புதன், ஜனவரி 12, 2011

நித்தம் நித்தம் நெல்லுச்சோறு அத்தியாயம் 15

ஆக்கம்.இ.சொ.லிங்கதாசன் 
இருங்கள் சொல்கிறேன் என்றவர் ஆரம்பித்தார். "கத்தரிக்காய்க் கறி, வெண்டிக்காய்க் கறி, பூசணிக்காய், சாம்பல் பூசணிக்காய் (இலங்கைத் தமிழில் 'நீத்துப் பூசணிக்காய்) சுரைக்காய்க் கறி போன்ற குழம்புகளில்  ஏதேனுமொன்றில் மோர் கலந்து சமைக்கப் பட்டிருந்தால் சுவை எப்படிப் பட்டதாக இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்" என்றார். "என்னால் அந்தச் சுவையை ஊகிக்க முடிகிறது" என்றேன். 
சரி இந்த மோர்க்குழம்பு தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமா? புதியதொரு கேள்வியைப் போட்டேன். அவர் தொடர்ந்தார்.என்ன இப்படிக் கேட்டுவிட்டீர்கள், தமிழ்நாட்டு மக்களால் மறக்கமுடியாத விடயங்களில் மோர்க்குழம்பும் ஒன்று. வெளிநாடுகளில் வாழும் தமிழ் நாட்டு மக்களைக் கேட்டுப் பாருங்கள் கூறுவார்கள் அதன் சுவையை, மகத்துவத்தை.வெளிநாடுகளில் வாழும் தமிழ்நாட்டுத் தமிழர்களிடம் இந்த வெளிநாட்டு வாழ்க்கையில் நீங்கள் இழந்தவை எவை என்று கேட்டால், மோர்க்குழம்பையும் சொல்வார்கள் என்றார்.
அப்படியா? என்னால் நம்பவே முடியவில்லை, இலங்கையில் இப்படியொரு குழம்பை யாரும் தயாரிப்பார்கள் என்றோ, உண்பார்கள் என்றோ நான் நினைக்கவில்லை, நீங்கள் கூறுவதை வைத்துப் பார்க்கும்போது, இது 'ரசம்' அல்லது நமது நாட்டில் இடியப்பத்திற்காகத் தயாரிக்கப்படும் 'சொதி' போன்ற சுவையுடையதாக இருக்குமென்று நினைக்கிறேன் என்று எனது ஐயத்தை வெளியிட்டேன். .
ஒரு உணவை உண்டுபார்க்காமல் அதைப் பற்றி எவ்வாறு நாம் விவாதிக்க முடியும்? என்றவர் தொடர்ந்தார். நான் வேண்டுமென்றால் அதன் தயாரிப்பு முறையை உங்களுக்குக் கூறுகிறேன், முடிந்தால், விருப்பமிருந்தால் தயாரித்துப் பாருங்கள். ஆனால் ஒரு விடயம் உறுதி. இதை நீங்கள் ஒரு தடவை பரீட்சித்தால் பின்னர் விடவே மாட்டீர்கள் என்றார் அந்த அனுபவசாலி.
#############################################################################
திரு.பழனிச்சாமி அவர்கள் என்னிடம் தந்த மோர்க்குழம்பு தயாரிக்கும் முறையை வாசகர்களுக்காகத் தருகிறேன். இது முழுக்க முழுக்க இந்தியத் தமிழில் எழுதப்பட்டுள்ளது என்பதால், இந்தியத் தமிழில் உள்ள சில வார்த்தைகளை இலங்கைத் தமிழ் வாசகர்களுக்காக அடைப்புக் குறிக்குள்,   இலங்கைத் தமிழில் தந்துள்ளேன். 


மோர்க்குழம்பு 


தேவையான பொருட்கள்:
மோர் - 2 கப் (தடிப்பானதாக இருந்தால் நல்லது)
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் (தேக்கரண்டி)
பச்சைமிளகாய் - 2
சீரகம் - 1/2 டீஸ்பூன்
அரிசி - 1/2 டீஸ்பூன்
துவரம் பருப்பு - 1 டீஸ்பூன்
தனியா(கொத்தமல்லி) - 1 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 2 டேபிள் ஸ்பூன் (மேசைக் கரண்டி)
எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்(செத்தல் மிளகாய்) - 1
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - 1 ஈர்க்கு (சிறிதளவு)
உப்பு - 1 டீஸ்பூன்

செய்முறை:

  • துவரம் பருப்பு, தனியா, சீரகம், அரிசி அகியவற்றை 10 அல்லது 15 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்கவும்.


  • பின்னர் தண்ணீரை வடித்து விட்டு, அத்துடன் தேங்காய்த்துருவல், பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக மை போல் அரைத்துக் கொள்ளவும்.

  • மோரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அத்துடன் அரைத்த விழுது(மேலே குறிப்பிட்ட சரக்குச் சேர்வை) மஞ்சள் தூள், உப்பு இவைகளையும் சேர்த்து நன்றாகக் கலக்கி, அடுப்பிலேற்றிக் கொதிக்க விடவும். ஒரு கொதி வந்ததும், உடனே அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.

  • ஒரு வாணலியில்(தாச்சியில்) எண்ணை விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, குழம்பில் கொட்டவும். 

குறிப்பு:
தயிராக இருந்தால், ஒரு பாத்திரத்தில் கொட்டி மோர் சிலுப்பியால்(முட்டை அடிக்கும் அடிப்பான்) நன்றாக சிலுப்பிக் கொள்ளவும். குழம்பை நீண்ட நேரம் கொதிக்க விடக்கூடாது. அப்படிக் கொதித்தால், குழம்பு நீர்த்துப் போய் விடும். குழம்பில் காய் சேர்த்தும் செய்யலாம். வெண்டைக்காய், பெங்களூர் கத்திரிக்காய், வெள்ளைப் பூசணிக்காய் பொருத்தமாய் இருக்கும். வெண்டைக்காய் சேர்ப்பதென்றால், காம்பு நீக்கி விட்டு, இரண்டு அங்குலத் துண்டுகளாக நறுக்கி, ஒரு டீஸ்பூன் எண்ணையில், பிசுக்கு(வழுவழுப்பு) போக வதக்கி, குழம்புடன் சேர்த்து கொதிக்க விடவும். மற்ற காய்கள் என்றால், காயை சிறிது வேகவைத்து சேர்க்கவும். நாலைந்து மசால் வடைகளை(கடலை வடை)  குழம்பில் சேர்த்தால், வடை ஊறி, அருமையான வடை மோர்க்குழம்பு தயார்.

நன்றி:adupankarai.kamalascorner.com
**************************************************************

அன்பார்ந்த வாசகர்களே இந்தத் தொடரில் உணவு வகைகளைப் பற்றிக் கலந்துரையாடும்போது, அதனைத் தயாரிப்பது எப்படி என்ற கேள்வி உங்கள் மனதில் எழுவது இயற்கையானதே என்பதைக் கருத்தில் கொண்டே மேற்படி சமையற் குறிப்பை உங்களோடு பகிர்ந்துகொண்டேன்.
(தொடரும்)

3 கருத்துகள்:

Kavitha, Denmark சொன்னது…

Thanks for the recipe.. I'll try

Kalpana Norway சொன்னது…

verry good.

HN சொன்னது…

நீங்கள் எழுதிய செய்முறையை பயன்படுத்த முயற்சிகள் எடுக்கப்படும்.

கருத்துரையிடுக