநாளில் கெளரவிப்பதானது நம்   தமிழுக்கும், ஒரு கிராமியக் கலைஞனுக்கும் செய்யும் மரியாதை மட்டுமன்றி  அதுவே தகுதியும், நியாயமும் மிக்க ஒரு செயலாகும்.
தைப்பொங்கல் தினமாகிய இன்றைய தினம் (15.1.2011) அந்திமாலையின் ஏற்பாட்டில், மேற்படி கவிஞருக்கு விருது வழங்கும் வைபவம் அல்லைப்பிட்டியிலுள்ள கவிஞரின் இல்லத்தில் மிகவும் எளிமையான முறையில் நடைபெறுகிறது. மேற்படி விருதுக்கான சான்றிதழையும், 'அந்திமாலையின்' கேடயத்தையும், அந்திமாலையின் பிரதிநிதியாகிய திரு.நிமால் கந்தசாமி அவர்கள் வழங்கவுள்ளார். கவிஞருக்கு இவ்விருதுடன் அவரை ஊக்குவிக்குமுகமாக ரூபாய் பத்தாயிரமும் வழங்கப்படுகிறது.
ஊடகத்துறையில் இயங்கிக்கொண்டிருக்கும் எனதினிய நண்பர்களையும், பெரியோர்களையும் நான் உரிமையோடு வேண்டுவது யாதெனில், நீங்களும் இத்தகைய முயற்சிகளில் ஈடுபடுங்கள். அதுவே நீங்கள் தமிழன்னைக்குச் செய்யும் தொண்டு. உங்கள் பிரதேசத்திலும் இவர்போன்ற கலைஞர்கள் நிச்சயமாக வாழ்ந்துகொண்டிருப்பார்கள்.
இனிய பொங்கல் வாழ்த்துக்களுடன்
இ.சொ. லிங்கதாசன் 
ஆசிரியர் 
அந்திமாலை.
டென்மார்க்.
15.01.2011


உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.

10 கருத்துகள்:

திருமதி. சாருமதி சொர்ணலிங்கம், அல்லைப்பிட்டி, யாழ்ப்பாணம் சொன்னது…

நம்மூரின் புகழ்பூத்த கலைஞனுக்கு வாழ்த்துக்கள்.

சி.பரிமளகாந்தன், யாழ்ப்பாணம். சொன்னது…

அன்பு அண்ணனுக்கு உளமார்ந்த வாழ்த்துக்கள்.

சே.ஜெயரூபன், அல் ஹமாரியா, லிபியா. சொன்னது…

எங்கள் அன்பான அப்பாவுக்கு என் இதயபூர்வமான வாழ்த்துக்கள்.

திருமதி.சற்குணானந்ததேவி வீரசிங்கம், யாழ்ப்பாணம். சொன்னது…

கவிஞருக்கு வாழ்த்துக்கள்.

இரா.கௌரிநாதன், உச்சப்பட்டி, மதுரை. சொன்னது…

கவிஞருக்கு உளமார்ந்த வாழ்த்துக்கள்.

சே.ஜெயறூபன் சொன்னது…

எனது தந்தையாருக்கு இந்த கெளரவத்தை வழங்கிய அந்திமாலை நிர்வாகத்தினருக்கு எனது இதய பூர்வமான நன்றிகள்.

தி.பரஞ்சோதிநாதன் குடும்பம், டென்மார்க். சொன்னது…

உளமார்ந்த வாழ்த்துக்கள்.

க.வி.ஞானசூரியன் குடும்பம், ஐக்கிய இராச்சியம். சொன்னது…

எங்கள் இதயபூர்வமான வாழ்த்துக்கள்

தர்மினி சொன்னது…

பாலசிங்கம் அண்ணனின் சேகரிப்பிலிருந்து ஏராளம் புத்தகங்களை நான் சிறுவயதில் வாசித்ததை நன்றியுடன் நினைவு கூருகிறேன்.எம் கிராமத்தில் அப்போதே அவர் எழுத்தார்வத்துடன் வாழ்ந்ததும் கவி புனைந்ததும் என் ஞாபகத்தில் நிற்கிறது.
தர்மினி

suthan சொன்னது…

very good congratulation to anthimaalai

கருத்துரையிடுக