ஆக்கம்: வேதா இலங்காதிலகம், டென்மார்க்
வாழ்க்கையெனும் மனித நந்தவனத்தில் அன்பு, பாசம், நேசம் என்பவை இதமான தென்றல் போன்றது. மயிலிறகு கொண்டு மனதை வருடி மயங்க வைக்கும் இனிய உணர்வைத் தருகிறது. அன்பு இப்படியானால்…
கோபம் பிரளயமானது, துன்பமானது, வேதனை தருவது.
கோபம் ஒரு செய்தி.
கோபமடையும் போது சொல்வதைக் கேட்கின்றனர். கோபம் உலகத்தின் பெறுமதியையும் அனுபவத்தையும் எடுத்துக் கூறுகிறது. ஆனால் கடும் கோபம் என்ற உணர்வு மிகவும் ஆபத்தானது.
சாதாரண கோபத்தினால் உருவாகும் எரிச்சல் பரவும் தன்மையது. அழிக்கும் திறனுடையது. கோபமடையும் போது மனிதர் தம்முடனான தொடர்பை இழக்கின்றனர். தம்மை மறக்கின்றனர். சூழ்நிலையையும் மறக்கின்றனர். கோபம் கொண்ட மனிதரையும் மறக்கின்றனர்.
அன்பு, நேசம், காதல் மட்டும் உணர்வு பூர்வமான இணைப்பை உலகில் தருவதன்று.
கோபமும் ஒரு தொடர்பு வழி ஆர்வமே. கோபமும் மனிதரை ஒருவருடன் ஒருவரை இணைக்கிறது.
ஒரு குறிக்கோள் கொண்டு தான் கோபம் உருவாகிறது.
நமக்குத் தெரிகிறது, ஏன் எவர் மீது கோபமடைகிறோம் என்று.
ஒருவருடன் நமக்குக் கோபம் வருவதில்லையானால், அவரது இன்ப துன்பங்களில் பங்கு போட நாம் விரும்பவில்லையெனலாம், அல்லது அவைகளில் பங்கு பெறும் அக்கறை நமக்கு இல்லை யென்றாகிறது.
மகிழ்ச்சி, அன்பு, ஆதரவு, தேறுதல், புகழ் என்பவையுடன் மட்டுமே நாம் வளர்க்கப் பட்டிருந்தால், நாம் நிதானமற்றவராக, இரக்கமற்றவராக இருப்போம்.
ஒரு எண்ணத்தை பிறர் ஏற்றுக் கொள்ளும் மனநிலையைக் கொண்டு வரவைக்கும் முயற்சி கோபமாகிறது.
மனக் கட்டுப் பாடுடைய கோபம் நீண்ட நேரம் நிலைப்பதில்லை.
கோபம் நம்மைக் காட்டிக் கொடுக்கிறது. நமது எல்லையை அடையாளம் காட்டுகிறது. மாற்றத்தைக் கொண்டு வருகிறது.
இவ்வுணர்வை நாம் காட்டாவிடில், திருப்தியின்றி, மனக் கசப்புடன் நாம் நிற்போம். இது மிகச் சிரமமானது.
கோபத்தை வெளிப் படுத்த வேண்டும்.
அது கசப்புணர்வாகி,உடலில் முடிச்சுகளாகிப், பெரிதாக வெடித்து கரடு முரடாக முதல், அதை வெளிப் படுத்துதல் ஆறுதலாகிறது.
ஒரு வகையில் கோபமும், காமமும் சமமானது.
மனிதரை அது நிர்வாணமாக்குகிறது.
கோபம் கொள்ளல் மகிழ்வுத்
தீபம் அழிக்கும், பிறர்
சாபம் நிறைத்து- மன
சாந்தி அளிக்கும்.